Published:Updated:

ஆண்டுக்கு ரூ.3 லட்சம்... பர்ஃபி, அல்வா, பால்கோவா, கேக்... பனங்கிழங்கில் விதவிதமான இனிப்பு வகைகள்!

இனிப்பு வகைகள்
பிரீமியம் ஸ்டோரி
இனிப்பு வகைகள்

மதிப்புக்கூட்டல்

ஆண்டுக்கு ரூ.3 லட்சம்... பர்ஃபி, அல்வா, பால்கோவா, கேக்... பனங்கிழங்கில் விதவிதமான இனிப்பு வகைகள்!

மதிப்புக்கூட்டல்

Published:Updated:
இனிப்பு வகைகள்
பிரீமியம் ஸ்டோரி
இனிப்பு வகைகள்

“பனை என்று சொன்னாலே... பதநீர், பனங்கிழங்கு, பனங்கற்கண்டு, கருப்பட்டி, கள் ஆகியவை நம் நினைவுக்கு வரும். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் உள்ள ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்-வைஜெயந்தி தம்பதி, பனங்கிழங்கைப் பயன்படுத்தி பர்ஃபி, அல்வா, லட்டு, பால்கோவா, கேக் உள்ளிட்ட 90 வகையான இனிப்பு வகைகளைச் செய்து அசத்தி வருகிறார்கள்.

ஒரு மதியவேளையில் இத்தம்பதியின் வீட்டுக்குச் சென்றோம். மிகுந்த உற்சாகத்தோடு நம்மை வரவேற்ற இவர்கள், பனங்கிழங்கு லட்டு கொடுத்து உபசரித்தனர். ‘‘பனக்கிழங்குல பலவிதமான சத்துகள் நிறைஞ்சிருக்கு. செரிமான சக்தியைத் தூண்டக்கூடியது. முன்னாடியெல்லாம் மக்கள் பனக்கிழங்கை ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா, இப்ப அப்படியில்லை. பனக்கிழங்கு சாப்பிடக்கூடியவங்களோட எண்ணிக்கை ரொம்பவே குறைஞ்சு போயிடுச்சு. இந்தச் சூழல்லதான் பனங்கிழங்கைப் பயன்படுத்தி, காலத்துக்கு ஏத்தமாதிரி, நாங்க தயார் செஞ்சு விக்கக்கூடிய பனக்கிழங்கு பர்ஃபி, அல்வா, லட்டு, கேக்னு விதவிதமான இனிப்பு வகைகளை மக்கள் ரொம்பவே விரும்பி வாங்குறாங்க. கூடுதல் சுவைக்காகவோ, வசீகரமான நிறத்துக்காகவோ எந்த ஒரு ரசாயனப் பொருளும் சேர்க்க மாட்டோம். பனங்கிழங்கு மாவுல சுத்தமான நெய், வெல்லம், முந்திரிப் பருப்பு, ஏலாக்காய்னு வீடுகள்ல வழக்கமா பயன்படுத்தக்கூடிய பொருள்களைச் சேர்த்துதான் பல விதமான இனிப்பு வகைகளைத் தயார் செஞ்சு விற்பனை பண்ணிகிட்டு இருக்கோம்’’ என்று சொன்ன கார்த்திகேயன், பனை மதிப்புக் கூட்டலில் இறங்கியதற்கான அந்தத் திருப்புமுனை தருணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

கார்த்திகேயன்-வைஜெயந்தி தம்பதி
கார்த்திகேயன்-வைஜெயந்தி தம்பதி

“நான் எம்.ஏ பி.எட், படிச்சிட்டு தனியார் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் இருக்கேன். என் மனைவி வைஜெயந்தியும் பட்டதாரிதான். எங்க பகுதியில பனை மரங்கள் அதிகம். எங்களோட வீட்டுத் தோட்டத்துல வருஷத்துக்கு சுமார் 8,000 பனங்கிழங்குகள் உற்பத்தி செய்வோம். 6 வருஷத்துக்கு முன்னால ஒரு கிழங்குக்கு வெறும் 50 பைசாதான் விலை கிடைச்சது. அந்த விலைக்குக் கிழங்கை கொடுக்க எனக்கு மனசில்ல. ‘இதை என்ன செய்யலாம்’னு தீவிரமா யோசிச்சேன். இதுல பர்ஃபி செஞ்சு பார்க்கலாம்ங்கற ஒரு எண்ணம் தோணுச்சு. பனங்கிழங்கை மாவாக்கி, அதோட நாட்டு வெல்லம், பசுநெய் சேர்த்து பர்ஃபி செஞ்சோம். ஆரம்பத்துல பர்ஃபிக்கான பதம் நேர்த்தியா இல்லை. மறுபடியும் மறுபடியும் தொடர்ச்சியா முயற்சி செஞ்சுகிட்டே இருந்தோம். 16 முறை தோத்துப்போனோம். அதுக்குப் பிறகுதான் பர்ஃபிக்கான பதம், வாசனை, சுவை எல்லாமே சரியா அமைஞ்சது.

பள்ளிக்கூடத்துல என்னோட வேலை பார்க்குற ஆசிரியர்கள், எங்களோட குடும்ப நண்பர்களுக்கு எல்லாம் கொடுத்தோம். நல்ல வரவேற்பு இருந்துச்சு. அப்பதான் எங்களுக்கு இதுல முழுமையான நம்பிக்கைப் பிறந்துச்சு. இதைத் தொழிலாவே செய்யலாம்னு முடிவெடுத்தோம். பனங்கிழங்கு பர்ஃபி ஒரு கிலோ 450 ரூபாய்னு விற்பனை செஞ்சோம். அதுல ஒரு கிலோவுக்குக் குறைந்தபட்சம் 100 ரூபாய் லாபம் கிடைச்சது. எங்க தோட்டத்துல உற்பத்தி பண்ணி வச்சிருந்த 8,000 பனங்கிழங்குகளை மாவாக்கி, பர்ஃபி செஞ்சு விற்பனை செஞ்சதுல, எல்லாச் செலவுகளும் போக 22,000 ரூபாய் லாபம் கிடைச்சது. ஆனா, அதுவே அந்தக் கிழங்குகளை வெளியில வியாபாரிங்ககிட்ட வித்திருந்தா ஒரு கிழங்குக்கு 50 பைசா வீதம் 4,000 ரூபாய்தான் வருமானம் கிடைச்சிருக்கும். பனங்கிழங்கு பர்ஃபி விற்பனை வெற்றிகரமா அமைஞ்சதுனால... அடுத்து அல்வா, அதிரசம், பால்கோவா, லட்டுன்னு இன்னும் பலவிதமான இனிப்பு வகைகளைத் தயார் செஞ்சு விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். இதுவரைக்கும் 90 விதமான இனிப்பு வகைகளை வெற்றிகரமா செஞ்சிருக்கோம். குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி வாங்குறாங்க. குறிப்பா, சர்க்கரை நோயாளிகள் மத்தியில இதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு.

பர்ஃபி
பர்ஃபி
அல்வா
அல்வா

தமிழ்நாடு முழுக்க பல ஊர்கள்ல நடக்கக் கூடிய விதைத் திருவிழா, வேளாண் கண்காட்சிகள்ல ஸ்டால் போட்டு, இந்த இனிப்பு வகைகளை விற்பனை செஞ்சிகிட்டு இருக்கோம். பிறந்தநாள் விழாக்களுக்கு நிறைய பேர் கேக் ஆர்டர் பண்ணி வாங்குறாங்க. தீபாவளி, ரம்ஜான் மாதிரியான விஷேசங்களுக்கு இனிப்புகள் கேட்டு ஆர்டர் கொடுக்குறாங்க. வருஷத்துக்கு, செலவு போக சராசரியா 3,00,000 ரூபாய் லாபம் கிடைக்குது’’ என்று சொன்னவர், பனக்கிழங்கு உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் குறித்துப் பேசினார்.

‘‘எங்க வேதாரண்யம் பகுதியில நிறைய பனை மரங்கள் இருக்கு. கீழே விழுந்து கிடக்குற பனங்கொட்டைகளை வீட்டுத் தோட்டங்கள்ல புதைச்சு, இந்தப் பகுதி மக்கள் பனங்கிழங்கு உற்பத்தி செய்றது வழக்கம். இதுல செலவு ஏதும் கிடையாது. குழியை வெட்டி விதையைப் போட்டு, மண்ணைத் தள்ளி மூடிட்டு தண்ணி விட வேண்டியதுதான். ஆடி, ஆவணி மாசத்துல விதை போட்டா, தை மாசம் கிழங்கு வெட்டலாம். அஞ்சு மாசத்துல வருமானம் தரக்கூடியது.

லட்டு, பர்ஃபி
லட்டு, பர்ஃபி
இனிப்பு வகைகள்
இனிப்பு வகைகள்

ரசாயன உரங்கள் போடாத பனங்கிழங்குதான் வாங்குவேன்

ஒரு லட்சம், ரெண்டு லட்சம்னு விதை போட்டு, அதிக எண்ணிக்கையில பனங் கிழங்கு உற்பத்தி செய்றவங்க, அதைப் பெருக்க வைக்கிறதுக்காக ரசாயன உரம் போடுவாங்க. நான் அவங்ககிட்ட கிழங்கு வாங்குறதில்லை. சிறு, குறு விவசாயிங்க ஆயிரம், ரெண்டாயிரம்னு விதை போடு வாங்க. அவங்ககிட்ட இருந்து சந்தை நிலவரத் தைப் பொறுத்து, ஒரு கிழங்கு 1 ரூபாய்ல இருந்து அதிகபட்சம் 3 ரூபாய் வரைக்கும் விலை கொடுத்து பனங்கிழங்கு கொள்முதல் செஞ்சுகிட்டு இருக்கேன். எங்களோட வீட்டுத் தோட்டத்துல நாங்க உற்பத்திச் செய்யக்கூடிய பனங்கிழங்குகளையும் பயன் படுத்திக்குவோம்.

பனங்கிழங்கு மாவு தயாரிப்பு

பனங்கிழங்கை நல்லா சுத்தப்படுத்தி, கொதிக்குற தண்ணியில வேக வச்சு 5 நாள்கள் வெயில்ல காய வைப்போம். அதுக்குப் பிறகு மெஷின்ல கொடுத்து அரைச்சு மாவாக்கி, பலகாரங்கள் செய்வோம். பால்கோவாவை தவிர எங்க தயாரிப்புகள் எல்லாமே நீண்ட நாள்களுக்குத் தரம் இழக்குறதில்லை. பனங்கிழங்கு மாவோட சிறப்புத்தன்மை இது’’ என மகிழ்ச்சியோடு பேசி முடித்தார்.

அல்வா
அல்வா
அல்வா
அல்வா

தொடர்புக்கு, கார்த்திகேயன்,

செல்போன்: 95663 14451.

பனங்கிழங்கு சத்துமாவு

‘‘தமிழக அரசு ஆதரவு கொடுத்தா, பனை மதிப்புக் கூட்டலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போவேன். பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலையையே உருவாக்கலாம். நாங்க பனங்கிழங்கு மாவோட நான்கு வகையான சிறுதானியங்கள், முந்திரி, பாதாம் எல்லாம் சேர்த்து சத்து மாவு தயாரிச்சு வெளியில பொதுமக்கள்கிட்ட விற்பனை பண்ணிகிட்டு இருக்கோம். இதை எட்டு மாச குழந்தைங்கள்ல இருந்து முதியோருங்க வரைக்கும் சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான பலவிதமான சத்துகள் இதுல கிடைக்கும். பள்ளிக் குழந்தைகளுக்குத் தமிழக அரசு இதைக் கொடுக்கலாம்’’ என்கிறார் கார்த்திகேயன்.

லட்டு
லட்டு
பால்கோவா
பால்கோவா

மாதம் ரூ.3,000

‘‘நாகப்பட்டினம் கலெக்டர் அருண் தம்புராஜ் எங்களுக்கு பல வகைகள்லயும் உதவிகள் வழங்கி ஊக்கப்படுத்துறார். ‘மதி பனை உணவு உற்பத்தியாளர்கள் மகளிர் குழு’ தொடங்கப்பட்டு வெற்றிகரமா செயல்பட்டுக்கிட்டு இருக்கு. இந்தக் குழுவுல 12 பெண்கள் உறுப்பினர்களாக இருக்காங்க. அவங்களோட ஓய்வு நேரத்துல எங்களோட சேர்ந்து, பனை உணவுப் பொருள்கள் தயாரிப்புல பங்கெடுக்கிறாங்க. அவங்க ஒவ்வொருத்தருக்கும் மாசம் 3,000 ரூபாய்ல இருந்து, 5,000 வரை வருமானம் கிடைக்குது’’ என்கிறார் கார்த்திகேயன்.

பனங்கிழங்கை காயவைக்கும் பணி
பனங்கிழங்கை காயவைக்கும் பணி
பனம்பழங்களை பதியம் போடுதல்
பனம்பழங்களை பதியம் போடுதல்
பனங்கிழங்கு
பனங்கிழங்கு

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பயிற்சி

“தமிழ்நாடு முழுக்கப் பல மாவட்டங் களுக்கும் போயி, அங்கவுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பனங்கிழங்கு மதிப்புக்கூட்டல் பயிற்சி கொடுத்துக்கிட்டு இருக்கோம்.

பனங்கிழங்கு மாவுல நாங்க அல்வா செய்றதைப் பார்த்துட்டு, இதனால் ஏற்பட்ட தூண்டுதல்ல, விழுப்புரத்துல என்னோட நண்பர் ஒருத்தரு, பலாப்பழத்துலயும், அத்திப் பழத்துலயும் அல்வா செய்ற முயற்சியில இறங்கியிருக்கார். அவரோட இந்த முயற்சிக்கு நான் ஒரு முக்கியக் காரணமா இருந்திருக்கேன்னு நினைக்குறப்ப மனசுக்கு ரொம்பவே சந்தோசமாவும் பெருமிதாவும் இருக்கு’’ என்கிறார் கார்த்திகேயன்.