Published:Updated:

பனிக்கூடாரம் தொழில்நுட்பம் வறட்சியிலும் நாற்று உற்பத்தி செய்யலாம்! உவர் மண் ஆராய்ச்சி மையம் அறிமுகம்

பனிக்கூடாரம் தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
பனிக்கூடாரம் தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

பனிக்கூடாரம் தொழில்நுட்பம் வறட்சியிலும் நாற்று உற்பத்தி செய்யலாம்! உவர் மண் ஆராய்ச்சி மையம் அறிமுகம்

தொழில்நுட்பம்

Published:Updated:
பனிக்கூடாரம் தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
பனிக்கூடாரம் தொழில்நுட்பம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது கடலோர உவர்மண் ஆராய்ச்சி மையம். ராமநாதபுரம் மாவட்டத்துக்குரிய, குறைந்த நீரில் விளையும் புதிய பயிர் வகைகளை, சோதனை முறையில் வளர்த்து விவசாயி களுக்கு வழங்கிவருகிறது. இந்த உவர்மண் ஆராய்ச்சி மையம் புதிய விவசாயத் தொழில்நுட்பங்களையும் வழங்கிவருகிறது. ‘மாவட்டத்தில் கடும் வெப்பம் காரணமாக உற்பத்தி செய்யப்படும் செடிகள், நாற்றுகள் சரியான முளைப்புதிறன் அடையாமலேயே கருகி வீணாகிவிடுகின்றன. அதற்கு மாற்றுவழி உருவாக்கிக் கொடுக்க வேண்டும்’ என உவர்மண் ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன் பலனாகச் சில தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளது அந்த ஆராய்ச்சி மையம்.

இது தொடர்பாக உவர்மண் ஆராய்ச்சி மையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவனை நேரில் சந்தித்துப் பேசினோம். உவர்மண் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்று வரும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் குறித்து உற்சாகமாகப் பேசினார்.

ராகவன்  - பாலசுப்பிரமணியன்
ராகவன் - பாலசுப்பிரமணியன்

‘‘ராமநாதபுரம் மாவட்டம் மிகுந்த வறட்சியான மாவட்டம். வானம் பார்த்த பூமி. இங்கு மழைபெய்தால்தான் விவசாயம். டிசம்பர் மாதத்தில் மழை பெய்தால் பிற மாவட்ட விவசாயிகளுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்படக்கூடிய சூழல் உள்ளது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் டிசம்பர் மாதம் எப்போது மழை பெய்யும் என விவசாயிகள் காத்துக்கிடப்பார்கள். ஏனென்றால் இங்கு அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் நடவு நட்டு பால்பிடிக்கும் பருவம் அடையும். அதன் பின்னர், பெய்யும் மழைநீரைக் கொண்டு பயிர்களை வளர்த்து பிப்ரவரி முதல் அறுவடைப் பணிகளைப் படிப்படியாகத் தொடங்குவார்கள். டிசம்பரில் மழை பெய்யவில்லையென்றால் விவசாயிகள் வாழ்வாதாரம் அந்த ஆண்டு கேள்விக் குறியாகிவிடும். திருவாடானை, பரமக்குடி பகுதிகளில் ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக இருக்கும் என்பதால் ஒருபோகம் சாகுபடி செய்வதில் அவர் களுக்குப் பெரும்பாலும் சிக்கல் ஏற்படுவ தில்லை. முதுகுளத்தூர், கமுதி, கடலாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மழைநீரை நம்பியே விவசாயம் செய்துவருகின்றனர்.

ராகவன்
ராகவன்

இந்த மண்ணில் நெல், பருத்தி, குண்டு மிளகாய் தவிர வேறு எந்தப் பயிரை விளைய வைத்தாலும் விளையாது. காரணம் நிலத்தடி நீர் தட்டுப்பாடு, உவர்மண் என்பதால் வளராது என்ற எண்ணம் விவசாயிகளிடையே உள்ளது. அவர்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக உவர்மண் ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு விவசாயிகளுக்குத் தகுந்த பயிற்சி அளித்து மாற்றுப்பயிர்களுக்கு மாற்றி வருகிறோம். அந்த வகையில் இங்குள்ள வேளாண் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் தான் பனிகூடாரம்’’ என்றவர் நம்மை அந்தப் பனிகூடாரப்பகுதிக்கு அழைத்துச் சென்று காண்பித்துவிட்டு, உதவிப் பேராசிரியர் பாலசுப்பிரமணியனை அறிமுகப்படுத்தினார்.

பனிக்கூடாரத்தில் நாற்று உற்பத்தி
பனிக்கூடாரத்தில் நாற்று உற்பத்தி

அவர், அந்தப் பனிகூடாரம் குறித்து நம்மிடம் பேசினார். ‘‘ஒருசெடி வளர வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் மிக முக்கியமாகும். ராமநாதபுரம் அதிக வெப்பத்தையும் குறைவான ஈரப்பதத்தையும் கொண்டுள்ள பகுதி என்பதால் விவசாயிகள் நெல், பருத்தி தவிர, மற்ற பயிர்களைப் பயிரிடுவதைப் பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். இச்சூழலில் தோட்டக்கலை பயிர் நாற்றுகளை எளிதில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து அறிமுகப் படுத்தி வருகிறோம். அதில் முக்கியப் பங்கு வகிக்கும் தொழில்நுட்பமாக இந்தப் பனிகூடாரம் தொழில்நுட்பம் விளங்கி வருகிறது. இது ராமநாதபுரம் விவசாயிகளுக்கு மட்டுமன்றி கடலோர மாவட்ட விவசாயி களுக்கும், அதிக வெப்பம் நிலவும் பகுதிகளுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாத மாகும். இந்தப் பனிகூடாரத்தின் மூலம் 365 நாள்களும் தோட்டக்கலை பயிர்களின் நாற்றுகளை உற்பத்தி செய்ய முடியும்.

