ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

உழவு ஓட்ட ஆள் தேவையில்லை... ரிமோட் போதும்..! இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு

ரிமோட்டுடன் அஸ்வின் ராம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரிமோட்டுடன் அஸ்வின் ராம்

கருவி

காவிரி டெல்டா விவசாயிகள் உழவு செய்வதற்குக் ‘கைவண்டி’ எனப்படும் கையால் உழவு ஓட்டும் எந்திரமே (பவர் டில்லர்) அதிக அளவில் பயன்படுகிறது. இதைப் பயன் படுத்தும்போது, பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிறார்கள் உழவர்கள். சில இடங்களில் வண்டியை இயக்க அதை ஓட்டத் தெரிந்த நபர்களுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. பல ஆண்டுகளாக இருக்கும் இந்தப் பிரச்னைக்கு எளிய தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார் விவசாயியின் மகனும் பொறியாளருமான அஸ்வின் ராம் என்ற இளைஞர். இது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அருகே நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி அருள்சிம்மன். இவரின் மகன் அஸ்வின் ராம் திருத்தணியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படித்துள்ளார். கடந்தாண்டு படிப்பை முடித்து ஊருக்கு வந்தவர் கொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ளார். அப்போது, பவர் டில்லரை இயக்க அப்பா படும் கஷ்டத்தை நேரில் பார்த்தவர், அதற்குத் தீர்வு காணும் முயற்சியில் இறங்கியிருக்கிறார், ஆள் இல்லாமல் ரிமோட் மூலமாக பவர் டில்லர் இயங்குவது போல வடிவமைத்திருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசிய அருளசிம்மன், “எங்ககிட்ட ‘கை டிராக்டர்’னு சொல்லுற ‘பவர் டில்லர்’ ஒண்ணு இருக்குது. இத கையில பிடிச்சும் ஓட்டலம். உக்காந்து கிட்டும் ஓட்டலாம். ஆனா, இதை ஓட்ட அவ்வளவு சீக்கிரத்துல ஆள் கிடைக்காது. அதுக்கு டிரைவர் கிடைக்குறதை வெச்சுதான் விவசாயமே செய்ய முடியும். என்கிட்ட இருக்க பவர் டில்லரை மத்தவங்களுக்கும் வாடகைக்கு அனுப்புவேன். அப்படி அனுப்புற ஒவ்வொரு தடவையும் டிரைவரைப் பிடிச்சு அனுப்புறதுக் குள்ள போதும் போதும்னு ஆகிடும். அதனால நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒருநாள் வீட்டுல இருந்த பையன்கிட்ட இந்தப் பிரச்னை யைப் பத்தி சொன்னேன். விடுங்கப்பா இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிச்சுடலாம்னு சொன்னான்.

அவன் சொன்னது மாதிரியே ரிமோட் கண்டுபிடிச்சுட்டான். இனிமே வயல்ல இறங்காமலேயே உழவு ஓட்டலாம். அதைச் சோதனை முயற்சியா செஞ்சு பார்த்தோம். நல்லா இருக்கு. இது எனக்கு மட்டுமல்ல...ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் உதவியா இருக்கும். அரசாங்கமும் விவசாயச் சமூகமும் என் மகனைப் பயன்படுத்திக்கணும். அதுதான் என்னோட ஆசை’’ என்றார் பூரிப்போடு.

ரிமோட்டுடன் அஸ்வின் ராம்
ரிமோட்டுடன் அஸ்வின் ராம்

இது தொடர்பாக அஸ்வின் ராமிடம் பேசினோம். ‘‘ ‘எதிர்காலத் திட்டம் குறித்துக் கனவு காணுங்கள். அதையே மீண்டும் மீண்டும் அசை போடுங்கள். நிச்சயம் ஒருநாள் வெற்றி பெறுவீர்கள்’னு சொன்ன அப்துல் கலாம் ஐயாவோட அறிவுரைதான் எனக்கு வேதவாக்கு. ‘தினமும் அதிகரிச்சு கிட்டே போகுது பெட்ரோல், டீசல் விலை. இதனால சாமானிய மக்கள் பாதிக்கப்படுறாங்க. விலை விஷயத்துல நாம ஒண்ணும் பண்ண முடியாது. ஆனா, பயன்பாட்டைக் குறைக்க முடியுமான்னு என்னோட கல்லூரி நண்பர்களோட சேர்ந்து விவாதிச்சோம்.

ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா சுமார் 150 கி.மீ வரைக்கும் வண்டி போற மாதிரி இன்ஜின் திறனை அதிகரிக்கலாம்னு கூட்டு முயற்சியில இறங்கினோம். அந்த முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டுறதுக்குள்ள கொரோனா ஊரடங்கு வந்திடுச்சு. நானும் இங்கு வந்துட்டேன். நண்பர்களோட தொடர்ந்து பேசிக் கிட்டுதான் இருக்கிறேன். எங்க முயற்சியில நிச்சயம் வெற்றிபெறுவோம்னு நம்பிக்கை இருக்கு.

இங்கே ஊருக்கு வந்த பிறகுதான் உழவு எந்திரத்தைப் பயன்படுத்த அப்பா எவ்வளவு கஷ்டப்படுறாருன்னு புரிஞ்சது. அதை அப்பா வேதனையோட சொன்னப்ப மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு. அதுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். டிரைவர் இல்லாமலேயே பவர் டில்லரை எப்படி இயக்கலாம்னு யோசிச்சேன். ஒரு மாசம் யோசிச்சு, ரிமோட் கன்ட்ரோல் மூலம் டிராக்டரை இயக்கலாம்னு கண்டுபிடிச்சேன். இதுக்காக 16,000 ரூபாய் செலவுல ரிமோட்டை வடிவமைச்சேன்” என்றவர், ரிமோட் மூலமாக பவர் டில்லரை இயக்கிக் காட்டினார்.

“ரிமோட்டை இயக்க ஒரு பேனல் போர்டை டிராக்டர்ல பொருத்தணும். அதுக்கு நாலு போல்ட்டு மட்டும்தான் தேவை. அதுக்கு பிறகு வரப்பிலிருந்தே இயக்கலாம். பவர் ஸ்பிரேயரில் இருக்க 7.5 ஆம்பியர் பேட்டரியே போதும். ஒரு ஏக்கர் நிலத்தை உழவு செய்ய 2 மணி நேரம் ஆகும். ஆனால், இந்த ரிமோட் மூலம் ஒரு மணி நேரத்திலேயே உழுதிடலாம். பவர் டில்லர் வரப்புல முட்டுனாலும், எந்திரம் சாய்றது மாதிரி இருந்தாலும் தானாகவே நின்றுடும்.

இந்த ரிமோட்டை வெச்சு, கண்ணுக்கெட்டிய தூரம்வரைக்கும் அதாவது சுமார் 3 ஏக்கர் வரைக்கும் இருந்த இடத்திலிருந்தே உழவு செய்யலாம். விவசாயத்துக்கு ஆள்கள் பற்றாக்குறையுள்ள இந்தக் காலகட்டத்தில பவர் டில்லர் மாதிரியான உழவு எந்திரங்கள்ல இந்த ரிமோட் பயன்படுத்துனா, அது விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியா இருக்கும்” என்றார் நம்பிக்கையோடு!தொடர்புக்கு, அஸ்வின் ராம்,

செல்போன்: 79045 47947