
மருத்துவம் 23 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
பொதுவாக ஆம்பல், குமுதம் என்ற சொற்கள் எல்லா விதமான அல்லியையும் குறிக்கும். வெள்ளை, மஞ்சள், சிவப்பு, நீலம்… என எந்த நிறத்தில் பூப்பூத்தாலும் அனைத்துவிதமான அல்லி வகைகளுக்கும் மருத்துவக் குணங்கள் ஒன்றுதான்.
இவற்றில் வெள்ளையும் சிவப்பும் எல்லா இடங்களிலும் காணப்படும். மஞ்சள், நீல நிறப் பூக்களைக் காண்பது அரிது. அல்லியின் பூவும், கிழங்கும் மிகுந்த மருத்துவப் பயன்கள் உடையவை. அல்லிப்பூ 150 கிராம், ஆவாரம்பூ 150 கிராம் இவற்றுடன் 6 லிட்டர் தண்ணீர்விட்டு 2 மணிநேரம் ஊறவைத்துத் தீநீர் வடிகட்டவும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட தீநீர் ஒன்றரை லிட்டருடன், ஒன்றரை கிலோ சீனா கற்கண்டு சேர்த்து அடுப்பிலேற்றி காய்ச்சி, தேன் பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ளவும். இதுதான் ‘அல்லிப்பூ மணப்பாகு’. மிகவும் சுவையாக இருக்கும் இந்த மணப்பாகை, வெயிலில் அலைந்துவிட்டு வருபவர்களுக்கு 15 மி.லி முதல் 30 மி.லி வரை எடுத்துக் குளிர்ந்த தண்ணீரில் கலந்துகொடுத்தால், அதிக தாகம், உடல் வறட்சி, களைப்பு முதலியவை நீங்கும். நீர்க்கடுப்பு வராமல் தடுக்கும். மேலும், ஆண்குறி நீர்ப்பாதையில் ஏற்பட்ட புண் முதலியவையும் குணமாகும்.

சிவப்பு அல்லிக்கிழங்கு தாமிர உலோகத்தின் களிப்புச்சுவையை நீக்கி, அதைப் பற்பம் செய்யப் பயன்படுத்துவார்கள். சித்த மருத்துவத்தில் அனைத்து தொற்றுநோய்கள், கண் நோய்கள், தோல் நோய்கள், வயிற்று நோய்களுக்கும் சிறந்த மருந்தாக ‘தாமிர பற்பம்’ கூறப்பட்டுள்ளது. மேலும், சிவப்பு அல்லிக்கிழங்குச் சாற்றில் செய்யப்படும், ‘சிலாசத்துப் பற்பம்’, மேகச்சூடு, உடல் உட்சூடு, அதிக ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் குணமாக்கும். மிகுந்த வறட்சிக் காலங்களில் மக்கள் அல்லிக் கிழங்கைத் தோண்டி எடுத்து மாவாக்கி சாப்பிட்டுப் பசியாறிய பழைய பதிவுகளும் உண்டு. கர்ப்பிணிகளுக்கு ரத்தப்போக்கு ஏற்படாமல் இருக்க, இதன் கிழங்குமாவைப் பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, சர்க்கரை சற்று அதிகமாகச் சேர்த்துப் பருக, நல்ல பயன் கிடைக்கும்.
அல்லிக்கிழங்கை வேகவைத்து மேற்தோலை நீக்கிப் பால், சர்க்கரை சேர்த்து உண்டுவர உடல் குளிர்ச்சி அடையும். ரத்தக்கழிச்சல், மூலம், வயிற்றுப் புண்கள், பித்த எரிச்சல் ஆகியவை குணமாகும். நீலநிறப் பூக்களையுடைய அல்லியின் கிழங்கை, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட சித்த மருத்துவ நூல்கள் ‘நெய்தல் கிழங்கு’ எனப் பதிவு செய்து வைத்துள்ளது. ஆனால், இது தவறு. சங்க இலக்கியங்களில் நெய்தல் கிழங்குக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்களின் அடிப்படையிலும், குமரி மாவட்ட சித்த மருத்துவர்களின் பயன்பாட்டின் அடிப்படையிலும் இக்கட்டுரையில் படத்தில் குறிப்பிடப்பட்ட தாவரமே, ‘நெய்தல்’ என்று சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, அரசு சித்த மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் குமாரசாமி நிரூபித்துள்ளார்.

நெய்தல் (அ) கருங்குவளை
இத்தாவரம், கடற்கரையையொட்டிய நீர்நிலைகளில் அதிகமாகக் காணப்படும். தண்ணீர், எப்போதும் தேங்கிக் கிடக்கும் நெல் வயல்களிலும் ஆழமற்ற நீர்நிலைகளிலும் பார்ப்பதற்கு ‘வெங்காயத்தாமரை’ போலக் காணப்படும். இதன் வேரில் கிழங்குகள் இல்லை. ஆனால், இதன் தண்டில் உள்ள ‘குமிழ்’ போன்ற அமைப்பையே கிழங்காக எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பூக்களைக் குளிர்ந்த நீரில் 12 மணி நேரம் ஊறப்போட்டு, வடிகட்டி அந்நீரைக் குடித்துவர அதிகமான தாகம் அடங்கி, உடல் குளிரும். இக்கிழங்கை நன்றாகத் தண்ணீரில் கழுவி, பசும்பால் விட்டு அரைத்து 2 முதல் 3 கிராம் அளவுக் காலை, மாலை என இருவேளை பாலில் கலந்து உட்கொண்டு வர, நீர்த்துப்போன விந்து கெட்டியாகும். தொடர்ந்து உண்டுவர உடலில் பிறநோய்கள் வராது. ஏனெனில், மனித உடலைக் கட்டமைக்கும் கடைசி ஏழாம் தாதாகிய விந்துவைப் பலப்படுத்தினால், உடல் முழுமையாகப் பலமாகும் என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படை மெய்மக் கோட்பாடாகும். இதைச் சில சித்த மருத்துவர்கள், ‘செங்கழுநீர்க்கிழங்கு’ எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், உண்மையான செங்கழுநீர்க்கிழங்கை படத்தில் காணலாம்.

செங்கழுநீர்க்கிழங்கு
செங்கழுநீர் மலர்கள் நிறைந்த ஓடையைச் சுற்றி அமைந்த முல்லை நிலமே செங்கழுநீர்ப்பட்டுவாக இருந்து, ‘செங்கல்பட்டு’ ஆக மாறிவிட்டது. இன்று, செங்கழுநீர் ஓடை மட்டுமே உள்ளது. அதில் செங்கழுநீர்ப் பூக்களைத்தான் காணவில்லை. அத்தனை சாக்கடைக் கழிவுநீரும் அதில் கலப்பதுதான் இதற்குக் காரணம். இத்தாவரத்தின் வேர்ப்பகுதியில் பூலான்கிழங்குப்போல, உருண்டை வடிவிலான கிழங்குகள் காணப்படும். இதைத் தனியாக மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. கேரள மாநிலத்தில் இதை ‘செங்கழி’ என்றே அழைக்கிறார்கள். தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள குளத்துப்புழா என்ற ஊரில், கேரள வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் ‘சஞ்சீவி வனம்’ என்ற இயற்கை மூலிகைக்காட்டில், இந்தச் செங்கழுநீர்த் தாவரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. கண் நோய்களுக்குச் சொல்லப்பட்டுள்ள தைலங்கள் மற்றும் நெய் வகைகளில் இக்கிழங்கு அதிகமாகச் சேர்க்கப்படுகிறது.

சிங்கடாப் பருப்பு
அனைத்து ஏரி, குளங்களிலும் வளரும் ஒருவகைத் தண்ணீர்க் கொடியின் காய்களில் காணப்படும் பருப்பு ஆகும். இக்கொடியின் காய்களில் முட்கள் காணப்படுவதால், இது ‘முள்ளிக்காய்’ எனவும் அழைக்கப்படுகிறது. நீர்நிலை ஓரங்களில் பன்றிகள் இரைதேடும்போது, இதன் கிழங்குகளை நுகர்ந்து பார்த்துவிட்டு முட்கள் இருப்பதால், உண்ணாமல் ஓடிவிடும். இதனால், இதற்கு ‘பன்னிமோந்தான் கிழங்கு’ என்ற பெயரும் உண்டு. வடமாநிலங்களில் இக்கிழங்கு சிங்கடாப்பருப்பு, சிங்காரி, சிம்காரா எனவும் சொல்லப்படுகிறது. இப்பருப்பின் மேல் ஓட்டுப் பகுதி பச்சையாக இருக்கும்போது மெல்லியதாகவும் முதிரும்போது கடினமாகவும் இருக்கும். இதன் இளந்தண்டை அரைத்து, உடலில் ஆங்காங்கே ஏற்படும் பாலுண்ணி, மரு, கரணைக்கட்டிகள் மீது வைத்துக் கட்டிவர அவை தழும்பின்றி மறையும். இதன் காய்களை உப்பிட்டு வேகவைத்து, மேற்தோலை நீக்கி உண்டால் மிகுந்த சுவையாய் இருக்கும். உடற்சூடும் குறையும். இதன் உலர்ந்த காய்களை மேல் ஓட்டை நீக்கிப் பருப்பை எடுத்து மாவாக அரைத்து வைத்துக்கொண்டு, அரை முதல் ஒரு தேக்கரண்டி பசும்பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து உண்டுவர, உடல் செழுமை அடைவதுடன் விந்துவும் பெருகும். இப்பக்குவத்தை வடநாட்டில் வாழும் ‘ஜைனர்கள்’ அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர். அவர்களின் விரத நாள்களில் விரதத்தைத் துறக்கும்போது, இப்பருப்பு மாவைப் பசும்பாலுடன் கலந்து உண்கின்றனர்.

தாழை
நீர் நிலைகளிலும், அவற்றின் அருகிலும் வளரும் ஒருவகைப் புதர்த்தாவரமாகும். வெண்தாழை, செந்தாழை, பேய்த்தாழை... எனப் பல வகைகள் உண்டு. வெண்தாழை, எல்லா இடங்களிலும் காணப்படும். செந்தாழையைக் காண்பது மிகவும் அரிது. இதன் பழம், பலாப்பழம் போலவே இருக்கும். பண்டைய காலங்களில் தாழம்பூவைத் தலையில் சூடிக்கொள்வதை நமது நாட்டுப் பெண்கள், மிகப்பெரிய அடையாளமாகக் கொண்டிருந்தனர். இது மிகவும் நறுமணமுடையது. இதன் பூவிலிருந்து தீநீர், அத்தர் முதலியன தயாரிக்கப்பட்டு நறுமணப் பொருள்களாகக் கையாளப்பட்டு வருகிறது. ஒரு கிலோ தாழம்பூவை நார் நாராகக் கிழித்து, ஒரு மண்பாத்திரத்தில் போட்டு, 7 லிட்டர் தண்ணீர் சேர்த்து, ஓரிரவு ஊறவைத்து வாலை வடியந்திரம் பொருத்தி, தீநீர் வடிக்கவும். முதலில் பெறப்படும் 3 லிட்டர் வரை சேகரித்து வைத்துக்கொள்ளவும். பிறகு கிடைப்பது அவ்வளவு மணமாக இருக்காது. இதில், 30 மி.லி வரை தினமும் காலை, மாலை இருவேளை குடித்துவர, உடற்சூடு தணியும். அம்மைநோய் கண்டவர்கள், இத்தாழம்பூத் தண்ணீரைக் குடித்துவர, விரைவில் குணமாகும். மேலும், அம்மைநோய் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தாகவும் இதைக் கையாளலாம்.

தாழையில் காணப்படும் விழுது, பல்வேறு மருத்துவப் பயன்களை உடையது. தாழைவிழுதுச் சாறு, சித்த மருத்துவத்தில் உடல் வலிமையைப் பெருக்கும் ‘வெண்பூசணி இளகம்’ தயாரிக்கப் பயன்படுகிறது. இத்தாழை விழுதுச்சாற்றைக் குடித்து வர ஆண்மை பெருகும், ரத்தம் விருத்தியாகும். இச்சாற்றுடன், ‘அகத்தியர் குழம்பு’ என்னும் பேதி மருந்தைக் கலந்து 3 நாள்கள் உண்டு வர, எல்லாவிதமான கல்லடைப்பு நோய்களும் குணமாகும். தாழை விழுதுத் தைலத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, பலவிதமான வாதநோய்களைக் குணமாக்கும். இத்தனை சிறப்புமிக்கத் தாழை விழுதுகளைக் கிராமப் பகுதிகளில் தற்போதும் வெள்ளை அடிக்கும் பிரஷ்ஷாகப் பயன்படுத்துகிறார்கள். ‘காஷ்மீரில் மட்டும் விளையும் குங்குமப்பூவின் மருத்துவக் குணங்களை ஒத்தது தாழம்பூ’ என ‘குணபாடம்’ நூலாசிரியர் முருகேச முதலியார் கூறியுள்ளது மிகவும் ஆய்வுக்குரியது.

அடுத்த இதழில்...
ஆற்றங்கரையை அலங்கரிக்கும் ‘மூலிகை மரங்கள்’ குறித்துப் பார்ப்போம்.