Published:Updated:

ஸ்பான்ச் கார்டு, கூர்க் ஆரஞ்சு, ருத்திராட்சை பலா... விதவிதமான பயிர்கள்... வித்தியாசமான உணவுக்காடு!

பண்ணையில் பயிற்சியளிக்கும் ராமகிருஷ்ணப்பா
பிரீமியம் ஸ்டோரி
பண்ணையில் பயிற்சியளிக்கும் ராமகிருஷ்ணப்பா

பக்கத்து வயல்

ஸ்பான்ச் கார்டு, கூர்க் ஆரஞ்சு, ருத்திராட்சை பலா... விதவிதமான பயிர்கள்... வித்தியாசமான உணவுக்காடு!

பக்கத்து வயல்

Published:Updated:
பண்ணையில் பயிற்சியளிக்கும் ராமகிருஷ்ணப்பா
பிரீமியம் ஸ்டோரி
பண்ணையில் பயிற்சியளிக்கும் ராமகிருஷ்ணப்பா

ஒவ்வொரு பண்ணைக்கும் ஒரு நோக்கம் உண்டு. சில பண்ணைகள் வருமானத்தை நோக்கமாகக் கொண்டவை, சில பண்ணைகள் சோதனை முயற்சியாக நடத்தப்படுபவை, சில பண்ணைகள் சூழலுக்குப் பங்களிக்க வேண்டும் என்று நினைப்பவை... அந்த வரிசையில் பலவிதமான விதைகள், பயிர் களைச் சாகுபடி செய்து அதைப் பிறருக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், சூழலுக்குப் பங்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் செயல்படுகிறது பெலவாலா சூழலியல் பண்ணை (Belavala Ecological Farm).

பழப்பயிர்கள்
பழப்பயிர்கள்

சமீபத்தில் கர்நாடக மாநிலம், மைசூரு சென்றிருந்தபோது, சகஜா சம்ருதா அமைப்பின் நிறுவனர் கிருஷ்ண பிரசாத்திடம் உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போது அவர், “கர்நாடகாவில் செயல்படும் முன்னோடி பண்ணைகளில் பெலவாலா பண்ணை, மிகமுக்கியமான பண்ணை” என்று சொல்லி, பண்ணையை நடத்தி வரும் ராமகிருஷ்ணப்பாவின் தொடர்பு எண்ணையும் கொடுத்தார். அதைக் குறித்துக் கொண்ட நாம், அடுத்த சில நாள்களில் ராமகிருஷ்ணப்பாவை அலைபேசியில் தொடர்புகொண்டோம்.

பயிற்சியளிக்கும் ராமகிருஷ்ணப்பா
பயிற்சியளிக்கும் ராமகிருஷ்ணப்பா

நம்மை அறிமுகப் படுத்திக்கொண்டதும், மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தவர், “நான் கர்நாடக மாநில தோட்டக்கலைத் துறையில் நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்தேன். அப்போதே ரசாயனம் இல்லாத விவசாயம்தான் நம் நாட்டுக்குத் தேவை என்பதை உணர்ந்திருந் தேன். அதன் காரணமாக நிறைய விவசாயி களைச் சூழலுக்கு உகந்த விவசாயத்தை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியதோடு, அதற்கான உதவிகளையும் துறை மூலமாக செய்திருக்கிறேன். கர்நாடகாவில் இயற்கை விவசாயக் கொள்கைக்கான வரைவை தயாரிக்கும் குழுவில் பங்களித்திருக்கிறேன். பணி ஓய்வுக்குப் பிறகு, இந்தப் பண்ணையை 2014-ம் ஆண்டு தொடங்கினேன்” என்று இடைவெளிவிட்டவர்,

தென்னை
தென்னை

“பண்ணையின் பரப்பளவு 8 ஏக்கர். இதைத் தொடங்கும்போதே மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் இடமாக இந்தப் பண்ணை இருக்க வேண்டும். மற்ற பண்ணைகளில் இல்லாத பயிர் ரகங்களை இந்தப் பண்ணைக் குள் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். அந்த வகையில் பல வகையான பயிர்கள் கலந்த ஓர் உணவுக்காடு போல இந்தப் பண்ணையை வடிவமைத்திருக்கிறேன். காய்கறிகள், பழமரங்கள், மரங்கள், மூலிகைகள் என்று 180 வகையான பயிர்கள் உள்ளன. 25 வகையான பலாப்பழ ரகங்கள், 20 வகையான மா ரகங்கள், 10 வகையான காய்கறி ரகங்கள் என்று பலவிதப் பயிர் களைச் சாகுபடி செய்திருக்கிறோம்” என்று படபடவென விவரித்தார். நிறைவாக, “உடல்நிலை காரணமாக இப்போது பெங்களூரு வந்திருக்கிறேன். என்னுடைய பண்ணைக்குச் செல்லுங்கள். பண்ணையின் மேலாளர் ராஜுவிடம் உங்கள் வருகையைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். அவர், உங்களுக் குப் பண்ணையைப் பற்றி விளக்கிச் சொல்வார்” என்றவர், பண்ணையின் முகவரியைக் கொடுத்தார்.

பண்ணையில் பயிற்சி
பண்ணையில் பயிற்சி

மைசூரிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டரில் கிருஷ்ண ராஜ சாகர் அணை (KRS Dam) இருக்கிறது. அதற்குச் செல்லும் வழியில் 15-வது கிலோ மீட்டரில் இருக்கிறது பெலகுலா கிராமம். அங்கேதான் அமைந்துள்ளது பெலவாலா பண்ணை. அங்கே சென்ற நம்மை வரவேற்ற மேலாளர் ராஜு, பண்ணையைச் சுற்றிக்காட்டினார். முகப்பிலேயே தென்னையும் அதில் ஊடு பயிராக மஞ்சளும் நன்றாக விளைந் திருந்ததைக் காணமுடிந்தது. தென்னையில் நன்றாக இளநீர்க் காய்களும் காய்த்திருந்தன.

“இது திப்டூர் ரகத் தென்னை. கர்நாடக மாநிலத்துக்கென்றே உள்ள பிரத்யேக தென்னை ரகம். நன்றாகக் காய்க்கக்கூடியது” என்று விளக்கிய ராஜு, தொடர்ந்தார்.

குடும்பத்தினருடன்
குடும்பத்தினருடன்

“இங்கே 4 மண்டலங்களாக நிலத்தைப் பிரித்துப் பயிர் சாகுபடி செய்து வருகிறோம். பழப்பயிர்கள்+மரப்பயிர்கள், பழமரப்பயிர்கள்+காய்கறிப் பயிர்கள், பழப்பயிர்கள்+மூலிகைகள், வறண்ட நிலப் பயிர்கள் என்று பிரித்துப் பராமரித்து வருகிறோம். வறண்ட நிலப் பயிர்களில் தண்ணீர் அதிகம் தேவைப்படாத மா, சீத்தா, சந்தன மரங்கள், செம்மரங்கள் சாகுபடி செய்கிறோம். தண்ணீர் அதிகம் தேவைப்படும் கொய்யா, மாதுளை, சப்போட்டோ, காய்கறிகளை மற்றொரு பகுதியிலும் சாகுபடி செய்திருக்கிறோம். வரப்புகளில் வாட்டர் ஆப்பிள், மர திராட்சை, ஐஸ்க்ரீம் பீன்ஸ், வெல்வெட் ஆப்பிள், மலபார் செஸ் நட் போன்ற அரிய பழ மரங்களைச் சாகுபடி செய்திருக்கிறோம். இவற்றின் வளர்ச்சி, மகசூல் தன்மை ஆகியவற்றை யெல்லாம் ஆவணப்படுத்தி வருகிறோம்.

செர்ரி
செர்ரி

பழமரப்பயிர்களுக்கு இடையில் ஊடு பயிராகப் பெரிய சைஸ் கத்திரிக்காயைச் சாகுபடி செய்திருக்கிறோம். இதைத் தவிர தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்பான்ச் கார்டு (பஞ்சு புடலங்காய்) சாகுபடி செய்திருக்கிறோம். சாதாரணப் புடலங் காயைவிட பெரிதாகவும், அதிக மகசூலும் கொடுக்கும்” என்றவர் மா, வாழை, பப்பாளி, கொய்யா பயிரிடப்பட்டிருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

“பொதுவாக, குட்டை ரகப் பப்பாளி மரங்களைத்தான் வெளியில் அதிகம் பார்க்க முடிகிறது. ஆனால், எங்கள் தோட்டத்தில் பப்பாளி மரங்கள் உயரமாக இருக்கும். இது நாட்டு ரகப் பப்பாளி, ஏணி வைத்துதான் பறிக்கிறோம். இது அதிக அளவில் காய்க்கும். முள் உள்ள பலாப்பழங்களைத்தான் பார்த்திருப்பீர்கள். எங்கள் தோட்டத்தில் முள் இல்லாத பலாப்பழ மரங்களையும் வளர்த்து வருகிறோம். இது ருத்திராட்சை கொட்டை தோற்றத்தில் இருப்பதால் இதை ருத்திராட்சை பலாப்பழம் என்று அழைக் கிறார்கள். வாழையில் நஞ்சன்கூடு வாழை யைச் சாகுபடி செய்திருக்கிறோம்” என்று பெருமையோடு சொன்னவர், பட்டர் ப்ரூட், ஸ்டார் ப்ரூட், மைசூர் கொய்யா, கூர்க் ஆரஞ்சு, எலுமிச்சை, முருங்கை, வெள்ளை மல்பெரி, மிளகாய், முந்திரி, லவங்கம், காபி, செர்ரி என்று தோட்டத்தில் வளரும் அத்தனை பயிர்களையும் காட்டி விளக்கினார்.

ராஜு
ராஜு

சரி, தோட்டப் பயிர்களுக்கு என்னவிதமான இடுபொருள்களைக் கொடுக்கிறீர்கள்? என்று கேட்டோம்.

“பண்ணையில் நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறோம். அவற்றின் சாணம், சிறுநீர்தான் முக்கிய இடுபொருள். 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம் அல்லது தொட்டியில் 120 லிட்டர் தண்ணீர், 20 கிலோ சாணம், 20 கிலோ நாட்டு மாட்டுச் சிறுநீர், 5-லிருந்து 50 வகையான இலை, தழைகள் 20 கிலோ போட்டு சுமார் 50 நாள்களுக்கு இந்தக் கரைசலைத் தினமும் கலக்கி விடுவோம். 50 நாள்களுக்குப் பிறகு, இந்தக் கரைசலை வடிகட்டி, பாசனநீர் வழியாகக் கலந்து கொடுப்போம். இதுதான் நாங்கள் கொடுக்கிற முக்கிய இடுபொருள். மண்வளத்தைப் பெருக்குவதோடு நோய்த் தடுப்பு மருந்தாகவும், பூச்சிகளை விரட்டும் மருந்தாகவும் இந்தக் கரைசல் செயல்படுகிறது. சுமார் 5 அடி ஆழம் கொண்ட பண்ணைக் குட்டையை அமைத்திருக்கிறோம். கோடைக் காலங்களில் இதிலிருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்துகிறோம்” என்று சொன்னார் ராஜு.

பண்ணைக்குட்டை
பண்ணைக்குட்டை

நிறைவாக ராமகிருஷ்ணப்பாவை அலைபேசியில் அழைத்து, பண்ணையைப் பார்வையிட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டோம். அப்போது அவர், “இந்தப் பண்ணையில் நாட்டு ரகங்கள், வீரிய ரகங்கள், வெளிநாட்டுப் பழ வகைகள் என்று அனைத்தையும் வளர்க்கிறோம். ஏனென்றால், ரசாயன பயன்பாடு இல்லாமலும் அனைத்து வகையான பயிர்களையும் வளர்க்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காகவும் இதைச் செய்கிறோம். காட்டில் எப்படி பலவிதமான பயிர்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வளர்கிறதோ, அதேபோன்றுதான் இங்கே வளர்த்து வருகிறோம். நல்ல மகசூலும் எடுத்து வருகிறோம். இங்கே விளைபவற்றில் முதலில் என்னுடைய வீட்டுத் தேவைக்குப் பயன் படுத்திக்கொள்கிறேன். அதோடு, லாப நோக்கிலும் இந்தப் பண்ணையை நான் நடத்தவில்லை. எங்கள் தேவைக்குப் போக மீதியுள்ளவற்றை ‘பெலவாலா பஜார்’ என்ற பெயரில் பண்ணைக்குள்ளே வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ விற்பனை செய்கிறேன். சகஜ சம்ருதா நடத்தும் விதைத் திருவிழாக்களிலும் காட்சிக்கு வைக்கிறேன்.

பயிற்சியில்
பயிற்சியில்


ஒவ்வொரு மாதத்தின் கடைசி சனிக் கிழமைகளில் விவசாயிகளுக்காகப் பயிற்சி நடத்தி வந்தேன். கொரோனா பெருந் தொற்றுக்குப் பிறகு, விவசாயிகள் குழுவாக இணைந்து வருபவர்களுக்கு மட்டும் நடத்து கிறேன். விவசாயிகளைவிட நிறைய பள்ளி, கல்லூரி மாணவர்கள் விவசாயம் கற்க வருகிறார்கள். வேளாண்மைத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்க இந்தப் பண்ணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் விவசாயத்தைக் கற்கும் வகையில், அவர் களுக்கான தங்குமிடத்தையும் இலவசமாக வழங்கி வருகிறேன்.

சாத்துக்குடி
சாத்துக்குடி

பண்ணையில் இருக்கும் தனித்துவமான விதைகளை நாற்றுகளாக உருவாக்குவது குறித்தும், நர்சரிகளை எப்படி அமைக்க வேண்டுமென்றும் பயிற்சிகள் கொடுக்கிறோம். எந்தெந்த ரகங்கள் பயனுள்ளவை, இயற்கை முறையில் இடுபொருள்களைத் தயார் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம்.

கிருஷ்ண ராஜ சாகர் அணைக்குச் செல்லும் பிரதான வழி என்பதால் இதுவொரு ‘பார்ம் டூரிஸம்’ பண்ணையாகவும் செயல்பட்டு வருகிறது. சுற்றுலா செல்பவர்கள் இந்தப் பண்ணைக்கு வருவதை ஒரு வழக்க மாகவும் வைத்திருக்கிறார்கள். காடுகள் அழிந்து வருகின்றன. இனி, நம் விவசாய நிலங்களைக் காடுகளாக உருவாக்குவதை விட வேறு வழியில்லை. அதற்கான முன்னோட்டமாக இந்த உணவுக்காட்டை உருவாக்கியிருக்கிறேன்” என்றார் உற்சாகக் குரலில்.

கே.ஆர்.எஸ் அணையைச் சுற்றிப் பார்க்க சென்றால், இந்த பெலவாலா பண்ணைக்கும் ஒரு எட்டு போய்விட்டு வாருங்கள்!

தொடர்புக்கு,

Belavala Ecological Farm,

Belagula, Mysuru-KRS Road,

Mandya District.

ராமகிருஷ்ணப்பா,

செல்போன்: 96209 99203

ஸ்பான்ச் கார்டு!
ஸ்பான்ச் கார்டு!
ஸ்பான்ச் கார்டு!
ஸ்பான்ச் கார்டு!

பெலவாலா பண்ணையின் தனித்துவமான பயிர்கள்!

ஸ்பான்ச் கார்டு!

பஞ்சு புடலங்காய் என்றழைக்கப்படும் இந்த ஸ்பான்ச் கார்டு மிக நீளமாக அடர் பச்சை நிறத்தில் காய்க்கக் கூடியது. தாய்லாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரகம், பொரியல் தயாரிப்பில் பெருமளவில் பயன்படுகிறது. நீர்ச்சத்து அதிகம் கொண்டது. வழக்கமான புடலங்காயைவிடக் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

கல்லுப்பட்டி சப்போட்டா!
கல்லுப்பட்டி சப்போட்டா!

கல்லுப்பட்டி சப்போட்டா!

இது வீரிய ரக சப்போட்டா. நீள்வட்டத்தில் முட்டையைப் போன்ற தோற்றத்தில் உள்ள இந்தச் சப்போட்டோ ரகம் அதிக மகசூல் கொடுக்கக்கூடியது. ஒரு மரத்துக்குக் குறைந்தபட்சம் 50 கிலோ மகசூல் கிடைக்கும்.

ருத்திராட்சை பலாப்பழம்
ருத்திராட்சை பலாப்பழம்
ருத்திராட்சை பலாப்பழம்
ருத்திராட்சை பலாப்பழம்

ருத்திராட்சை பலாப்பழம்

முள் இல்லாத பலாப்பழம். 1 கிலோ, 2 கிலோ அளவில் இது இருக்கும். ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு எளிதாக எடுத்துச் செல்லலாம். மேற்குத் தொடர்ச்சி மலையின் மலநாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த ருத்திராட்சை பலா, சமவெளியிலும் நன்றாக வளர்கிறது.

விதவிதமான தக்காளி வகைகள்
விதவிதமான தக்காளி வகைகள்
விதவிதமான தக்காளி வகைகள்
விதவிதமான தக்காளி வகைகள்
விதவிதமான தக்காளி வகைகள்
விதவிதமான தக்காளி வகைகள்

தக்காளி ரகம்

ஆரஞ்சு, பழுப்பு, இளஞ்சிவப்பு என்று விதவித மான வண்ணங்களில் இந்தப் பண்ணையில் தக்காளி ரகங்கள் உள்ளன.

மரதிராட்சை
மரதிராட்சை
வாட்டர் ஆப்பிள்
வாட்டர் ஆப்பிள்


கூர்க் ஆரஞ்சு

மகாத்மா காந்தி தென்னிந்தியா பகுதிக்கு வருகை தரும்போதெல்லாம், கூர்க் ஆரஞ்சு பழச்சாற்றை விரும்பி அருந்துவாராம். நாக்பூர் ஆரஞ்சைவிட கூர்க் ஆரஞ்சு சுவைமிக்கது. கூர்க்கில் (குடகு) மட்டுமே விளைந்து கொண்டிருந்த இந்த ஆரஞ்சு, இப்போது பிற பகுதி தோட்டங்களிலும் வளர்கிறது. அந்த வகையில் இந்தப் பண்ணையிலும் இருக்கிறது.

முள் சீத்தா
முள் சீத்தா
சாத்துக்குடி
சாத்துக்குடி

நஞ்சன்கூடு வாழை

ஏலக்கி வாழை போன்றே தோற்றமுடையது. ஆனால், இதில் இனிப்புச் சுவையும், ஸ்டார்ச் சத்தும் சற்று அதிகமாக இருக்கும். மைசூரு பகுதியில் நன்றாக விளைகிறது. நீண்ட நாள் வைத்து விற்பனை செய்ய ஏற்றது.

ராமகிருஷ்ணப்பா
ராமகிருஷ்ணப்பா
பப்ளிமாஸ்
பப்ளிமாஸ்
கத்திரிக்காய்
கத்திரிக்காய்
கத்திரிக்காய்
கத்திரிக்காய்

வீரண்ணா கெரே கத்திரிக்காய்

ஊதா நிறமுடையது. நடுத்தர மற்றும் சிறிய அளவில் இருக்கும். சுவை மிகுந்தது. சதைப்பற்று அதிகமாக இருக்கும்.

மைசூரு வெற்றிலை

தமிழ்நாட்டைவிட கர்நாடகத்தில் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் அதிகம். மைசூரு வெற்றிலை புகழ்பெற்றது.