Published:Updated:

மழை... அம்மா... துள்ளல்..! #MyVikatan

Representational Image
Representational Image

கேட்டதும் கிடைத்துவிட்ட ஏதோ ஒரு விளையாட்டுப் பொருளுக்காக மகிழ்ச்சியில் திளைக்கும் ஒரு குழந்தையைப்போல அம்மாவிடம் அத்தனை ஆனந்தம்.

ஊரிலிருந்து அம்மா போன் பண்ணி இருந்தாங்க, எடுத்தவுடனே சாப்டியான்னுகூட கேக்கல. "கண்ணு இங்க பயங்கர மழை கண்ணு, நல்லா காத்தும் அடிக்குது. ரொம்ப நேரமா மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. மழை சத்தம் கேக்குதான்னு" கைப்பேசியை மழை பொழியும் இடத்திலிருந்து தள்ளி காற்றில் வைக்கிறார்கள்.

Representational Image
Representational Image

கேட்டதும் கிடைத்துவிட்ட ஏதோ ஒரு விளையாட்டுப் பொருளுக்காக மகிழ்ச்சியில் திளைக்கும் ஒரு குழந்தையைப்போல அம்மாவிடம் அத்தனை ஆனந்தம். கூடவே சொல்ல முடியாத சந்தோஷமும் உற்சாகமும் மிளிர்கிறது. வறண்ட நிலத்தின் வெகுதொலைவுக்கு போய்விட்ட நிலத்தடி நீர், குழாய் வழியே வராமல் குடியிருக்கும் வீடுகளுக்குத் தண்ணீர் வசதி செய்து கொடுக்க முடியாமல், எப்போதாவது வரும் தெருக்குழாய் நீருக்காக கால்கடுக்க காத்திருந்து சமயங்களில் சக பெண்களோடு சண்டையிட்டு ஒரு குடமோ இரண்டு குடமோ தண்ணீரை ஒலிம்பிக்கில் வாங்கிய பதக்கம்போல அத்தனை சந்தோஷமாய் சுமந்து வரும் கஷ்டத்தை வெளியூரில் குளிர்சாதன அறையில் அமர்ந்திருக்கும் என்னைப் போன்ற மகன்களோ, மகள்களோ அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். அது பிறந்த ஊரிலோ, வாக்கப்பட்ட ஊரிலோ வாழ்ந்து பழகிய அம்மாக்களின் சின்னச் சின்ன சந்தோஷங்களுள் இப்போது சேர்ந்துவிட்டது.

இதே அம்மாதான் பல வருடங்களுக்கு முன்பு என் பால்யத்தின் விவரமறியா வயதில் வாழ்ந்த மொட்டை மாடிக் குடிசை வீட்டின் மேல் கருமேகங்கள் சூழ்ந்தாலே சொல்ல முடியாத ஒரு கவலைக்குள் மூழ்கிவிடுவார். ஒரு சிறு மழையோ பெரு மழையோ பெய்யத் தொடங்கினாலே எங்கள் குடிசை வீட்டின் எல்லா பகுதிகளும் பாரபட்சமில்லாமல் ஒழுகும். கிடைக்கின்ற தட்டு முட்டு சாமான்கள் எல்லாத்தையும் மழை நீர் ஒழுகும் இடங்களாகப் பார்த்து பார்த்து வைப்போம். அந்தப் பாத்திரங்களில் நிரம்பும் தண்ணீரைத் தொட்டிகளில் சேமித்து அடுத்தநாள் பயன்படுத்துவோம்.

Representational Image
Representational Image

மழை, இடிகளை அனுப்பி வந்துவிட்டு ஈரத்தை கொடுத்து போய்விடும், அம்மாதான் ஈரம் நிறைந்த முழுவீட்டையும் துடைத்து, நனையாத போர்வைகளைத் தேடிப்பிடித்து எங்களுக்கு போர்த்திவிட்டு, மழை நீர் நிரம்பிய குண்டாக்களை மாற்றிவைத்து, மின்சாரம் துண்டித்த இரவை மண்ணெண்ணெய் விளக்கால் தண்டித்து ஈரமாகாத ஒரு இடம் பார்த்து உறங்கப்போகும்போது பாதி இரவை மழை தன் மின்னல் நாக்குகளால் மெதுவாய் விழுங்கி இருக்கும். இதோ இத்தனை பெரிய காற்றுடனும் இடி முழக்கத்துடனும் பெய்யும் மழையை அம்மா எத்தனை குதூகலமாக ரசிக்கிறார், என்னையும் ஒரு இசையைப் போல ரசிக்க வைக்க முயல்கிறார்.

இது நிச்சயம் நல்லவீட்டில் இருப்பதற்கான காரணமோ, மழை பெய்தால் ஒழுகாது என்ற கவலையின்மையோ இல்லை. மழை மீதான பிரியங்கள், தண்ணீர் மீதான தாகம், விவசாயத்தின் மீதான அன்பு, நாட்டின் வளர்ச்சி, குளிர்ச்சியின் மீதான ஏக்கம், நீர் பற்றாக்குறையின் மீதான வேண்டுதல், எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையோடு இணைந்து வாழ வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, அடுத்த தலைமுறை மீதான அக்கறை.

Representational Image
Representational Image

தான் வாழ்ந்த ஊரில் தன் பிள்ளைகள் பின்னாளில் தண்ணீருக்காகக் கையேந்தக் கூடாது என்ற தவிப்பு. இந்த அக்கறையும் தவிப்பும் எதிர்பார்ப்பும் இப்போது எல்லோருக்குள்ளும் இருப்பது நன்றாகவே தெரிகிறது. அதற்கு "எங்களூரில் மழை" என ஒரு திடீர் சந்தோஷத்தோடு மழை பொழியும் எமோஜியை சுமந்து வரும் வாட்ஸ்அப் தகவல்கள் ஒரு சின்ன உதாரணம். அடுத்த தலைமுறைக்கு "மழை" என்பதை ஒரு புகைப்படமாகவோ, ஒரு ஒளிப்படமாகவோ, ஒரு ஓவியமாகவோ காட்டாமல் மழையை மழையாகவே காட்ட வேண்டுமென்ற ஏக்கமும் தவிப்பும் எப்போதுமே இருக்கிறது. அதை நாம் மீட்டெடுக்கும் இயற்கையும் வளர்க்கப்போகும் மரங்களுமே சாத்தியமாக்கும்.

- தனபால் பவானி

Representational Image
Representational Image

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு