Published:Updated:

கேரளாவிலும் இயற்கை விவசாயத்துக்கு வித்திட்ட நம்மாழ்வார்!

நம்மாழ்வாருடன் உஷா, ஸ்ரீதர்
பிரீமியம் ஸ்டோரி
நம்மாழ்வாருடன் உஷா, ஸ்ரீதர்

பக்கத்து வயல்

கேரளாவிலும் இயற்கை விவசாயத்துக்கு வித்திட்ட நம்மாழ்வார்!

பக்கத்து வயல்

Published:Updated:
நம்மாழ்வாருடன் உஷா, ஸ்ரீதர்
பிரீமியம் ஸ்டோரி
நம்மாழ்வாருடன் உஷா, ஸ்ரீதர்
மிழகம் மட்டுமல்லாது கேரளம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும், இலங்கை, இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளிலும் இயற்கை விவசாயம் சார்ந்த பணிகளை முன்னெடுத்திருக்கிறார் நம்மாழ்வார். அதுகுறித்து, கேரள மாநிலத்தில் செயல்படும் தணல் அமைப்பின் இயக்குநர்களாகவும் நமது நெல்லை காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களாகவும் உள்ள உஷா, ஸ்ரீதர் ஆகியோரிடம் பேசினோம்.

“2004-ம் ஆண்டு கேரள மாநிலம் கும்பளாங்கியில நடந்த ‘நமது நெல்லை காப்போம்’ தேசிய கருத்தரங்கில் கலந்துகொண்டார் நம்மாழ்வார். மூன்று நாள்கள் நடந்த அந்த நிகழ்ச்சியில் அவர் சொல்லிய கருத்துகள் அனைவரையும் கவர்ந்தது.

நம்மாழ்வாருடன் உஷா, ஸ்ரீதர்
நம்மாழ்வாருடன் உஷா, ஸ்ரீதர்

‘விளைச்சலை அதிகரிப்பதற்காக உயரம் குறைந்த நெல் விதைகளை அரசு எங்களுக்குத் தந்தது. அதனால் மாட்டுக்கு வைக்கோல் இல்லாமல் போனது. பால் உற்பத்தியின் அளவை அதிகரிக்கக் கலப்பினப் பசுக்களை அரசு தந்தது. அது அதிக தீவனம் எடுத்துக்கொண்டது. உயரம் குறைந்த நெல்லும், அதிக தீவனம் எடுக்கும் கலப்பினப் பசுக்களும் விவசாயிகளை நஷ்டப்பட வைத்தன. இதனால் பசுக்களை விற்கும் நிலை விவசாயிகளுக்கு வந்தது. விளைவு, விவசாயத்திற்குச் சாணம் இல்லாத நிலை ஏற்பட்டது’ என ஐயா பேசியது அனைவரையும் சிந்திக்க வைத்தது. தொடர்ந்து கேரளாவுக்கு அடிக்கடி வந்து இங்குள்ள விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தார். கேரள விவசாயிகளுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

கேரளாவிலும் இயற்கை விவசாயத்துக்கு வித்திட்ட நம்மாழ்வார்!

கேரளாவில், ‘கேரள ஜைவ கர்ஷக சமிதி’ (Kerala Jaiva Karshaka Samithi) என்கிற இயற்கை விவசாயக் கூட்டமைப்பு இருக்கிறது. அந்தக் கூட்டமைப்பு நடத்தும் நிகழ்வுகளுக்கு பலமுறை வந்திருக்கிறார். பி.டி விதைகள் விஷயத்தில் கேரள அரசு எடுக்க வேண்டிய முடிவு குறித்து ஆலோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது சம்பந்தமாகக் கேரள அரசு ஏற்பாடு செய்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஐயாவை அழைத்திருந்தது அரசு.

நம்மாழ்வார் ஒரு குழுவாக வந்து கலந்துகொண்டார். கேரள மாநிலத்தின் இயற்கை விவசாயக் கொள்கைகள் 2010-ம் ஆண்டு உருவாக்கப்பட்டன. 2008-ம் ஆண்டு முதல் அதற்கான ஆலோசனை கூட்டங்கள் நடந்து வந்தன. அன்று கேரள முதல்வராக இருந்த வி.எஸ்.அச்சுதானந்தன், வேளாண்துறை அமைச்சராக இருந்த முல்லக்கரா ரத்னாகரன் கலந்துகொண்ட ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், நம்மாழ்வார் கலந்துகொண்டார். மிக முக்கியமான அந்தக் கூட்டத்தில் அரசுக்கு நிறைய ஆலோசனைகளைச் சொல்லி வழிகாட்டினார் நம்மாழ்வார். கேரள அரசு இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கு நம்மாழ்வார் கூறிய கருத்துகள் முக்கியக் காரணமாக அமைந்தன. அதன் பிறகு இயற்கை விவசாயத் திட்டங்களைக் கேரள அரசு செயல்படுத்தியபோது, வேளாண்மைத்துறை அலுவலர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக ஐயா வந்திருந்தார். அந்தப் பயிற்சியால் கேரளத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.

கேரளத்தில் நடந்த எண்டோசல்பான் பூச்சிக்கொல்லிக்கு எதிரான போராட்டத்தில் நம்மாழ்வார் மிக முக்கியப் பங்காற்றினார். பாலக்காட்டில் அரசின் ‘அக்ரோ பயோ டைவர்சிட்டி கன்சர்வேஷன்’ என்ற திட்டம் செயல்பட்டபோது, நம்மாழ்வார் அங்கேயே தங்கி விவசாயிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பயிற்சி கொடுத்தார். அந்தப் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள்தான் இன்றைக்குக் கேரளாவில் முன்னோடி இயற்கை விவசாயிகளாக இருக்கிறார்கள்” என்றார்.

கேரள ஜைவ கர்ஷக சமிதி செயற்குழு உறுப்பினரும், ஆர்கானிக் ஃபார்மர்ஸ் அஷோசியேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவருமான இலியாஸ், நம்மாழ்வார் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். “2012-ம் ஆண்டு ‘கேரள ஜைவ கர்ஷக சமிதி’ தொடக்கவிழா கோழிக்கோட்டில் நடந்தது. இந்த அமைப்புத் தொடங்கியதில் நம்மாழ்வாரின் பங்கு முக்கியமானது. தொடக்க விழாவில் கலந்துகொண்டு அழகிய தமிழில் நம்மாழ்வார் பேசிய கருத்துகள் வந்திருந்தவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது. இந்த உலகத்துக்கு இயற்கை விவசாயம் தேவை என்ற எண்ணத்தையும், பல வழிகளில் இயற்கை விவசாயம் செய்யலாம் என்ற சிந்தனையையும் விதைத்தது நம்மாழ்வாரின் வார்த்தைகள். ஒவ்வொரு பகுதியின் சூழ்நிலைக்கும், மண்ணின் தன்மைக்கும், வளத்துக்கும் ஏற்ப இயற்கை விவசாயத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இயற்கை விவசாயத்தை எங்கள் அமைப்புமூலம் பிரசாரம் செய்யப் பல வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தது நம்மாழ்வார்தான்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

முல்லக்கரா ரத்னாகரன், இலியாஸ்
முல்லக்கரா ரத்னாகரன், இலியாஸ்

நம்மாழ்வார் ஒரு குரு!

கே
ரளாவின் முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் முல்லக்கரா ரத்னாகரன் நம்மாழ்வாருடன் தனிப்பட்ட முறையில் நட்பாக இருந்தவர். தற்போது சி.பி.ஐ கட்சியின் எம்.எல்.ஏ-வாக இருக்கும் அவர், நம்மாழ்வார் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். “நான் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில், இயற்கை விவசாயம் சம்பந்தமாக நடந்த பல நிகழ்வுகள் மூலமாக எனக்கும் நம்மாழ்வாருக்கும் தனிப்பட்ட முறையில் நட்பு உருவானது. விவசாயிகளை எதிர்க்கும் பெரும் சக்திக்கு முன்னால் நின்று போராடுவதற்கான தைரியத்தை இயற்கை மற்றும் பாரம்பர்ய விவசாயம் மூலம் ஏற்படுத்திய குரு நம்மாழ்வார்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism