Published:Updated:

“3 ஆண்டுகளுக்கு ஆடல்.. பாடல் ரத்து’’ - தீர்மானம் போட்டு அசரடித்த நாடியம் கிராமம் #MyVikatan

நாடியம் கிராமத்தினர் சில முக்கிய முடிவுகளை தீர்மானமாய்ப் போட்டு மற்றவர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.

ஊர்க்கூட்டம்
ஊர்க்கூட்டம் ( நாடியம் கிராமம் )

ஊர்த் திருவிழாவில் ஆடல், பாடல். நடனம், நாட்டியம் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கான செலவுகளை ஓரங்கட்டிவிட்டு அந்தத் தொகையை வைத்து ஊரை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல தீர்மானம் போட்டு அசத்தி இருக்கிறது பேராவூரணிக்கு அருகில் உள்ள நாடியம் கிராமம். இது காவிரி கடைமடை பாசனத்தின் கடைசி ஊரும்கூட. சுமார் ஐந்தாயிரம் மக்கள் தொகை கொண்ட இக்கிராமத்தில் படிப்புக்கு பஞ்சமில்லை.

ஊர்க்கூட்டம்
ஊர்க்கூட்டம்

எட்டு கலெக்டர்களை பெற்றுத்த ஊர் என்று பெருமையோடு சொல்கிறார்கள். தற்போதைய கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்கூட இங்கு பிறந்தவர்தான். அதேபோல் மருத்துவர்கள், பொறியாளர்கள் என ஏராளமானோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கா,சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நல்ல பொறுப்புகளில் பணிபுரிந்து வருகிறார்கள்.

இக்கிராமத்தில் எல்லோருக்கும் தென்னைதான் முக்கிய விவசாயம். உலகத்தின் எந்த மூலையில் வசித்தாலும் தான் பிறந்த மண்ணோடு மிகவும் நெருக்கம் உள்ளவர்கள். தென்னை விவசாயத்தில் முன்னணியாக திகழ்ந்த நாடியம் கிராமம் கஜா புயலுக்குப் பிறகு அதன் கதையே மாறிவிட்டது. பிள்ளைகளைக்கூட நம்பாமல் தென்னைகளை பெரிய வாழ்வாதாரமாக நம்பி இருந்தவர்கள் இங்குள்ள விவசாயிகள். வற்றிப்போன காவிரியும், பெரும் சோகம் விளைவித்த கஜாவும் அவர்களை தற்போது நிலைகுலைய வைத்திருக்கிறது. எனவே விவசாயத்தை மேம்படுத்த நீர் மேலாண்மையில் முழுக்கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். இப்பகுதியில் உள்ள நீர் நிலைகளை மேம்படுத்த கைபா எனும் அமைப்பு தீவிரமாய்ச் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பில் இக்கிராம இளைஞர்களின் பங்கு முக்கியமானது.

ஊர்க்கூட்டம்
ஊர்க்கூட்டம்

இச்சூழலில் இக்கிராமத்தின் ஊர்க் கூட்டம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இங்கே கூடி இருக்கிறது. இதில் இந்த ஊரில் பிறந்த கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச் செல்வன், அமெரிக்காவில் வசித்து வரும் இரண்டு இளைஞர்கள், சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள், உள்ளூர்க்காரர்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நாடியம் கிராமத்தினர் சில முக்கிய முடிவுகளை தீர்மானமாய்ப் போட்டு மற்றவர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள். கிராமத்தின் விவசாயச் சூழலைக் கருத்தில் கொண்டு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆடல், பாட, நடனம், நாட்டியம், கூத்து போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளை கிராமத்தில் நடத்துவதில்லை. இதற்கு ஆகும் செலவைக் கொண்டு ஊரில் இருக்கும் நீர்நிலைகளைத் தூர் வாருவது, குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடங்களை மேம்பாடு அடையச் செய்வது,விவசாயிகளின் வாழ்க்கையை முன்னேற்றுவது உள்பட பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு இக்கூட்டத்தில் அடித்தளம் போட்டிருக்கிறார்கள். அத்துடன் எந்தச் சூழலிலும் நாடியம் கிராமத்துக்குள் டாஸ்மாக் மதுபானக் கடையை நுழையவிடக்கூடாது என்ற மிகமுக்கியமான தீர்மானத்தையும் போட்டிருக்கிறார்கள்.

ஊர்க்கூட்டம்
ஊர்க்கூட்டம்

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாடியம் கிராம இளைஞரும் கைபா அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருப்பவருமான நிமல் ராகவனைத் தொடர்புகொண்டு இத்தீர்மானங்கள் பற்றிக் கேட்டேன். “எங்க கிராமத்துலே பெரும்பாலும் எல்லோருமே நல்லா படிச்சவங்க. பெரிய பொறுப்புகளில் இருக்காங்க.. இருந்தாலும் இங்குள்ள மக்களுக்கு விவசாயம்தான் வாழ்வாதாரம். எங்க பகுதியின் தற்போதைய விவசாயத்தின் நெலமை என்னனு உலகத்துக்கே தெரியும் .அதுக்காகத்தான் இந்த முடிவு. இங்கே உள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஊரே ஒன்னு கூடி இந்த ஆடி மாதத்திலே மிகப்பெரிய அளவில திருவிழா நடத்துவோம்.

நிமல் ராகவன்
நிமல் ராகவன்

அப்போ ஆடல், பாடல் நாட்டிய நிகழ்ச்சிகள் அதிவிமர்சையா நடக்கும். அதுக்கு மட்டும் ஐந்து லட்ச ரூபாய்வரை செலவாகும். இப்போ உள்ள சூழ்நிலையிலே இந்தப் பணத்தை ஊதாரித்தனமா செலவு செய்யனுமா? அந்தப் பணத்தை வைச்சு ஊருக்கு சில நல்ல காரியங்கள் செய்யலாமேனு முடிவு செஞ்சோம். இதை எல்லோரும் மனப்பூர்வமா ஏத்துக்கிட்டாங்க. எங்க விவசாயத்தை நாங்களே மறுபடியும் கட்டி எழுப்ப வேண்டிய சூழ்நிலையிலே இருக்கோம். அதுக்காக இந்த மாதிரியான செலவுகள் தேவை இல்லைனு ஊரே ஒன்னு கூடி தீர்மானம் போட்டிருக்கோம். இது எங்க ஊரோட ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் எடுத்துக்காட்டுனு சொல்லலாம்…. அதேமாதிரி ஊருக்குள்ளே டாஸ்மாக் கடைக்கு ஒருபோதும் அனுமதி கொடுக்கமாட்டோம். அதுலேயும் ரொம்பவே தீர்மானமாய் இருக்கோம்.. ” என்கிறார் நிமல்.

-பழ.அசோக்குமார்

MyVikatan
MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/