Published:Updated:

சாணம் கொடுக்கும் வெகுமதி! பயிற்சி அளிக்கும் தொழுவம்!

கால்நடை

பிரீமியம் ஸ்டோரி
நாட்டு மாடுகளைப் பாதுகாப்பது, நாடோடிகளாக வாழும் கீதாரி களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, இயற்கை விவசா யத்தை மீட்டெடுப்பது, கிடை மாடுகள் மேய்ச்சல் மூலம் உணவுச் சங்கிலியைப் பாதுகாப்பது, சாணம், மாட்டுச் சிறுநீர் ஆகிய வற்றை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது தொழுவம் அமைப்பு. மதுரையில் 20 தன்னார்வலர்கள் இணைந்து ‘தொழுவம்’ என்ற கிடைமாட்டுப் பண்ணை மற்றும் ஆய்வகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
நீலகண்டன், பெரி.கபிலன்
நீலகண்டன், பெரி.கபிலன்

கிராமங்களில் ஆடு, மாடு வளர்ப்பவர்கள் ஒருவகை என்றால், கிடை மாடு, கிடை ஆடு வளர்ப்பவர்கள் இன்னொரு வகை. குடும்பத்தை மறந்து, நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலத்தில் அலைந்து திரிபவர்கள். குடும்பத்தை விட்டு ஆண்டுக்கணக்கில் சுற்றி வருவார்கள். விவசாய நிலங்களில் கிடை அமைக்கும் கீதாரிகளுக்கு முன்பொரு காலத்தில் நல்ல மரியாதை இருந்தது. வருமானமும் கிடைத்தது.

ரசாயன உர விவசாயம் அதிகமான பிறகு, இவர்களை யாரும் அழைப்பதில்லை. அதனால் வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள் கீதாரிகள். போதிய வருவாய் இல்லாவிட்டாலும் எஞ்சியுள்ள கிடை மாடுகளை மேய்த்துக்கொண்டு இன்றைக்கும் ஊர் ஊராகச் சுற்றி வருகிறார்கள். இவர்களில் சிலர் சொந்தமாகத் தொழுவம் அமைத்து, தொழுஉரம்(எரு) தயாரித்து விற்றாலும், வாழ்க்கைத் தரம் மிக மோசமான நிலையில்தான் இருக்கிறது. அரசு வழங்கும் சலுகைகள்கூட இவர்களுக்குக் கிடைப்பதில்லை.

இந்த நிலை தொடர்ந்தால் கிடை மாடு வளர்ப்புப் படிப்படியாகக் குறைந்து, தமிழகத்தின் வேளாண் பண்பாடே அழிந்துவிடும் நிலை ஏற்படும். இந்நிலையில் கிடைமாடுகளைப் பாதுகாத்து, நாடோடிகளாக வாழும் கீதாரிகள் மற்றும் கால்நடை மேய்ப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சியை முன்னெடுத்துள்ளது ‘தொழுவம்’ அமைப்பு.

பண்ணையில் கிடைமாடுகள்
பண்ணையில் கிடைமாடுகள்

இதன் நிறுவனரும் கீதாரிகளின் வாழ்க்கையை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருபவருமான முனைவர் பெரி.கபிலனிடம் பேசினோம். “கிடை மாடு மற்றும் வரத்தாடு கீதாரிகள் தமிழகத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். கிடைமாட்டுக் கீதாரிகள் மற்றும் மேய்ப்பவர்களின் நிலை மிகவும் மோசம். தென் மாவட்டங்களில் நாடோடிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் களைப் பற்றித் தொடர்ந்து ஆய்வு செய்திருக்கிறேன்.

வேளாண் மக்களுக்கு நன்மை செய்யும் தொழிலை மேற்கொள்ளும் அவர்களைச் சமூகமும், அரசும் ஒதுக்கி வைத்திருக்கிறது. மனிதக்குல வரலாறே மேய்ச்சல் சமூகத்திலிருந்து வந்ததுதான். கால்நடைகளுடன் தமிழர்களுக்கான உறவு பிரிக்க முடியாதது. அதனால்தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்தபோது அதை எதிர்த்து அனைவரும் போராடினார்கள். ஜல்லிக்கட்டுக் காளைகள் என்பது நாட்டு மாடுகள் மட்டும்தான். அதற்குப் பிறகு நாட்டு மாடுகளைப் பாதுகாக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழர்களுக்கு ஏற்பட்டாலும், அது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.

சாணம்
சாணம்

நான் பல மாவட்டங்களுக்குச் சென்று கிடை மாடு வளர்ப்போர் பற்றி ஆய்வு செய்தேன். ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பாதுகாத்தால் மட்டும் போதுமா, அதற்கு அச்சாணியான நாட்டின கிடை மாடுகளைப் பாதுகாக்க வேண்டாமா? கிடை மாட்டுத் தொழு மூலம் வேளாண்மைக்கு நன்மை செய்யும் கீதாரிகளைப் பாதுகாக்க வேண்டாமா என்ற சிந்தனை எழுந்தது.

‘‘சாணத்தைப் பாதுகாத்து உரமாக்கலாம். மதிப்புக் கூட்டி விபூதி, சாம்பிராணி, பத்தி, பஞ்சகவ்யா தயாரிக்கலாம். இதைத் தயாரித்துச் சந்தைப்படுத்த திருவாதவூரில் எங்கள் பண்ணையில் பயிற்சி அளிக்கிறோம்.’’

தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை புலிக்குளம் மாடுகள்தான் கிடைமாடுகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களைத் தங்கள் மேய்ச்சல் வழித்தடமாகக் கொண்டு ஆண்டு முழுவதும் இந்தச் சுழற்சியில் சுற்றி வருகிறார்கள். அவர்களில் 130 கிடைபோடும் கீதாரிகளை அறிந்துகொள்ள முடிந்தது. தங்களுக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்று, வருமானம் வருகிறதோ, இல்லையோ ஆண்டு முழுவதும் சுற்றி வருகிறார்கள்.

ஒரு கீதாரியின் கீழ் மேய்ப்பர்கள் ஐந்தாறு பேர் இருப்பார்கள். அவர்கள் செல்லும் ஊர்களில் சம்சாரிகளை அணுகி, ‘தொழு அமைக்கலாமா’ என்று கேட்பார்கள். வாய்ப்பு கிடைத்தால் அங்கு சில நாள்கள் தங்குவார்கள். கிடை போட ஒரு மாட்டுக்கு 3 முதல் 5 ரூபாய் என்ற கணக்கில் பணம் கொடுப்பார்கள். அப்படி யாரும் அழைக்கவில்லை என்றால் காட்டுக்குள் கிடை போடுவார்கள். அந்தச் சாணத்தை யாராவது வாங்க வந்தால் விற்பனை செய்வார்கள். இல்லாவிட்டால் அனைத்தும் நஷ்டம்தான்.

சாணம் கொடுக்கும் வெகுமதி! பயிற்சி அளிக்கும் தொழுவம்!

அது மட்டுமல்லாமல் மாடுகளை ஓட்டிச் செல்லும்போது பல பிரச்னைகள். திருடர்களிடமிருந்து மாடுகளைப் பாதுகாக்க வேண்டும். மலைப்பகுதியில் மேய்வதற்கு வனத் துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும். மாடு களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைப்பதில்லை. ஊருணி, குளங்களில் கால்நடைகள் தண்ணீர் குடிக்க அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், தொடர்ந்து பல இன்னல் களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம், ஊரில் ஆடு, மாடு வைத்திருந்து ஏதாவது பேரிடரில் அது பலியாகி விட்டால் அதற்கு அரசு இழப்பீடு வழங்கும். ஆனால், இவர்கள் நாடோடிகளாக அலைவதால் எந்த இழப்பீடும் கிடைப்பதில்லை. கால்நடைத் துறை நலத்திட்டத்தில்கூட இவர்களைக் கணக்கில் சேர்ப்பதில்லை. ஊராட்சி பதிவேட்டில்கூட இவர்களைக் காட்டுவதில்லை.

இது ஒருபக்கமென்றால் சமூகத்திலும் யாரும் மதிப்பதில்லை. லட்சக்கணக்கான விலை மதிப்பில் மாடுகளை வைத்திருந்தாலும் தொழில் செய்பவர்களாகப் பார்ப்பதில்லை. இழிவான முறையிலேயே நடத்தப்படுகிறார்கள். அவர்களைப் பற்றிச் சொல்ல நிறைய உள்ளது. இப்படிச் சமூக ரீதியாகவும் ஒதுக்கப்படும் இவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில்தான் வேளாண்மைக் கல்லூரி வழிகாட்டுதலில் நபார்டு வங்கி உதவியுடன் இந்தப் பண்ணையை ஆரம்பித்தோம்’’ என்றார்.

இந்த அமைப்பின் நிர்வாகியான நீலகண்டன், ‘‘ஒரு நாளைக்கு 5,000 மாடுகளிலிருந்து 100 டன் சாணம் கிடைக்கிறது. இதைப் பாதுகாத்து உரமாக்கலாம். மதிப்புக்கூட்டி விபூதி, சாம்பிராணி, பத்தி, பஞ்சகவ்யா தயாரிக்கலாம். இதைத் தயாரித்துச் சந்தைப்படுத்த திருவாதவூரில் எங்கள் பண்ணையில் பயிற்சி அளிக்கிறோம். 6 மாவட்டங்களில் 50,000 மாடுகளுடன் உள்ள 130 கீதாரிகள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளைக் கூறுகிறோம். கேரள மாநிலத்திலிருந்து இங்கு வந்து சாணம் வாங்கிச் சென்று அவர்களின் தோட்டங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்; வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறார்கள். வரும் காலங்களில் நாங்களே நேரடியாக ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு வருகிறோம். அப்படிச் செய்தால் கீதாரிகளுக்கு அதிகமான வருவாய் கிடைக்கும். தொடர்ந்து சாணத்தில் என்னென்ன பொருள்களை மதிப்புக்கூட்டி உருவாக்கலாம் என்றும் ஆராய்ச்சி செய்து வருகிறோம். எங்களுடைய நோக்கம் மீண்டும் மரபு விவசாயத்துக்கு நம் மக்கள் திரும்ப வேண்டும், அதற்கு இந்தக் கிடைமாடுகளின் பயனைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான்.

நாட்டு மாடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் விரும்புகிறார்கள். ஆனால், அதை வளர்ப்பதற்கான சூழல் அவர்களிடம் இல்லை. அப்படி நினைப்பவர்கள் எங்கள் பண்ணைகளில் மாடுகளை வாங்கி விடலாம். நாங்கள் பராமரித்து வருவோம். எப்போது தேவையோ மாட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அதுபோல் கிடை போடு பவர்களும் வெளியே மாடுகளை ஓட்டிச் செல்ல முடியவில்லை என்று நினைத்தால், எங்கள் பண்ணையிலேயே வைத்துப் பராமரிக்கலாம்’’ என்றார்.

நாட்டு மாடுகளையும் அதை வளர்ப்போரையும் பாதுகாக்க வேண்டும். மீண்டும் மேய்ச்சல் மரபு தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

தொடர்புக்கு, முனைவர் பெரி.கபிலன், செல்போன்: 98944 06111.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு