நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

"கையில் கிடைக்கும் பொருள்களே போதும்!" 50 ரூபாய் செலவில் களை எடுக்கும் கருவி!

கருவியுடன் சுசீந்தர்
பிரீமியம் ஸ்டோரி
News
கருவியுடன் சுசீந்தர்

கண்டுபிடிப்பு

நெல் சாகுபடியில் ஆள் பற்றாக் குறையைச் சமாளிக்கும் வகையில் 50 ரூபாய் செலவில் களையெடுக்கும் ஓர் எளிய கருவியைக் கண்டு பிடித்துள்ளார் இளம் விவசாயி சுசீந்தர். கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சுசீந்தர். பசுமை விகடன் வாசகர்களுக்கு இவர் ஏற்கெனவே அறிமுக மானவர்தான். இவர் பயிரிட்ட ‘சின்னார் 20’ என்ற ரகத்தில் புதிதாக உருவான சிவப்பு, கறுப்பு ரகங்கள் குறித்து 10.08.2021 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் எழுதியிருந்தோம்.

சமீபத்தில் இவர், மரக்கம்புகளை வைத்து, களையெடுக்கும் கருவி கண்டுபிடித்துள்ளதைப் பற்றி அறிந்து, அவரைச் சந்தித்தோம். “இது மிகவும் எளிமையா செய்யப்பட்ட கருவி. ஆனால், இது மூலமா கிடைக்குற பலன் ரொம்ப அதிகம்’’ என்ற பீடிகையுடன் பேசத் தொடங்கினார் சுசீந்தர்.

“எனக்கு இந்த யோசனை வர்றதுக்குக் காரணம், ஆள்கள் பற்றாக்குறைதான். நம்ம நெல் வயல்ல சரியான சமயத்துல களை யெடுக்கணும். ஆனா, அந்த நேரத்துல ஆளைத் தேடி அலையிறதே பெரும் வேலையா இருக்கு. அதனால சரியான நேரத்துல வேலை செய்ய முடியாம மகசூல் இழப்பு வரைக்கும் போயிடுது. இதுக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சுதான் இந்த எளிமை யான கருவியைச் செஞ்சு பார்த்தேன்.

கட்டுக்கம்பியால் உருவான கருவி

நாற்று நடவுக்குப் பிறகு, களை பறிக்க கோனோவீடர் இருக்குது. ஆனா, அதை எல்லா வயல்லயும் பயன்படுத்த முடியாது. வரிசை முறையில நாத்து நடப்பட்ட வயல்ல தான் அதைப் பயன்படுத்த முடியும். பெரும்பாலான விவசாயிக வரிசை முறையில நடுறது இல்ல. அது வரிசையா இருக்காது. அந்த வயல்ல கோனோவீடரை பயன்படுத்த முடியாது. அதனால வீட்டுல கிடைக்குற மரக்கட்டை, கட்டுக்கம்பியை மட்டும் வச்சு, இந்தக் கருவியை உருவாக்குனேன்’’ என்றவர், கருவியின் தொழில்நுட்பம் குறித்து விளக்கினார்.

கருவியுடன் சுசீந்தர்
கருவியுடன் சுசீந்தர்

கம்பு, கம்பி போதும்

‘‘கையில் பிடிக்கும் அளவுக்கு 7 அடி நீளத்தில் கம்பு ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். 6 அடி நீளத்தில் மற்றொரு ரீப்பர் அல்லது கம்பை எடுத்துக்கொண்டு இரண்டையும் ‘T’ வடிவில் இணைத்துக்கொள்ள வேண்டும். உறுதித்தன்மைக்காக ‘V’ வடிவ சட்டம் கொண்டு இரண்டு கம்புகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, 3 அடி நீளத்தில் மூன்று கட்டுக் கம்பிகளை எடுத்து 6 அடி நீளம் கொண்ட கம்பின் மீது வைத்து இரண்டாக மடித்து இறுக்கமாக முறுக்கி விட வேண்டும். முனைப்பகுதியை மட்டும் சற்று படர்ந்த நிலையில் வைக்க வேண்டும். இப்படித் தேவையான அளவுக் கம்பிகளை அந்தக் கம்பு முழுவதும் முறுக்கி வைத்துக்கொண்டால் போதும். அதுவே இறுதியான வடிவம். அதைக் கொண்டு நாற்று நடவு செய்த வயலில் வைத்துக் களை பறிக்கலாம்’’ என்றவர், அந்தக் கருவியைக் கொண்டு வயலில் களையெடுத்துக் காட்டினார்.

10 ஆள்கள் வேலையை ஒத்தை ஆள் செய்யலாம்

‘‘இதை இழுக்க ஒரு ஆள் போதும். ரொம்பவும் சுலபமான வேலை. இந்தக் கருவியை வச்சு, ஒரு ஆள், ஒரு நாளைக்கு 2 ஏக்கர் வரைக்கும் களை எடுக்கலாம். இதையே ஆள் மூலமா செய்தால், ஒரு ஏக்கருக்கு 10 ஆள்கள் தேவைப்படும். அத்தனை ஆளுங்க செய்யுற வேலையை, ஒருத்தரே செஞ்சிட்டுப் போயிடலாம். வேலையாளுங் களை நம்பியிருக்க வேண்டிய தேவையில்ல. வயல்ல தண்ணி நிற்கும்போதுதான், இந்தக் கருவி மூலம் களை எடுக்க முடியும்.

கருவியுடன் சுசீந்தர்
கருவியுடன் சுசீந்தர்

இந்தக் கருவி, களை எடுக்கப் பயன்படுறதோடு மட்டுமல்லாம, இலைச் சுருட்டுப்புழு பாதிப்பிலிருந்தும் பாதுகாக்கும். நெல் வயல்ல இதை வச்சு களையெடுக்கும்போது, ஒவ்வொரு தூர் வழியாகவும் இந்தக் கட்டுக் கம்பிக போறதுனால இலை சுருட்டுப் புழுக்கள், பூச்சிக இருந்தா கீழே விழுந்திடும். நாற்று நடவு பண்ணுன 7 முதல் 15 நாள்ல இந்தக் கருவியைப் பயன்படுத்தினா நல்ல பலன் கிடைக்கும். அந்தச் சமயத்திலதான் களைகள் வளர ஆரம்பிக்கும். இந்தக் கருவியைப் பயன் படுத்தும்போது இதில் உள்ள கம்பிக சுமார் 1 இன்ச் ஆழத்துல தரையைக் கீறிட்டுப் போகும். அதனால களைகள் வேரோட வந்துடும். விளைச்சலுக்குக் காற்றோட்டமான சூழ்நிலையும் உருவாகும். அதோட நுண்ணூட்டச் சத்துகளை மறுபடியும் கிளறிவிடும். இதனால விளைச்சல் நல்லா இருக்கும்’’ என்றவர் நிறைவாக,

ஒரு போகத்துக்கு 5,000 ரூபாய் லாபம்

‘‘சராசரியா ஒரு ஏக்கருக்கு ஒரு தடவை களையெடுக்கணும்னா 2,500 ரூபாய் வரைக்கும் ஆளுங்க கூலிக்குச் செலவாகும். இந்தக் கருவி, அந்தச் செலவை மிச்சப்படுத்திடுது. கட்டுக் கம்பிக வாங்க 50 ரூபாய் இருந்தா போதும். வீட்டுல கிடைக்குற பொருள்களை வச்சு, இதை நாமளே தயார் பண்ணிடலாம். இதனால ஒரு போகத்துக்குச் சராசரியா 5,000 ரூபாய் வரைக்கும் சேமிக்க முடியும். விருப்பம் உள்ளவங்க இரும்புக் குழாய்கள்ல வெல்டிங் வச்சும், இதைத் தயார் செஞ்சு பயன்படுத் தலாம். பாலித்தீன் குழாயில இந்தக் கருவியைச் செய்யும்போது, குழாயைச் சேமிப்புக் கலனாக மாத்தி, அதுல இடுபொருளை நிரப்பி நேரடியா அதைப் பயிருக்குக் கொடுக்க முடியும். சீனா மாதிரியான நாடுகள்ல சங்கிலியைப் பயன்படுத்தி இது மாதிரியான கருவியைச் செஞ்சு உபயோகிக்கிறாங்க. ஆனா, அது மாதிரி நாம செய்றதுக்கு அதிக செலவாகும். அதனால சுலபமான முறையில இதைச் செஞ்சிருக்கேன். நான் இப்ப ஒரு ஏக்கர்ல ஆடுதுறை-54 (ADT-54) ரகத்தை இயற்கை முறையில பட்டம் நடவு பண்ணியிருக்கேன். அதுல இந்தக் கருவியைப் பயன்படுத்திட்டு இருக்கேன். நல்ல பலன் கிடைக்குது. பயிருக்கு எந்த விதமான பாதிப்பையும் இது பயிருக்கு ஏற்படுத்தல” என்றார்.தொடர்புக்கு, சுசீந்தர்,

செல்போன்: 99526 37722