Published:Updated:

பலபயிர் சாகுபடியில் அசத்தும் சிங்கப்பூர் தம்பதி!

பலபயிர் சாகுபடி

மகசூல்: 35 ஏக்கர், ரூ.41 லட்சம் - தென்னை, மா, கரும்பு, வாழை...

பலபயிர் சாகுபடியில் அசத்தும் சிங்கப்பூர் தம்பதி!

மகசூல்: 35 ஏக்கர், ரூ.41 லட்சம் - தென்னை, மா, கரும்பு, வாழை...

Published:Updated:
பலபயிர் சாகுபடி

விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தால் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பலரும் விவசாயத்தை நோக்கி வருகிறார்கள். பணிச்சுமை, நிரந்தரமில்லாத வேலை போன்ற காரணங்களால் அடுத்து என்ன செய்வது எனத் தேடலில் இருப்பவர்களுக்கு விவசாயம் ஒரு முக்கியத் தேர்வாக இருக்கிறது.

அதே நேரத்தில், ‘வேலையில் சம்பாதிச்சிட்டு இருப்பதை விவசாயத்தில சம்பாதிக்க முடியுமா?’ என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. ‘‘நிச்சயம் முடியும். ஆனால், அதற்குக் கொஞ்சம் காலமும் பொறுமையும் அவசியம்” என்று நம்பிக்கையோடு பதில் சொல்கிறார்கள் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன்-விமலாதேவி தம்பதி.

தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டிலிருந்து சேலம் மாவட்டம் தும்பல் செல்லும் மலைப்பாதையில் சிட்லிங் பஞ்சாயத்தில் மலையடி வாரத்தில் அமைந்துள்ளது அவர்களது பண்ணை. ‘சிட்லிங்கில் 60 ஏக்கர் காடு எங்கே இருக்கிறது’ என்று கேட்டால் அனைவரும் வழி சொல்கிறார்கள். இரண்டு மலைத்தொடருக்கு இடையே வீற்றிருக்கிறது ஊரும் பண்ணையும். ஒரு காலைவேளையில் பண்ணைக்குள் நுழைந்தோம். மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பேசத்தொடங்கினார்கள். முதலில் பேசிய விமலாதேவி,

பண்ணையில் கணேசன்/விமலாதேவி தம்பதி
பண்ணையில் கணேசன்/விமலாதேவி தம்பதி


“எனக்குச் சொந்த ஊரு சேலம் மாவட்டம், வீரபாண்டி. அவருக்கு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம். எங்களுக்குத் திருமணமானபோது அவர் சிங்கப்பூர்ல இருந்தார். திருமணமானவுடன் சிங்கப்பூருக்குப் போயிட்டோம். நான் ஒரு தனியார் நிறுவனத்துல ‘பிஸினஸ் அனலிஸ்ட்’டா இருந்தேன். அவர் நிதி சம்பந்தமான ஒரு நிறுவனத்துல நிதி ஆலோசகரா இருந்தார். கைநிறைய சம்பளம். வீட்டு வேலை செய்வதற்கு ஆள். தினமும் அலுவலகத்துக்குப் போக வர கார் என ஒரு வசதியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்துட்டு இருந்தோம். இவ்வளவுக்கும் சிங்கப்பூர்ல நிரந்தரக் குடியுரிமை (Permanent Resident) பெற்று இருந்தோம். இது யாருக்கும் அவ்வளவு எளிதா கிடைச்சிடாது. இருந்தாலும் அடிமனசுல விவசாயம், இங்கிருக்கும் உறவுகள்மீது ஒரு ஏக்கம் இருந்துகிட்டே இருந்துச்சு. அங்கிருந்தபடியே வீட்டுல சொல்லி விவசாயம் செய்றதுக்கு நிலம் பார்க்கச் சொன்னோம். பல இடங்கள்ல தேடி கடைசியா இந்த நிலத்த வாங்கினோம்” என்றவரைத் தொடர்ந்து கணேசன் பேசினார்.

“சிங்கப்பூர்ல இருக்கும்போதே விவசாயம் சம்பந்தமான தகவல்களைத் தேட ஆரம்பிச்சிட்டோம். விவசாயம் சம்பந்தமான புத்தகங்கள், பசுமை விகடன், இணையதளங்கள்னு தேடல் விரிஞ்சது. அதுல சுபாஷ் பாலேக்கரோட விவசாய முறை எங்களை ரொம்பக் கவர்ந்துச்சு. தென்னை, பழமரங்கள்ல எப்படி வருமானம் எடுக்கணுங்கறதுக்கு அவர் பரிந்துரைக்குற முறை பயனுள்ளதா இருக்கு. 7 வருஷத்துக்கு முன்ன மனைவி வந்து விவசாயத்த தொடங்கினாங்க. அவங்க வந்து மூணு வருஷத்துக்குப் பிறகு நான் வந்தேன். முன்ன எங்க மாமனார் கூட இருந்தார். இப்போது முழுநேரமா பண்ணை வேலைகளை நாங்கதான் கவனிச்சுக்குறோம். மதுபாலன், முரளி சார் பண்ணைக்குத் தேவையான ஆலோசனை கொடுக்குறாங்க” என்றவரைத் தொடர்ந்து பண்ணையில் உள்ள பயிர்களைப் பற்றிப் பேசினார் விமலாதேவி.

நெல் வயல்
நெல் வயல்
மாந்தோட்டம்
மாந்தோட்டம்

“மொத்தமுள்ள 60 ஏக்கர்ல 20 ஏக்கர்ல அல்போன்சா, செந்தூரா, பெங்களூரா ரகங்கள் இருக்கு. இது நட்டு 7 வருஷமாகுது. இப்போ மகசூல் கொடுத்துட்டு இருக்கு. 13 ஏக்கர்ல தென்னை இருக்கு. 10 ஏக்கர்ல கரும்பு இருக்கு. கோ-86032, சி.ஓ.212னு ஆராய்ச்சி ரகங்களைத்தான் போட்டிருக்கோம். இதுல நல்ல மகசூல் கிடைக்குது. 212 ரகம் மறுதாம்புக்கு ஏற்றது. 86032 ரகம் நல்ல உயரமாக 25 கணு வரை வைக்கும். கரும்பை அறுவடை செய்து நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்றோம். 10 ஏக்கர்ல மகோகனி நட்டு 7 வருஷமாகுது. இதுல ஊடுபயிராகப் பன்னியூர்-1 ரக மிளகு நடவு செய்திருக்கிறோம். அது வளர்ந்தவுடன் மகோகனி மரங்கள் மேல ஏத்தி விட்டுடுவோம்.

‘‘தென்னை மரங்களுக்கு இடையே ‘வாணி’ங்கற(கால்வாய் வெட்டும் முறை) முறையைப் பின்பற்றிட்டு வர்றோம்.’’

நிலத்த சுத்தியும் வரப்புகள்ல 2,000 தேக்கு மரங்கள் வெச்சிருக்கிறோம். 5 ஏக்கர்ல பாக்கு, இதுல 2 ஏக்கர்ல ஊடுபயிரா வாழை இருக்கு. ஒரு ஏக்கர்ல நெல், ஒரு ஏக்கர்ல எலுமிச்சை இருக்கு. நெல்லுல சேலம் சன்னா, தூயமல்லி, பூங்கார் ரங்களைத்தான் அதிகம் பயிர் செய்றோம். வாழையில முதல்ல பல ரகங்களைச் சாகுபடி செஞ்சோம். எதுவும் சரியா வரல. கடைசியா தேன்வாழைனு சொல்லுற கற்பூரவாழைதான் நல்லா வருது. பாக்குல நாட்டு ரகத்தைச் சாகுபடி செஞ்சிட்டு வர்றோம்” என்று பயிர்களைப் பற்றி அடுக்கியவர் கால்நடைகளைப் பற்றிப் பேசினார்.

பாக்கு
பாக்கு
மாடுகள்
மாடுகள்

“காங்கேயம் உள்ளிட்ட நாட்டு ரகங்கள்ல 14 நாட்டு மாடுகள் இருக்கு. இந்த மாடுகளை விலை கொடுத்து வாங்கல. ஈரோட்டுல வெட்டுக்கு ஓட்டிட்டுப் போன நாட்டு மாடுகளை மீட்டாங்க. அதுல இருந்து 5 மாடுகள நாங்க ஓட்டிட்டு வந்துட்டோம். அது இப்ப பெருகி 14 மாடுகளா இருக்கு. 40 வெள்ளாடுகள், 40 நாட்டுக்கோழிகள், 5 கூஸ் வாத்துகள் இருக்கு. பொதுவா மலைப்பகுதிகள்ல இருக்கிற மண்வாகு ரொம்ப நல்லாருக்கும்னு சொல்வாங்க. ஆனா, இது சுண்ணாம்புக்கல் அதிகம் இருக்குற நிலம். அதனால, கரும்புச் சோகையை மூடாக்கா போட்டுட்டு வர்றோம்.

ஆடுகள்
ஆடுகள்

தென்னை மரங்களுக்கு இடையே ‘வாணி’ங்கற (கால்வாய் வெட்டும் முறை) முறையைப் பின்பற்றிட்டு வர்றோம். மா, மகோகனி, எலுமிச்சையில கிடைக்கிற சருகுகளை மூடாக்கு ஆக்கிடுறோம். அமுதக்கரைசல், மீன் அமிலம், தேமோர் கரைசல அப்பப்போ கொடுத்துட்டு வர்றோம். உழவு ஓட்ட மினி டிராக்டர், பார் அணைக்க, களையெடுக்க பவர் டில்லர், பொருள்களை எடுத்துச் செல்ல டிராக்டர், மீன் அமிலம், தேமோர் கரைசல் தெளிக்கப் பவர் ஸ்பிரேயர்னு எல்லாத்துக்கும் கருவிகள் வெச்சிருக்கோம்” என்றவர் வருமானம் பற்றிப் பேசினார்.

சூரிய கூடார உலர்த்தி
சூரிய கூடார உலர்த்தி


“தேங்காயா வித்தா 10 ரூபாய்க்குத்தான் விக்குது. அதையே கொப்பரையா மாத்தி வித்தால் கூடுதல் வருமானம் கிடைக்குது. சிரட்டை, தேங்காய் மட்டையும் வித்துக்கலாம். கொப்பரையா மாத்துறதுக்காகச் சூரிய கூடார உலர்த்தியை மானியத்துல அமைச்சிருக்கோம். 13 ஏக்கர்ல தென்னை போட்டிருந்தாலும் இப்போதைக்கு ரெண்டரை ஏக்கர்ல 200 மரங்கள் மூலமா மகசூல் எடுத்துட்டு இருக்கோம். ஒரு மரத்துக்கு 2,000 ரூபாய் வருமானங்கற கணக்குல 4 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்குது.

மாங்காய்கள்
மாங்காய்கள்
நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்யும் இடம்
நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்யும் இடம்

இனிக்கும் வருமானம் தரும் சர்க்கரை

மாந்தோட்டத்தைக் குத்தகைக்கு விட்டுடுவோம். வழக்கமா வருஷத்துக்கு 40,000 - 50,000 ரூபாய் குத்தகை மூலமா ஒரு ஏக்கருக்குக் கிடைக்கும். இந்த வருஷம் விளைச்சல் குறைவு. அதனால ஏக்கர் 25,000 ரூபாய்தான் போச்சு. அந்த வகையில 20 ஏக்கர் மூலமா 5 லட்சம் ரூபாய் வருமானம். கரும்பை அரைச்சு பாலெடுத்துக் காய்ச்சி நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்றோம். 1 டன் கரும்பை அரைச்சா 130 கிலோ நாட்டுச் சர்க்கரை கிடைக்குது. ஏக்கருக்கு 40 டன்னுக்கு மேல மகசூல் கிடைக்குது. குறைந்தபட்சம் 35 டன்னுன்னே வெச்சுக்கிட்டாக் கூட 10 ஏக்கர்ல விளையுற 350 டன் கரும்பை அரைக்குறது மூலமா 45,500 கிலோ நாட்டுச் சர்க்கரை கிடைக்குது. ஒரு கிலோ 60 ரூபாய். அது மூலமா 27,30,000 ரூபாய் வருமானமா கிடைச்சிட்டு வருது. 10 ஏக்கர்ல விளையுற இந்த 350 டன் கரும்பை ஆலைக்கு அனுப்பியிருந்தா ஒரு டன் 2,850 ரூபாய் என்ற விலையில 9,97,500 ரூபாய்தான் வருமானமா கிடைச்சிருக்கும். கரும்பை நாங்களே அரைச்சி நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்றதால 27,30,000 ரூபாய் வருமானமா எடுத்துட்டு இருக்கோம்.

