Published:Updated:

புதிய வேளாண் சட்டங்கள்... ஒழுங்குமுறைக் கூடங்கள் ஒழிந்து போகும்!

வேளாண் சட்டங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
வேளாண் சட்டங்கள்

ஆர்.பொன்னம்பலம்

அலசல்

மீபத்தில் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டுமென்ற நோக்கில் மத்திய அரசு மூன்று சட்டங்களை இயற்றியது. இந்தச் சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. வேளாண் பொருள்கள் விற்பனையில் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொண்டு சிறப்பாகச் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்கூட வலுவிழந்து போய்விடும் என்ற பொதுக்கருத்து பரவலாக உள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களின் நிலைமை என்னவாகும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
புதிய வேளாண் சட்டங்கள்... ஒழுங்குமுறைக் கூடங்கள் ஒழிந்து போகும்!

அதற்கு முன்பாகத் தமிழக ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வது அவசியமாகும். விவசாயத்தை மேம்படுத்த ஆங்கிலேய அரசு, 1928-ம் ஆண்டு ‘ராயல் கமிஷன்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இந்திய விவசாயிகள், வர்த்தகர்களால் சுரண்டப்படுகிறார்கள். தவறான எடை, வெளிப்படைத்தன்மை இல்லாத ஏல முறைகள், கமிஷன், எடை கூலியெனக் கட்டுப்பாடு இல்லாமல் இடைநிலைச் செலவுகளை விவசாயிகளிடமிருந்து பிடித்தம் செய்கிறார்கள். விற்பனைத் தொகையைக் காலந்தாழ்த்தி வழங்குகிறார்கள் வர்த்தகர்கள். இவை தடுக்கப்பட வேண்டும் என்று அந்த கமிஷன் அரசுக்குப் பரிந்துரைத்தது. அதனை பிரிட்டிஷ் அரசு ஏற்றுக்கொண்டு அதற்கான சட்டத்தை இயற்றியது. அதன் மூலம் இந்தியாவில் ஒழுங்குமுறை விற்பனைகூடக் கலாசாரம் தொடங்கியது.

‘‘விளைபொருள்களின் விற்பனை வசதிக்காக 40 விளைபொருள்கள் அங்காடிச் சட்டத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளன. அறிக்கையிடப்பட்ட எல்லா விளைபொருள்களின் வரத்தும் விற்பனைக்கூடத்திற்கு வருவதில்லை.’’

சட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக 1936-ம் ஆண்டுத் திருப்பூர் காட்டன் மார்க்கெட் கமிட்டி உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மணிலா மார்க்கெட் கமிட்டி, கோவில்பட்டி காட்டன் மார்க்கெட் கமிட்டி ஆகியவற்றை ஏற்படுத்தி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் நடைமுறைக்கு வந்தது. இன்று, இந்தியா முழுவதும் கேரளா, காஷ்மீர் தவிர, எல்லா மாநிலங்களிலும் வேளாண்மை வர்த்தக விளைபொருள் அங்காடிச் சட்டம் செயலில் உள்ளது. அதன்கீழ் சுமார் 7,000 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் திருப்பூர் காட்டன் மார்க்கெட் கமிட்டியை அதாவது ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை வியாபாரிகள் போதுமான அளவிற்குப் பயன்படுத்த முன்வரவில்லை. அதற்காக விற்பனைக்கூடத்தைச் சுற்றியுள்ள ஐந்து மைல் பரப்பில் இருக்கும் பருத்தி மண்டிகளும், பருத்தி வர்த்தகர்களும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மட்டுமே தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் விற்பனைகூடப் பொறுப்பாளர்களால் வர்த்தக நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும். விவசாயிகள் பாதுகாப்பைப் பெறுவார்கள் என்று கருதி அரசு 1946-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. (அரசு ஆணை எண் 1629 மேம்பாட்டுத்துறை நாள் 23.04.1946).

புதிய வேளாண் சட்டங்கள்... ஒழுங்குமுறைக் கூடங்கள் ஒழிந்து போகும்!

இந்த உத்தரவுக்குப் பிறகு திருப்பூர் காட்டன் மார்க்கெட் கமிட்டியின் பருத்தி வர்த்தகம் விற்பனைக்கூட வளாகத்தில் மட்டுமே நடக்க ஆரம்பித்தது. வரத்தும் பல மடங்கு அதிகரித்ததுடன், பருத்தி விற்பனை என்றால் திருப்பூர் காட்டன் மார்க்கெட் கமிட்டிதான் என்ற நிலைப்பாட்டை எட்டியது. பின்னாளில் இம்மாதிரி உத்தரவு, மத்திய அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேம்பாட்டு நடவடிக்கைக்கு உந்துதலாகவும் வழிகாட்டியாகவும் அமைந்தது. வேளாண்மை விளைபொருள் அங்காடி சட்ட வரைவிற்கும் மற்றும் அதன் செயல்பாட்டிற்கும் அடிப்படையாக இருந்த தமிழ்நாட்டின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இன்று விவசாயிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் பயனளிக்காத அமைப்பாகச் செயல்படுகிறது. தமிழகத்தின் வேளாண்மை வர்த்தக விளை பொருள் விற்பனையை ஒழுங்குபடுத்தும் 1933-ம் ஆண்டுச் சட்டத்துக்குப் பிறகு, சமூகப் பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, 1959 மற்றும் 1987 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுப் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டன. எனினும் திருத்தப்பட்ட அனைத்துச் சட்டங்களின் நோக்கங்களும் ஒன்றாகவே இருந்தன.

புதிய வேளாண் சட்டங்கள்... ஒழுங்குமுறைக் கூடங்கள் ஒழிந்து போகும்!

விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்பனைக்குக் கொண்டுவரும் பட்சத்தில் வர்த்தகர்கள் நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் விதத்துக்கு விற்பனைக்கூடப் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஏல முறைகளை உருவாக்க வேண்டும். எந்தவித இடைநிலைச் செலவுகளும் இல்லாத நிலையில் விளைபொருள்களை விற்பனை செய்து முழுப் பணத்தையும் விவசாயிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விற்பனைக்கூடங்கள் வடிவமைக்கப்பட்டன. தமிழகத்தில் 282 விற்பனைக்கூடங்கள் தோற்றுவிக்கப் பட்டுள்ளன. அதில் 197 விற்பனைக்கூடங்கள் சொந்தக் கட்டடங்களில் இயங்குகின்றன. அத்துடன் 441 கிட்டங்கிகளும் 367 வர்த்தகக் கூடங்களும் 334 உலர் களங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. மொத்தமுள்ள 282 விற்பனைக் கூடங்களில் சுமார் 40 முதல் 50 வரை மட்டுமே (உண்மையில்) செயல்பட்டு வருகின்றன. விற்பனைக்கூடங்கள் விவசாயிகளுக்குப் பலவிதத்தில் உதவி வருவது உண்மையானால், அனைத்து விற்பனைக்கூடங்களிலும் வரத்துகள் குவிய வேண்டும் அல்லவா? ஆனால் அப்படியில்லையே!

புதிய வேளாண் சட்டங்கள்... ஒழுங்குமுறைக் கூடங்கள் ஒழிந்து போகும்!

விளைபொருள்களின் விற்பனை வசதிக்காக 40 விளைபொருள்கள் அங்காடிச் சட்டத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளன. அறிக்கையிடப் பட்ட எல்லா விளைபொருள்களின் வரத்தும் விற்பனைக்கூடத்துக்கு வருவதில்லை. அறிக்கையிடப்பட்ட பொருள்களின் விற்பனை உபரியில் 5 முதல் 7 சதவிகிதம் மட்டுமே வரத்தாக உள்ளது. தமிழகத்தைத் தவிர, பிற மாநிலங்களில் உள்ள விற்பனைக்கூடங்கள் சராசரி 60 சதவிகிதம் விற்பனை உபரியை வரத்தாக ஈர்த்து வருகிறது. இந்தியா முழுமைக்கும் வழிகாட்டியாக இருந்த தமிழக விற்பனைக் கூடங்கள் சவலைப் பிள்ளையாகத் தோற்ற மளிக்கின்றன.

புதிய வேளாண் சட்டங்கள்... ஒழுங்குமுறைக் கூடங்கள் ஒழிந்து போகும்!

விற்பனைக்கூடத்துக்கு விவசாயிகள் கொண்டுவரும் விளைபொருள்களின் விற்பனை, விற்பனைக்கூடப் பொறுப்பாளரின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற வேண்டும். எடை இடுதல், ஏலமுறை, உடனடிப் பணம் வழங்குதல் போன்ற நடைமுறைகள் பரவலாகப் பின்பற்றப் பட வேண்டும். இருந்தும் நடைமுறை வேறாக இருக்கிறது. கமிஷன் மண்டிகளே பரவாயில்லை என்ற நிலை. விற்பனைக்கூடத்தின் உள்ளே மழையால் நெல் சேதமடைவது நடந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு விற்பனைக்கூடத்தையும் சுற்றியுள்ள சுமார் 15 கி.மீ பரப்பளவு அறிக்கையிடப்பட்ட மார்க்கெட் பிராந்தியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தப் பிராந்தியத்தில் அறிக்கையிடப்பட்ட பொருள்களை வர்த்தகம் செய்யும் உரிமம் பெற்ற வர்த்தகர்கள் மார்க்கெட் கமிட்டி விதிக்கும் நிபந்தனைகளின்படியே செயல்பட வேண்டும்.

இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூட நடவடிக்கைகளை மீறும் வர்த்தகர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்பட வேண்டும். ஆனால், வேளாண்மை விற்பனை இயக்ககம் 1978-ல் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை இப்படியொரு வழக்குகூடப் பதிவு செய்யப்படவில்லை.

புதிய வேளாண் சட்டங்கள்... ஒழுங்குமுறைக் கூடங்கள் ஒழிந்து போகும்!

மஞ்சள் நகரான ஈரோட்டில் சிண்டிகேட் அமைத்து விவசாயிகள் சுரண்டப்படுவது ஊடகங்களில் வெளியானபோதும் நடவடிக்கை இல்லை. துணியை மூடி விரல்களை அழுத்தி விலை தீர்க்கும் முறை இன்றும் சில இடங்களில் நடப்பில் இருக்கிறது. விற்பனைக்கூடத்தைச் சுற்றியுள்ள அறிக்கையிடப்பட்ட மார்க்கெட் பிராந்தியத்தில் விளைபொருள்களை விற்பனை செய்யும் விவசாயிகள் பாதுகாக்கப்படவில்லை என்பது உறுதி. ஆனால், ஒரு பணி மட்டும் சிறப்பாக நடந்து வருகிறது. அறிக்கையிடப்பட்ட மார்க்கெட் பிராந்தியத்தில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் வர்த்தக மதிப்பில் ஒரு சதவிகிதம் மார்க்கெட் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 2018-19-ல் தமிழகத்தில் சந்தைக்கட்டணம் மூலமாக ரூ.125 கோடி வரவாக வந்துள்ளது. அதில் சுமார் 10 சதவிகிதம் மட்டும் விற்பனைக் கூடங்களின் உள்ளே நடைபெறும் சேவை களிலிருந்து பெறப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம். 90 சதவிகிதம் வரவு விற்பனைக் கூடத்துக்கு வெளியே எந்தவித சேவையும் செய்யப்படாமல் பெறப்பட்டதாகும். அதனால் விற்பனைக்கூடங்கள் மார்க்கெட் கட்டணம் வசூல் செய்யும் மையமாக மாறிவிட்டன என்று தோன்றுகிறது.

‘‘மார்க்கெட் கமிட்டிகள் சட்டபூர்வமான சுயநிதி அமைப்பாகும். மத்திய அரசின் புதிய சட்டத்தின் காரணமாக 90 சதவிகிதம் வருமான இழப்பை எதிர்கொள்ள நேரிடலாம்.’’

சமீபத்தில் மத்திய அரசு ‘விவசாயிகளுக்கான உற்பத்தி (வர்த்தகம் மற்றும் வணிகம்) மேம்படுத்தும் வசதிகள் சட்டம் 2020’ இயற்றியுள்ளது. இந்தச் சட்டத்தின்படி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் தங்கள் நடவடிக்கைகளை விற்பனைக்கூடத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் அறிக்கையிடப்பட்ட பிராந்தியத்தில் (விற்பனைக் கூடத்துக்கு வெளியே) விவசாயிகளைச் சுரண்டும் விதத்தில் சட்டம் மற்றும் விதிகளை மீறும் வர்த்தகர்கள்மீது நடவடிக்கைகளைத் தொடர முடியாது. ஏற்கெனவே விவசாயிகளைச் சுரண்டும் இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகமாகும். இந்தச் சட்டம் விற்பனைக்கூடத்துக்கு (மார்க்கெட் பிராந்தியத்தில்) மார்க்கெட் கட்டணம் வசூல் செய்வதையும் தடை செய்கிறது. அப்படியெனில், விற்பனைக்கூடங்களின் மொத்த வரவில் பெரும்பகுதியை இழக்க நேரிடும். 2018-19 மொத்த வரவைக் கணக்கிடும்போது சுமார் ரூ.112.5 கோடிக்கு இழப்பு ஏற்படும் என்று கணக்கிடலாம். அதிகார இழப்பு மற்றும் வருமான இழப்புக் காரணமாக வெகுவிரைவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஒழிந்துபோக வாய்ப்புள்ளது. வடமாநிலங்களில் விற்பனை மையங்கள் புதிய வேளாண் சட்டங்களால் முற்றிலும் ஒழிந்துபோகும் என்பதற்காகத்தான் விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள்.

மார்க்கெட் கமிட்டிகள் சட்டபூர்வமான சுயநிதி அமைப்பாகும். மத்திய அரசின் புதிய சட்டத்தின் காரணமாக 90 சதவிகிதம் வருமான இழப்பை எதிர்கொள்ள நேரிடலாம். மார்க்கெட் கமிட்டிகளையும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையும் கண்காணிக்கவும் கட்டுப் படுத்தவும் உயர் அமைப்பாக வேளாண்மை விற்பனை இயக்ககம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிதி இழப்பைச் சரிசெய்ய வேளாண்மை விற்பனை இயக்ககம் என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பது தெளிவு படுத்தப்படவில்லை.

தமிழ்நாட்டைத் தவிர, பிற மாநிலங்களில் உள்ள மாநகரங்களில் காய்கனி மார்க்கெட்டுகள் மார்க்கெட் கமிட்டியின் பொறுப்பில் ஏற்படுத்தப் பட்டு மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மார்க்கெட்டும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டைவிட மிகப்பெரியது. அதுபோல, கால்நடைச் சந்தைகளும் மார்க்கெட் கமிட்டியின் பொறுப்பில் நடந்துவருகிறது. 1933-க்குப் பிறகு, இன்றுவரை ஒரு காய்கனி மார்க்கெட்டையோ, கால்நடை மார்க்கட்டையோ ஏற்படுத்த முடியவில்லை என்பதிலிருந்து வேளாண்மை விற்பனை இயக்கத்தின் பணியை மதிப்பீடு செய்ய முடியும். ஆரம்பத்தில் வேளாண் விற்பனை, வேளாண்மைத் துறையின் ஓர் அங்கமாகச் செயல்பட்டு வந்தது. 1978-ல் வேளாண் விற்பனைக்காகத் தனி இயக்ககம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், பெரிய முன்னேற்றமில்லை. பிற மாநில வளர்ச்சியைத் தமிழகத்தோடு ஒப்பிடும்போது, நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சியை அவை எட்டியுள்ளன.

இக்கட்டான நெருக்கடியிலிருந்து மீள மேற்கொள்ள வேண்டிய சில ஆலோசனைகள் ஒவ்வொரு விற்பனைக்கூடமும் விளை பொருள்களின் தேவைகளை உருவாக்கும் மையமாக மாற்றப்பட வேண்டும். விளை பொருள்கள் நல்ல விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டால் விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை விற்பனைக்குக் குவித்து விடுவார்கள். தொடர்ந்து வாடகைக் கட்டடங்களில் இயங்கிவரும் விற்பனைக் கூடங்களுக்கு முடிவு கட்டலாம். உற்பத்தி யாளர்கள் குழுமங்களை விற்பனைகூட மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும் பொருள்செலவில் உருவாக்கப்பட்ட விற்பனைக் கூடங்களில் உள்ள உள் கட்டமைப்புகள் முழு அளவில் பயன்படுத்தப்பட வேண்டும். உணவுக்கழகம், பருத்திக்கழகம், தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை ஒன்றியம் (நாபெட்), தமிழ்நாடு வாணிபக் கழகம் முதலான அரசு சார்ந்த கழகங்கள் தங்களின் கொள்முதல் நடவடிக்கைகளுக்கு விற்பனைக் கூடங்களை முழு அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலைக் கொள்கைகளை விற்பனைக்கூடங்களின் வழியாகச் செயல்படுத்த முனைய வேண்டும். புதிய தேவையற்றக் கட்டுமானப் பணிகளைத் தவிர்க்கலாம். அதன்மூலம் மூலதனச் செலவுகளைச் சுருக்க இயலும். மார்க்கெட் கமிட்டிகள், விற்பனைக்கூடங்கள், வேளாண்மை விற்பனை இயக்ககம், விளைபொருள் விற்பனை வாரியம் ஆகியவற்றில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மார்க்கெட் கமிட்டி நிதியிலிருந்து 15 சதவிகிதம் விற்பனை வாரியத்துக்கு வழங்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அரசிடமிருந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை நடத்த மானியம் பெற கருத்துருக்களைச் சமர்ப்பிக்கலாம். இதுவே விவசாயிகளுக்கும் நாட்டுக்கும் நன்மையைக் கொடுக்கும்.

’’கட்டுரையாளரைப் பற்றி...

பொன்னம்பலம்
பொன்னம்பலம்

ழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மற்றும் செயலாளராக (பொறுப்பு)பணியாற்றியவர். கிரியேட் நமது நெல்லைக் காப்போம் அமைப்பின் அறங்காவலராக இருக்கிறார். நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.