70 நாளில் ரூ.16 லட்சம் வருமானம்... கலர் கலராய் காலிபிளவர்... அசத்தும் நாசிக் விவசாயி!

இந்த உயர்ரக காலிஃப்ளவர் உடலுக்கு பாக்டீரியா எதிர்ப்பு தன்மையை கொடுப்பதோடு, புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு கொடுக்கிறது. இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்து இருக்கிறது.
காலிஃப்ளவர்கள் பொதுவாக, குறுகிய காலத்தில் விளையக்கூடியது ஆகும். இந்தக் காலிஃப்ளவர்களை வெள்ளைக்கலரில்தான் பார்த்து இருப்போம். ஆனால், இப்போது நாசிக் விவசாயி ஒருவர் கலர் கலராகக் காலிஃப்ளவர்களை விளைய வைத்துள்ளார். இவர் வழக்கமான காலிஃப்ளவர்களை பயிரிடாமல் சற்று வித்தியாசமாகப் பயிரிட முடிவு செய்தார். இதற்காக ஹரியானாவில் உள்ள கர்னல் என்ற இடத்தில் இருக்கும் ஒரு விதைப் பண்ணையில் இருந்து ரூ.40,000-க்கு கலப்பின உயர் ரக காலிஃப்ளவர் விதைகளை வாங்கி வந்து தனது நிலத்தில் பயிரிட்டு இச்சாதனையைப் படைத்துள்ளார்.

நாசிக் மாவட்டம் மாலேகாவ் தாலுகாவில் உள்ள தபாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த மகேந்திர நிகம் என்ற விவசாயி தனது தோட்டத்தில் 30,000 சதுர அடி நிலத்தில் ஹரியானாவில் இருந்து வாங்கி வந்த காலிஃப்ளவர் விதைகளைப் பயிரிட்டார். இரண்டு வகையான காலிஃப்ளவர் ரகங்களைப் பயிரிட்டார். வாடாமல்லி கலரில் வரக்கூடிய வேலண்டினோ மற்றும் மஞ்சள் கலரில் வரக்கூடிய காரிடினா ஆகிய இரண்டு ரகங்களையும் பாதியாகப் பிரித்துப் பயிரிட்டார்.
இதில் 20,000 கிலோ கலர் காலிஃப்ளவர் கிடைத்தது. கிலோ 80 ரூபாய் வீதம் விற்பனை செய்ததில் 70 நாள்களில் 16 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இது குறித்து மகேந்திர நிகம் கூறுகையில், "நான் இரண்டு ரக காலிஃப்ளவர்களைப் பயிரிட்டேன். அவற்றின் கலர் மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றால் மெட்ரோ நகரங்களில் இதற்கு அதிக வரவேற்பு இருக்கிறது.
இந்த உயர்ரக காலிஃப்ளவர் உடலுக்கு பாக்டீரியா எதிர்ப்பு தன்மையைக் கொடுப்பதோடு, புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு கொடுக்கிறது. இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்து இருக்கிறது. இதனால் இந்த காலிஃப்ளவர் கண்பார்வை மற்றும் தோல் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதைப் பயிரிட விதை, உரம், வேலையாட்கள் போன்றவற்றுக்கு 2 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். 16 லட்சம் வருவாய் கிடைத்தது" என்றார்.
இது போன்ற ஒரு காலிஃப்ளவரை மகாராஷ்டிராவில் இவர்தான் முதன்முறையாகப் பயிரிட்டுள்ளார். இது குறித்து மாநில வேளாண்துறை அமைச்சர் தாதாஜி பஹுசே கூறுகையில், ''சில கம்பெனிகள் ஒன்று சேர்ந்து கலர் காலிஃப்ளவர் ரகங்களை உருவாக்கி இருக்கின்றனர். இது போன்ற முயற்சியில் விவசாயிகளும் ஈடுபட வேண்டும்'' என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டம் விவசாயத்துக்கு மிகவும் புகழ் பெற்றது ஆகும். இங்கு திராட்சை, மாதுளை, வெங்காயம் போன்றவை அதிகமாக விளைகிறது. லசல்காவில் இருந்துதான் இந்தியா முழுக்க வெங்காயம் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.