வாழைத்தோட்டம்
வாழைத்தோட்டம்


எலுமிச்சையைப் பொறுத்தவரைக்கும் ஒரு மரத்துக்கு 15 கிலோ சராசரி மகசூல். ஒரு ஏக்கர்ல இருக்க 50 மரங்களுக்கு 750 கிலோ. ஒரு கிலோ 40 ரூபாய் கணக்குல 30,000 ரூபாய் வருமானம். வாழை மூலமா வருஷத்துக்கு 1,500 தார்கள் கிடைக்குது. ஒரு தார் 300 ரூபாய் என்ற கணக்குல 4,50,000 ரூபாய் வருமானம். மகோகனி நட்டு 7 வருஷம்தான் ஆகுது. அது பலன் கொடுக்க இன்னும் 20 வருஷம் ஆகும். ஆடு வளர்ப்புல போன தடவை நஷ்டம் ஆயிடுச்சு. திரும்பவும் வாங்கி வளர்த்திட்டிருக்கோம். இதுல இதுவரைக்கும் 10 குட்டிகள் வித்திருக்கோம். அதுமூலமா 50,000 ரூபாய்க் கிடைச்சிருக்கு. நெல், நாட்டுக்கோழிகள், நாட்டு மாட்டுப் பால், வாத்து முட்டைகளை வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்திக்கிறோம்.

தென்னை, கரும்பு, மா, வாழை, எலுமிச்சை, ஆடுகள் மூலமா ஒரு வருஷத்துக்கு இப்போதைக்குக் கிடைச்சிட்டிருக்கிற மொத்த வருமானம் 41,60,000 ரூபாய். சேலம்தான் எங்களுடைய விளை பொருளுக்கான சந்தை. வேலையாள்கள், போக்குவரத்து, டீசல்னு வருமானத்துல பாதிச் செலவாயிடும். மீதி 20,80,000 ரூபாய் நிகர லாபமா கிடைச்சிட்டு இருக்கு” என்றவர் நிறைவாக,

‘‘இது போன்ற பெரிய பண்ணைகளில் பண்ணைக் கழிவுகளிலேயே வருமானம் பார்க்கலாம்.’’


“மொத்தமுள்ள 60 ஏக்கர்ல முப்பத்தஞ்சு ஏக்கர்லதான் இப்போதைக்கு வருமானம் எடுத்துட்டு இருக்கோம். இன்னும் 5 வருஷத் துக்குப் பிறகு இந்தப் பண்ணையோட வருமானம் இன்னும் அதிகரிக்கும். அப்போ சிங்கப்பூர்ல சம்பாதிச்சிட்டு இருந்த வருமானத்தை இதுல தாராளமா எடுக்க முடியும். அதை நோக்கித்தான் உழைச்சிட்டு இருக்கோம்” என்று விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, விமலாதேவி,

செல்போன்: 98659 30662

தென்னையில் மகசூல் கூட்டும் ‘வாணி!’ முறை
தென்னையில் மகசூல் கூட்டும் ‘வாணி!’ முறை

தென்னையில் மகசூல் கூட்டும் ‘வாணி!’

“தென்னையில் ரெண்டு வரிசைகளுக்கிடையே 3 அடி அகலம், ரெண்டரை அடி ஆழத்துல நீளமான குழி எடுக்கணும். மழைக்காலத்தில இந்தக் குழியில தண்ணீர் சேகரமாகும். தென்னை வேர்கள் இதிலிருந்து தண்ணீர் உறிஞ்சி வளரும். இது மழை பெய்யாத காலத்திலக்கூட கைக்கொடுக்கும். நிலத்தில ஈரப்பதத்தையும் தக்க வைக்கும். இதுல காய்ந்த தென்னை மட்டைகளைப் போட்டுவிட்டா அது மட்கி இன்னும் மண்ணுக்குச் சத்துகளைக் கொடுக்கும். இதனால தென்னையோட வளர்ச்சி நல்லா இருக்கும். கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டியில் ஒரு விவசாயி தன்னுடைய தோட்டத்தில இந்த முறை மூலமா தேங்காயில நல்ல மகசூல் எடுத்திட்டு இருக்காரு” என்கிறார் கணேசன்.

கழிவுகளிலேயே வருமானம் பார்க்கலாம்!