பனிக்கூடாரம்
பனிக்கூடாரம்

இதில் விதை மூலம் உற்பத்தி, தண்டு மூலம் உற்பத்தி, பதியம்போடுதல், ஒட்டுகட்டுதல் ஆகிய முறைகளில் தோட்டக்கலைப் பயிர் பெருக்கம் செய்ய முடியும். 1:1:1 என்ற அளவில் செம்மண், மணல், தொழுவுரம் கலந்து நாற்றுகளை உற்பத்தி செய்வதால் விரைவில் நாற்றுகள் வளர்ச்சி அடையும். தோராயமாக 22 முதல் 28 நாள்களுக்கு வேர் மற்றும் இலை நன்கு வளர்ச்சி அடைகிறது. அதற்கு முக்கியக் காரணம், இந்தக் கூடாரத்தில் உள்ள கட்டமைப்புதான். இந்தக் கூடாரத்தின் மேல்பகுதி 250 மைக்ரான் தடிமன் உடைய நெகிழி கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் காற்றின் ஈரப்பதம் 80 முதல் 90 சதவிகிதம் வரை தக்கவைத்துக்கொள்வதால் நாற்றுகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி வெகுவிரைவில் நடைபெறுகிறது.

பனிக்கூடாரத்தில் நாற்று உற்பத்தி
பனிக்கூடாரத்தில் நாற்று உற்பத்தி


தற்போது மா, கொய்யா, மாதுளை, சப்போட்டா, நெல்லி, முந்திரி, எலுமிச்சை, சீத்தாப்பழம்... முதலிய பழவகைகளும்; வேம்பு, பூவரசு, புங்கம், நாவல், பாக்கு வகைகளும்; துளசி, தூதுவளை, ஆடாதோடா, சர்க்கரைக்கொல்லி, சோற்றுக்கற்றாழை, ஓமம், திருநீற்றுப்பச்சிலை, கோலியாஸ், லெமன்கிராஸ், வெட்டிவேர் என 35-க்கும் மேற்பட்ட மூலிகைசெடிகளும்; கீரை வகைகளும்; குரோட்டன்ஸ், மல்லிகை, ரோஜா, காகிதப்பூ என 42-க்கும் அதிகமான அழகுச் செடி நாற்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இங்கு உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறோம். அதேசமயம் இந்த பனிகூடாரத்தை தனியாக விவசாயிகள் அமைத்தால் சதுர அடிக்கு 350 ரூபாய் வரை செலவாகும். இதற்கான ஆலோசனைகளை வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்று அழைப்பு விடுத்தார்.



தொடர்புக்கு,

உதவிப் பேராசிரியர்

பாலசுப்பிரமணியன்,

செல்போன்: 80988 58549

நாற்று உற்பத்தி செய்ய உதவுகிறது!

ராமநாதபுரம் உவர்நில ஆராய்ச்சி மையத்தின் ஆலோசனைமூலம் பனிக்கூடாரம் அமைத்துப் பலவகையான நாற்றுகளை உற்பத்தி செய்து வரும் ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஶ்ரீனிஹபீப்பை சந்தித்துப் பேசினோம்.

ஶ்ரீனிஹபீப்
ஶ்ரீனிஹபீப்


‘‘என்னுடைய நிலத்துல நெல், பருத்தி, தானிய வகைகளைச் சாகுபடி செய்திட்டு இருந்தேன். ஆனா, அளவுக்கதிமான மழை, கடும் வறட்சியால விவசாயத்துல வருமானம் பார்க்க முடியாத நிலைமை. இந்த நிலையிலதான், ராமநாதபுரம் உவர் மண் ஆராய்ச்சி மையத்துல பனிக்கூடாரம் அமைச்சு பூ, பழ வகைச் செடிகளை உற்பதி செய்றது தொடர்பா பயிற்சிக் கொடுத்தாங்க. நானும் அதுல கலந்துகிட்டேன். அதுக்குப் பிறகு அவங்க ஆலோசனையைப்படி சின்ன அளவுல ஒரு பனிக்கூடாரம் அமைச்சேன். இது நாற்று உற்பத்திக்கு உதவுற தொழில்நுட்பம். முதல்ல பூ, பழ வகை நாற்றுகளை உற்பத்தி செஞ்சு என்னோட நிலத்துல நடவு பண்ணினேன். நல்ல பலன் கிடைச்சுது. இப்போ, இன்னும் ரெண்டு பனிக்கூடாரம் அமைச்சு மா, பலானு பழவகைக் கன்றுகளும் மல்லி, கனகாம்பரம்னு பூவகை நாற்றுகளும் உற்பத்தி செஞ்சு, விவசாயிகளுக்கு விற்பனையும் செய்துட்டு வர்றேன்.

உவர்மண் ஆராய்ச்சி மையம் உரம் தயாரிக்குற பயிற்சியும் கொடுத்தாங்க. அதன் மூலம் இயற்கை நுண்ணூட்ட உரங்களான மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு, மட்கிய தென்னைநார் கழிவு உரங்களைத் தயாரிச்சு அதையும் விற்பனை பண்ணிட்டு இருக்கேன்’’ என்றார்.

தொடர்புக்கு, ஶ்ரீனிஹபீப்,

செல்போன்: 63691 17769

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism