Published:Updated:

முருங்கைக்கு முதல் மரியாதை!காத்திருக்குது உலக சந்தை... களத்தில் குதியுங்கள் விவசாயிகளே!

அழைக்கிறது, வேளாண் விற்பனை துறை

பிரீமியம் ஸ்டோரி

கருத்தரங்கு

முதன்முறையாக விவசாயத்திற்கெனத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த தமிழக அரசு, முருங்கைச் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாகத் தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், மதுரை, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களை முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலமாக அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக இந்த மாவட்டங்களில் முருங்கை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறது வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை.

அந்த வகையில் அக்டோபர் 6-7 மற்றும் 8-ம் தேதிகளில், தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் முருங்கை தொடர்பான சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் ஆறுமுகம், விவசாயிகள், வியாபாரிகள், வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர். கருத்தரங்கு நிறைவு விழாவில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் வள்ளலார் மற்றும் தோட்டக்கலைத்துறை இயக்குநர் பிருந்தா ஆகியோர் கலந்துகொண்டு, அரசின் திட்டங்கள்குறித்துப் பேசினார்கள். முருங்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாகப் பேசிய வேளாண் விற்பனைத்துறை ஆணையர் வள்ளலார் ஐ.ஏ.எஸ்,

நிகழ்வில் வள்ளலார், ஆறுமுகம் உள்ளிட்டோர்
நிகழ்வில் வள்ளலார், ஆறுமுகம் உள்ளிட்டோர்

‘‘நம்மூர்களில் களைச் செடிகள் போல அனைத்து இடங்களிலும் வளரும் முருங்கை, இன்றைக்கு உலக அளவில் பேசும் பொருளாய் இருக்கிறது. இதில் உள்ள நுண்ணூட்டச் சத்துகள், மருத்துவக் குணங்கள் காரணமாக இன்றைக்கு உலகச் சந்தை, முருங்கைக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முருங்கை விளையக்கூடிய தட்பவெப்ப நிலை, மண்வகை ஆகிய இரண்டிலும் சிறப்பாகவுள்ள தமிழகம், முருங்கை சந்தையில் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும். அதற்காகத் தமிழக அரசின் வழிகாட்டுதல் மூலம் வேளாண் விற்பனை துறை பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

தமிழக முதல்வர் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வழிகளைக் கண்டறிய உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பல்வேறு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அந்த வகையில் வேளாண் விற்பனை துறையும் களத்தில் இறங்கி பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருகிறது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கச் சில திட்டங்களையும் வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் உலக முருங்கை சந்தையில் தமிழகம் தனிமுத்திரை பதிப்பதற்கான முன்னெடுப்புகள்’’ என்று முன்னுரைக் கொடுத்தவர் முருங்கைக்கான சர்வதேசச் சந்தை நிலவரங்கள், அரசின் உதவிகள்குறித்துப் பேசினார்.

‘‘முருங்கைச் சாகுபடி, மதிப்புக்கூட்டல், உள்ளூர் விற்பனை, சான்றிதழ், ஏற்றுமதி என அனைத்துக்குமான பயிற்சி மற்றும் ஆலோசனை மையம் ஒன்றை மதுரை அடுத்த மேலூரில் உள்ள வேளாண் கல்லூரியில் அமைக்க இருக்கிறோம். இன்னும் ஓரிரு மாதங்களில் அது செயல்பாட்டுக்கு வரும்.

கண்காட்சியில்
கண்காட்சியில்


2018-ம் ஆண்டு உலகளவில் முருங்கை பொருள்களின் வியாபாரம் 40,000 கோடி அமெரிக்கன் டாலர். அதே முருங்கை பொருள்கள் 2025-ம் ஆண்டு 80,000 ஆயிரம் கோடி டாலர் விற்பனையாகும் எனக் கணித்திருக்கிறார்கள். இந்தச் சந்தை வாய்ப்பைத் தமிழக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்குப் பயிற்சி கொடுத்து உள்ளூர் மற்றும் சர்வதேசச் சந்தையில் தமிழகத்தின் முருங்கையைப் பிரபலப்படுத்த இருக்கிறோம். அதற்காக ‘அபீடா’ மற்றும் மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளைத் தமிழக அரசின் மூலமாக முன் வைத்திருக்கிறோம்.