இயற்கை வேளாண் ஆலோசகர் மதுபாலனிடம் பேசினோம். “இது போன்ற பெரிய பண்ணைகளில் பண்ணைக் கழிவுகளிலேயே வருமானம் பார்க்கலாம். தென்னை மட்டை, வாழை மட்டைகளை அப்படியே போட்டால் அது மட்குவதற்கு 6 மாதங்களுக்கு மேலாகும். இதையே ஷெரடர் (Shredder Machine) மூலமாக மட்டைகளைத் தூளாக்கி நிலத்தில் அப்படியே போட்டு உரமாக்கலாம். இது பண்ணைக்கான இடுபொருள் செலவைப் பெருமளவு குறைக்கும். அதே போன்று மண்புழு உரம் உற்பத்தி செய்ய விரும்புபவர்களுக்கு மட்டைகள் கைகண்ட மூலப்பொருள். இதைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரித்து, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

மதுபாலன்
மதுபாலன்

அதே போன்று சுண்ணாம்பு மண் போன்ற வளமில்லாத மண்ணைக் கொண்ட பண்ணைகளுக்கு அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் போதும். இதை 10 நாள்கள் இடைவெளியில் ஒன்று மாற்றி ஒன்றைத் தொடர்ந்து கொடுக்கலாம். அமுதக்கரைசல் மண்ணில் நுண்ணுயிரிகள் பெருக உதவும். ஜீவாமிர்தம் பயிர் வளர்ச்சிக்கு உதவும். பீஜாமிர்தம் விதை நேர்த்திக்கும், பயிர்களில் வேர் சம்பந்தமான நோய்கள் தாக்காதவாறு தடுக்கும். இதோடு பலதானிய விதைப்புச் செய்தாலே போதும். மண்ணை வளமாக்கி விடலாம்” என்றார்.

தொடர்புக்கு, மதுபாலன், செல்போன்: 97515 06521.

அமுதக்கரைசல் தொட்டி

“எங்க தோட்டம் பெருசுங்கறதால, கால்வாய் வெட்டி ஒவ்வொரு பயிருக்கும் தண்ணீரை கொண்டு போக முடியாது. அதனால, அந்தந்த நிலத்துக்கிட்ட தண்ணீர் விழுகிற மாதிரி பி.வி.சி குழாய் பொருத்தி தண்ணீர் பாய்ச்சுகிறோம். அங்கங்க கேட் வால்வு மட்டும் திருப்பினாப் போதும். அந்தந்தப் பயிருக்குத் தண்ணீர் போய்ச் சேர்ந்திடுது. இந்தக் குழாய் வழியாகவே அமுதக்கரைசல், ஜீவாமிர்தம் போய்ச் சேர்ற மாதிரி இதுக்குன்னே பிரத்யேக தொட்டிகள் அமைச்சிருக்கோம்.

அமுதக்கரைசல் தொட்டி
அமுதக்கரைசல் தொட்டி

இதுல 3 தொட்டிகள் (4,000 லிட்டர் கொள்ளளவு) இருக்கு. முதல் தொட்டி சாணத்த கரைச்சு விட்டுடுவோம். இரண்டாம் தொட்டியில மாட்டுக் கொட்டகையில இருந்து சிறுநீர் வந்து நேரடியா சேகரம் ஆகுற மாதிரி அமைச்சிருக்கோம். சாணத் தொட்டில வடியுற சாணக்கரைசல், மாட்டுச் சிறுநீர்ல கலக்கும். அங்கிருந்து சாண நீர், மாட்டுச் சிறுநீர் கலந்த கரைசல் அதுக்கு கீழே அமைச்சிருக்கிற தொட்டியில சேகரமாகும். இதுல வெல்ல மூட்டையைப் போட்டு வெச்சிருக்கோம். ஜீவாமிர்தம் என்றால் இதுலயே பயறு மாவு, நிலத்து மண்ணைப் போட்டுவிடுவோம். இதுல கரைசல் கலந்ததும் ஒரு நாள், ரெண்டு நாள் விட்டுப் பாசனத்தண்ணீர்ல கலந்து நிலங்களுக்குப் பாயுற மாதிரி அமைச்சிருக்கோம். இந்த அமைப்பை அமைக்கிறதுக்கு 5 வருஷத்துக்கு முன்ன 1 லட்சம் ரூபாய் செலவாச்சு. இந்த முறையால தோட்டம் முழுக்கப் பிரச்னை இல்லாம அமுதக்கரைசல், ஜீவாமிர்தத்தைப் பாசனம் செஞ்சிடுறோம்” என்கிறார் கணேசன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism