Published:Updated:

180 ரகங்கள்... இந்தியா முழுவதும் விற்பனை நாட்டு ரகங்களைப் பரவலாக்கும் சகஜா!

விதை
பிரீமியம் ஸ்டோரி
News
விதை

விதை

விதைகள்தான் விவசாயத்தின் உயிர்நாடி; விதையில்லையேல் விவசாயம் இல்லை. இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் பல அமைப்புகள், அதனுடன் நாட்டு ரக விதைகளையும் விவசாயிகளிடையே பரப்புவதை ஒரு முக்கியப் பணியாகச் செய்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் எந்த மூலையிலிருந்து விதைகள் கேட்டாலும் உடனடியாக அனுப்பி நாட்டு ரக விதைகளைப் பரப்பி வருகின்றன சகஜா சம்ருதா மற்றும் சகஜா சீட்ஸ். இந்த அமைப்புகள் தொடங்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் இந்த அமைப்புகளின் நிறுவனர் கிருஷ்ண பிரசாத். ஆரம்பக் காலங்களில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து பயணப்பட்டவர். கலந்துரையாடியவர். அவரைக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தியவர்.ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் சகஜா சீட்ஸ் அமைப்பின் அலுவலகம் கர்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள வி.வி.மொகல்லா பகுதியில் அமைந்துள்ளது.

முதலில் நம்மாழ்வார் உடனான அனுபவங்களைப் பற்றி பேசிய கிருஷ்ண பிரசாத், “நான் ஆந்திர மாநிலத்தின் ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவன். என்னுடைய சகோதரர் விவசாயச் சங்கத் தலைவர். சுற்றுச்சூழல் சார்ந்த பொறியியல் படிப்பைப் படித்தேன். 1995-96 காலகட்டங்களில் ஆரோவில்லில் உள்ள பெர்னார்டு அவர்களிடம் இயற்கை விவசாயப் பயிற்சி பெற்றேன். அங்கேதான் நம்மாழ்வார் ஐயா அறிமுகமானார். அப்போது நம்மாழ்வாரும் அங்கே ஒரு பயிற்சியாளராக இருந்தார். நம்மாழ்வாரிடம் பேசியபோதுதான் பசுமைப் புரட்சியின் கறுப்புப் பக்கங்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

கிருஷ்ண பிரசாத்
கிருஷ்ண பிரசாத்

வனஜா ராம்பிரசாத்தின் ‘கிரீன் பவுண்டேஷன்’ மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் ‘பல்லுயிரினப்பெருக்க மையம்’ செயல்பட்டு வந்தது. அங்கே நம்மாழ்வார் ஐயா அடிக்கடி வந்து பேசுவார். நான் அந்த அமைப்பில் மேலாளராக இருந்தேன். அப்போது அவர் பேசியது இப்போதும் நினைவிலிருக்கிறது. ‘நம்ம விஞ்ஞானிகள் எந்த அளவுக்கு அறியாமையிலிருக்காங்கங்கறதுக்கு ஒரு விஷயம் சொல்றேன். மாட்டிலிருந்து சிறுநீரைச் சேகரிக்கிறது எப்படினு விஞ்ஞானிகள் பல விஷயங்கள பரிந்துரைக்கிறாங்க. மாட்டை எழுப்பினா சிறுநீர் கழியும்ங்குற விஷயம் எல்லாருக்கும் தெரியும். அப்போது பாத்திரங்களைக் கொண்டு மாட்டுச் சிறுநீரை எளிதாக சேமிக்கலாம். இது தெரியாம மாட்டுச் சிறுநீரைச் சேகரிக்கிறதுக்கு பெரிய பெரிய கட்டட அமைப்புகளை உருவாக்கச் சொல்றாங்க விஞ்ஞானிகள்’ என்றார்.

பருத்தி
பருத்தி

2005-06 காலகட்டத்தில் நமது நெல்லை காப்போம் விழிப்புணர்வு பிரசாரம் (Save Our Rice Campaign) நடைபெற்றது. கேரளாவில் தணல், கர்நாடகாவில் சகஜ சம்ருதா, தமிழ்நாட்டில் கிரியேட் என்று பல அமைப்புகள் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்துகொண்டன. இந்த பிரசாரத்தில் ஐயாவோடு கலந்துகொண்டேன். இதன்மூலம் கர்நாடகாவில் ரத்தினச் சூடி உள்ளிட்ட சில பாரம்பர்ய நெல் ரகங்கள் மீட்கப்பட்டன.

சகஜ சம்ருதா பத்தாம் ஆண்டு விழாவில் நம்மாழ்வார்
சகஜ சம்ருதா பத்தாம் ஆண்டு விழாவில் நம்மாழ்வார்

2011-ம் ஆண்டு, மார்ச் மாதம் சகஜ சம்ருதா அமைப்பின் 10-ம் ஆண்டு விழா பெங்களூரில் நடைபெற்றது. சகஜ சம்ருதாவும், ‘பெங்களூர் கிட்னி பவுண்டேஷன்’ அமைப்பும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. இந்த நிகழ்ச்சி பெங்களூருக்கு அருகிலிருக்கும் டாக்டர் வெங்கடேஷ் பண்ணையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் இன்றும் பெங்களூரைச் சுற்றி இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள். அந்தக் கருத்தரங்கில் பேசிய நம்மாழ்வார், ‘இயற்கை வேளாண்மைக்கு அடிப்படை மண்தான். ஆனா, அதற்கு மண் பரிசோதனை செய்து பயிர் வைக்க வேண்டிய அவசியமில்லை. எந்த மண்ணிலும் பயிர் விளையும். அந்த மண்ணுக்கு வேண்டியவற்றைச் செய்தால் போதும்’ என்று பல விஷயங்களைப் பேசினார். இயற்கை விவசாயம், பாரம்பர்ய விதைகள், நம்முடைய மண், பசுமைப் புரட்சியின் தீய விளைவுகள் ஆகியவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ள அவர் உதவியிருக்கிறார். எங்கள் அமைப்புகளின் செயல்பாடுகளுக்குத் தூண்டுகோலாகவும் இருந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு ஒரு நம்மாழ்வார் மாதிரி, கர்நாடகாவுக்கு ஒரு நம்மாழ்வார் இருந்திருந்தால் இங்கேயும் இயற்கை விவசாயம், இன்னும் ஒரு படி மேலே சென்றிருக்கும்” என்றவர் நாட்டு ரக விதைகள் பற்றி பேசினார்.

கீரை வகைகள்
கீரை வகைகள்


“இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் விற்கும் உயர் விளைச்சல் (ஹைபிரிட்) மற்றும் மரபணு மாற்று விதைகளை வாங்கி விதைத்தால், அதை மறு சாகுபடிக்குப் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு முறையும் அந்த விதைகளை வாங்கித்தான் பயிர் வைக்க முடியும். இந்த விதைகள், தொடர்ந்து வாங்கும் விவசாயிகளுக்கு மறைமுகமாக ஒரு நெருக்கடியைக் கொடுக்கின்றன. இதைத்தவிரப் பன்னாட்டு நிறுவனங்களின் விதைகள் இந்தியாவின் உயிர்ச்சூழலையும், விதை பன்முகத்தன்மையையும் அழியும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டன. ஆனால், நாட்டு விதைகள் அப்படியில்லை. ஒவ்வொரு முறையும் விதைகளை வாங்க வேண்டிய அவசியமில்லை. ஒருமுறை உற்பத்தி செய்து வைத்துக் கொண்டால் பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம்” என்றவர் தன்னுடைய அமைப்பைப் பற்றி பேசினார்.

கிழங்குகளுடன்
கிழங்குகளுடன்
நாட்டு ரகங்கள்
நாட்டு ரகங்கள்

“பன்னாட்டு விதைகளின் பயன்பாட்டைக் குறைத்து, நாட்டு ரக விதைகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் 2000-ம் ஆண்டு ‘சகஜ சம்ருதா’ என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் இயற்கை விவசாயம், பாரம்பர்ய விதைகளைப் பரப்புதல், மரபணு மாற்று பயிர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தல் என்று செயல்பட்டு வந்தோம். அப்போதே நாட்டு விதைகளைச் சேகரித்து வரும் பலரை எங்கள் அமைப்பில் இணைத்தோம். அவர்களைக் கொண்டு நாட்டு ரக விதைகளின் அவசியத்தை விவசாயிகளிடம் பரப்பி வந்தோம். பல பயிற்சி பட்டறைகளையும் நடத்தினோம்.

மக்காச்சோள ரகங்கள்
மக்காச்சோள ரகங்கள்


வெறும் பயிற்சிகள், பிரசாரம் மட்டும் பயன்படாது. இதை ஆக்கப்பூர்வமான ஓர் அமைப்பாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று நோக்கில் கர்நாடகாவிலேயே முதன் முறையாக 2009-ம் ஆண்டு, ‘சகஜ சம்ருதா ஆர்கானிக் புரொடியூசர் கம்பெனி’(Sahaja Organics)யைத் தொடங்கினோம். கர்நாடகாவில் இயற்கை விவசாய விளைபொருள்களுக்கு ‘மார்க்கெட்’ இல்லாமல் இருந்தது. இதன்மூலம் இயற்கை விவசாய விளைபொருள்களுக்கு எளிதாக அனைவருக்கும் கிடைக்க வழிவகைச் செய்தோம். பெங்களூரு மட்டுமே அறிந்திருந்த இயற்கை விவசாய உணவுப் பொருள்களை ஷிமோகா, தார்வாட் எனப் பிற மாவட்டங்களுக்கும் அறிமுகப்படுத்தி விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தினோம். நிறைய விதைக் கண்காட்சிகள், உணவுத் திருவிழாக்களை மக்கள் பங்கேற்புடன் நடத்தினோம்.

வேளாண்மைத் துறை மூலம் வழக்கமாகப் பல்கலைக்கழகங்களின் ரகங்கள்தான் விற்பனைக்குக் கிடைக்கும். இப்போது நாட்டு ரகங்களும் எங்களிடம் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.


பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் விதைகள் எப்படித் தரத்தை முன்னிறுத்தி விற்பனை செய்கிறதோ, அதே போன்று நாட்டு ரக விதைகளையும் தரத்தோடு உற்பத்தி செய்து வழங்க நினைத்தோம். இதை விவசாயிகளே நடத்தும் விதமாக 2014-ம் ஆண்டு ‘தேசி சீட் புரொடியூசர்ஸ் கம்பெனி லிமிடெட்’டை (Desi Seed Producers Company Limited-Sahaja Seeds) ‘சகஜா சீட்ஸ்’ என்ற பெயரில் தொடங்கினோம். இந்த நிறுவனத்தில் சுமார் 500 விவசாயிகளை இணைத்தோம். மாநிலம் முழுவதும் 4 விதை கொள்முதல் நிலையங்களை அமைத்தோம்.

மஞ்சள் ரகங்கள்
மஞ்சள் ரகங்கள்
மக்காச்சோள ரகங்கள்
மக்காச்சோள ரகங்கள்

ஏற்கெனவே சகஜ சம்ருதா அமைப்பின் நெல், காய்கறிகள், சிறுதானியங்கள் என்று பல ரகங்களை இந்தியா முழுவதுமிருந்து பல விவசாயிகளிடம் சேகரித்து வைத்திருந்தோம். அந்த விதைகளை விவசாயிகளிடம் கொடுத்து தரமான விதைகளை எப்படிச் சாகுபடி செய்ய வேண்டும் என்பதற்கான பயிற்சிகளை வழங்கி சாகுபடி செய்யச் சொன்னோம். நாங்கள் கொடுத்த விதைகளைத் தவிர, விவசாயிகளிடம் இருக்கும் நாட்டு ரகங்களையும் சாகுபடி செய்யச் சொன்னோம். இப்படிப் பெருக்கிய விதைகளை இன்று இந்தியா முழுவதும் நாட்டு ரக விதைகளைச் சாகுபடி செய்ய விரும்புகிறவர்களுக்கு அனுப்பி வருகிறோம். குறிப்பாக மாடித்தோட்டங்கள் இன்று அதிகம் கவனம் பெற்று வருகின்றன. இதற்கு நாட்டு ரக விதைகள் பெருமளவில் கைகொடுத்து வருகின்றன.

கர்நாடக மாநிலத்தின் வேளாண்மைத் துறை மூலம் வழக்கமாகப் பல்கலைக்கழகங்களின் ரகங்கள்தான் விற்பனைக்குக் கிடைக்கும். இப்போது நாட்டு ரகங்களும் எங்களிடம் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எங்களுடன் நேரடி தொடர்பில் உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் விதைகளை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்” என்றவர் கம்பெனியின் பணிகளை மேற்கொள்ளும் சையது ஜமால், மனுகுமார் ஆகியோரை அறிமுகப்படுத்தினார். அவர்கள் பேசியபோது,

சையது ஜமால், மனுகுமார்
சையது ஜமால், மனுகுமார்

“நெல், காய்கறிகள், சிறுதானியங்கள் என்று மொத்தம் 180 ரகங்களை உற்பத்தி செய்கிறோம். இவற்றில் காய்கறிகளில் மட்டும் 120 ரகங்கள் இருக்கின்றன. 22 தக்காளி ரகங்கள், 9 பீன்ஸ் ரகங்கள், 7 கத்திரிக்காய் ரகங்கள், 5 மிளகாய் ரகங்கள், 4 கேரட் ரகங்கள் எனப் பல ரகக் காய்கறிகளும் இதில் அடக்கம். நெல்லில் நவரா, சின்னப் பொன்னி, சேலம் சன்னா, கெம்பு சன்னா, கந்தகசாலா, சித்த சன்னா, பர்மா ‘பிளாக்’ ஆகிய ரகங்களை விவசாயிகள் அதிகம் விரும்புகிறார்கள். ஒவ்வொரு வருஷமும் விதைத் திருவிழா, கிழங்கு மேளா, பலாப்பழ விழா நடத்துகிறோம். அதன்மூலம் பொதுமக்களுக்கும் பாரம்பர்ய விதைகள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த நிறுவனத்துக்கு விவசாயிகள்தான் உரிமையாளர்கள். நாங்கள் அலுவலகம் சார்ந்த பணிகளைச் செய்கிறோம்” என்றனர்.

சுரைக்காய் ரகங்கள்
சுரைக்காய் ரகங்கள்

நிறைவாகப் பேசிய கிருஷ்ணபிரசாத், “விவசாயிகளுக்கு நாட்டு ரக விதைகளைக் கொடுப்பதோடு அவர்களுக்கு இயற்கை விவசாயப் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்கிறோம். அதை ‘சகஜ சம்ருதா’ அமைப்பின் மூலமாக மேற்கெண்டு வருகிறோம். இதுவரை கர்நாடகா, ஆந்திரா என இந்தியா முழுவதும் 10,000 விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றியிருக்கிறோம். நாட்டு ரகங்களை உற்பத்தி செய்யும் 5,000 விவசாயிகள் தொடர்பில் இருக்கிறார்கள். நாட்டு ரக விதைகள் பரவலாக வேண்டும். அதுவே எங்கள் நோக்கம்” என்று விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,

கிருஷ்ண பிரசாத், நிறுவனர்,

சகஜா சீட்ஸ். செல்போன்: 98808 62058

Sahaja Seeds, #38, 1St Cross, Adipampa Rd, Vani Vilas Mohalla, Mysuru, Karnataka 570002. Cell: 070900 09911

சையது கனி கான்
சையது கனி கான்

பாரம்பர்ய நெல் பரவலாக்கம்

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், கிரகவலு கிராமத்தைச் சேர்ந்த பாரம்பர்ய நெல் சேகரிப்பாளரான சையது கனி கானிடம் பேசினோம். “என்னிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சேகரித்த விதைகள். இதற்குத் தூண்டுகோலாக இருந்தது ‘நமது நெல்லை காப்போம்’ என்ற பிரசாரப் பயணம். இந்தப் பயணத்தில் நம்மாழ்வாரோடு சேர்ந்து பயணித்திருக்கிறேன். அதன்பிறகு ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பாரம்பர்ய நெல் விதைகள், நாட்டுக் காய்கறி விதைகள் சென்றடைய செயல்பட்டிருக்கிறோம். இன்றைய உணவில் ‘ஆர்கானிக்’ உணவுப் பொருள்கள் முக்கியத்துவம் பெறுவதற்கு நாட்டு ரகங்கள் பெரும் பங்காற்றியிருக்கின்றன. ‘சகஜா ஆர்கானிக்ஸ்’ அமைப்போடு இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அடுத்து நாட்டு மரக்கன்றுகள், பழக்கன்றுகள் கொடுக்கும் முயற்சியில் இருக்கிறோம்’’ என்றார்.

சுப்ரீத்
சுப்ரீத்

சகஜா சீட்ஸ் அமைப்புக்கு மாநிலம் முழுவதும் விவசாயிகள் விதைகளை உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். அவர்களில் ஒருவரான மைசூரு மாவட்டம், அடுகூர் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுப்ரீத்திடம் பேசினோம். “பாரம்பர்ய ரகங்கள் விதை உற்பத்திக்காகவே மாங்காய் இஞ்சி, நீல இஞ்சி, கறுப்பு இஞ்சி, வெள்ளை இஞ்சி, ரிகோடி இஞ்சி, ஹிமாச்சல் இஞ்சி, மாறன் இஞ்சி என்று 7 வகையான இஞ்சி ரகங்களைச் சாகுபடி செய்திருக்கிறேன். அதே போன்று மஞ்சளில் கறுப்பு மஞ்சள், வெள்ளை மஞ்சள், சிவப்பு மஞ்சள், நீல மஞ்சள், பிரதீபா மஞ்சள் என்று 5 ரக மஞ்சள் ரகங்களைச் சாகுபடி செய்து வருகிறேன். இதைத்தவிர ஒவ்வொரு ஆண்டும் கிழங்குகளுக்கான மேளா நடைபெறும் அதற்காகச் சிங்க கால் கிழங்கு, நாய்வால் கிழங்கு என்று சுமார் 60 கிழங்கு ரகங்களைத் தோட்டம் முழுவதும் ஆங்காங்கே சாகுபடி செய்து வருகிறேன். என்னிடம் இருக்கும் விதைகளைச் சகஜா சீட்ஸ் அமைப்புக்குக் கொடுப்பேன். அவர்களிடமிருந்தும் வாங்கிக் கொள்வேன்” என்றார்.