முருங்கை மற்றும் முருங்கை பொருள்களுக்கான பெரிய சந்தை வாய்ப்புள்ள இடம் அமெரிக்கா. மேலும் முருங்கைக்கான மிகப்பெரிய சந்தை வாய்ப்புள்ள நாடுகள் மேற்கு ஐரோப்பிய மற்றும் ஜப்பான். அங்கு முருங்கையை அதிசய மரம் (Miracle Tree) என அழைக்கிறார்கள். அந்தளவுக்கு முருங்கையை விரும்புகிறார்கள் வெளிநாட்டினர்.

உலகளவில் முருங்கை உற்பத்தியில் முக்கிய இடத்தில் இருக்கும் நாம், மிகப்பெரிய விற்பனை வாய்ப்பை நழுவ விட்டுக்கொண்டு இருக்கிறோம்.

உலக அளவில் முருங்கை உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. உலகின் மொத்த விநியோகத்தில் 80 சதவிகிதம் இந்தியாவிலிருந்துதான் போகிறது. ஆனால், முழுமையாக மதிப்புக்கூட்டாமல் இலையாகவும், விதையாகவும் அனுப்புகிறோம். அதை வாங்கும் வட மாநிலங்கள் மற்றும் பிற நாடுகள் மதிப்புக்கூட்டி அதிக லாபம் சம்பாதிக்கின்றன. குறிப்பாக நாம் வெளிநாடுகளுக்கு அனுப்பும் முருங்கை பொருள்களில் 80 சதவிகிதம் முருங்கை இலைகள், 15 சதவிகிதம் விதைகள், 5 சதவிகிதம் காய்கள் போகின்றன. அதனை வாங்கும் மற்ற நாடுகள் அதை எண்ணெய், அழகு சாதனப்பொருள்கள், மருந்துப்பொருள்கள் என மதிப்புக்கூட்டி உலகச் சந்தையில் விற்பனை செய்கின்றன. இந்த நிலை மாற வேண்டும். முருங்கை விதை உள்ளிட்ட பொருள்களை மதிப்புக்கூட்ட நினைக்கும் விவசாயிகள், விவசாயக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்கு முறையான பயிற்சி, அவர்கள் தொழில் செய்யக் கடன் வசதி, உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான சந்தை வாய்ப்பு என அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம். முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்பட்ட 7 மாவட்ட விவசாயிகள் மட்டுமில்லை; தமிழ்நாட்டில் பிற மாவட்டத்திலிருந்தாலும் விருப்பமுள்ள விவசாயிகளுக்கு இந்தப் பயிற்சிகள் கொடுக்கப்படும்.

முருங்கை விவசாயிகள் இலைகளை மிகச் சுகாதாரமான முறையில் உலர வைக்கச் சூரிய உலர்த்தி (Solar Drayer) அமைத்துக் கொடுக்கப்படும். இலைகளை அறுவடை செய்த 2 மணி நேரத்தில் மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைக்குக் கொண்டுபோய் விட வேண்டும். அதற்கேற்ப உள்கட்டமைப்புகள் அமைக்கப்படும்.

முருங்கை மதிப்புக்கூட்டல் பொருள்கள்
முருங்கை மதிப்புக்கூட்டல் பொருள்கள்


இந்தியாவைப் பொறுத்தவரை முருங்கை உற்பத்தியில் ஆந்திர மாநிலம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். விரைவில் இந்திய அளவில் தமிழகம் முதல் இடம் பெற வேண்டும். அதற்காக வேளாண் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகள் முன்னெடுக்க வேண்டும். மா உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களில் அடர் நடவு முறையை முன்னெடுப்பது போல முருங்கையிலும் தற்போது நடைமுறையில் உள்ள சாகுபடி முறையைத் தவிர, வேறு எந்த மாதிரியான முறைகளை முன்னெடுத்தால் அதிக மகசூல் பெற முடியும் என்பதைக் கண்டறிய வேண்டும். அதை விவசாயிகளுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும்.

ஆஸ்திரேலியா, தற்போது முருங்கையிலிருந்து கால்நடை தீவனம் தயாரித்துச் சந்தைப்படுத்துகிறது. நாம் இன்னும் அந்தச் சந்தையில் கால் பதிக்கவில்லை. அதேநேரம் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்யத் தொடங்கியுள்ளன. தமிழகத்திலும் விரைவில் முருங்கை மூலமாகக் கால்நடை தீவன உற்பத்தி நடைபெறத் தீவிரமான முயற்சியை முன்னெடுத்து வருகிறோம். அதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலமாக உற்பத்தி செய்து உலகச் சந்தைக்குக் கொண்டு செல்ல இருக்கிறோம். இது தொடர்பாகவும் வேளாண் ஆராய்ச்சி மையங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

சந்தையில் ஒரு பொருளை விற்பதற்கு விளம்பரம் மிக முக்கியம். இந்தியாவைப் பொறுத்தவரை பொருள் தரமாக இருக்கும். ஆனால் அதன் ‘பேக்கிங்’ கவர்ச்சிகரமாக இருக்காது. ஆனால் சீனாவைப் பொறுத்தவரைப் பொருள் தரமில்லாததாக இருந்தாலும் ‘பேக்கிங்’ கவரக் கூடியதாக இருக்கும். அதனாலேயே உலகச் சந்தையில் சீனர்கள் முந்துகிறார்கள். ஆனால், நம்மிடம் உலகத்தரமான பொருள் இருந்தும் பேக்கிங் சரியில்லாததால் விற்பனையில் பின் தங்குகிறோம்.

பேக்கிங்கை மேம்படுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களையும் வாங்கி ஒரே பெயரில் பேக்கிங் செய்து உள்ளூர் மற்றும் உலகச் சந்தையில் விற்பனை செய்வதற்கான திட்டமும் ஆராய்ச்சியில் உள்ளது.

விவசாயிகளையும் வியாபாரிகளையும் சந்திக்க வைத்திருக்கிறோம். விவசாயிகள் தங்கள் தரப்பின் தேவை, பிரச்னையைச் சொல்லுங்கள், வியாபாரிகள் அவர்கள் தரப்பு கருத்தைச் சொல்லட்டும். அதிலும் பிரச்னையைச் சரிசெய்ய முடியாவிட்டால் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காண்போம். இந்தச் சர்வதேச கருத்தரங்கு தொடக்கம் தான்’’ என்றார்.

உரிமையை நிலைநாட்ட வேண்டும்

‘‘வெப்பமண்டல, மித வெப்ப மண்டலப் பயிர் முருங்கை. ஆனால், அதன் பிறப்பிடம் இமயமலை அடிவாரப்பகுதி என்கிறது இணைய தகவல். அதே போல ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்கள் அது தங்கள் பயிர் எனச் சொந்தம் கொண்டாட முயன்று வருகின்றன. இந்நிலையில், நமது ஆராய்ச்சியாளர்கள், முருங்கை தமிழ்நாட்டுப் பயிர்தான் என்பதைச் சான்றுகளோடு நிரூபித்து, நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும். அதனடிப்படையில் புவிசார் குறியீடு பெறலாம். அதன் பிறகு சர்வதேசச் சந்தையில் தமிழ்நாட்டு முருங்கைக்கு முக்கிய இடம் கிடைக்கும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு முருங்கை

பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு அதிகம் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே கர்ப்பிணி தாய்மார்களுக்கு முருங்கையைக் கொடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறோம். அதேபோலக் குழந்தைகளுக்கான சத்துணவில் முருங்கையைச் சேர்க்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அது நடைமுறைக்கு வரும்போது முருங்கைக்கான தேவை அதிகமாகும்’’ என்கிறார் வள்ளலார்.

பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா
பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா

முருங்கையும் காஸ்ட்ரோவும்...

1960-களில் பிரேசில் நாட்டிலிருந்து முருங்கையைக் கியூபா கொண்டு வந்த சேகுவேரா, அதனைப் பிடல் காஸ்ட்ரோவிடம் கொடுத்தார். வயிறு தொடர்பான பிரச்னையால் கடும் நோய்வாய்ப்பட்டிருந்த காஸ்ட்ரோ, முருங்கை இலைகளை உணவில் எடுத்துக்கொண்டு நோயிலிருந்து குணமானார் என்கிறது வரலாறு. அதன் பிறகு, அந்நாட்டு மக்களிடம் பேசிய காஸ்ட்ரோ, முருங்கையை நாட்டு மக்கள் அனைவரும் உணவில் எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என அறைகூவல் விடுத்தார். அத்துடன் அந்நாட்டிலிருந்து சிலரை இந்தியா அனுப்பி, தமிழ்நாடு, கேரளா சென்று முருங்கை பற்றி அறிந்து வரச் செய்தார். அப்படி வந்தவர்கள் 100 டன் முருங்கை விதையைக் கியூபா கொண்டு சென்றார்கள். அதன் மூலம் அங்கு முருங்கைச் சாகுபடி முன்னெடுக்கப்பட்டது. தனது ஓய்வுக்காலத்தை முருங்கைத் தோட்டத்திலேயே கழித்தார் காஸ்ட்ரோ. அதையெல்லாம் முன்னிறுத்தி முருங்கையின் சிறப்புகளை விளக்கினால் உலகச் சந்தையில் நாம் வெற்றி பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு