Election bannerElection banner
Published:Updated:

`வட இந்தியாவைவிட தமிழக விவசாயிகள் தெளிவானவர்கள்!' - நபார்டு வங்கித் தலைவர் பாராட்டு

ஜி.ஆர்.சிந்தலா
ஜி.ஆர்.சிந்தலா

நபார்டு வங்கியின் தலைவர் ஜி.ஆர்.சிந்தலா கடந்த 15-ம் தேதி முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

15-ம் தேதி, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் இயங்கிவரும், சீட்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்குச் சென்ற சிந்தலா, உழவர்களோடு கலந்துரையாடினார். அவர்களின் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் உற்பத்தி முயற்சிகளைப் பாராட்டிய அவர், விவசாயிகள் ஒருங்கிணைந்து உழவர் உற்பத்தி நிறுவனங்கள் அமைப்பதன் மூலமாக உற்பத்தியை அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ள முடியும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில்
பத்திரிகையாளர் சந்திப்பில்

16-ம் தேதி, மதுரையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், நபார்டு உதவியுடன் அமைத்துள்ள வேளாண் வர்த்தக அடைகாப்பு நிதி மையத்தின் நிர்வாகக் கட்டடத்தைத் தொடங்கி வைத்து, தொழிற்கூடத்துக்கான அடிக்கல்லையும் நாட்டினார். 17-ம் தேதி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கழகத்துக்குச் சென்ற சிந்தலாம் பேராசிரியர் சுவாமிநாதனை சந்தித்துப் பேசினார். பேராசிரியர் சுவாமிநாதன், இந்தியாவின் விவசாய வளர்ச்சியிலும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்துக்கும் நபார்டின் பங்களிப்பைப் பாராட்டினார்.

அடுத்து, மறைந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சி.சுப்ரமணியம் உருவாக்கிய தேசிய அக்ரோ ஃபவுண்டேஷன் அமைப்பின் அலுவலகத்துச் சென்றவர் அங்கே உழவர் உற்பத்தியாளர் நிறுவனப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்.

நேற்று பிற்பகலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபோது, கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்துக்காக நபார்டின் 365 கோடி ரூபாய் கடனுதவிக்கான அனுமதிக் கடிதத்தை அவரிடம் வழங்கினார். தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் கூட்டுறவு வங்கிகள் மூலமாகக் கடனுதவியை அதிகரித்தல், உழவர் உற்பத்தி நிறுவனங்களை உருவாக்குதல், சுய உதவிக் குழுக்களை மின்னணு மயப்படுத்துதல், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களைக் கணினி மயப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

அடுத்து, நபார்டு வங்கியின் தலைவர் ஜி.ஆர்.சிந்தலா பேசும்போது, ``தமிழ்நாட்டின் சுற்றுப்பயணம் எனக்குப் புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சிறப்பாகவும் முன்னோடியாகவும் செயல்படுகின்றன. இந்திய அளவில் 8,000 நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 600 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். இதில் 3,400 விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர். ஆண்டுக்கு 14 கோடி ரூபாய் விற்று முதல் செய்து சாதனை செய்துள்ளார்கள். இந்தப் பெருந்தொற்று நேரத்தில், வேளாண் விளைபொருள்களை நேரடியாக நுகர்வோரிடம் விற்பனை செய்து லாபம் பார்த்துள்ளார்கள். விவசாயிகள் தங்களை உற்பத்தியாளர்களாக மட்டும் சுருக்கிக்கொள்ளாமல், சந்தைப்படுத்தும் பணியிலும் ஈடுபடும்போதுதான், நல்ல லாபம் கிடைக்கும். அதற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களே உதாரணம். வட இந்தியாவை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் தெளிவாகவும் முன்னோடியாகவும் உள்ளனர்’’ என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு