Published:Updated:

11 வயது பேத்தியின் யோசனை, 69 வயது தாத்தாவின் வடிவமைப்பு குழி எடுக்க... தொழுவுரம் நிரப்ப...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டிராக்டருடன் இணைக்கப்பட்ட ஒற்றைக் கலப்பை
டிராக்டருடன் இணைக்கப்பட்ட ஒற்றைக் கலப்பை

25,000 ரூபாயில் உருவான இரண்டு கருவிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

கருவி

தென்னந்தோப்புகளில் தென்னை மரங்களின் தூர்களைச் சுற்றிக் குழி எடுத்து, உரம் வைப்பதற் கான வேலையாள்கள் கூலிக்கே, பெரும்தொகை செலவாகிறது. வேலையாள்களின் உதவி இல்லாமல் டிராக்டரில் ஒரு கருவியைப் பொருத்தி டிராக்டரை இயக்குபவரே குழி எடுத்து, உரம் நிரப்பும் வகையில் இரண்டு கருவிகளை வடிவமைத்துள்ளார் தென்காசியைச் சேர்ந்த விவசாயி மாடசாமி.

கடந்த 25.04.21 தேதியிட்ட இதழில், ‘குழிமுறை சாகுபடி! தென்னைக்கு ஊடுபயிராக மாப்பிளைச்சம்பா!’ என்ற கட்டுரையின் மூலம் ‘பசுமை விகடன்’ வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆனவர்தான் மாடசாமி. தென்காசி மாவட்டம், கடையநல்லூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள புதுக்குடி – மங்களாபுரம் சாலையில் உள்ளது இவரது ‘ஆர்.எம்.எஸ் பசுமைப் பண்ணை.’ தென்னை மரங்களைச் சுற்றி, அவர் வடிவமைத்த ஒற்றைக் கலப்பை மூலம் குழி எடுத்துக் கொண்டிருந்த மாடசாமியைச் சந்தித்தோம். நம்மைப் பார்த்ததும் டிராக்டரை நிறுத்திவிட்டுப் பேசத் தொடங்கினார்.

தொழுவுரம் நிரப்பும் இரும்புபெட்டியுடன் மாடசாமி
தொழுவுரம் நிரப்பும் இரும்புபெட்டியுடன் மாடசாமி


“நான் பள்ளிக்கூடத்துக்கே போனதில்ல. அப்பாகூட விவசாய வேலைகளைச் செஞ்சேன். 20 வயசுல இருந்து டிராக்டர் ஓட்டிட்டு இருக்கேன். 40 வருஷமா விவசாயம் செஞ்சுட்டு வர்றேன். நெல்லும் தென்னையும் தான் இந்தப் பகுதியில முக்கிய விவசாயம். ஓமன் நாட்டுல இருக்குற என்னோட மகன் மங்களதுரைதான், ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்பாடில்லாத இயற்கை விவசாயத்தை எனக்குச் சொல்லிக் கொடுத்தான். இப்போ 3 வருஷமா இயற்கை முறையில 10 ஏக்கர்ல நெல், தென்னை விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். இதுல, ரெண்டு வருஷமா ஒரு ஏக்கர்ல தென்னைக்கு ஊடுபயிரா மாப்பிளைச்சம்பா சாகுபடி செஞ்சேன். நல்ல மகசூல் கிடைச்சது’’ என்றவர், தென்னை விவசாயத்தைப் பற்றிப் பேசினார்.

5 அடி தூரத்தில் குழி எடுக்க வேண்டும்

‘‘பெரும்பாலும் தென்னைக்கு உரம் வெக்கிறோம்னு தென்னை மரத்துக்குப் பக்கத்துலயே ஒரு குழியை எடுத்து, உரத்தை வெச்சு விடுறாங்க. ஆனா, அந்த உரத்தை அந்தப் பகுதியில இருக்க வேர் மட்டும்தான் எடுக்கும். மரத்தைச் சுற்றியும் இருக்க வேர்கள் எடுக்காது. முறையா எப்படி வைக்கணும்னா, தென்னை மரத்தோட மட்டை அளவுல பாதித் தூரம் அதாவது, மரத்தோட தூரிலிருந்து 4 முதல் 5 அடி தூரத்துக்கு வட்ட வடிவுல ஒன்று முதல் ஒன்றரை அடி ஆழத்தில் குழி எடுக்கணும். அதுலதான் வேப்பம் பிண்ணாக்கு, தொழுவுரம் போட்டுப் பண்ணை பிடிச்சு (வட்ட வடிவிலான குழி) தண்ணி பாய்ச்சணும். வேலையாள் கிடைக்கிறது சிரமமா இருந்தாலும் மரத்தைச் சுத்தியும் குழி எடுக்கச் செலவு அதிகம். அதை நினைச்சு பெரும்பாலான விவசாயிகள் இதைச் செய்றதில்ல.

டிராக்டருடன் இணைக்கப்பட்ட ஒற்றைக் கலப்பை
டிராக்டருடன் இணைக்கப்பட்ட ஒற்றைக் கலப்பை

ஒரு ஏக்கர்... 20 வேலையாள்கள்

தென்னைக்கு 3 மாசத்துக்கு ஒரு தடவை தூரைச் சுத்திலும் குழி எடுத்து மட்கிய தொழுவுரம், மூடாக்குக்காக இலை தழைகள் போடுறது வழக்கம். ஒரு ஏக்கர் தென்னந்தோப்புல (80 மரங்கள்) குழி எடுக்கவும், தொழுவுரத்தை எடுத்து மரத்துக்கு மரம் போடுறதுக்கும் 20 வேலையாளுக்கு மேல ஆகுது. கூலி கொடுத்தாலும் பரவாயில்லன்னு பார்த்தா, வேலையாளுக்கும் பற்றாக்குறையா இருக்கு. நூறு நாள் வேலைக்குப் போயிடுறதுனால வேலையாளுங் களைக் கூப்பிட்டு வர்றதுக்கே ரொம்பச் சிரமமா இருக்கு. அப்படியே வந்தாலும், அடுத்தடுத்த நாள் தொடர்ந்து வருவாங்களான்னு உறுதியாச் சொல்ல முடியாது’’ என்றவர், தான் கருவி கண்டு பிடிக்கக் காரணமான சம்பவத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

பேத்தி சொன்ன யோசனை

‘‘ 6-ம் வகுப்பு படிக்கிற என்னோட பேத்தி மதிவதனிகா, ‘சின்ன வயசுல இருந்து டிராக்டர் ஓட்டுறீங்களே தாத்தா, டிராக்டர்லயே ஏதாவது பொருத்தி, குழி எடுத்து, உரத்தைப் போடுற மாதிரி ஒரு மிஷினை செஞ்சுட்டா என்ன?’ன்னு கேட்டாள். இது நல்லா இருக்கே... அப்படி ஏதாவது முயற்சி செய்யலாம்னு ரெண்டு, மூணு நாளா யோசிச்சேன்.

அந்த நேரத்துல என் மகன் ஊருக்கு வந்திருந்தான். அவன்கிட்ட இந்த விஷயத் தைச் சொன்னேன். அதோட டிராக்டர்ல பொருத்துற மாதிரி நான் மனசுல நினைச்சிருந்த வடிவமைப்பைச் சொன்னேன். அதை ஒரு பேப்பர்ல படமா வரைஞ்சு காட்டினான். நாலஞ்சு திருத்தத்துக்குப் பிறகு, ஒரு வழியா கருவி வடிவமைப்புக்கு வந்துச்சு. பக்கத்துல இருக்கப் பட்டறையில (லேத்) படத்தைக் கொடுத்து, எப்படி வேணும்னு ஆலோசனைச் சொன்னேன். ஒரு வழியா, குழி எடுக்க ஒத்தக்கலப்பையும், தொழுவுரத் தைக் குழிக்குள்ள அள்ளிப்போட இரும்புக்கூடையும் செஞ்சுகொடுத்தாங்க” என்றவர், டிராக்டருடன் இணைக்கப்பட்ட தான் வடிவமைத்த இரண்டு கருவிகளை இயக்கியபடியே விளக்கிச் சொல்லத் தொடங்கினார்.

