Published:Updated:

`நம் வழி நம்மாழ்வார் வழி...' - வித்யாவின் வீட்டுத்தோட்டம் முதல் தெலங்கானா மாநிலம் வரை!

வீட்டுத்தோட்டம்
வீட்டுத்தோட்டம்

ஆரம்பகட்டத்தில் நம்மாழ்வாரின் ஆதரவோடும், சில ஆலோசனைகளோடும் செயல்படத் தொடங்கிய ஒரு தன்னார்வ அமைப்பு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பல விவசாயிகளை இயற்கை விவசாயிகளாக மாற்றிவருகிறது

ஈரோடு மாவட்டம், அறச்சலூரைச் சேர்ந்த வித்யா தன் வீட்டிலும், அருகிலுள்ள அக்கா வீட்டிலும் வீட்டுத்தோட்டம் அமைத்து, காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார்; தன் தந்தைக்கு விவசாயத்தில் உதவியாக இருக்கிறார். வீட்டுத்தோட்டத்தில் பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த வித்யாவைச் சந்தித்தோம்.

"நான் எம்.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிருக்கேன். கல்லூரி ஆசிரியர், ஹெச்.ஆர்னு பல வேலைகளைப் பார்த்திருக்கேன். சின்ன வயசுல இருந்தே இயற்கைமேல ரொம்ப ஈடுபாடு. என்ன வேலை செஞ்சாலும், இயற்கையோடு இணைஞ்சு வாழணும்னு நினைப்பேன். அப்பா விவசாயி. குத்தகை நிலத்துல விவசாயம் செய்யறாரு. எனக்கு விவசாயத்து மேலயும் ஒரு ஈடுபாடு இருந்துச்சு. நம்மாழ்வார் அய்யா புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சேன். அவருடைய பேச்சுகளை இணையத்துல கேட்டேன். ஒருகட்டத்துல இயற்கை விவசாயத்து மேல அதிக ஈடுபாடு வந்துடுச்சு.

`நம் வழி நம்மாழ்வார் வழி...' - வித்யாவின் வீட்டுத்தோட்டம் முதல் தெலங்கானா மாநிலம் வரை!

`நான் வேலையை விட்டுட்டு முழு நேரமா விவசாயம் செய்யப்போறேன்'னு சொன்னதும், வீட்டுல பலத்த எதிர்ப்பு. பிறகு என் விருப்பத்தைப் புரிஞ்சுகிட்டாங்க. இப்போ நான் ஒரு இயற்கை விவசாயி" சொல்லும் போதே முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது வித்யாவுக்கு. தொடர்ந்து அவர் பகிர்ந்த அனுபவங்களை பசுமை விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > பருவத்துக்கு ஏற்ற பயிர்..! - வீட்டுத்தோட்டம் https://www.vikatan.com/news/agriculture/meet-erode-vidhya-who-excels-in-home-farming

தெலங்கானாவிலும் தடம்பதித்த நம்மாழ்வார்!

ஆரம்பகட்டத்தில் நம்மாழ்வாரின் ஆதரவோடும், சில ஆலோசனைகளோடும் செயல்படத் தொடங்கிய ஒரு தன்னார்வ அமைப்பு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பல விவசாயிகளை இயற்கை விவசாயிகளாக மாற்றிவருகிறது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ளது நீடித்த வேளாண்மைக்கான மையம். இந்த மையத்தின் இயக்குநர் வேளாண் விஞ்ஞானி ராமனாஞ்சநேயலு. இந்த அமைப்பின் மூலம், இந்தியாவில் ஆறு மாநிலங்களில் இயற்கை விவசாயத்தைப் பரப்பிவருகிறார். நம்மாழ்வார் சிறப்பிதழுக்காக ஹைதராபாத் மாநகரம், தர்ணகாவிலுள்ள அவருடைய மையத்தில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.

"இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்துவந்தேன். 1986-ம் ஆண்டு முதலே ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் (தெலங்கானா, ஆந்திரா) பல்வேறு இடங்களில் விவசாயத் தற்கொலைகள் நடந்துவந்தன. குறிப்பாக, தெலங்கானா மாநிலத்திலுள்ள எனபாவி கிராமத்தில் பருத்திச் சாகுபடி செய்யும் விவசாயிகள் நிறைய பேர் தற்கொலை செய்துகொண்டனர். அந்தத் தற்கொலைகள் என்னை பாதித்தன. ஒருகட்டத்தில் `தற்கொலையைத் தடுக்கும்விதமாக ஏதாவது செய்ய வேண்டும்' என்று எண்ணினேன். அது குறித்து ஆராய்ந்தேன். அப்போது இந்திய அளவில் சிலர் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வந்தனர். குஜராத்தில் பாஸ்கர் சாவே, மகாராஷ்டிராவில் சுபாஷ் பாலேக்கர், தமிழ்நாட்டில் நம்மாழ்வார், கர்நாடகாவில் நாராயண ரெட்டி, கோவாவில் கிளாடு ஆள்வாரிஸ் ஆகியோரின் பணிகள் முக்கியமானதாக இருந்தன. 2004-ம் ஆண்டு முதல் நம்மாழ்வாரோடு தொடர்பிலிருந்தேன்.

`நம் வழி நம்மாழ்வார் வழி...' - வித்யாவின் வீட்டுத்தோட்டம் முதல் தெலங்கானா மாநிலம் வரை!

குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப் மாநில அரசுகளோடு 'கிராமின் அகாடமி' என்ற பெயரில் வேலை செய்துகொண்டிருக்கிறோம். தெலங்கானாவில் தற்கொலைகள் நடக்கின்றன. ஆனால், நாங்கள் வேலை செய்யும் கிராமங்களில் விவசாயிகள் தற்கொலைகள் இல்லை என்பதுதான் எங்கள் பணிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறோம்" என்ற ராமனாஞ்சநேயலு சொன்னவை முக்கியமானவை.

"15 வருடங்களுக்கு முன்னர் இயற்கை விவசாயத்தின் தேவையை உணர்த்தும் வகையில் 'டேக்கிங் ரூட்ஸ்' (Taking Roots) என்ற பெயரில் ஆவணப்படத்தை எடுத்து வெளியிட்டோம். அதில் பாஸ்கர் சாவே, நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் போன்றோர் இயற்கை விவசாயத்தைப் பற்றிப் பேசினார்கள். எங்களுடைய பயிற்சிகளில் அதைத் திரையிட்டுக் காட்டுகிறோம். நம்மாழ்வார் ஹைதராபாத்துக்கும் வந்திருக்கிறார். நாங்கள் வேலை செய்யும் எனபாவி, புனுகுலு கிராமங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறோம்.

இயற்கை விவசாயத்தை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற விவாதத்தையும், கூட்டத்தையும் ஹைதராபாத்தில் நடத்தியிருக்கிறோம். அப்போதெல்லாம் ஹைதராபாத்துக்கு வந்து பங்களித்திருக்கிறார். 'எப்படி விவசாயிகளோடு இணைந்து பணியாற்ற வேண்டும், எப்படி இணைந்து பணியாற்றினால் சிறப்பான விஷயத்தைக் கொண்டுவர முடியும்' என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். நம்மாழ்வாரின் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களையும் எங்களுடைய விவசாயிகளுக்குச் சொல்லிக்கொடுத்து வருகிறோம்.

'இந்தியாவிலுள்ள 47 வேளாண் பல்கலைக்கழகங்களும் இயற்கை வேளாண்மையை எதிர்க்கின்றன' என்று சொன்னார் நம்மாழ்வார். உண்மைதான். ரசாயன விவசாயத்துக்கான அரசியல் பெரிது. இயற்கை விவசாயத்தைப் பரவலாக்குவது ஒரு நீண்ட பயணம். இதை அனைவரும் சேர்ந்துதான் முன்னெடுக்க முடியும். கேரளாவில் இயற்கை வேளாண் கொள்கை கொண்டு வருவதற்கும் நம்மாழ்வார் பங்களித்திருக்கிறார்.

கிஸான் மந்த்ரா குறைதீர் மையம், மதிப்புக்கூட்டும் கூடம்
கிஸான் மந்த்ரா குறைதீர் மையம், மதிப்புக்கூட்டும் கூடம்

இது தொடர்பான கூட்டம் ஒன்று 2010-ம் ஆண்டு, திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதன் பிறகு 2012-ம் ஆண்டு, கேரள அரசு இயற்கை வேளாண் கொள்கையைக் கொண்டுவந்தது. இன்று சிக்கிம் மாநிலத்துக்கு அடுத்து கேரள மாநிலம்தான் இயற்கை விவசாயத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திவருகிறது. எங்கள் செயல்பாடுகளுக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்த வகையில் தெலங்கானா, ஆந்திராவில் முன்னெடுக்கும் இயற்கை விவசாயம் தொடர்பான பணிகளில் நம்மாழ்வார் பெயரும் நிலைத்திருக்கும்" என்றார். - முழுமையான நேர்காணல் கட்டுரையை பசுமை விகடன் இதழில் வாசிக்க > இயற்கை விவசாயத்தால் விவசாயிகள் தற்கொலை குறைந்தது! - தெலங்கானாவிலும் தடம்பதித்த நம்மாழ்வார்! https://www.vikatan.com/news/agriculture/in-telangana-farmers-suicide-got-reduced-because-of-organic-farming

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு