Published:Updated:

`ஜீரோ பட்ஜெட் விவசாயம் மத்திய பட்ஜெட் வரை செல்ல காரணமே பசுமை விகடன்தான்!' - #15YearsOfPasumaiVikatan

பசுமை விகடன் நடத்திய ஜீரோ பட்ஜெட் பயிற்சி
பசுமை விகடன் நடத்திய ஜீரோ பட்ஜெட் பயிற்சி

`பசுமைப் புரட்சியின் தந்தை' என்று போற்றப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பசுமைப் புரட்சியின் விளைவுகளுக்கு தான் செய்த தவறுகளும் ஒரு காரணம் என்று ஒப்புக் கொள்ளும் அளவிற்குச் சென்றார் என்றால் அதற்கு பசுமை விகடனில் வந்த கட்டுரைகளின் அழுத்தமும் ஒரு காரணம்.

தமிழகத்தின் இயற்கை விவசாய மறுமலர்ச்சியில் பசுமை விகடனின் பங்கு மகத்தானது. அந்தப் பயணத்தை நினைவுகூரும் வகையில் ஆளுமைகள் பலரும் பசுமை விகடன் குறித்து இங்கு பகிர்ந்துகொள்கின்றனர். அப்படி தன் கருத்துகளைப் பதிவு செய்கிறார் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சி.நல்லா கவுண்டர். #15YearsOfPasumaiVikatan

மிழ்நாட்டின் விவசாயத்தை பசுமை விகடனுக்கு முன், பசுமை விகடனுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். பசுமைப் புரட்சியின் விளைவால் ரசாயனங்கள், பூச்சிக் கொல்லிகள் தமிழ் நிலங்களில் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதற்கு கடுமையான எதிர்க்குரல் நம்மாழ்வாரிடமிருந்து கிளம்பியது. அதேபோன்று வட மாநிலங்களில் சுபாஷ் பாலேக்கரிடமிருந்து கிளம்பியது. இந்த இரண்டு பேரின் குரல்களையும் ஒருசேர ஒலிக்கவிட்டதில் பசுமை விகடனுக்குப் பெரும் பங்குண்டு. ஒரு சின்ன குழுவுக்குள் இயங்கிக் கொண்டிருந்த நம்மாழ்வாரைப் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது பசுமை விகடன்.

பசுமை விகடன்
பசுமை விகடன்

அதேபோன்று மகாராஷ்டிரா, கர்நாடகாவில் மட்டுமே பேசப்பட்டு வந்த ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத் தொழில்நுட்பத்தை 2007-ல் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது பசுமை விகடன். இதில் அடியேனுக்கும் சிறு பங்குண்டு. தமிழ்நாட்டில் சுபாஷ் பாலேக்கர் தான் பங்குபெறும் நிகழ்ச்சிகளில் சொல்லிய ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்களைத் தொகுத்து `பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி’ என்ற சிறு நூலாக வெளியிட்டது விகடன். அதை எழுதும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

பசுமை விகடன் மூலமாக இலங்கையிலும் சுபாஷ் பாலேக்கர் அறிமுகமாகி இருந்தார். 2010-ல் `அக்ரோ எக்காலஜி’ என்ற சர்வதேச கருத்தரங்கு இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெற்றது. பல நாட்டு விஞ்ஞானிகள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் சுபாஷ் பாலேக்கருடன் நானும் கலந்து கொண்டேன். இதைத் தொடர்ந்து இலங்கையில் மட்டகிளப்பு போன்ற பகுதிகளுக்கு விவசாயிகளால் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ஜீரோ பட்ஜெட் விவசாய பயிற்சிகளைக் கொடுத்தோம். பசுமை விகடனால்தான் சுபாஷ் பாலேக்கர் இலங்கையில் அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீரோ பட்ஜெட் பயிற்சி
ஜீரோ பட்ஜெட் பயிற்சி

ஜீரோ பட்ஜெட் விவசாயம் மத்திய அரசின் பட்ஜெட்டில் இடம்பெறுவது வரை சென்றிருக்கிறது என்றால் அதற்குப் பசுமை விகடனும் ஒரு காரணம். ஏனென்றால் நிர்மலா சீதாராமன் பசுமை விகடன் இதழின் வாசகர். இதை ஒரு நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தினார். பத்திரிகை உலகில் யாரும் செய்யாத முயற்சியாக 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பரிந்துரைக்கான அம்சங்களைத் தொகுத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கியது பசுமை விகடன். இதற்கான ஆலோசனைக் கூட்டம் 2019 நவம்பர் 27-ம் தேதி சென்னையில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டவர்களில் நானும் ஒருவன். விவசாயம், சுற்றுச்சூழல், நீர் மேலாண்மை என பல அம்சங்களை அதில் பசுமை விகடன் தொகுத்திருந்தது. அநேகமாக வரும் காலத்தில் அது பட்ஜெட்டில் இடம்பெறும் என்று நம்புகிறேன்.

இன்று ஊருக்கு ஊர் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் ஆலைகள், வீட்டுக்கு வீடு வீட்டுத்தோட்டங்கள் இருக்கின்றன என்றால் அதற்கு முதலில் வித்திட்டது பசுமை விகடன்தான். மத்திய அரசு இப்போது செயல்படுத்தி வரும் `நியூட்ரிஷியன் கார்டன்’ என்ற திட்டத்துக்கு முன்னோடி பசுமை விகடன் முன்னெடுத்த வீட்டுத்தோட்டம்தான். கோவை ஆலந்துறையில் மரபணு மாற்றப்பட்ட நெல் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

நல்லா கவுண்டர்
நல்லா கவுண்டர்

அதை உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து தலைமையில் குழுவாகச் சென்று பிடுங்கி எரிந்தோம். அதற்கு உறுதுணையாக இருந்தது பசுமை விகடன்தான். பி.டி கத்திரிக்காய் அறிமுகப்படுத்த துடியாய் துடித்து கொண்டிருந்த நேரத்தில் அது சம்பந்தமான விரிவான கட்டுரைகள், போராட்டங்களைப் பதிவு செய்தல் என களத்தில் இறங்க, பிறகு அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்துக் கேட்புக்கு உத்தரவிட்டார். அதன்பிறகு பி.டி கத்திரிக்காய் இன்றுவரை உள்ளே நுழைய முடியவில்லை.

`பசுமைப் புரட்சியின் தந்தை' என்று போற்றப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பசுமைப் புரட்சியின் விளைவுகளுக்கு தான் செய்த தவறுகளும் ஒரு காரணம் என்று ஒப்புக் கொள்ளும் அளவிற்குச் சென்றார் என்றால் அதற்கு பசுமை விகடனில் வந்த கட்டுரைகளின் அழுத்தமும் ஒரு காரணம். பல நாடுகளிலும் விரட்டியடிக்கப்பட்ட மான்சான்டோ நிறுவனம், இந்தியாவில் தொடர்ந்து கடையை விரிக்க துடித்துக் கொண்டிருந்தது.

நிர்மலா சீதாராமனிடம் பட்ஜெட் பரிந்துரைகளை அளித்தபோது
நிர்மலா சீதாராமனிடம் பட்ஜெட் பரிந்துரைகளை அளித்தபோது
“படம் எடுக்க வைத்த பசுமை விகடன்!” - நெகிழ்கிறார் இயக்குநர் இரா.சரவணன்

மான்சான்டோ என்றாலே ஒரு கெட்ட வார்த்தை என்றளவுக்கு அதைப் பற்றி தொடர்ந்து எழுதி இன்று மரபணு மாற்று பயிர்கள் நுழைய வேண்டுமென்றால் அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியாத அளவுக்கு ஒரு நிலையை உருவாகி இருப்பதற்கு ஆரம்ப காலந்தொட்டே செயலாற்றி வந்திருக்கிறது பசுமை விகடன். கோவணாண்டி மூலம் அரசியல்வாதிகளை வறுத்தெடுப்பதாகட்டும்; மகசூல் கட்டுரைகள் மூலம் இயற்கை விவசாய தொழில்நுட்பங்களைச் சொல்வதாகட்டும்; அத்தனையிலும் ஓர் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு செயல்படுவது பசுமை விகடனின் வழக்கம். பதினைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பசுமை விகடன் அடுத்து வெள்ளி விழா கொண்டாட வாழ்த்துகிறேன்.

- சி.நல்லா கவுண்டர்,

தேசிய ஒருங்கிணைப்பாளர், தமிழக விவசாயிகள் சங்கம்.

அடுத்த கட்டுரைக்கு