Published:Updated:

`ரூ.500 கோடியை எப்போது ஒதுக்கும் அரசு?' - தடுப்பணை பணிகளால் தகிக்கும் நாகை

கடல் நீர் உட்புகாதவாறு ஆறுகளின் முகத்துவாரங்களில் தடுப்பணை கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆறு
ஆறு

காவிரி டெல்டா மாவட்டங்களிலுள்ள ஆறுகளிலிருந்து கடல் நீர் உள்ளே புகாதவாறு ஆறுகளின் முகத்துவாரங்களில் தடுப்பணை கட்டும் திட்டம் ரூ.1,500 கோடி செலவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டம் 95% நாகை மாவட்டத்தில்தான் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்காக ஆசிய வளர்ச்சி வங்கி ரூபாய் 1,000 கோடி ஒதுக்கீடு செய்துவிட்டது. தமிழக அரசின் பங்களிப்புத் தொகை ரூ.500 கோடி தற்போது வரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

ஆறு
ஆறு

முதற்கட்டமாக ஆசிய வளர்ச்சி வங்கி அளித்த ரூ.1,000 கோடி தொகையைக் கொண்டு ஆறுகளின் முகத்துவாரங்களில் தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி முழுவதும் நாகை தொடங்கி வேதாரண்யம் வரை குறிப்பாக, நாகைக் கோட்டத்தில் மட்டுமே நடந்துவருகிறது. மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள ஆறுகளுக்கு தமிழக அரசு பங்கேற்பு தொகையான ரூ.500 கோடி கிடைத்தவுடன் தடுப்பணைகள் கட்டப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறிவருகிறார். தற்போது வரை அரசு நிதி ஒதுக்கவில்லை. இந்தப் பகுதி ஆறுகளின் முகத்துவாரங்களில் தடுப்பணைகளும் கட்டப்படவில்லை.

கஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா? #DoubtOfCommonMan #OneYearOfGaja

இதுபற்றி விவசாய சங்க பிரமுகர் ஆறுபாதி கல்யாணத்திடம் பேசினோம், "நாகை முதல் வேதாரண்யம் வரை உள்ள நகர, ஒன்றிய பகுதிகளுக்குக் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கொள்ளிடம் ஆற்றிலிருந்துதான் தண்ணீர் எடுக்கப்பட்டு அப்பகுதிகளில் விநியோகிக்கப்படுகிறது. அப்படி குடிநீர் எடுத்த காரணத்தால் கொள்ளிடம் ஆற்றில் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இதனால் கடல் நீர் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு உட்புகுந்துவிட்டது.

ஆறுபதி கல்யாணம்
ஆறுபதி கல்யாணம்

இதன் காரணமாகக் கொள்ளிடக் கரையோர மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதே அரிதான நிலை ஏற்பட்டுவிட்டது. நாகைக் கோட்ட பகுதி மக்களுக்கு குடிநீர் தரும் கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரத்தில் தடுப்பணை கட்ட ஆட்சியாளர்களுக்கு மனம் வரவில்லை.

இப்பகுதி மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழக அரசு எப்போது நிதி ஒதுக்கும் என யாருக்கும் தெரியாது. இது குறித்து கவலைப்படாமல் இருக்க முடியாது. இந்த அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை" என்றார்.