Published:Updated:

செண்டு பூ விளைச்சல் அமோகம்... ஆனால், விலையோ படுமோசம்... ஏன் திடீர் விலை வீழ்ச்சி?

செண்டு பூ
செண்டு பூ

பூ மாலைகள் தயாரிப்புக்கு அதிகளவில் பயன்படும் செண்டு பூக்களின் சாகுபடி தற்போது சிறப்பாக இருக்கும்போதிலும் பூக்களுக்கு உகந்த விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வேட்டைக்காரனிருப்பு ஊராட்சிக்கு உட்பட்ட சடையன்காடு, வடக்கு சல்லிகுளம், தெற்கு சல்லிகுளம், சூரிய விநாயகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் செண்டு  பூ சாகுபடி  நடைபெறுகிறது.

செண்டு பூ
செண்டு பூ

செண்டு பூக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மாலைகளை பெரும்பாலும் இறைவனுக்கு பயன்படுத்துவதில்லை. இருப்பினும் கிராமக்  கோயில்களில் இவ்வகை மாலைகளை அனுமதிப்பார்கள். ஆனால் துக்க காரியங்களுக்கே இவ்வகை மாலைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 6 மாத காலமாக துக்க நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும், கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலானோர் துக்க நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தவிர்ப்பதாலும் செண்டு பூ மாலைகள் விற்பனை ஒரேயடியாக சரிந்துவிட்டது.

மூன்று மாத பயிரான செண்டு பூக்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஆலயங்களில் மாலைகள் சாற்றுவதற்கு அனுமதியில்லை. மேலும் பக்தர்கள் வருகையும் அதிகமில்லை. முன்பு கிலோ ரூ. 80-லிருந்து ரூ. 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த செண்டு பூ தற்பொழுது ரூ.30 முதல் ரூ. 40 வரை மட்டுமே விலை போகிறது. இதனால் சாகுபடி  செய்த செலவுப் பணத்தைக் கூட எடுக்க முடியவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

செண்டு பூ
செண்டு பூ

இதுபற்றி நாகை தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் (பொறுப்பு) திவ்யாவிடம் பேசினோம்.

``கொரோனா தொற்று காரணமாக செண்டு பூவிற்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எதிர்வரவுள்ள நவராத்திரி மற்றும் ஆயுத பூஜை விழாக்களில் இதன் விலை உயர வாயப்புள்ளது. அடுத்த சாகுபடிக்கு செண்டு பூ நாற்றுகளை தோட்டக்கலைத்துறை மூலம் இலவசமாகத் தர உள்ளோம். மேலும் பலவகை காய்கறி விதைகளும் தருகிறோம். விவசாயிகள் வாங்கிப் பலனடைய கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு