Published:Updated:

பயனுள்ள பயிற்சிகள்.... இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம்!

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம்

சேவை

பயனுள்ள பயிற்சிகள்.... இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம்!

சேவை

Published:Updated:
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையம் (கே.வி.கே-krishi vigyan kendra), விவசாயி களுக்குப் பல வகைகளிலும் சேவையாற்றி வருகிறது. பூச்சி, நோய்க் கட்டுப்பாடு, இடுபொருள் மேலாண்மை, மானிய திட்டங்கள், வேளாண் உபகரணங்கள் உட்பட விவசாயி களுக்கு அவ்வப்போது ஏற்படும் சந்தேகங் களுக்கு விளக்கமளிப்பதோடு, தேவையான களப் பயிற்சிகளையும் அளித்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு வழிகாட்டுவதோடு, இயற்கை வேளாண்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம்
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம்


திருவாரூர்- தஞ்சாவூர் பிரதான சாலையில் அமைந்திருக்கிறது, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம். இதன் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள, ஒரு பகல் பொழுதில் அங்கு நேரில் சென்றோம். நம்மை வரவேற்றுப் பேசிய நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப் பாளர் முனைவர் ராதாகிருஷ்ணன், ‘‘2004-ம் ஆண்டு இந்நிலையம் தொடங்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மிகச் சிறப்பாகச் செயல்படக்கூடிய அரசு நிறுவனமாகப் போற்றப்படுகிறது. இங்கு பணியாற்றும் விஞ்ஞானிகள், விவசாயிகள் நலனில் உண்மையாக அக்கறை கொண்டு சேவையாற்றி வருவதால், நிலையத்தின் மீது விவசாயிகள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் நிலவுகிறது. இங்கு வரக்கூடிய விவசாயிகளுக்கு முடிந்தவரை ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைத் தவிர்க்கப் பல வகைகளிலும் வழிகாட்டுகிறோம். பூச்சி, நோய் மேலாண்மை, விதை நேர்த்தி, பறவைக் குடில்கள், விளக்குப் பொறி, இனக்கவர்ச்சிப் பொறி, முட்டை ஒட்டுண்ணிகள், தாவரப் பூச்சி விரட்டிகள் தொடர்பாகக் களப்பயிற்சி அளிக்கிறோம். ஒவ்வொரு பயிற்சியின் போதும் நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகளுக்கான எளிமையான அடையாளங்கள், நன்மை செய்யும் பூச்சிகளின் நடமாட்டத்தை அதிகரிப்பதற் கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறோம்.

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய வளாகம்
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய வளாகம்

பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் சுற்றுப்புற மாசுபாடு, இவற்றின் நச்சுத்தன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இயற்கை வேளாண்மை, பாரம்பர்ய நெல் சாகுபடி, ஒருங்கிணைந்த பண்ணையம், சிறுதானியச் சாகுபடி, மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்துதல், மண்புழு உரம் தயாரிப்பு, அசோலா தயாரிப்பு, பசுந்தாள் உரப் பயிர்கள், கால்நடை தீவனப் பயிர்கள், சொட்டுநீர்ப் பாசனம், மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மாடித்தோட்டம், கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்புக்கான மாதிரி திடல்கள் இங்கேயே அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு நேரடி களப்பயிற்சி அளிக்கிறோம்’’ என்றவர் மாதிரி திடல்களை நமக்குக் காட்டினார்.

‘‘திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மட்டு மல்லாமல், தமிழ்நாட்டின் பிற மாவட்டங் களைச் சேர்ந்த விவசாயிகளும்கூட, பயிற்சிகளில் கலந்துகொண்டு பயனடை கிறார்கள். தேவைக்கேற்ப ஒரு நாள் பயிற்சி, மூன்று நாள்கள் பயிற்சி, ஐந்து நாள்கள் பயிற்சி எனப் பலவிதமான பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றன. விவசாயிகள், எந்தத் தலைப்பில் பயிற்சி வேண்டுமென நினைத்தாலும், எங்களது நிலையத்தை அணுகி, இங்குள்ள பதிவேட்டில் பதிவு செய்துகொள்ளலாம். தொலைபேசி மூலமாகவும் தங்களது விருப்பத்தைப் பதிவு செய்துகொள்ளலாம்.

விவசாயிகளுக்குப் பயிற்சி
விவசாயிகளுக்குப் பயிற்சி

இந்நிலையத்தின் மொத்த பரப்பு 50 ஏக்கர். நெல், உளுந்து, பச்சைப்பயறு, கால்நடை தீவனப்பயிர்கள், காய்கறிகள் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மலிவான விலையில் விற்பனை செய்கிறோம். இங்கு உற்பத்தி செய்யப்படும் விதைகளின் முளைப்புத்திறன் நம்பகத்தன்மையோடு இருப்பதால், விவசாயிகள் ஆர்வத்தோடு வாங்கிச் செல்கிறார்கள்.

கொரோனா தொற்றுக் காலத்தில் விவசாயிகளுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட ஆன்லைன் தொடர் பயிற்சிகளை, எங்களது வேளாண்மை அறிவியல் நிலையம் அளித்தது. இந்தப் பயிற்சியின்போது ஒவ்வொரு தலைப்புக்கும் உகந்த விஞ்ஞானிகளை அந்தந்த மாவட்டம் அல்லது மாநில அளவில் தேர்வு செய்து அவர்கள் மூலம் பயிற்சி அளித்தோம். இந்த இணையவழிப் பயிற்சியில் மலேசியா, குவைத், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளில் வாழும் தமிழர்களும்கூட பங்கேற்றனர்.

ஆய்வகம்
ஆய்வகம்

அவ்வப்போது விவசாயிகளுக்கு ஏற்படும் களப்பிரச்னைக்குத் தீர்வு காண, இங்குள்ள விஞ்ஞானிகள் நேரடியாக விவசாயிகளின் நிலத்துக்கே சென்று ஆய்வு நடத்தி, தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். அதோடு, அது தொடர்பாக மற்ற விவசாயி களும் பயனடையும் வகையில், அந்த ஆலோசனைகளை ஊடகங்களிலும் வெளியிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதனை ‘வாட்ஸ் அப்’ குழுக்கள் மூலமும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பகிர்ந்து வருகிறோம்.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் ஒரு ‘யூடியூப் சேனல்’ நடத்தி வருகிறோம். அதில் வெற்றி விவசாயி களின் அனுபவம், பூச்சி, நோய் மற்றும் இடுபொருள் மேலாண்மை, பாரம் பர்ய ரகங்கள், மழைக்காலங்களில் கால்நடைப் பராமரிப்பு நடவடிக்கை கள், மாடித்தோட்டம், தென்னையில் பலவகைப் பயிர்கள் சாகுபடி, நெற்பயிரின் வரப்புகளில் வெண்டை சாகுபடி, அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், நெல்பயிரில் பறவைகள் மேலாண்மை மற்றும் குளக்கரையில் வேலிமசால் உற்பத்தி உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட காணொளிகளை வெளியிட்டுள்ளோம்’’ என்றார்.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்
வேஸ்ட் டீ கம்போசர்
வேஸ்ட் டீ கம்போசர்

தொடர்ந்து பேசினார், அங்கு பணியாற்றும் விஞ்ஞானிகளில் ஒருவரான ஜெகதீசன். ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் நெல் ஆராய்ச்சி நிலையங்களால் புதிதாக உற்பத்தி செய்யப்படும் நெல் ரகங்களை இங்குள்ள வயல்களில் சாகுபடி செய்து, இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். ஒருங்கிணைந்த உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களை ஏற்படுத்தி, பாரம்பர்ய நெல் ரக சாகுடியை ஊக்கப்படுத்தி வருகிறோம். இந்நிலையத்தில், மாதிரி சிறுதானிய பண்ணையை ஏற்படுத்தி யுள்ளோம். ஆய்வுக்காக, கடந்த ஆண்டு ஒரு ஹெக்டேரில் குதிரைவாலிச் சாகுபடி செய்தோம். காவிரி டெல்டா மண்ணுக்குக் குதிரைவாலிச் சாகுபடி மிகவும் ஏற்றது என உறுதியாகத் தெரிய வந்தது. தொடர்ந்து 20 விவசாயிகளுக்கு இலவசமாக, குதிரைவாலி விதைகளை வழங்கி, சாகுபடி தொழில் நுட்பங்களையும் சொல்லிக் கொடுத்தோம். அதன் மூலம் 32 ஹெக்டேரில் சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தினோம். கம்பு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட மற்ற வகை சிறுதானியங்கள் உற்பத்திக்கும் வழிகாட்டி வருவதோடு, இவற்றை மதிப்புக் கூட்டுவதற்கான தொழில்நுட்ப ஆலோசனை களையும் வழங்கி வருகிறோம். பஞ்சகவ்யா, மீன் அமிலம், ஜீவாமிர்தம், மூலிகைப் பூச்சிவிரட்டி உள்ளிட்ட இயற்கை இடுபொருள்கள் தயாரிப் பதற்கான பயிற்சியையும் அளித்து வருகிறோம்.

கோழிகள்
கோழிகள்
செயல் விளக்கத் திடல்
செயல் விளக்கத் திடல்
மாடித்தோட்டத்தில்
மாடித்தோட்டத்தில்

இங்கு கருங்கோழிகள் மற்றும் நாட்டு ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. அது தொடர்பாக, விவசாயி களுக்கு நேரடி பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதை வளர்க்க விரும்பும் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் அவ்வப்போது விற்பனை செய்து வருகிறோம். மண் மற்றும் தண்ணீர் பரிசோதனை நிலையம் இங்கு உள்ளது. இப்பகுதி விவசாயிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இங்கு மேற்கொள்ளப்படும் ஆய்வு முடிவுகள் துல்லியமாக இருப்பதோடு, நம்பகத்தன்மையோடு இருக்கும். கட்டணமும் குறைவு. தண்ணீர் பரிசோதனைக்கு 59 ரூபாய், மண் பரிசோதனைக்கு 118 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது’’ என்று சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு:

திட்ட ஒருங்கிணைப்பாளர்,

வேளாண் அறிவியல் நிலையம்,

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம்.

செல்போன்: 96552 77010

பயிற்சியில்
பயிற்சியில்
பண்ணை விளக்கத் திடல்
பண்ணை விளக்கத் திடல்

வைக்கோல் கழிவுகளைச் சத்தான உரமாக மாற்றுதல்

இந்த நிலையத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் செல்வமுருகன், “டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலும் இயந்திரம் மூலம்தான் நெல் அறுவடை செய்யப்படுகிறது. இதனால் வைக்கோல் சிறு சிறு துண்டுகளாகி, நிலத்தில் கிடப்பதால், அதை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதோடு காற்றும் மாசடைகிறது. அதற்குப் பதிலாக, நுண்ணுயிரி கூட்டுக்கலவை மூலம், வைக்கோலைச் சத்தான உரமாக மதிப்புக் கூட்டலாம். அதற்கான தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம். ஒரு டன் வைக்கோலை மட்க வைத்து உரமாக மாற்ற, 2 கிலோ நுண்ணுயிரி கூட்டுக்கலவையே போதுமானது. இதன் விலை ஒரு கிலோ 63 ரூபாய்.

நுண்ணுயிர் கலவை
நுண்ணுயிர் கலவை

இது திட நிலையில் இருக்கும். இரண்டு கிலோ கூட்டுக்கலவைக்கு 20 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். 17 அடி நீளம், 4 அடி அகலம், 20 சென்டிமீட்டர் உயரத்துக்கு வைக்கோலைப் பரப்பி, நுண்ணுயிரி கூட்டுக்கலவைக் கரைசலைத் தெளிக்க வேண்டும். இதேபோல் பல அடுக்குகள் மேற்கொள்ள வேண்டும். அடுத்த 60-ம் நாள் மதிப்புக்கூட்டப்பட்ட வைக்கோல் உரம் தயாராகிவிடும். அனைத்துவிதமான பயிர்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்’’ என்றார்.

விவசாயிகளுக்கு வகுப்பு
விவசாயிகளுக்கு வகுப்பு
ராதாகிருஷ்ணன், ஜெகதீசன், செல்வமுருகன், சிலம்பரசன்
ராதாகிருஷ்ணன், ஜெகதீசன், செல்வமுருகன், சிலம்பரசன்

விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நாம் சென்றிருந்தபோது, விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் கலந்துகொண்ட விவசாயி சிலம்பரசனிடம் பேசினோம். ‘‘என்னோட சொந்த ஊர்... மன்னார்குடி, ராஜகோபாலபுரம். 10 ஏக்கர்ல நெல் விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கேன். கடந்த 2 வருஷமா, நீடாமங்கலம் கேவிகே-வோட நேரடி தொடர்புல இருக்கேன். என்னோட நெற்பயிர்கள்ல எந்த ஒரு பூச்சி, நோய்த்தாக்குதல் ஏற்பட்டாலும், இங்கவுள்ள விஞ்ஞானிகளைத்தான் தொடர்புகொள்வேன். இப்ப காளான் வளர்ப்பு பயிற்சிக்காக வந்திருக்கேன்’’ என்றார்.