மதிவதனிகா
மதிவதனிகா


குழி எடுக்கும் கருவி

‘‘சிறு கட்டிகள் உடைக்க, விதைப்படுக்கை தயாரிக்க ஏத்த மாதிரி உழவு வேலைக்கு 7 முதல் 13 கொத்துக்கலப்பை பயன்படுது. அதேபோல, அதில் ஒத்தக் கொத்துக்கலப்பையை மட்டும் 2 அடி உயரத்துல டிராக்டர்ல இணைக்க வசதியா வடிவமைச்சேன். இதன் கொழு, ஒன்றரை அடி ஆழம் வரைக்கும் குழி எடுக்குது. தென்னை மரத்தைச் சுற்றிலும் இதே ஆழத்துல குழிகளை எடுக்கலாம். ஒரு மரத்தைச் சுற்றிலும் வேலையாள் மூலம் மண்வெட்டியால் குழி எடுத்தா அரைமணி நேரம் ஆகும். ஆனால், இந்த ஒற்றைக் கலப்பையால் 5 முதல் 10 நிமிஷத்துக்குள்ள குழி எடுத்து முடிச்சிடலாம்.

உரம் போடும் கருவி

அதேபோல, தோட்டத்தில் குவிச்சு வெச்சிருக்கத் தொழுவுரத்தை அள்ளி, தென்னையைச் சுத்தி, தோண்டுன குழிக்குள்ள போடுறதுக்காக வடிவமைக்கப்பட்டதுதான் ‘தொழுவுரம் நிரப்பும் இரும்புபெட்டி.’ டிராக்டரோடு இணைக்கப்பட்ட இந்தச் சதுர வடிவிலான இரும்புப் பெட்டியின் உயரம் 2 அடி, நீளம் 2.5 அடி. இதன் கொள்ளளவு 75 கிலோ. இந்தக் கூடையோட இடது புறம் இணைக்கப்பட்டுள்ள நீளமான கைப்பிடி மூலமா டிராக்டரை ஓட்டுபவரே திறந்து மூடுற மாதிரி வடிவமைச்சிருக்கேன்.

தென்னைக்கு உரமிடுதல்
தென்னைக்கு உரமிடுதல்


டிராக்டர் ஓட்டுநரே போதும்

டிராக்டர், தொழுவுரக் குவியலுக்குப் பக்கத்துல போனதும், இரும்புப்பெட்டியோட வாய்ப்பகுதியைத் திறந்துவிடணும். அந்தக் கூடைக்குள்ள தொழுவுரத்தை நிரப்பிய பிறகு, இடது புறம் நீளக்கம்பியோட சேர்ந்து இருக்கக் கைப்பிடியை இழுத்தா பெட்டி மூடிக்கும். பிறகு, டிராக்டரை ஓட்டிட்டுப்போய்த் தென்னையைச் சுற்றி எடுத்த குழிக்குப் பக்கத்துல நிறுத்தணும். பெட்டியோட கொக்கியை எடுத்துவிட்டுத் தொழுவுரத்தைக் கொட்டிடலாம். இந்த ரெண்டு கருவிகளையும் இயக்க, டிராக்டர் ஓட்டத் தெரிஞ்சா மட்டும் போதும். இதுதவிர, ஒத்தகலப்பை மூலமா அடர்த்தியான களைகளையும் அகற்றலாம். மூடாக்குப் போட இலை, தழைகளையும் அள்ளி வைக்கலாம். மண்ணையும் அள்ளிப் போடலாம்’’ என்றவர் நிறைவாக,

‘‘இந்தக் கருவிகள் மூலமா, ஒரு ஏக்கர் தென்னையைச் சுத்தி 3 மணி நேரத்துக்குள்ள ஒருத்தரே குழி எடுத்து, தொழுவுரத்தையும் நிரப்பிடலாம். ஒத்தக் கலப்பை, தொழுவுரம் நிரப்பும் இரும்புக்கூடை ரெண்டு கருவியையும் வடிவமைக்க 25,000 ரூபாய் வரைக்கும் செலவாச்சு. இந்தக் கருவிகளை இன்னும் நேர்த்தியா வடிவமைச்சா, கருவிக்கான செலவு இன்னும் குறையும்” என்று விடை கொடுத்தார்.

தொடர்புக்கு, மாடசாமி,

செல்போன்: 93447 44756.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு