Published:Updated:

இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் நபார்டு வங்கி!

விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
News
விவசாயம்

வழிகாட்டி

நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பாரம்பர்ய நெல் சாகுபடி, நாட்டுக்கோழிப் பண்ணைகள், ஒருங்கிணைந்த பண்ணைகள் அமைக்கப் பயிற்சி மற்றும் கடனுதவி பெற வழிகாட்டி வருகிறது தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development) என்று அழைக்கப்படும் நபார்டு வங்கி. இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கிவரும் வளநாடு தற்சார்பு வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனத்தின் மேலாளர் சுபாஷினி ஶ்ரீதரிடம் பேசினோம்.

தொடர் பயிற்சிகள்

“இந்திய பாரம்பர்ய அறிவியல் மையம் மூலமா 2013-ம் ஆண்டு, பாரம்பர்ய நெல் ரகங்களைப் பரவாலாக்குற நோக்கத்தில இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சோம். பாரம்பர்ய நெல் ரகங்களை இயற்கை முறையில் விவசாயம் செய்ய வைக்கிறோம். விளைச்சலை நாங்களே கொள்முதல் செஞ்சு, விதைச் சுத்திகரிப்பு பண்ணி விற்பனை செய்றோம். இந்த வருஷம் சம்பா சாகுபடிக்கு 3,500 கிலோ பாரம்பர்ய நெல் விதைகளைச் சுமார் 220 விவசாயிகளுக்குக் கொடுத்து உற்பத்தி செய்ய வெச்சிருக்கிறோம். எங்க நிறுவனம்மூலம் பயிற்சி கொடுத்து, மண்புழு உரம் தயாரிப்பு, பாரம்பர்ய நெல் ரகங்களிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு, காளான் தயாரிப்பு, துணிப்பை, சணல் பை, பனை ஓலை பொருள்கள் தயாரிப்பு, கால்நடை வளர்ப்பு, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, கால்நடைகளுக்கு மூலிகை வைத்தியம்னு தொடர் பயிற்சிகள் கொடுக்குறோம். இது மூலமா சுமார் 600 பெண்கள் பயனடைஞ் சிருக்காங்க. அவங்களுக்கு வங்கிகள் மூலமா 50 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கிக் கொடுத் திருக்கோம். அவங்க உற்பத்தி செய்யும் பொருள்களை நாங்களே கொள்முதல் பண்ணி, உடனுக்குடன் பணமும் கொடுத்திடுறோம்.

விவசாயம்
விவசாயம்

இதன் மூலம் வீடுகள்ல இருக்கப் பெண்கள், ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி மாசம் 6,000 ரூபாய் வரைக்கும் வருமானம் பார்க்குறாங்க. எங்ககிட்ட 2,736 பங்குதாரர்கள் இருக்காங்க. அவங்களுக்கு இலவச பயற்சிகள், வங்கிக் கடன் உதவி வழிகாட்டல் செய்றது நபார்டு வங்கிதான்” என்றார்.

சீர்காழி அருகேயுள்ள அகணி கிராமத்தில் சுமார் 20 ஏக்கரில் சீரகச் சம்பா, கறுப்புக் கவுனி, கும்பசாலா ஆகிய பாரம்பர்ய நெல் ரகங்களை நடவு செய்து வருகிறார்கள். அந்தப் பண்ணையின் மேலாளர் சபாநாயகத்திடம் பேசினோம். “நாற்றங்காலுக்காக தேர்ந்தெடுத்த நிலத்துல பசுந்தாள் உர விதைகள தெளிச்சு, அது வளர்ந்ததும் மடக்கி உழவு செய்வோம். பிறகு, 30 கிலோ வீதம் சீரகச் சம்பா விதைகள விதைப்போம். ஒரு ஏக்கர் நிலத்துக்கு நடவு செய்யறதுக்கு இப்படி 30 கிலோ விதைகள் தேவைப்படும். நாத்து வளர்ந்ததும் 25 நாள்கள்ல பறிச்சு நடவு செய்வோம். 4 நாள் கழிச்சு மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனஸ் கலந்து தெளிப்போம். ஏக்கருக்கு 2 கிலோ தொழுவுரத்தில பஞ்சகவ்யா கலந்து தெளிப்போம்.

மண்புழு உரம்
மண்புழு உரம்

களை எடுத்த பிறகு, மறுபடியும் தேவைப்பட்டா பஞ்சகவ்யா தருவோம். பூச்சிகள் தென்பட்டா மூலிகைப் பூச்சிவிரட்டி மருந்தைத் தெளிப்போம். 120-ம் நாளில் அறுவடை ஆகிடும். குறைஞ்சபட்சம் 25 மூட்டைகள் மகசூல் ஆகும். செலவு போக ஏக்கருக்கு 30,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். சம்பாவுல மட்டும்தான் பாரம்பர்ய ரகங்கள் சாகுபடி. அது முடிஞ்சதும் உளுந்து தெளிச்சிடுவோம்.

இயற்கை முறையிலான விவசாயப் பயிற்சிகள், அதைச் சாகுபடி செய்யத் தேவையான கடன் வசதி எல்லாம் நபார்டு வங்கிமூலம் வாங்கிக் கொடுக்குறாங்க. அறுவடையான நெல்லை அலைச்சல் இல்லாம நியாயமான விலைக்கு வாங்கிக்கிறாங்க’’ இப்படி எங்களுக்குத் தேவையான எல்லாத்தையும் வளநாடு தற்சார்பு வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனம்தான் செய்யுது” என்றார்.

சுபாஷினி ஶ்ரீதர், பிரபாகர், அமுதா
சுபாஷினி ஶ்ரீதர், பிரபாகர், அமுதா


ஆச்சாள்புரத்தில், ‘பனை ஓசை தற்சார்பு வேளாண்மைக் குழு’ என்ற மகளிர் குழு, பனை ஓலைகளைக் கொண்டு தட்டு, ‘கைப்பை (ஹேண்ட் பேக்), வளையல் பெட்டி, சாப்பாட்டுக் கூடைனு (லன்ச் பாக்ஸ்) பலவகையான பொருள்களைக் கலைநயத்தோடு, அழகாகச் செய்து விற்பனை செய்து வருகிறது. சென்னை, மைசூரு, ஹைதராபாத் நகரங்களிலிருந்து இந்தப் பொருள்களுக்கான ‘ஆர்டர்கள்’ கிடைக்கின்றன. அந்த ‘ஆர்டர்’களைச் சென்னையில் உள்ள சௌமியா என்பவர் பெற்றுத் தருகிறார்.

மாதம் 6,000 ரூபாய் வருமானம்

இதுபற்றி அக்குழுவின் தலைவி பார்வதி கோவிந்தராஜிடம் பேசினோம். “10 வருஷமா நாங்க குழுவாக இயங்கிக்கிட்டு இருக்கோம். வீட்டு வேலை போக மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலதான் இந்த வேலையைச் செய்றோம். முதல்ல வெளியூரி லிருந்து பனை ஓலைகளை விலைக்கு வாங்குனோம். இப்ப நாங்களே உருவாக்கிக் கிறோம். தேவையான அளவுக்குப் பனை ஓலைகளை வெட்டுறதுக்கு ‘மெஷின்’ வெச்சிருக்கோம். அதை நல்லா கொதிக்க வெச்ச தண்ணியிலப் போட்டுச் சாயம் ஏத்திக்குவோம். இதன் மூலம் தயாரிக்கிற பொருள்களைச் சென்னையில நடந்த கிராமிய பொருள் கண்காட்சியில் பார்வைக்கு வெச்சோம். அங்க வந்தவங்க ஆர்வமா வாங்குனாங்க. எங்களுக்கெல்லாம் மிகப் பெரிய சந்தோஷம். வீட்டிலிருந்தபடியே மாசம் 6,000 ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்குது. இதுக்கெல்லாம் காரணம் நபார்டு வங்கியின் பயிற்சியும், வளநாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் உதவிகளும்தான்” என்றார்.

பனை ஓலையால் ஆன கைவினைப் பொருள்கள்
பனை ஓலையால் ஆன கைவினைப் பொருள்கள்


ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த தென்றல் மகளிர் கூட்டுறவு பொறுப்புக் குழுவின் தலைவி அமுதாவைச் சந்தித்தோம். “துணிப்பை, சணல் பை, பாய் பொருள்கள், பனைஓலைப் பொருள்கள், பரிசுப் பொருள்களைத் தயாரிக்குறோம். இதுக்கான பயிற்சிகளை வளநாடு நிறுவனம் மூலமா நபார்டு வங்கி தான் கொடுத்தது. அவங்க ஒத்துழைப்போடு, வளநாடு நிறுவன வழிக்காட்டலோட இன்னிக்கு நாங்க நிறைவான வருமானம் பார்க்குறோம்’’ என்றார்.

பார்வதி
பார்வதி

பயிற்சி, கடனுதவியே தாரக மந்திரம்

நிறைவாக, நபார்டு வங்கியின் மயிலாடுதுறை- நாகப்பட்டினம் மாவட்ட வளர்ச்சி மேலாளர் பிரபாகரனிடம் பேசினோம். “இந்தப் பகுதியில் இயற்கை வழி விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக நபார்டு வங்கி மூலமாக ஒரு திட்டத்தை முன்னெடுத்தோம். அதன்படி 10 விதமான பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்ய வெச்சு பரவலாக்கி இருக்கிறோம். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் மூலம் ஒருங்கிணைந்த மீன் பண்ணை வளாகத்தை உருவாக்கி இருக்கிறோம். மகளிர் மேம்பாட்டுக் காகப் பல்வேறு விதமான பயிற்சிகள் கொடுத்து, அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாகச் செயல்பட்டு வருகிறோம். தற்போதுகூட கால்நடைகளுக்கு மூலிகை வைத்தியம் மூலம் சிகிச்சை செய்வதற்கு 5 கிராமத்தினருக்குப் பயிற்சிகள் அளித்திருக் கிறோம்” என்று சொல்லி முடித்தார்.தொடர்புக்கு, சுபாஷினி ஶ்ரீதர்,

செல்போன்: 94432 77417.