Published:Updated:

நல்ல வருமானம் கொடுக்கும் நாட்டுக் கத்திரி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அறுவடையான கத்திரிக்காய்களுடன் ராமகிருஷ்ணன்
அறுவடையான கத்திரிக்காய்களுடன் ராமகிருஷ்ணன்

1 ஏக்கர்… 9 மாதங்கள்… 1,00,000 ரூபாய் லாபம்!

பிரீமியம் ஸ்டோரி

மகசூல்

சாம்பார், அவியல், பொறியல் எனப் பல வகைகளில் சமைக்கப் பயன்படும் காய்களில் ஒன்று கத்திரிக்காய். சைவம் மற்றும் அசைவ சமையல்களில் இடம்பெறும் கத்திரிக்காய்க்கு ஆண்டு முழுவதும் சந்தை வாய்ப்பு உள்ளது. அதனால், பல விவசாயிகள் கத்திரியைத் தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராமகிருஷ்ணன். இவர் நாட்டுக் கத்திரியைத் தனிப்பயிராகச் சாகுபடி செய்து வருகிறார்.

கத்திரிக்காய்த் தோட்டம்...
கத்திரிக்காய்த் தோட்டம்...

விருதுநகர் மாவட்டம், வரலொட்டியிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேலதுலுக்கன்குளம் கிராமத்தில் உள்ளது, ராமகிருஷ்ணனின் கத்திரி வயல். கத்திரிக்காய்களைத் தரம்பிரித்துக் கொண்டிருந்த ராமகிருஷ்ணனைச் சந்தித்துப் பேசினோம்.

சந்தை விலையைவிட ஒரு ரூபா அல்லது ரெண்டு ரூபா கூடுதலாகக் கிடைக்கும். 8 மாசம் வரைகூடத் தொடர்ந்து காய்ப் பறிச்சிருக்கேன்.

“பரம்பரையா விவசாயம் செய்துகிட்டு இருக்கோம். முன்னாடி, மானாவாரியில் சிறுதானியங்களையும், இறவையில் பயறு, காய்கறிகள்னும் சாகுபடி செய்வோம். நான் 9-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திட்டு அப்பாவுடன் விவசாய வேலைக்கு வந்துட்டேன். அப்போலாம் தொழுவுரம், பிண்ணாக்கு, அடுப்புச்சாம்பல்னு தான் பயன் படுத்துவோம். பசுமைப்புரட்சிக்குப் பிறகு, அதிக மகசூல் ஆசையில் நாங்களும் ரசாயன விவசாயத்துக்கு மாறினோம். அதோட, வீரிய ரக விதைகளையும் பயன்படுத்த ஆரம்பித்தோம். ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினதில், நல்ல மகசூல் கிடைச்சது. ஒரு கட்டத்துக்குமேல அதிகளவு உரத்தையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்த வேண்டியதாயிடுச்சு. அதனால், செலவுகளும் அதிகமாயிடுச்சு. ஆனாலும் தொடர்ந்து விவசாயம் செய்திட்டுதான் இருந்தேன்.

மூணு வருஷத்துக்கு முன்ன, காரியாபட்டித் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் நடந்த இயற்கை விவசாயப் பயிற்சி வகுப்பில் கலந்துக்கிட்டேன். அப்போதான், ‘ரசாயன உரம், பூச்சிக்கொல்லியால மண்ணுக்கும் மக்களுக்கும் கேடு’னு தெரிஞ்சிக்கிட்டேன். அப்போ எனக்கு எங்க அப்பா காலத்து விவசாய முறை ஞாபகத்துக்கு வந்துச்சு. அதனால, உடனடியா இயற்கை விவசாயத்துக்கு மாறிடணும்னு முடிவு பண்ணிட்டேன்” என்று முன்கதை சொன்ன ராமகிருஷ்ணன் தொடர்ந்தார்.

கத்திரிக்காய் அறுவடையில்...
கத்திரிக்காய் அறுவடையில்...

“இயற்கைக்கு மாறியவுடன் நிலத்தை ஆறேழு முறை நல்லா உழுது, செழிம்பா தொழுவுரம் போட்டு மண்ணை வளப்படுத்தினேன். முதல்முறையா கத்திரி நடவு செஞ்சேன். உயிர் உரங்கள், பஞ்சகவ்யானு பயன்படுத்தினதுல செடிகள் செழிப்பா வளர்ந்து வந்துச்சு. காய்கள் திரட்சியாகக் காய்ச்சது. எனக்கும் ஒரு நம்பிக்கை வந்துடுச்சு. அதிலிருந்து முழுக்க இயற்கை விவசாயம்தான் செய்றேன்.

அறுவடையான கத்திரிக்காய்களுடன் ராமகிருஷ்ணன்
அறுவடையான கத்திரிக்காய்களுடன் ராமகிருஷ்ணன்

இது மொத்தம் 5 ஏக்கர், கரிசல் மண் நிலம். 30 சென்ட் நிலத்தில் சுரைக்காய்ப் பூப்பூத்த நிலையில் இருக்கு. 2 ஏக்கரில் ‘லக்னோ 49’ ரகக் கொய்யா இருக்கு. 1 ஏக்கரில் நாட்டுக் கத்திரி பறிப்பில் இருக்கு. நடவு செய்த 60-ம் நாள்ல இருந்து கத்திரி அறுவடை செய்யலாம். இயற்கை முறையில் விளைவிக்கிறதால, ரொம்ப நாள் காய்ப்பில் இருக்கும். அறுவடை ஆரம்பிச்சதிலிருந்து 8 மாசம் வரைகூடத் தொடர்ந்து காய்ப் பறிச்சிருக்கேன். இந்த வருஷம் தண்ணீர்ப் பற்றாக்குறை. அதனால, மகசூல் 1 மாசம் முன்னதாவே முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். விருதுநகர் காய்கறி மார்க்கெட்டில் நானே நேரடியாகக் கொண்டு வந்து விற்பனைக்குக் கொடுக்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘நிலத்தை ஆறேழு முறை நல்லா உழுது, செழிம்பா தொழுவுரம் போட்டு மண்ணை இயற்கை விவசாயத்துக்கு மாத்தினேன்.’’

இயற்கைக் கத்திரிங்கிறதால தனி விலையெல்லாம் கிடையாது. காய் பளபளப்பாகவும், திரட்சியாகவும் இருக்கிறதால, சந்தை விலையைவிட ஒரு ரூபா அல்லது ரெண்டு ரூபா கூடுதலாகக் கிடைக்கும்” என்ற ராமகிருஷ்ணன் கத்திரிக்காய் மூலம் எடுத்து வரும் வருமானம்குறித்து சொல்ல ஆரம்பித்தார்.

சந்தைக்குச் செல்லும் கத்திரிக்காய் மூட்டை...
சந்தைக்குச் செல்லும் கத்திரிக்காய் மூட்டை...

“4 நாளுக்கு ஒருமுறைனு இதுவரைக்கும் 20 பறிப்புகள் பறிச்சுருக்கேன். அதில் சொத்தைக் காய்கள் போக 3,104 கிலோ காய்களை விற்பனை செய்தது மூலம் 58,976 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. உழவிலிருந்து இப்போ வரைக்கும் 25,000 ரூபாய் செலவாகியிருக்கு. அதுபோக, 23,976 ரூபாய் லாபமாகக் கிடைச்சிருக்கு.

இன்னும் 35 பறிப்புகள் வரும்னு எதிர்பார்க்கிறேன். அது மூலமா, 5,250 கிலோ காய் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். இதுவரை ஒரு கிலோ கத்திரிக்குக் குறைந்தபட்சமா 18 ரூபாயும் அதிகபட்சமா 40 ரூபாயும் விலையாகக் கிடைச்சிருக்கு.

பளபளபக்கும் நாட்டுக் கத்திரி...
பளபளபக்கும் நாட்டுக் கத்திரி...

விசேஷ நாள்கள், விரத நாள்களில் நல்ல விலை கிடைக்கும். இனி பறிக்கப்போகும் 5,250 கிலோ கத்திரிக்கு… 1 கிலோவுக்கு 20 ரூபாய் விலை கிடைச்சாலே, 1,05,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் பறிப்புக் கூலி மட்டும்தான் கொடுக்க வேண்டியிருக்கும். அதுபோக எப்படியும் 75,000 ரூபாய்க்கு மேல லாபமாகக் கிடைக்கும். எப்படிப்பார்த்தாலும் 1 ஏக்கர் கத்திரி மூலமா 1 போகத்தில் 1,00,000 ரூபாய் லாபம் கிடைச்சிடும்” என்று சொல்லிவிட்டுக் கத்திரிக்காய்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல ஆயத்தமானார்.

தொடர்புக்கு ராமகிருஷ்ணன், செல்போன்: 95977 16650.

3 அடி இடைவெளி!

1 ஏக்கர் பரப்பில் நாட்டுக் கத்திரிச் சாகுபடி செய்யும் விதம்குறித்து ராமகிருஷ்ணன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…

‘கத்திரிக்குக் காலமில்லை’ என்று சொன்னாலும், ஆடி, கார்த்திகை, தை, சித்திரை ஆகிய பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த 1 ஏக்கர் நிலத்தில் ஓர் உழவு செய்து 20 நாள்கள் காயவிட வேண்டும். பிறகு 10 நாள்களுக்கு ஒருமுறை என 4 உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன் 4 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி உழ வேண்டும். பிறகு 100 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு, 50 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து நிலத்தில் தூவ வேண்டும். பிறகு 5 அடி அகலம், 5 அடி நீளத்துக்கு பாத்தி அமைத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டு நாள்கள் கழித்து நிலத்தை ஈரப்படுத்தி, பஞ்சகவ்யா கரைசலில் விதைநேர்த்தி செய்யப்பட்ட கத்திரி நாற்றுகளை, 3 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். 1 ஏக்கர் பரப்பில் 4,800 நாற்றுகள் வரை நடவு செய்யலாம். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும்.

நடவு செய்த 20-ம் நாளிலிருந்து… 10 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து கைதெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். 20 மற்றும் 40-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். 35-ம் நாளுக்கு மேல் பூக்கள் பூக்கும். அந்தச் சமயத்தில், பூச்சித் தாக்குதல் வரலாம். அதனால், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி என்ற விகிதத்தில் கலந்து வாரம் ஒருமுறை தெளித்து வர வேண்டும். 40-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற விகிதத்தில் தேமோர்க்கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், பூக்கள் உதிராமல் இருக்கும். 45-ம் நாளுக்கு மேல் காய்கள் தென்படும். 60-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம்.

அறுவடை தொடங்கிய 80 நாள்களுக்குப் பிறகு… அதிகமாகக் காய்க்கும் செடிகளில் உள்ள திரட்சியான காய்களை அப்படியே செடியிலேயே பழுக்க விட வேண்டும். பிறகு அவற்றைப் பறித்துத் தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் இட்டுப் பிழிந்தால் விதைகள் வெளிவரும். பாத்திரத்தின் அடியில் தேங்கும் விதைகளை மட்டும் எடுத்து நிழலில் ஒருநாள் முழுவதும் உலர்த்திப் பத்திரப்படுத்தி 50 நாள்கள் விதை உறக்கத்தில் வைக்க வேண்டும். அடுத்த போக விதைப்புக்கு இவ்விதைகளைப் பயன்படுத்தலாம்.

நாற்று உற்பத்தி

1 ஏக்கர் விதைப்புக்கு 2 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். அரை அடி இடைவெளியில் 2 அடி அகலத்தில் மேட்டுப்பாத்தி அமைத்துக்கொள்ள வேண்டும். 250 கிராம் நாட்டுக்கத்திரி விதையுடன் 100 கிராம் சூடோமோனஸைக் கலந்து மேட்டுப்பாத்தியில் தூவி விதைத்து மணலைத் தூவிவிட வேண்டும். தொடர்ந்து பூவாளி மூலம் தண்ணீர் தெளித்து வந்தால், 5-ம் நாளுக்கு மேல் முளைப்பு எடுக்கும். 25 முதல் 30 நாள்களுக்குள் நாற்றுகளைப் பறித்து வயலில் நடவு செய்துவிட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு