Published:Updated:

70 நாள்கள், 80 சென்ட், ரூ.1 லட்சம்... முத்தான வருமானம் கொடுக்கும் முலாம்பழம்!

முலாம்பழத்துடன் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணவேணி
பிரீமியம் ஸ்டோரி
முலாம்பழத்துடன் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணவேணி

மகசூல்

70 நாள்கள், 80 சென்ட், ரூ.1 லட்சம்... முத்தான வருமானம் கொடுக்கும் முலாம்பழம்!

மகசூல்

Published:Updated:
முலாம்பழத்துடன் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணவேணி
பிரீமியம் ஸ்டோரி
முலாம்பழத்துடன் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணவேணி

யற்கை விவசாயிகள், ரசாயன விவசாயிகள் என அனைத்து விவசாயிகளும் பெரும்பாலும் தேடித்தேடி விதைப்பது, குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் பயிர்களைத்தான். அந்த வகையில், முலாம்பழம் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் பயிர்களில் ஒன்றாக இருக்கிறது. இதை அனுபவபூர்வமாக உணர்ந்து, தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார்கள் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம் ஏமப்பேர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள். இவர்களில் ஏமப்பேர் கிராமத்தில் விவசாயம் பார்த்துவரும் அசோக்குமாரும் ஒருவர். அவரைச் சந்திக்க நாம் தோட்டத்திற்குள் நுழைந்தோம். முலாம்பழம் பறிப்பு வேலைக்கு ஆள்களை அழைத்து வருவதற்காக அவர் வெளியில் சென்றிருந்தார். அவரது அப்பா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அம்மா கிருஷ்ணவேணி ஆகியோர் நம்மை வரவேற்றனர்.

இடுபொருள்களுடன் அசோக்குமார்
இடுபொருள்களுடன் அசோக்குமார்

“நாங்க வாழையடி வாழையா விவசாயம் செய்றோம். மொத்தமா 6 ஏக்கர் நிலமும் ஒரு கிணறும் இருக்கு. அதை வெச்சுத்தான் சொட்டுநீர்ப் பாசனம் செய்துக்கிட்டிருக்கோம். வாய்க்கால் பாசனம் செஞ்சா ஒரு வாரத்துக்குக்கூடக் கிணத்துத் தண்ணி தாங்காது. நான் ஆரம்பத்துல இருந்தே யூரியா, பூச்சி மருந்துன்னே வாழ்ந்த ஆளு. எனக்கு அதைவிட்டா ஒண்ணும் தெரியாது. அப்படி இருந்த என்னை என் மகன் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம்னு பேச வெச்சுட்டான். கடந்த 4 வருஷமா இதைத்தான் செய்துக்கிட்டிருக்கோம்.

ரசாயனம் பயன்படுத்துன விவசாயிங்குற முறையில ஒண்ணு மட்டும் சொல்றேன். நாம வாங்குற ரசாயன உரங்களோட செலவைக் குறைச்சாலே போதும், லாபம் தானா கிடைச்சிடும். என்னடா லாபம் கிடைக்கும்னு சொல்றான், விவசாயிக்கு என்னைக்கு லாபம் கிடைச்சிருக்குனு பலர் நினைக்கலாம். நான் சொல்ற லாபம், இயற்கை விவசாயம் மூலமா கிடைக்குது” என்று சொல்லும்போதே “அப்பா சும்மா இருக்க மாட்டீங்களா” என்றபடியே வந்து சேர்ந்தார் அசோக்குமார். “இப்படித்தாங்க விவசாயம் பத்தி யாராவது கேட்டாலே இயற்கை விவசாயம், மீன் அமிலம்னு கிளம்பிடுறார்” என்றபடி பேசத் தொடங்கினார், அசோக்குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முலாம்பழ அறுவடையில்...
முலாம்பழ அறுவடையில்...

