Published:Updated:

பம்ப்செட் குளியல்... நிலாச்சோறு... மண் குளியல்... சடுகுடு!

பசுமை சூழ்ந்த பண்ணை
பிரீமியம் ஸ்டோரி
பசுமை சூழ்ந்த பண்ணை

கிராமியச் சூழலில் இயற்கை வாழ்வியல் பயிற்சி மையம்!

பம்ப்செட் குளியல்... நிலாச்சோறு... மண் குளியல்... சடுகுடு!

கிராமியச் சூழலில் இயற்கை வாழ்வியல் பயிற்சி மையம்!

Published:Updated:
பசுமை சூழ்ந்த பண்ணை
பிரீமியம் ஸ்டோரி
பசுமை சூழ்ந்த பண்ணை

இயற்கை

‘பசி வந்தா குருவி முட்டை

தண்ணிக்கு தேவன் குட்டை

பறிப்போமே சோளத்தட்டை

புழுதி தான் நம்ம சட்டை...’

(வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடி...)
என்ற கவிஞர் நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு ஏற்ப 90-களில் ரசித்துச் சாப்பிட்ட தின்பண்டங்கள், குதூகலமாக விளையாடிய விளையாட்டுகள், ஆசை ஆசையாக நட்டு வைத்த செடிகள், பாசமாக வளர்த்த கால்நடைகள் என இயற்கையோடு ஒன்றிய வாழ்வியல் முறைகள் இன்றைக்கும் பலருக்குப் பசுமை நிறைந்த நினைவுகளாக இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், இன்றைய ‘பாஸ்ட் புட்’ காலத்தில் அவை அனைத்தும் தொலைந்து, இயந்திர வாழ்க்கைக்குள் சுருங்கிவிட்டன இன்றைய தலைமுறை. நாம் ரசித்து அனுபவித்ததை நம் குழந்தைகளும் அனுபவித்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் இருக்கிறது.

பசுமை சூழ்ந்த பண்ணை
பசுமை சூழ்ந்த பண்ணை

அந்த விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறார் சேலத்தைச் சேர்ந்த இளைஞர் அருள் பரமசிவம். சேலத்தை அடுத்த ஏற்காடு மலை அடிவாரத்தில் இயற்கை சூழ்ந்த எழில் கொஞ்சும் பகுதியான கன்னங்குறிச்சி தாமரை நகரில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் ‘பசுமையை நோக்கிய பயணம்’ (ஜீ 2 நர்சரி) என்ற பெயரில் ஓர் இயற்கை வாழ்வியல் பயிற்சி மையத்தை உருவாக்கி இருக்கிறார்.

அருள் பரமசிவம்
அருள் பரமசிவம்

அந்த மையத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக லேசான தூறல் இருந்த ஒரு மதிய வேளையில் அங்கு சென்றோம். சுற்றிலும் நெல் வயல்கள், உயர்ந்த மலைகள், மரங்கள் அடர்ந்த நிலங்கள் என்று அந்தப் பகுதியே இடமே ரம்மியமாக இருந்தது. இயற்கை வாழ்வியல் மையத்தின் உள்ளே ஓலைக் குடில்கள், ஆடு, மாடு, குதிரை, கழுதை, நாய், முயல், கோழி, புறா போன்ற வளர்ப்புப் பிராணிகள் இருந்தன. பயணிக்க மாட்டு வண்டி, குதிரை வண்டி, ராட்டினம், பல்லாங்குழி, பம்பரம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், மண் குளியல், தொட்டிக் குளியல் எனப் பல வகையான மரபு சார் விளையாட்டுகள் விளையாடும் இடமாகவும் காட்சியளித்தது.

பள்ளி மாணவர்கள் வருகை
பள்ளி மாணவர்கள் வருகை

பயிற்சி, அனுமதி இலவசம்

நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைகள் நிறைந்த மூலிகைத் தோட்டம், இயற்கை விவசாயம், மாடித்தோட்டப் பயிற்சி மையம், இயற்கை விவசாயம் எனப் பசுமை நிறைந்த பழைய கிராமிய வாழ்விடத்துக்குச் சென்ற உணர்வு ஏற்படுகிறது. மையத்தைப் பார்வையிடவும், பயிற்சி பெறவும் கட்டணம் வசூலிப்பதில்லை. இங்கு நிகழ்ச்சிகள் நடத்தக் குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது ஒரு கலாசார மையமாகவும் திகழ்கிறது.

மாடித்தோட்டப் பயிற்சி
மாடித்தோட்டப் பயிற்சி

இயற்கை வாழ்வியல் மையத்தைப் பற்றி நம்மிடம் விளக்கினார் அருள் பரமசிவம், ‘‘எங்க அப்பா பரமசிவம், அம்மா ரேவதி. என் மனைவி ஜெயந்தி. எங்களுக்கு ராஜா, ராணினு ரெண்டு குழந்தைகள். நாங்கள் கன்னங்குறிச்சியில வசிக்கிறோம். இது எங்க பூர்வீக நிலம். நான் படிப்பை முடிச்சுட்டு எலெக்ட்ரிக்கல் வேலை பார்த்தேன். பிறகு, விவசாயத்துக்கு வந்துட்டேன். விவசாயம் பார்த்துக்கிட்டு பத்திரிகையாளராகவும் வேலை பார்க்கிறேன்’’ என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டவர், வாழ்வியல் மையம் உருவானவிதம் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

தங்கும் குடில்
தங்கும் குடில்

மண்புழு இருந்தாதான் வளமான மண்

‘‘2012-ம் வருஷம் சேலத்தில், பசுமை விகடன் நடத்தின நிகழ்ச்சிக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா வந்திருந்தார். நானும் நிகழ்ச்சியில கலந்துகிட்டேன். நிகழ்ச்சி முடிஞ்சதும் ஐயாவைச் சந்திச்சேன். ‘மலையடிவாரத்துல எனக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கு. அதுல என்ன விவசாயம் செய்றது?’னு கேட்டேன். எந்தப் பயிர் சாகுபடி செஞ்சாலும் இயற்கை விவசாயம் செய்யுங்க. உங்க தோட்டத்து மண்ணுல வளம் இருக்கானு பாருங்க. மண்ணுல மண்புழு இருந்தால்தான் அது வளமான மண்’னு சொன்னார். அடுத்த நாளே நான் நிலத்தைத் தோண்டி பார்த்தேன். ஒரு மண்புழுகூட இல்லை. ரசாயன உரம் போட்டதால மண் மலடாகிப் போச்சுன்னு தெரிஞ்சது. எனக்கு மனசு ரொம்ப வலிக்க ஆரம்பிச்சது. உடனே உணர்ச்சிவசப்பட்டு மண்புழு வாங்கியாவது நிலத்துல போடலாம்னு முடிவு பண்ணினேன். ஒரு மண்புழு பண்ணையிலப் போய் கிலோ 400 ரூபாய்னு 20 கிலோ மண்புழுவை வாங்கிட்டு வந்து நிலத்துலப் போட்டேன். அது நாய்களுக்கும் பறவைகளுக்கும் உணவாப் போனதுதான் மிச்சம்.

மண் குளியல்
மண் குளியல்

‘இயற்கை விவசாயம் அம்புட்டு சுலபமில்ல’னு அப்பதான் உணர்ந்தேன். இயற்கை விவசாயம் பற்றிய தேடல்ல இறங்கினேன். அதுல பசுமை விகடன் எனக்கு நண்பராக இருந்து வழிநடத்திச்சு. அனுபவ விவசாயிகள், விஞ்ஞானிகள்னு பலபேரைச் சந்திச்சேன். 3 வருஷம் இயற்கையைப் புரிஞ்சுக்கிறதுக்காகக் கடுமையா போராடினேன். நான் கத்துகிட்ட விஷயத்தை யெல்லாம் என் நிலத்துல செயல்படுத்திப் பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமா என்னோட மண் வளமாச்சு. இப்ப முழுமையான இயற்கை விவசாய நிலமா மாறியிருக்கு” நெல் பயிர் களுக்கு தண்ணீர் விட மோட்டார் போட்டு விட்டு வந்து தொடர்ந்தார்.

மாட்டு வண்டிப் பயணம்
மாட்டு வண்டிப் பயணம்

வயல்வெளி... நிலாச்சோறு

“அந்தத் தேடல்ல நான் தெரிஞ்சுகிட்ட விஷயங்கள் மண்ணை நேசிக்க வெச்சது. இயற்கை விவசாயம் மனசை ரொம்ப அமைதியடைய வெச்சது. நிலத்துலயே ஒரு குடில் அமைச்சேன். வாரம்தோறும் சனி, ஞாயிறுகள்ல குடும்பத்தோடு வந்து தங்கிடுவோம். பகல் நேரத்துல வயல்ல வேலை செய்றது, பசங்களோட பம்ப்செட்ல குளிக்கிறது, இரவு நேரங்கள்ல குடும்பத்தோட திறந்தவெளியில உட்கார்ந்து நிலாச்சோறு சாப்பிடுறதுனு இயற்கை யோடு இயைந்த வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சோம். ஒரு வாரத்துல என்ன டென்ஷன் இருந்தாலும் அந்த ரென்டுநாள்ல மனசு பறவை இறகு மாதிரி லேசாகி பறக்க ஆரம்பிச்சுடும். ஒரு கட்டத்துல என் நண்பர்களும் உறவினர்களும் ‘நீங்க மட்டும் இயற்கையை என்ஜாய் பண்ணுறீங்க... எங்களுக்கும் வாய்ப்பு கொடுக் கலாமே?’னு கேட்க ஆரம்பிச்சாங்க. அது என் மனசை நெருடிட்டே இருந்துச்சு. பிறகு, 2016-ம் வருஷம் இந்த இயற்கை வாழ்வியல் மையத்தை உருவாக்கினேன்’’ என்றவர், வேலையாட்களிடம் காங்கேயம் பசு, ஆட்டுக் கிடாரிகளுக்குத் தீவனம் கொடுக்கச் சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.

பொய்க்கால் குதிரை
பொய்க்கால் குதிரை

குழந்தைகளுக்கான குதூகலம்

‘‘மனிதன் தனி ஒரு உயிரினமாக வாழக் கூடாது. அவனைச் சுற்றி கால்நடைகள், பறவைகள் என்று இயற்கையான சூழல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் நம் முன்னோர்கள் வசித்த கிராமிய சூழலோடு இந்த இடத்தை உருவாக்கினேன். இங்க ஆடு, மாடு, கோழி, பன்றி, குதிரை, கழுதைனு பல உயிரினங்கள் இருக்குது. 10 வகையான கோழிகள், புறாக்கள், கிளிகள் இருக்குது. டயர் வண்டி, நுங்கு வண்டி, பில்லிக் குச்சி, பல்லாங்குழி, பம்பரம், நொண்டி, கயிறு இழுத்தல், சடுகுடு, ஆபியம், ராட்டினம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல்னு மரபு சார்ந்த பல விளையாட்டுகளுக்குத் தேவையானதை அமைச்சோம். ஏறு தழுவுதல், இளவட்டக்கல் தூக்குதல் மாதிரியான வீர விளையாட்டுகளும், மண் குளியல், தொட்டிக் குளியல், பம்ப்செட் குளியல், அருவிக் குளியல் மாதிரியான குளிக்கும் வசதிகளையும் அமைச்சிருக்கோம். இங்க நிகழ்ச்சி நடக்கும்போது பாரம்பர்ய உணவுகள், பொழுதுபோக்கு கிராமிய கலைகள்னு சூழலே பட்டையைக் கிளப்பும். அந்த நேரங்கள்ல இந்த இடமே கிராமிய திருவிழா மாதிரி இருக்கும். இந்த இடத்துக்கு வர்றவங்க சும்மா பொழுதை மட்டும் கழிச்சுட்டுப் போகக் கூடாது. ஏதாவது ஒரு விஷயத்தைக் கத்துக்கிட்டுப் போகணும். அதுதான் எங்கள் நோக்கம்.

வழுக்கு மரம் ஏறுதல்
வழுக்கு மரம் ஏறுதல்

செல்போன், செருப்பு, மின்விசிறி அனுமதியில்லை...

இங்க மூலிகைத் தோட்டம் அமைச்சிருக்கோம். சிறியாநங்கை, பெரியாநங்கை, மலைக்கள்ளி, சிறுகுறிஞ்சான், வெண்கொடி வேம்பு, நீர் மேல் நெருப்பு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகைத் தோட்டமும் இங்க இருக்குது. வாரம் ஒரு நாள் முழுவதும் இலவசமா இயற்கை வாழ்வியல் பயிற்சி அளிக்கிறோம். அதில் ‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ இதை நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்வார். அந்த வகையில கால்நடை கழிவுகள் மூலமா செலவில்லாத இயற்கை விவசாயம், நிலமில்லாதவர்களுக்கு மாடித்தோட்டம் பயிற்சியும் கொடுக்கிறோம். இங்க பயிற்சிக்கு வந்தா செல்போன், செருப்பு, மின்விசிறிப் பயன்படுத்தக் கூடாது. இயற்கையோடு இணைந்து குதூகலமா மண்ணிலும் தண்ணியிலயும், சூரிய ஒளியிலும் சந்தோஷமா விளையாடலாம்” என்றவர் நிறைவாக,

இளவட்டக்கல் தூக்குதல்
இளவட்டக்கல் தூக்குதல்

5 லட்சம் இயற்கை விவசாயிகள்

“இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, பலருக்கு மாடித்தோட்டம் அமைச்சு பராமரிச்சுக் கொடுக்கிறோம். மாடித்தோட்டத்துக்கான இடுபொருள்கள் விற்பனை, மண்புழு விற்பனைமூலம் கிடைக்குற வருமானம் மூலமா இந்த மையத்தைப் பராமரிக்குறோம். கடந்த ரெண்டு வருஷத்துல 50,000-க்கும் அதிகமானவங்க மையத்துக்கு வந்துட்டுப் போயிருக்காங்க. இங்க இலவச பயிற்சி எடுத்த பலபேரு வீட்டுத்தோட்டம் அமைச்சிருக்காங்க.

காதுகுத்து, கல்யாணம், கச்சேரி, நூல் வெளியீட்டு விழா மாதிரியான நிகழ்ச்சிகளும் நடக்குது. ஒவ்வொரு மாசமும் கலாசார நிகழ்வுகள் நடைபெறும். இதை நான் சேவையாதான் செய்றேன். ஆனாலும் வேலையாட்கள், பராமரிப்புக்காகத் தனியார் நிகழ்ச்சிக்குக் குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கிறோம். இது மூலமா கிடைக்குற தொகையை வெச்சு இந்த மையத்தைப் பராமரிச்சுட்டு இருக்கோம். 5 லட்சத்துக்கும் அதிகமான இயற்கை விவசாயிகளை உருவாக்குறதுதான், இந்த இயற்கை வாழ்வியல் மையத்தோட லட்சியம்’’ என்றார்.

அவரது லட்சியம் நிறைவேற வாழ்த்தி விடைபெற்றோம்.

தொடர்புக்கு, அருள் பரமசிவம், செல்போன்: 98426 39263.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism