Published:Updated:

கால்நடைகளில் வேகமாகப் பரவும் கோமாரி நோய்; இயற்கை முறையில் எளிய தீர்வுகள் இதோ!

2013-ம் ஆண்டு தாக்கிய கோமாரி நோய்க்கு பல மாடுகள் பலியாகின. அப்போது இயற்கை முறையில் குணப்படுத்த பின்வரும் முறைகள் பரிந்துரைக்கப்பட்டு பல மாடுகள் காப்பாற்றப்பட்டன. அவற்றை இங்கு காண்போம்.

மிழகத்தில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கோமாரி நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதை இயற்கை முறையிலேயே கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் எளிய முறைகள் இருக்கின்றன. 2013-ம் ஆண்டு தாக்கிய கோமாரி நோய்க்கு பல மாடுகள் பலியாகின. அப்போது இயற்கை முறையில் குணப்படுத்த பின்வரும் முறைகள் பரிந்துரைக்கப்பட்டு பல மாடுகள் காப்பாற்றப்பட்டன.

இந்த எளிய இயற்கை மருத்துவ முறைகளைப் பரிந்துரைத்தவர் தஞ்சாவூரில் உள்ள மரபுசார் மூலிகை வழி கால்நடை ஆராய்ச்சி மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் முனைவர் புண்ணியமூர்த்தி. அவற்றை இங்கு காண்போம்.

மாடுகள்
மாடுகள்

காற்றில் பரவும் கோமாரி

``பருவநிலை மாறுகிற காலங்களில் வைரஸ் கிருமிகள் பரவுவதால்தான் பல தொற்றுநோய்கள் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் வருகின்றன. குறிப்பாக, வெயில் காலத்திலிருந்து மழைக்காலமாக மாறும்போது, பாதிப்பு அதிகமாக இருக்கும். இயற்கையிலேயே இதுபோன்ற சுழற்சி இருக்கிறது. கால்நடைகள், பெரும்பாலும் வெட்டவெளியிலேயே இருப்பதால், எளிதில் பாதிப்புக்குள்ளாகின்றன. கோமாரி நோயும் வைரஸால் பரவும் தொற்றுநோய்தான். இந்த வைரஸ் கிருமிகள், காற்றின் வழியாக நீண்ட தொலைவுக்குப் பரவக்கூடியவை.

தடுப்பூசி அவசியம்!

கோமாரி நோய் கண்ட மாடுகளுக்கு, வாயின் மேல்புறம், மூக்குத் துவாரம், நாக்கு, நகங்களுக்கு இடைப்பட்ட பகுதி ஆகியவற்றில் புண்கள் வரும். சரியாகத் தீவனம் எடுக்காது. வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டேயிருக்கும். பிறகு, காய்ச்சல் வரும். இந்த அறிகுறிகள் இருந்து, இரண்டு நாட்கள் கவனிக்காமல் விட்டால் கூட, மாடுகள் இறந்துவிடும். இதுபோன்ற நோய் பரவும் காலங்களில் நோய் வருகிறதோ, இல்லையோ... தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. அப்படியே போடாவிட்டாலும் பரவாயில்லை. இயற்கைத் தடுப்பு முறைகளை சரியாக செய்தால்கூட போதுமானது.

மாடுகள்
மாடுகள்

பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகே, செலவில்லாத இந்த இயற்கை மூலிகை மருத்துவத்தை சொல்லிக் கொடுத்து வருகிறோம். இதற்கு அதிகம் சிரமப்படத் தேவையில்லை. வீட்டுச் சமையலறையில் இருக்கும் 10 பொருட்கள், தோட்டம், வயல்களில் இருக்கும் 10 தாவரங்கள் இவையே போதுமானவை. இவற்றை வைத்தே மழைக்கால கோமாரி நோயை எளிதாக குணப்படுத்தி விடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோமாரி வாய்ப்புண்

தலா 10 கிராம் சீரகம், வெந்தயம், மிளகு ஆகியவற்றை எடுத்து, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு, மிக்ஸி அல்லது அம்மியில் அரைக்க வேண்டும். கூடவே,

பூண்டு - 4 பல்,

மஞ்சள் தூள் - 10 கிராம் (2 ஸ்பூன்),

வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை - 30 கிராம்

ஆகியவற்றைக் கலந்து, மீண்டும் அரைக்க வேண்டும். இந்தக் கலவையுடன் அரை மூடி தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பிசைந்து, மூன்று விரல்களில் எடுத்து, மாட்டின் கடவாய்ப் பகுதியில் வைத்து, வாயின் மேல்பாகத்தைப் பூசுவதுபோல் கையை வெளியில் எடுக்க வேண்டும். மாட்டுக்கு மேல்வாயின் முன்பகுதியில் பற்கள் இருக்காது. அதனால் கடித்து விடும் என்று பயப்படத் தேவையில்லை. இது ஒருவேளைக்கான அளவு. இதுமாதிரி தினமும் 3 வேளை, அதிகபட்சம் 5 நாட்களுக்குக் கொடுத்து வந்தால், வாய்ப்புண் இருக்கும் இடமே தெரியாமல் ஓடிவிடும்.

மாடுகள்
மாடுகள்
`ரேஷனில் பனைவெல்லம்; கூடவே இதையும் செய்யுங்கள் முதல்வரே!' - விவசாயிகள் கோரிக்கை

கோமாரி கால் புண்

250 மி.லி நல்லெண்ணெயில், பூண்டு-4 பல், மஞ்சள் தூள்-2 ஸ்பூன், வேம்பு, துளசி, குப்பைமேனி, மருதாணி இலைகள் தலா 1 கைப்பிடி போட்டு, 10 நிமிடங்கள் சூடு படுத்தி... கொஞ்சம் ஆற வைத்து, லேசான சூட்டில் நூல் துணி அல்லது பஞ்சில் நனைத்து, மாட்டின் கால் நகங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள புண், புழுக்களை சுத்தம் செய்ய வேண்டும். இந்த எண்ணெயை புண் மீது படும்படி மேற்புறமும், கீழ்புறமும் தாராளமாகவிட வேண்டும். பாதிக்கப்பட்ட கால் தவிர மற்ற கால்களுக்கும் இவ்வாறு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், கால்புண் ஆறிவிடும்.

கோமாரிக் காய்ச்சல்

கோமாரி நோயுடன் காய்ச்சலும் இருந்தால்... வெற்றிலை-4, சீரகம், மிளகு, தனியா விதை ஆகியவற்றில் தலா 5 கிராம், சின்ன வெங்காயம்-3, முருங்கை இலை-1 கைப்பிடி, நிலவேம்பு இலை-10 அல்லது 5 கிராம் நிலவேம்புப் பொடி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, நாக்கில் தடவிவிட வேண்டும்.

புண்ணியமூர்த்தி
புண்ணியமூர்த்தி
உடையும் தறுவாயில் தடுப்பணை: `அதிகமாக மணல் அள்ளப்பட்டதே காரணம்!' - விவசாயிகள் வேதனை

இது ஒரு வேளைக்குரிய அளவு. இதுபோல ஒரு நாளைக்கு 5 முறை கொடுக்க வேண்டும். மேற்சொன்ன அளவுகள் ஒரு மாட்டுக்கானவை. இந்த அளவு மருந்தை, ஆறு ஆடுகளுக்குக் கொடுக்கலாம்.

தொடர்புக்கு:

மரபுசார் மூலிகைவழி கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தஞ்சாவூர். தொலைபேசி: 04362 204009.

முனைவர் புண்ணியமூர்த்தி, செல்போன்: 98424 55833

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு