தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் இந்தக் காலகட்டத்திலும் பலரும் பாரம்பர்ய விவசாயத்தைப் பின்பற்றி, இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். பண்டைய காலத்தைப் போலவே தற்சார்பை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளனர். மாடித்தோட்டத்தில் ஆரம்பித்து, ஆடு-மாடு வளர்ப்பு, சிறு தோட்டம், பண்ணையம் என விவசாயிகள் இயற்கையோடு ஒன்றிணையத் தொடங்கியுள்ளனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இயற்கை விவசாயம் செய்வதற்கு ஆர்வம் இருந்தாலும், அதைப் பற்றிய விழிப்புணர்வின்றி இருக்கும் பலருக்கும் வழிகாட்டியாகவும், பாரம்பர்ய விதைகளைப் பற்றி எடுத்துரைக்கும் வகையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பர்ய விதைகள் திருவிழா மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், கண்காட்சியுடன் கூடிய `பாரம்பர்ய விதைகள் மற்றும் உணவுத் திருவிழா' கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று `பசுமை இயற்கை விவசாய இயக்கம்' ஏற்பாட்டில் விழுப்புரத்தில் நடத்தப்பட்டது.
நூற்றுக்கணக்கான நெல் வகைகள், காய்கறிகள், விதைகள், கைவினைப் பொருள்கள், இயற்கை தேன் போன்ற பொருள்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.
பசுமை இயற்கை விவசாய இயக்கத்தைச் சேர்ந்த பாண்டியனிடம் பேசினோம். ``தற்போது மூன்றாம் ஆண்டு விதைத் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள நிறைய நெல் ரகங்களைக் காட்சிப்படுத்தியுள்ளோம். மாப்பிள்ளை சம்பா, கறுப்புக் கவுனி, வாசனை சீரகச் சம்பா, நவரா, பூங்கா போன்ற 30 பாரம்பர்ய நெல் வகைகளை விவசாயிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

இயற்கை விவசாயம் செய்வதற்கு ஆர்வம் உள்ள பல விவசாயிகள் நெல் விதைகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த முறை வாசனை சீரகச் சம்பா அதிக அளவில் விற்பனையாகியுள்ளது. பல அரிசி வகைகளும் வந்துள்ளன. இவை மட்டுமன்றி நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி விதைகளும், கீரை விதைகளும், தேன் போன்றவையும் விற்பனையாகின்றன. 15 வகைக்கும் மேலான சுரக்காய் வகைகளையும் காட்சிப்படுத்தியுள்ளோம். இங்கு வரும் பலரும் அதை ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
விவசாயிகள், அவர்களாகவே உற்பத்தி செய்த விதைகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர். சுமார் ஆறு மாவட்டத்தைச் சேர்ந்த பல விவசாயிகளும் இங்கு ஸ்டால் அமைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், பாண்டிச்சேரியிலிருந்தும் அதிகமானோர் நேரில் வந்து இந்தத் திருவிழாவைக் கண்டுகளித்து செல்கின்றனர். சென்னையில் இருந்தும் ஒரு சிலர் வந்திருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இயற்கை முறையில் விளைந்த பொருள்கள் மூலம் உணவுகளையும் சமைத்து விருந்து கொடுத்து வருகிறோம். முதல் வருடம் நடத்தப்பட்ட விதைத் திருவிழாவைப் பார்க்க வந்த சிலர், இப்போ இயற்கை விவசாயிகளாக மாறியிருப்பதோடு அவர்கள் விளைவித்த பொருள்களைக் கொண்டு இங்கு ஸ்டால் போட்டு காட்சிப்படுத்தியுள்ளனர். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விழாவின் நோக்கம் என்னவென்றால், அனைவருக்கும் நஞ்சில்லா நீர், உணவு தர வேண்டும் என்பதுதான்.

நஞ்சில்லா உணவு தர வேண்டுமென்றால் நல்ல விதை அவசியமானது. நம்மாழ்வாரும் விதைகளின் முக்கியத்துவம் குறித்து பல முறை பேசியிருக்கிறார். அதன்படி பாரம்பர்ய விதைகளை மற்ற விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கும் முயற்சியாகத்தான் இந்த விதை திருவிழா நடந்து வருகிறது. கொரோனா காலமென்பதால் கருத்தரங்கம் மட்டும் நடத்த முடியவில்லை" என்றார்.