Published:Updated:

60 நாள்கள்... ரூ.30,000... குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் முலாம்பழம்!

முலாம்பழச் சாகுபடி வயல்
பிரீமியம் ஸ்டோரி
முலாம்பழச் சாகுபடி வயல்

மகசூல்

60 நாள்கள்... ரூ.30,000... குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் முலாம்பழம்!

மகசூல்

Published:Updated:
முலாம்பழச் சாகுபடி வயல்
பிரீமியம் ஸ்டோரி
முலாம்பழச் சாகுபடி வயல்

கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. சாலையோரக் கடைகளில் தர்பூசணி பழமும் முலாம்பழமும் தவறாமல் இடம்பெறுகின்றன. பொதுவாக முலாம்பழம், கர்நாடக, ஆந்திர மாநில சந்தைகளிலிருந்தே தமிழகத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. தமிழகத்தில் தர்பூசணி சாகுபடியைவிட, முலாம்பழம் சாகுபடி மிகக் குறைவு.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ள கணவாய்பட்டி கிராமத்தில், இயற்கை முறையில் முலாம்பழம் சாகுபடி செய்துவருகிறார் கட்டட பொறியாளரான விக்னேஷ்குமார். அவரை நேரில் சந்திக்கக் கணவாய்பட்டி கிராமத்துக்குச் சென்றோம்.

“திருச்சியில் ஒரு கட்டுமான நிறுவனத்துல வேலை பார்த்தேன். போன வருஷம் கொரோனா ஊரடங்கு காலம். ஹைதராபாத்ல நடந்துகிட்டு இருந்த எங்க நிறுவனத்தோட இன்னொரு பணியைப் பார்க்கச் சொன்னாங்க. ‘கொரோனா தீவிரமா பரவி வந்த நேரத்துல, ஹைதராபாத் போகணுமா’னு யோசிச்சேன். ஊருக்கு வந்து விவசாயத்தைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்” என்று முன்கதை சொல்லிய விக்னேஷ் தொடந்தார்.

“எங்களுக்குக் கணவாய்பட்டியில 3 ஏக்கர் நிலம் இருக்கு. அப்பாவும் அண்ணனும் சேர்ந்து விவசாயம் பாத்துட்டு இருந்தாங்க. எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயம் மேல ரொம்ப ஆசை. ‘எப்படா வாய்ப்பு கிடைக்கும்’னு நினைச்சுட்டே இருப்பேன். என்னால ஊருக்கு வந்து நிலத்துல கால வைக்க முடியலைனாலும், ‘இப்ப என்ன விதைச்சீங்க… விளைச்சல் எப்படி இருக்கு’னு அடிக்கடி அப்பாகிட்டயும் அண்ணன் கிட்டயும் போன்ல கேட்டுப்பேன். பெரும்பாலும், வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய்னு காய்கறிகள்தான் விளைய வெப்பாங்க.

அறுவடையான முலாம்பழத்துடன் விக்னேஷ்குமார்
அறுவடையான முலாம்பழத்துடன் விக்னேஷ்குமார்

2018-ம் வருஷம், கோடைக்காலத்தை மனசுல வெச்சு தண்ணீர்பழமும் (தர்பூசணி), முலாம்பழமும் போடலாம்னு அப்பாவுக்கு யோசனை சொன்னேன். அவரும் தயங்கியபடியே, ‘சரி’னு சொல்லி, சாகுபடி செஞ்சாங்க. நல்ல விளைச்சல் இருந்துச்சு. நல்ல லாபமும் கிடைச்சது. அது எனக்குள்ள விவசாய ஆர்வத்தை அதிகமாக்குச்சு. அதுக்காக நிறைய புத்தகங்கள் படிச்சேன். அதுல பசுமை விகடனும் ஒண்ணு. நிறைய யூடியூப் வீடியோக்கள் பார்த்தேன்.

எங்க வீட்ல எப்பவுமே 10 நாட்டு மாடுக இருக்கும். அதுவே பெரிய பொக்கிஷமா எனக்குத் தெரிஞ்சது. நான் முதல்ல தயாராகிட்டேன். அப்புறமா அப்பாகிட்டயும் அண்ணன் கிட்டயும் பேசுனேன். அவுங்களும் சம்மதிச்சாங்க. முதல் முயற்சியா போன வருஷ கடைசியில இயற்கை முறையில சின்ன வெங்காயம் சாகுபடி செஞ்சோம். உரம் போட்டு சாகுபடி செஞ்சதைவிட, விளைச்சல் குறைவா இருந்துச்சு. உரம், பூச்சிக்கொல்லி செலவுகள் இல்லாததால, நஷ்டம் ஏதும் இல்லை.

அறுவடையான முலாம்பழங்கள்
அறுவடையான முலாம்பழங்கள்

அதுவரைக்கும் நான் என்னோட வேலையைப் பார்த்துக்கிட்டே, வாரக் கடைசியில மட்டும் ஊருக்கு வருவேன். தோட்டத்தைப் பார்த்துட்டு, அப்பாவுக்கும் அண்ணனுக்கும் யோசனை சொல்லிட்டே இருந்தேன். போன டிசம்பர் மாசம் வேலையை விட்டுட்டு ஊருக்கு வந்துட்டேன்’’ என்றவர் முலாம்பழச் சாகுபடி குறித்த தகவலுக்குள் நுழைந்தார்.

‘‘2021 பிப்ரவரி 4-ம் தேதி முலாம்பழம் விதை நடவு செஞ்சோம். மொத்தமுள்ள 3 ஏக்கர்ல ரெண்டேகால் ஏக்கர்ல முலாம்பழம் போட்டிருக்கேன். பொதுவா, நிலத்துல அப்படியே விதையைத் தூவிதான் முலாம்பழம் சாகுபடி செய்வாங்க. அப்படிச் செய்யும்போது, பழங்கள் மண்ணுடன் ஒட்டிக்கிடக்கும். அதனால பழம் அழுக வாய்ப்புள்ளது. அதனால், அரைக் காயாக இருக்கும்போதே எடுத்துடுவாங்க. நாங்க அப்படிச் செய்றது இல்ல. பழம் பழுத்த பிறகுதான் எடுப்போம். பெரும்பாலான பழங்கள், மேட்டுப்பாத்தி மேலையும், அது பக்கத்துலயும் இருக்கும். கூடவே, மேட்டுப்பாத்தியில ‘மல்ச்சிங் ஷீட்’ போட்டிருக்கேன். இங்க மல்ச்சிங் ஷீட் போட காரணம், கோரைப் புற்கள்தான். மலை அடிவாரப்பகுதியில் செம்மண்ணும் மணலும் கலந்த மண். அதனால கோரைகள் அதிகம் வளரும். மல்ச்சிங் ஷீட் கோரைப்புற்களை, கொஞ்சம் கட்டுப்படுத்தும். நான், 30 மைக்ரான் மல்ச்சிங் ஷீட்’ போட்டிருக்கேன். 20 மைக்ரானுக்கும் மல்ச்சிங் ஷீட் கிடைக்கும். ஆனால், சீக்கிரம் கிழிஞ்சு போகும். அரசு மானிய விலையிலும் மல்ச்சிங் ஷீட் கொடுக்குறாங்க. பதிவு செஞ்சு வாங்கலாம். நான் விலைக்குத்தான் வாங்குனேன். ஒரு ரோல் 400 மீட்டர் நீளம் இருக்கும். விலை 6,000 ரூபாய் . ஒரு ஏக்கருக்குப் போடலாம். இரண்டு மூன்று முறை சாகுபடி செய்யும் வரை கிழியாம இருக்கும். எல்லாவற்றுக்கும் மேல, பழங்கள் மல்ச்சிங் ஷீட் மேலையும் பக்கத்துலயும் இருப்பதால், கெட்டுப்போகுற வாய்ப்பும் குறைவு.

முலாம்பழ அறுவடை
முலாம்பழ அறுவடை

நாட்டு மாடு இருக்குறதுனால, தொழு உரத்துக்குப் பிரச்னை இல்ல. அந்த உரத்தையும் தரம் உயர்த்த அதுகூட, சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, பேசிலோமைசிஸ், மீன் அமிலம், இ.எம் கரைசல், எள்ளு பிண்ணாக்கு ஆகியவற்றைச் சிறிதளவு கலந்து போடுறேன். மூணு நாள்கள் கழிச்சு எடுத்துப் பயன்படுத்தலாம். கோரைக்குப் பயந்து, நிலம் முழுவதும் தொழுஉரத்தைப் போடல, மேட்டுப்பாத்தியின் நடுப்பகுதியில் மட்டுமே தொழு உரத்தைப் போட்டிருக்கிறேன். வெங்காயம் போடும்போதே, 3 அடிக்கு 3 அடி இடைவெளியில் சொட்டுநீர்ப் பாசனம் போட்டிருந்தேன். அதனால 6 அடியில் மேட்டுப்பாத்தி அமைச்சு சொட்டுநீர் கொடுக்க ஏதுவாக இருந்துச்சு. திண்டுக்கல்லில் ஒரு கடையில்தான் விதை வாங்குனேன். ஹைப்ரீடு விதைதான். 250 கிராம் விதை தேவைப்பட்டுச்சு. நடவு பண்ணி, இதே மகசூல் எடுத்துக்கிட்டு இருக்கேன்’’ என்றவர், ஒரு முலாம்பழத்தை எடுத்து நம்மிடம் காட்டினார். தொடர்ந்து பேசியவர்,

‘‘இந்த இடம் மலையடிவாரம். தண்ணீர் பிரச்னை இருக்கு. ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்தில்தான் விவசாயம் நடக்குது. செம்மண் கலந்த மணல் தன்மையான மண். 2 அடிக்கு கீழே கடினமான மணல் வந்துடும். இன்னும் ஓர் அடி கீழே போனா பாறை வந்துடும். ரசாயன இடுபொருள் போட்டு வளர்க்குற நிலத்துல ஒரு செடிக்கு 4 முதல் 5 பழங்கள் இருக்கும். ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல் கிடைக்கும். இங்கே, மண், தண்ணீர் பிரச்னை இருக்கு. அதோடு இயற்கை முறையில் ‘ஹைப்ரீடு’ விதையை முளைக்க வைக்கிறோம். அதனால செடிக்கு 2 அல்லது 3 பழங்கள் மட்டுமே எடுக்க முடியுது. ஏக்கருக்கு கிட்டத்தட்ட 5 டன் பழங்கள் கிடைக்குது. இது சராசரி மகசூல்ல பாதி அளவுதான்.

‘‘கொடி படர ஆரம்பித்த பிறகு காலை, மாலை இரண்டு நேரமும் தண்ணீர் விட வேண்டும்.’’

பறவைகளுக்குப் பழங்கள்

எங்க நிலத்தைச் சுற்றி விவசாயம் எதுவுமே நடக்கல. அதனால, பறவைகள், அணில்கள் பழங்களைச் சாப்பிட வரும். பறவைகளால் பூச்சித் தாக்குதல் இல்லை. அதனால பறவைகள், அணில்களை விரட்டுறதில்ல. அவை சாப்பிட்டது போக மீதிதான் நமக்கு. நான், ரெண்டேகால் ஏக்கர் நிலத்தையும் 40 சென்ட், 1 ஏக்கர் 40 சென்ட், 45 சென்ட்னு மூணு பகுதியா பிரிச்சிருக்கேன். இதில், 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்துல அறுவடை முடிச்சிட்டேன். மொத்தம் 5,800 கிலோ கிடைச்சது” என்றவர் நிறைவாக,

அறுவடையான முலாம்பழங்கள்
அறுவடையான முலாம்பழங்கள்

ஒரு கிலோ 12 ரூபாய்

‘‘முலாம்பழம் சாகுபடியில், சவாலானது விலைதான். வெளி மாநிலங்கள்ல இருந்து கிலோ 20 ரூபாய்க்குப் பழம் வருது. நம்ம கிட்ட கிலோ 15 ரூபாய்க்கு மேல வாங்க மாட்டேங்கிறாங்க. நாம பழமா கொடுக்குறோம். அவுங்க அரைக்காயா கொடுக்குறாங்க. நாம, இயற்கை முறையில விளைவிச்சு, அதிக சுவையோடு பழத்தைக் கொடுக்குறோம். இதைச் சொன்னாலும், கடைக்காரங்க கேட்க மாட்டேங் கிறாங்க. விலை குறைச்சுதான் எடுக்குறாங்க. கடைசியா கிலோ ரூ.12-க்குக் கொடுத்தேன். கொடுக்காம வெச்சு கெட்டு போறதவிட, வந்த விலைக்குக் கொடுத்துடலாம்னு வித்தேன். 5,800 கிலோவுக்கு 69,600 ரூபாய் கிடைச்சது. மொத்த செலவு 38,900 ரூபாய். அதைக் கழிச்சுட்டா 30,700 ரூபாய் லாபம்’’ என்றார்.

தொடர்புக்கு,

விக்னேஷ்குமார்,

செல்போன்: 77086 00719

முலாம்பழச் சாகுபடி முறை

முலாம்பழத்தின் வயது 60-70 நாள்கள். விதை விதைக்கும்போது, 36 டிகிரிக்கு மேலே வெப்பநிலை இருக்கக் கூடாது. செம்மண், மணல் கலந்த செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். சாகுபடி நிலத்தை மூன்று உழவு செய்ய வேண்டும். 6 அடி இடைவெளியில், 3 அடி அகலத்தில் மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். இந்த இடைவெளி இருந்தால்தான் கொடி நன்றாகப் படர்ந்து வளரும். ஊட்டமேற்றிய தொழுவுரத்தை ஏக்கருக்கு ஒரு டன் என்ற அளவில் போட வேண்டும். பிறகு, மேட்டுப்பாத்தியில் சொட்டுநீர்க் குழாய் அமைத்து, மல்ச்சிங் ஷீட் போட்டுப் பாத்தியை மூட வேண்டும்.

பிறகு, மல்ச்சிங் ஷீட்டில், 45 சென்டிமீட்டருக்கு ஒரு ஓட்டை போட்டு விதையை நடவு செய்ய வேண்டும். ஒரு ஓட்டையில் ஒரு விதை போட்டாலே போதும். 5-ம் நாள் முளைவிடத் தொடங்கும். அதிலிருந்து மூன்று நாள்களுக்கு ஒருமுறை இ.எம், மீன் அமிலம், ஜீவாமிர்தம் ஆகியவற்றைச் சுழற்சி முறையில் பாசன நீரில் கலந்து கொடுக்க வேண்டும். தூர் பகுதியில் சில நேரங்களில் பிஞ்சு வரும். அதைக் கிள்ளி விட வேண்டும். இல்லையென்றால், சத்து முழுவதும் அந்த ஒரு பழத்துக்கே போய் விடும். வேறு பிஞ்சு வைக்காது.

மல்ச்சிங் ஷீட் போர்த்தப்பட்ட முலாம்பழச் சாகுபடி வயல்
மல்ச்சிங் ஷீட் போர்த்தப்பட்ட முலாம்பழச் சாகுபடி வயல்

30-ம் நாளிலிருந்து வேர் அழுகல், தண்டு அழுகல் நோய் தாக்குதல் இருக்கும். வேர் அழுகல் தாக்கினால், கொடி வாடிப் போய்விடும். தண்டு அழுகல் வருவதற்கு முன்பு, இலைகள் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாறும். உடனே சுதாரித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பட்டுப்போய்விடும்.

தண்டு அழுகலுக்கு டிரைக்கோடெர்மா விரிடி, வேர் அழுகலுக்கு சூடோமோனஸ் கொடுக்கலாம். 100 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் வீதம் கலந்து சொட்டுநீர்க் குழாய் வழியாகக் கொடுக்க வேண்டும். வேர் அழுகல், தண்டு அழுகல் வரும் வரை காத்திருக்காமல், 30-ம் நாள் சூடோமோனஸூம், 45-ம் நாளில் டிரைக்கோடெர்மா விரிடியும் கொடுப்பது நல்லது.

விதை முளைக்க ஆரம்பிக்கும்போது தினமும் ஒருவேளை தண்ணீர் விட்டால் போதும். கொடி படர ஆரம்பித்த பிறகு காலை, மாலை இரண்டு நேரமும் தண்ணீர் விட வேண்டும். சொட்டுநீர்ப் பாசனத்தில் 15 நிமிடங்கள் விட்டாலே போதும். பிஞ்சு வைக்க ஆரம்பித்ததும், காலை, மாலை அரை மணி நேரம் தண்ணீர் விட வேண்டும். கொடி வளர்ந்த பிறகு களை தேவைப்படாது. 55-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம். அறுவடை செய்த பழங்களை ஒன்று மீது ஒன்றாக அடுக்கி வைக்கக் கூடாது. நிலத்தில் பரப்பித்தான் வைக்க வேண்டும். அடுக்கி வைத்தால், பழம் ஒட்டி அழுக வாய்ப்பிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism