Published:Updated:

ஹைட்ரோகார்பன் விவகாரம்: `விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார் மோடி!’ - விளாசும் நாராயணசாமி

மோடி
மோடி

``ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் பெருநிறுவனங்களுக்கு துணையாக நின்று, மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வேலையை செய்துவருகிறது மோடி அரசு”.

புதுச்சேரியில் நேற்றிரவு முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் 2018-ம் ஆண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்தது. அதற்காக வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதியையும் வழங்கியது. அந்தத் திட்டத்துக்காக அப்போது புதுச்சேரியில் அகழ்வாராய்ச்சி நடத்த திட்டமிட்டு அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், அதை எதிர்த்து நாங்கள் மத்திய பெட்ரோலியத் துறைக்கு கடிதம் அனுப்பினோம். அந்தத் திட்டத்துக்காகப் புதுவை மற்றும் காரைக்காலில் நிலங்களைக் கையகப்படுத்தினால் விவசாயம், மீன்பிடித் தொழில் பாதிக்கும் என வலியுறுத்தினோம்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி
முன்னாள் முதல்வர் நாராயணசாமி

அதேபோல அந்த சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானத்தையும் நிறைவேற்றினோம். ஆனால், இப்போது அந்த பிரச்னை மீண்டும் பூதாகரமாகக் கிளம்பியிருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த டெண்டர் விடப்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

அதேசமயம் தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதுடன், இந்தத் திட்டத்தால் காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் அழுத்தம் கொடுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் பணிவதாகத் தெரியவில்லை. பெருநிறுவனங்களுக்கு துணையாக நின்று, மக்களைப் பற்றி கவலைப்படாமல் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வேலையை மோடி அரசு செய்துவருகிறது.

ஹைட்ரோகார்பன்
ஹைட்ரோகார்பன்

புதுச்சேரியில் புதிதாக அமைந்திருக்கும் ஆட்சி இதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் புதுவை அரசு கவனம் செலுத்த வேண்டும். பா.ஜ.க இத்திட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குகிறது. மத்திய அரசு இத்திட்டத்தை புதுச்சேரியில் நுழைக்க முயற்சி செய்து வருகிறது. அதனால் முதல்வர் ரங்கசாமி இத்திட்டத்தை எதிர்த்து மத்திய பெட்ரோலியத்துறைக்கும், பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுத வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு