Published:Updated:

10,000 பண்ணைக் குட்டைகளை உருவாக்கியுள்ளோம்!

பத்மா ரகுநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
பத்மா ரகுநாதன்

சந்திப்பு

`தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி’ (National Bank for Agriculture and Rural Development) என்பதைச் சுருக்கமாக, `நபார்டு’ என்று அழைக்கிறோம். விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காகச் செயல்பட்டுவரும் நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் தலைமைப் பொதுமேலாளர் பத்மா ரகுநாதனை பொங்கல் சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம். அவரிடம், `தமிழ்நாட்டில் நபார்டு வங்கி என்னென்ன பணிகளை செய்துகொண்டிருக்கிறது?’ என்ற கேள்வியோடு பேச்சைத் தொடங்கினோம்.

10,000 பண்ணைக் குட்டைகளை உருவாக்கியுள்ளோம்!

‘‘முன்பெல்லாம் வங்கிகள் வழங்கும் விவசாயம் சார்ந்த கடன்களுக்கு மறுநிதி அளிப்பதுதான் நபார்டின் முக்கியப் பணியாக இருந்தது. இன்று வர்த்தக வங்கிகளிடம் நிதி ஆதாரங்கள் மிகுதியாக இருப்பதால், மறுநிதி உதவி வழங்குவது வெகுவாகக் குறைந்துவிட்டது. கூட்டுறவு வங்கிகள் குறுகியகாலப் பயிர்க் கடன்களை வழங்குவதற்கு நபார்டு ஆண்டுதோறும் கடனுதவி வழங்குகிறது. கடந்த நிதியாண்டில் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட குறுகியகாலப் பயிர்க்கடன் உதவி ரூ.4,425 கோடி. நீண்டகால கடனின் அளவு ரூ.11,325 கோடி.

இன்று விவசாயிகள் எதிர்கொள்ளும் பல பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது பருவநிலை மாறுபாடுகள்தான். இதற்கான தீர்வுகளை தேசிய அளவிலான பருவநிலை மாற்ற நிதியைச் (National Adaptation Fund For Climate Change) செயல்படுத்தும் நிறுவனமாக தேசிய அளவில் நபார்டு செயல்பட்டுவருகிறது. தற்போது பருவநிலை மாறுபாடு தொடர்பாகத் தமிழ்நாட்டில் 13 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில் மன்னார் வளைகுடாவில் செயல்படுத்தப்படும் நீடித்த வாழ்வாதாரத்துக்கான திட்டமும் ஒன்று.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நபார்டு வங்கி மூலம் விவசாயிகளுக்கு நேரடியாகக் கடனுதவி கொடுப்பதில்லை. மீன்வளத்துறை திட்டங்களுக்காக மட்டுமே 166.48 கோடி அளவுக்கு நபார்டு நிதியுதவி செய்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விவசாயத்துக்கான கடனுதவி ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ‘ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி’யை உருவாக்கி, அதன் மூலமாக மாநில அரசுகளுக்கு நீண்டகாலக் கடனுதவி அளித்து வருகிறது. அதன் மூலமாக மாநில அரசுகள் நீர்பாசனத் திட்டங்கள், குடிநீர்த் திட்டங்கள், கிராம சாலைகள், பாலங்கள், தடுப்பணைகள், பள்ளிக்கூடங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் என ஊரகப் பகுதிகளுக்கு அத்தியாவசியமான பல உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

 பத்மா ரகுநாதன்
பத்மா ரகுநாதன்

ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து நபார்டு வழங்கிய உதவியின் மூலம் தமிழ்நாட்டில் 4.52 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெற்றுள்ளன. 41,308 கிலோமீட்டர் தொலைவுக்குச் சாலைகள் போடப்பட்டுள்ளன. 68,793 மீட்டர் தொலைவுக்கு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன, 13.02 லட்சம் மெட்ரிக் டன் அளவுள்ள விவசாயப் பொருள்களைச் சேமிக்க கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 36 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நபார்டு உதவியுடன் 95 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள 10,000 பண்ணைக் குட்டைகள் தமிழ்நாட்டின் நீர்வளத்துக்குப் பயனுள்ளவையாக இருக்கின்றன. தமிழ்நாட்டின் மீன்வளத்துறை திட்டங்களுக்காக மட்டும் ரூ.166.48 கோடி அளவுக்கு நபார்டு நிதியுதவி செய்திருக்கிறது. கிராமப் புறங்களில் மக்களுக்கு நிதிசார் கல்வி அளிக்க வங்கிகள் மூலமாக நூற்றுக்கணக்கான முகாம்களையும் நபார்டு நடத்திவருகிறது.

விவசாயத்துக்கு மட்டுமன்றி மனித வாழ்க்கைக்கே தண்ணீர் மிகவும் அத்தியாவசியமானது. மழை எங்கே பெய்கிறதோ, அங்கேயே மழைநீரைச் சேகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவேதான் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு, நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றிவருகிறோம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது, உயர் வரப்புகள், தாழ்ந்த கற்சுவர்கள், தடுப்பணைகள் போன்ற அமைப்புகள் மூலமாக அந்தப் பகுதியில் பெய்யும் மழைநீர் அந்தப் பகுதியிலேயே சேமிக்கப்படுகிறது. இதன் பயனாக நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கிறது. விவசாய உற்பத்தி அதிகரிக்கிறது. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், கிராம நீர்வடிப்பகுதி கமிட்டிகள் அமைத்து, அந்தப் பகுதி மக்களையும் இந்தத் திட்டங்களில் பங்கேற்கச் செய்வதுதான். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 76 நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.

‘‘மத்திய அரசின் மானிய உதவித் திட்டங்களின் மானியமானது, வங்கிகளுக்கு நபார்டு மூலமாகச் சென்றடைகிறது. மற்றபடி, தனிப்பட்ட விவசாயிகளுக்கு கடனுதவி செய்வதில்லை.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

10,000 பண்ணைக் குட்டைகளை உருவாக்கியுள்ளோம்!

விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்க விவசாயிகள் ஒருங்கிணைந்து உழவர் உற்பத்தி நிறுவனங்களை அமைக்க நபார்டு ஊக்குவிக்கிறது. விவசாயிகளுக்கு நிறுவனத்தை உருவாக்கி நிர்வகிக்கும் திறனை ஏற்படுத்த பயிற்சியளிக்கிறது. இது தொடர்பாகத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து வழிகாட்டுகிறது. இன்று தமிழ்நாட்டில் 250 உழவர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. விவசாயிகள் மட்டுமன்றி, சேலம் மாவட்டத்தில் நெசவாளர்கள் இணைந்து ஓர் உற்பத்தி நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அது மிகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது. மதுரையில் 150 உறுப்பினர்கள்கொண்ட பலவிதமான சணல் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனமும் வெகு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் தடை வந்த பிறகு இவர்களுடைய தயாரிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்துவருகிறது. ஜவ்வாது மலை, கொல்லிமலை உள்ளிட்ட சில மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களின் மேம்பாட்டுக்காகச் சில திட்டங்களைச் செயல்படுத்திவருகிறோம். அங்கெல்லாம்கூட உற்பத்தி நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன’’ என்றவரிடம், “விவசாய வளர்ச்சிக்காகவே பிரத்யேகமாகச் செயல்பட்டுவரும் நபார்டு வங்கி, விவசாயிகளுக்கு நேரடியாகக் கடன்கள் வழங்குவதில்லையே... அது ஏன்?” என்று கேட்டோம்.

‘‘நபார்டு, ஓர் உயர்நிலை நிதி மற்றும் வளர்ச்சி நிறுவனம். எனவே, வங்கிகளும், மாநில அரசுகளும், அரசுத்துறை அமைப்புகளும்தான் எங்கள் வாடிக்கையாளர்கள். அண்மைக்காலமாக நுண்கடன் நிறுவனங்கள் எங்களிடமிருந்து மறுநிதி உதவி பெறுகின்றன. மத்திய அரசின் மானிய உதவித் திட்டங்களின் மானியமானது வங்கிகளுக்கு நபார்டு மூலமாகச் சென்றடைகிறது. மற்றபடி தனிப்பட்ட விவசாயிகளுக்கு கடனுதவி செய்வதில்லை. அண்மைக்காலமாக சிலர் தங்களை நபார்டு நியமித்துள்ள பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு, மானியத்துடன் நபார்டு வங்கியிலிருந்து கடன் வாங்கித்தருகிறோம் என்று சொல்வதாகப் புகார்கள் வருகின்றன. எனவே, மறுபடியும் தெளிவாக, வலியுறுத்திச் சொல்கிறேன்... நபார்டு தனி நபர்களையோ, தொண்டு நிறுவனங்களையோ இதர அமைப்புகளையோ முகவர்களாகவோ, பிரதிநிதிகளாகவோ நியமிப்பதில்லை. எனவே, இதுசம்பந்தமாக எச்சரிக்கையாக இருக்கவும்’’ என்று சொல்லி முடித்தார்.

எஸ்.சந்திரமெளலி