பசுமை விகடனால் கற்ற இயற்கை விவசாயம்

“நான் பி.காம் முடிச்சிருக்கேன். சென்னை, திருச்சினு கொஞ்ச காலம் ஆடிட்டிங் ட்ரெயினிங் எடுத்தேன். அதுக்குப் பின்னால கள்ளக்குறிச்சியிலயே ஆடிட்டிங் ஆபீஸ் போட்டுட்டேன். விவசாயத்தைப் பார்த்துக்கிட்டிருந்த அப்பாவுக்கும் வயசாகிடுச்சு. உள்ளூர்லதானே இருக்கோம். நாம ஏன் விவசாயத்தைப் பார்க்கக் கூடாதுனு தோணுச்சு. அதனால நானே விவசாயம் பார்த்துக்கிட்டே, ஆபீஸையும் கவனிச்சிட்டிருக்கேன். 2016-ம் வருஷம் உளுந்தூர்ப்பேட்டை சாரதா ஆஸ்ரமத்துல பசுமை விகடன் நடத்துன கருத்தரங்குல கலந்துக்கிட்டேன். அப்போ புளியங்குடி அந்தோணிசாமி பேசினார். அவர் இயற்கை விவசாயத்தைப் பத்தி பேசின கருத்துகள் எல்லாமே எளிமையா புரிஞ்சது. அதுக்கப்புறம் இயற்கை விவசாயத்தைப் பத்தின தெளிவு கிடைச்சதால, முழுமையா இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன். அதுக்கு முக்கியமா பசுமை விகடன்ல வர்ற செய்திகள் எனக்கு உபயோகமா இருந்துச்சு. பசுமை விகடன்ல வந்த மண்புழு மன்னாரு, ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் வெற்றி அனுபவ கட்டுரைகள் எல்லாம் படிப்பேன். அதுல வந்த சில விவசாயிகள்கிட்டயும் நேர்ல போய்ப் பேசியிருக்கேன். அத மூலதனமா வெச்சுத்தான் கருணைக்கிழங்குப் பயிர் செஞ்சேன். அந்த வருஷம் சரியான மழை இல்லாததால, கிணத்துல தண்ணீர் கம்மியா இருந்துச்சு. அதனால கருணைக்கிழங்குச் சாகுபடி எதிர்பார்த்த மகசூல் கொடுக்கலை” என்றவர் தொடர்ந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மாடுகள்
மாடுகள்

கைகொடுத்த ஊடுபயிர்

“அந்த நேரத்துலதான் ஜீரோ பட்ஜெட்ல விவசாயம் செய்யலாம்னு தோணுச்சு. அதனால வரப்பு ஓரங்கள்ல கத்திரியும், கருணைக்கிழங்குல ஊடுபயிரா சர்க்கரைச் சோளமும் நட்டேன். கத்திரிக்காயை எடுத்துக்கிட்டு முதல்முறையா சந்தைக்குப் போனேன். உழவர் சந்தையில இருக்குற உறவினர்கிட்டக் கொடுத்து விற்பனை செய்யச் சொன்னேன்.

முலாம்பழத்துடன் அசோக்குமாருடைய 
அப்பா கிருஷ்ணமூர்த்தி/அம்மா கிருஷ்ணவேணி
முலாம்பழத்துடன் அசோக்குமாருடைய அப்பா கிருஷ்ணமூர்த்தி/அம்மா கிருஷ்ணவேணி

இயற்கையில விளைஞ்ச கத்திரியை நாளுக்கு நாள் மக்கள் அதிகமா வாங்க ஆரம்பிச்சாங்க. அந்தப் போகத்துல மட்டும் கத்திரி மூலமா 35,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுபோக ஊடுபயிரா நட்ட சர்க்கரை சோளம் மூலமா 60,000 ரூபாய்னு மொத்தமா 95,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. ஒரு பயிர் கைவிட்டாலும் இன்னொரு பயிர் கைகொடுத்துச்சு” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, அசோக்குமாரின் அம்மா கிருஷ்ணவேணி எல்லோருக்கும் நாட்டுச் சர்க்கரை காபி கொடுத்தார். இயற்கை விவசாயம் அவர்களை மாற்றியிருக்கும் விதம் கருப்பட்டி காபியின் சுவையிலேயே தெரிந்தது. மீண்டும் பேச்சை ஆரம்பித்தார், அசோக்குமார்.

தண்ணீரைக் கொடுக்கும் சிறிய பண்ணைக்குட்டை

“கிணத்துக்கு 10 அடி தொலைவுல 20 அடி நீளம், 5 அடி அகலம், 5 அடி ஆழத்துல சின்னதா குட்டை ஒன்றை அமைச்சிருக்கேன். இது முறையான பண்ணைக்குட்டை இல்ல. வீடு கட்டும்போது வேலைக்கு மண் தேவைப் பட்டது. அதுக்காக நிலத்துல எடுக்கலாம்னு தோணுச்சு. அதனால சரியான நிலப்பகுதியைத் தேடினோம். நிலத்துல தண்ணீர் விழுந்தா கிணத்துக்குப் பக்கத்துல போயி, அப்படியே வழிஞ்சு ஓடுற மாதிரியான ஓர் இடம் இருந்தது. கிணத்துக்குப் பக்கத்துலயே தோண்டினா தண்ணீரும் கிடைக்கும்னு நினைச்சோம். அப்போ தோண்டுன குழியால கிணத்துல தண்ணீர் இருந்துக்கிட்டே இருக்கு.

என்கிட்ட திருவண்ணாமலை குட்டை மாடும், சாஹிவால் கன்றும், 5 ஆடுகளும் இருக்கு. என் வயல்ல மாட்டு எரு, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மீன் அமிலம், வேம், அசோஸ்பைரில்லம், வேஸ்ட் டீகம்போஸர்னு பயன்படுத்திக்கிட்டிருக்கேன். அதைத் தயாரிக்க மொத்தமாவே 10,000 ரூபாய்தான் செலவாகும். இந்தச் செலவுல ஒரு வருஷத்துக்குத் தேவையான இடுபொருள்கள் கிடைச்சிடும். இது தெரியாமத்தான் எங்க அப்பா வருஷத்துக்கு 40,000 ரூபாய்க்கு மேல ரசாயன உரங்களை வாங்க பணத்தைச் செலவு செஞ்சிருக்காரு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் தோட்டத்துல எப்பவுமே மரவள்ளி, மக்காச்சோளம், முலாம்பழம்தான் பயிர் செய்றேன். நெல் சாகுபடி செய்யணும்னுதான் ஆசை. ஆனா, அந்தளவுக்குக் கிணத்துல தண்ணி இல்லை. இப்போ நிலத்துல ரெண்டேகால் ஏக்கர்ல முலாம்பழம் போட்டிருக்கேன். முலாம்பழத்துக்கு இப்போ சீசன் கிடையாது. இருந்தாலும் வியாபாரம் இருக்குனு தெரிஞ்சுக்கிட்ட பின்னாலதான் நடவு செஞ்சேன். முதல்ல 80 சென்ட்ல முலாம்பழம் பறிப்புக்கு வந்திருக்கு. எங்க பகுதியில இந்த வருஷம் மழை கொஞ்சம் அதிகமாவே பெய்ஞ்சிருச்சு. அதனால தண்ணியில இருந்த முலாம்பழம் எல்லாம் அழுக ஆரம்பிச்சிருச்சு. அதனாலதான் உடனடியா பறிக்க வேண்டிய சூழல். மழை அளவா இருந்திருந்தா மகசூல் இன்னும் அதிகமாகியிருக்கும். வழக்கமா மொத்தம் மூணு முறை பறிப்பேன். இப்போ முதல் பறிப்பு நடந்துக்கிட்டு இருக்கு. அடுத்த ஒரு பறிப்புதான் வரும். பிஞ்சுகள் எல்லாம் அழுகிட்டதால மூணாவது பறிப்புக்கு வராது.

உளுந்தூர்ப்பேட்டை சாரதா ஆஸ்ரமத்துல பசுமை விகடன் நடத்துன கருத்தரங்குல கலந்துக்கிட்டேன். மண்புழு மன்னாரு, ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் வெற்றி அனுபவங்கள் கட்டுரைகள் எல்லாம் படிப்பேன்.

மத்த வயல்ல இன்னும் சில நாள் ஆகும். மல்ஷிங் சீட் போட்டு முலாம்பழம் நடவு செஞ்சிருக்கேன். இந்த ஷீட்டையும், இந்த நிலத்துக்குக் கொடுத்த உரத்தையும் வெச்சுக்கிட்டே இன்னும் ரெண்டு தடவை முலாம்பழம் நடவு செஞ்சிடுவேன். நிலம் முழுக்கவே சொட்டுநீர்ப் பாசனம்தான்” என்றவர், பறித்த முலாம்பழங்களை லாரியில் ஏற்றி எடைபோட்டு அனுப்பிவிட்டு வந்தார். தொடர்ந்து விற்பனை விவரங் களைப் பற்றிப் பேசினார்.

80 சென்ட்... ரூ.1,00,000 வருமானம்

“இப்போ விதைச்சிருக்குற முலாம்பழம் ஊர்வசி ஒட்டு ரகத்தைச் சேர்ந்தது. 70 நாள் பயிர். இதை வியாபாரிகள்கிட்ட இருந்து வாங்குறப்பவே, விளையுறதை அவங்களுக்குத்தான் கொடுப்பேன்னு ஒப்பந்தம் போட்டு வாங்குனேன். அதுப்படி இப்போ 80 சென்ட்ல 10 டன் மகசூல் கிடைச்சிருக்கு. ரெண்டாவது பறிப்புக்கு 2.5 டன் மகசூல் கிடைக்கும்.

‘‘மல்ஷிங் சீட் போட்டு முலாம்பழம் நடவு செஞ்சிருக்கேன். இந்த ஷீட்டையும், இந்த நிலத்துக்குக் கொடுத்த உரத்தையும் வெச்சுக்கிட்டே இன்னும் ரெண்டு தடவை முலாம்பழம் நடவு செஞ்சிடுவேன்.’’

மொத்தமா 80 சென்ட்ல 12.5 டன் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ 8 ரூபாய்னு விற்பனை செய்யறேன். இதுல மொத்தமா 1,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதிக மழையால பிஞ்சுகள் அழுகாம இருந்தா மூணாவது பறிப்புலேயும் வருமானம் கிடைச்சிருக்கும். இதுல விதை, ஆள் கூலி, இடுபொருள் செலவுகள்னு 34,000 ரூபாய் போனாலும், 66,000 ரூபாய் லாபமா நிற்கும். இன்னும் 1 ஏக்கர் 45 சென்ட்ல முலாம்பழம் இருக்கு. அது மூலமாகவும் வருமானம் கிடைக்கும்” என்றபடி விடைகொடுத்தார், அசோக்குமார்.

தொடர்புக்கு, அசோக்குமார், செல்போன்: 90422 13249.

70 நாள்கள், 80 சென்ட்,  ரூ.1 லட்சம்... முத்தான வருமானம் கொடுக்கும் முலாம்பழம்!

இப்படித்தான் சாகுபடி!

80 சென்ட் நிலத்தில் முலாம்பழச் சாகுபடி குறித்து அசோக்குமார் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

70 நாள்கள், 80 சென்ட்,  ரூ.1 லட்சம்... முத்தான வருமானம் கொடுக்கும் முலாம்பழம்!

முலாம்பழத்தின் வயது 65 முதல் 70 நாள்கள். முலாம்பழக் கொடி வளர்ச்சி பருவத்தில் பனி தேவை. காய் உருவாகும்போது பனி இருக்கக் கூடாது. அதனால், இதற்கு மாசிப் பட்டம் ஏற்றது. பங்குனிப் பட்டத்திலும் சாகுபடி செய்யலாம். செம்மண், மணல் கலந்த செம்மண், மணல் சாரியான மண் வகைகள் ஏற்றவை. சாகுபடி நிலத்தைக் கொக்கிக்கலப்பை மூலம் 3 சால் உழவு செய்து மண்ணைப் பொலபொலப்பாக்க வேண்டும். பிறகு, 8 டன் மாட்டு எருவைக் கொட்டி பரப்பிவிட வேண்டும். கடைசியாக, ரோட்டோவேட்டர் மூலம் உழுது சமப்படுத்திக்கொண்டு, 5 அடி இடைவெளிவிட்டு மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். வசதிக்கேற்ப பாசன வசதிகளைச் செய்துகொள்ள வேண்டும் (இவர் மல்ஷிங் ஷீட் மற்றும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்திருக்கிறார்). விதைப்புக்கு முன்னரே அடி உரமாக அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா முதலியவற்றைக் கொடுத்தால் மகசூல் அதிகம். பயிரின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

70 நாள்கள், 80 சென்ட்,  ரூ.1 லட்சம்... முத்தான வருமானம் கொடுக்கும் முலாம்பழம்!

செடிக்குச் செடி ஒன்றே கால் அடி இடைவெளியில் கையால் பள்ளம் பறித்து விதையை ஊன்ற வேண்டும். விதையை ஊன்றும்போது, கூடவே வேப்பம் பிண்ணாக்கையும் கலந்து இட வேண்டும். மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர்க் காலநிலையைப் பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 6-ம் நாளில் விதைகள் முளைத்து, இரண்டு இலைகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும்.

பூச்சித்தாக்குதல் 8-ம் நாளிலிருந்து தென்பட ஆரம்பிக்கும். இந்தச் சமயத்தில், ஒரு டேங்க் தண்ணீருக்கு (10 லிட்டர்) 100 மில்லி மீன் அமிலத்தையும், இரண்டு நாள் இடைவெளிவிட்டு 200 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டியை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 10-ம் நாள் முதல் வாரம் ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும்.

தலா 10 கிலோ வீதம் கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு, பருத்திப் பிண்ணாக்கு, சூரியகாந்தி அல்லது தேங்காய்ப் பிண்ணாக்கு ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் நான்கு நாள்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.

15-ம் நாளில் இந்தக் கரைசலை ஒவ்வொரு செடிக்கும் 100 மில்லி வீதம் ஊற்ற வேண்டும். 15 முதல் 20-ம் நாளுக்குள் தலா ஒரு கிலோ இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எடுத்து இடித்து, 10 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைத்து, 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். இது பூச்சித்தாக்குதலை முழுமையாகக் கட்டுப்படுத்தும். 20-ம் நாளில் களை எடுக்க வேண்டும். நான் மல்ஷிங் போட்டிருப்பதால் களை எடுக்கும் அவசியம் இல்லை. 25-ம் நாளில் கொடி படர ஆரம்பித்து, 30-ம் நாளில் பூவெடுக்க ஆரம்பிக்கும். அந்தச் சமயத்தில் ஒரு டேங்க் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம் அரப்பு-மோர்க் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். மொத்தமாக ஏழு டேங்குகள் தேவைப்படும். அதன் பின்னர் வாரம் ஒருமுறை பாசன நீருடன் பஞ்சகவ்யா மற்றும் ஜீவாமிர்தத்தைக் கலந்துவிட வேண்டும். பூவெடுத்துக் காய்ப்பிடிக்க ஆரம்பித்ததும் 200 லிட்டர் தண்ணீருக்கு 3 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து, ஒருநாள் வைத்திருந்து பாசன நீருடன் கலந்துவிடலாம்.

50 முதல் 60 நாள்களில் காய்கள் ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ அளவுக்கு வந்துவிடும். 65-ம் நாள் முதல் 70-ம் நாளில் அறுவடை செய்யலாம். அடுத்து ஒரு வார இடைவெளியில் இரண்டு அறுவடைகள் செய்யலாம். காய்களின் மேற்பரப்பில் உள்ள வலைகளுக்கு இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறமாகவும், வலைகள் மங்கலான வெள்ளை நிறமாகவும் மாறும்போது அறுவடை செய்ய வேண்டும்.

பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல்

முலாம்பழத்தைத் தாக்கும் பூச்சிகளில் முக்கியமானது சாணி வண்டு மற்றும் சிவப்பு வண்டு. இவற்றைக் கட்டுப்படுத்த 30 மில்லி மெட்டாரைசியம் அனிசோபீலியா என்ற பூஞ்சணத்தைப் பாசன நீருடன் கலந்து கொடுக்க வேண்டும். வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிக்க வேண்டும். காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தப் பாதிக்கப்பட்ட காய்களைப் பறித்து அழிக்க வேண்டும். குறைந்தது வாரம் ஒருமுறை பூச்சிவிரட்டி, அக்னி அஸ்திரம், மீன் அமிலம், அரப்புமோர்க் கரைசல் ஆகியவற்றில் ஒன்றைத் தெளிப்பது பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism