நாடு முழுவதும் இயற்கை விவசாயம் குறித்த முன்னெடுப்புகளில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டுகின்றன. அதனால் விவசாயிகள் மீண்டும் பாரம்பர்ய முறையிலான விவசாயத்துக்குத் திரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அரசிடம் இருந்து கூடுதல் உதவிகள் செய்யப்பட வேண்டும் என்று இயற்கை விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இது தொடர்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் வட்டார மகேந்திரகிரி பாரம்பர்ய விவசாயிகள் சங்கச் செயலார் சமுத்திரபாண்டி மகேஸ்வரன் என்பவர், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு மனு அனுப்பி இருக்கின்றனர். இருப்பினும் அரசிடமிருந்து இயற்கை விவசாயிகள் போதுமான உதவிகளைப் பெறவில்லை என்று சொல்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய சமுத்திரபாண்டி மகேஸ்வரன், ``நாங்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பாரம்பர்ய நெல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோம். காட்டுயானம், தங்க சம்பா, கொத்தமல்லி சம்பா, வெள்ளை பொன்னுருவி, சொர்ணமசூரி உள்ளிட்ட நெல் வகைகளை இயற்கை முறையில் பயிரிட்டு வருகிறோம்.

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பார்ம்பர்ய நெல் வகைகளைப் பாதுகாத்து சேமித்து வைக்க இடவசதி இல்லாமல் சிரமப்படுகிறோம். அதனால் ஒவ்வொரு வருடமும் கணிசமான அளவில் சேதம் ஏற்பட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ரசாயன உரங்கள் மூலம் பயிரிடப்படும் நெல்லை சேமித்து வைக்கும் அரசு சேமிப்புக் கிடங்குகளில், இயற்கை முறையில் நாங்கள் பயிரிடும் நெல்லை சேமித்து வைக்க முடியாது. காரணம் அரசு சேமிப்புக் கிடங்குகளில் உயிர்க்கொல்லிகள் பயன்படுத்துகின்றன. அதனால் எங்களுக்கென தனி இடவசதி இல்லாததால் மழைக் காலங்களில் பெரும் சேதத்துக்கு உள்ளாகின்றன.

அத்துடன், நெல்லை அவித்துக் காயப்போடவும் போதிய வசதிகள் கிடையாது. மழைக் காலங்களில் நெல் அவிக்கவும், அவற்றைக் காயவைத்து பாதுகாக்கவும் வசதி இல்லாததால் சேதாரம் ஏற்படுகிறது. மேலும், நெல்லை கைக்குத்தல் போல எடுக்க இயந்திரம் இல்லை. தற்போதைய தொழில்நுட்பத்தின்படி, தொலி நீக்குவது அல்லது தீட்டுவது போலவே இருப்பதால், அந்த இயந்திரத்தில் 1 அடி அளவுக்குத் திறந்துவிட்டு அடிக்கிறோம்.
தற்போதைய ரசாயன உரத்துடன் பயிரிடப்படும் நெல்லுக்கான இயந்திரத்தைப் பயன்படுத்துவதால் அரிசியுடன் கணிசமான அளவுக்கு நெல் இருக்கும். அதைத் திரும்பவும் இயந்திரத்தில் போட்டால் தவிடு போய்விடும் என்பதால் ஆள்களைக் கொண்டு முறத்தால் புடைத்து எடுக்க வேண்டியிருக்கிறது. அதற்கு ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் செலவாகிறது. இதுபோல நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இயற்கை விவசாயத்துக்கு மாறிய பல விவசாயிகள் மீண்டும் ரசாயனத்தின் மூலம் செய்யப்படும் செயற்கை விவசாயத்துக்கு மாறி விடுகிறார்கள்.

அதனால் எங்கே தொடங்கினோமோ அங்கேயே நிற்பதுபோல் இருக்கிறது. இதற்கு நிரந்தத் தீர்வு ஏற்படும் வகையில், நெல்லை பாதுகாக்கும் இடம், அவித்து காயப் போடுவதற்கான இடம், சாவி நீக்க இயந்திரம், அவிப்பதற்கான கலன், கைக்குத்தல் போல குத்துவதற்கான இயந்திரம் உள்ளிட்டவை கொண்ட முழுமையான இயந்திரத்தை உருவாக்கிக் கொடுக்க அரசு முன்வர வேண்டும். அதன் மூலம் பாரம்பர்ய நெல் வகைகளை பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்க முடியும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.