Published:Updated:

சிதிலமடைந்த பொன்னணியாறு அணை…. வீணாகும் கோடிகள்!- கொதிப்பில் வையம்பட்டி மக்கள்

பொன்னணியாறு அணை
பொன்னணியாறு அணை

அணையை மேம்படுத்த பல கோடிகள் செலவு செய்ததாகக் கணக்கு காட்டுகிறார்கள். ஆனால், எந்தவித முன்னேற்றமும் இல்லை எனப் புலம்புகிறார்கள் திருச்சி சுற்றுலாப் பயணிகள்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது பொன்னணியாறு அணை. அப்பகுதியில் உள்ள பசுமையான பெருமாள்மலை மற்றும் செம்மலை உள்ளிட்ட மலைகளுக்கு இடையே பசுமையாக, இயற்கைப் பேரழகுடன் அமைந்துள்ளது இந்த அணை.

பொன்னணியாறு அணை
பொன்னணியாறு அணை

மழைக்காலங்களில் திரண்டுவரும் காட்டாற்று வெள்ளத்தைச் சேமிக்கும் நோக்கத்தில் கடந்த 1975ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவின்பேரில் 1 கோடி ரூபாய் மதிப்பில் 51 அடியில் இந்த அணை கட்டப்பட்டது. தொடர்ந்து, இந்த அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர், தும்பச்சி, மாமுண்டி, அரியாறு உள்ளிட்ட ஆறுகளுடன் இணைந்து, குடமுருட்டி ஆறு வழியாகக் காவிரியில் கலக்கிறது.

பொன்னணியாறு அணை
பொன்னணியாறு அணை

313 ஏக்கரில் அமைந்துள்ள இந்த அணை, பல குளங்களுக்கு நீராதாரமாக விளங்குவதுடன், சுமார் 2500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன நீர் ஆதாரமாகவும் சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.

அணைக் கட்டிய புதிதில், ஏற்பட்ட வெள்ளத்தால் அணை நிரம்பி வழிந்ததாகக் கூறப்படுகிறது. இப்பகுதி மக்களின் வரப்பிரசாதமாக விளங்கிய இந்த அணை, கடந்த சில வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் நிலவும், கடும் வறட்சியால் நீர்வரத்து குறைந்துள்ளது.

இதன்காரணமாகப் பார்வையாளர்கள் வருகையால் படு பிஸியாக இருந்த சுற்றுலாத்தளம் இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள இந்த அணையின் நீர்பிடிப்புப் பகுதிகள் அனைத்தும் கரூர் மாவட்டத்திலும், அணை திருச்சி மாவட்டத்திலும் இருக்கிறது. அதனால், இந்த அணை திருச்சி - கரூர் மாவட்ட அதிகாரிகளின் போட்டியால், இவ்வளவு சிக்கல் எனக் கொதிக்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.

பொன்னணியாறு அணை
பொன்னணியாறு அணை

2011ம் ஆண்டு அணையைப் பராமரிப்பு செய்வதற்காக உலக வங்கி 2.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. தொடர்ச்சியாக நடைபாதை, பூங்காக்கள் அழகுபடுத்தப்பட்டது. பாசனக் காலமான செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் அணையின் கொள்ளளவு 43அடியை எட்டும்போது அணை நீர்ப் பாசனத்துக்காகத் திறந்து விடப்படுவது வழக்கம்.

அந்த வழக்கம் 2012-ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், அணையின் 6,225 மீட்டர் தொலைவு சேதமடைந்தது.

பொன்னணியாறு அணை
பொன்னணியாறு அணை

அதையடுத்து, பாசன வாய்க்கால்ப் பகுதிகளை உலக வங்கியின் இந்தியத் தரக்கட்டுப்பாடு ஆலோசகர்கள் மல்ஹோத்ரா மற்றும் ராஜகோபால், பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர்கள் ஆய்வு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், ரூ.2.96 லட்சம் நிதியுதவி கிடைத்தது. அதன்படி சேதமடைந்த பாசன வாய்க்கால்ப் பகுதிகளை கான்கிரீட் பாதைகளாகச் சீரமைக்கும் பணி தொடங்கியது. அதை முழுமையாகப் பராமரிக்காததால் அவ்வளவும் வீணாகப் போனது.

தற்போது அணையில் உள்ள பூங்காவிற்குச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் நிலையில், விளையாட்டுச் சாதனங்கள் சேதமடைந்தும் நீரூற்றில் நீர் இல்லாமலும், மேலும் பூங்காவில் உள்ள மான், யானை உள்ளிட்ட சிலைகளும், குழந்தைகள் விளையாடும் சிமென்ட் சறுக்கல் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. இவற்றைச் சரி செய்யாமல் வைத்திருப்பது, அங்குவரும் சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பொன்னணியாறு அணை
பொன்னணியாறு அணை

நம்மிடம் பேசிய பயணிகள், ``பூங்கா பகுதியில் செல்லும் மின்கம்பிகள் பச்சை மரங்களின் மீது உரசி, கையெட்டும் தூரத்தில் உள்ளன. அணையைச் சீரமைக்கப் பல நூறு கோடிகளில் பணம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், கடந்த 7ஆண்டுகளாகப் போதிய நீர்வரத்து இல்லாததால், அணையில் தண்ணீர் தேங்கினாலும், பாசனத்துக்குத் தண்ணீர் விட முடியவில்லை.

பராமரிப்புச் செலவுகளைக் கோடிகளில் காட்டும் அரசு அதிகாரிகள், முறையாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினால், வறண்டு கிடக்கும் மணப்பாறை, வையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குப் பயன்படும்” என்றனர்.

அணையைக் காப்பாற்ற மனது வைக்கப்போவது யாரோ?

அடுத்த கட்டுரைக்கு