Published:Updated:

``இந்த சந்தோஷம் என் மன அழுத்தத்தையே விரட்டிடுச்சு!" - வீட்டுத்தோட்ட அனுபவம் பகிரும் சுஜாதா பாபு - 7

செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு சென்னையில் உள்ள துரைப்பாக்கத்தில் தன் வீட்டில் சிறிய அளவில் தோட்டம் அமைத்து தினமும் பராமரித்து வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நம் வீடுகளில் மட்டுமல்ல; சினிமா, அரசியல் பிரபலங்கள் மத்தியிலும் வீட்டில் மாடித்தோட்டம் அமைக்கும் வழக்கம் இப்போது வளர்ந்து வருகிறது. அவர்களின் மாடித்தோட்டம் குறித்த தகவல்களைத் தருவதற்காகவும், அவர்களின் தோட்டத்துக்கே உங்களை அழைத்துச் செல்லவும்தான் இந்த நட்சத்திரத் தோட்டம் தொடர். இந்த முறை செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபுவின் வீட்டுதோட்டம் பற்றிப் பார்க்கலாம்.

சுஜாதா பாபு
சுஜாதா பாபு

செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு சென்னையில் உள்ள துரைப்பாக்கத்தில் தன் வீட்டில் சிறிய அளவில் தோட்டம் அமைத்துத் தினமும் பராமரித்து வருகிறார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார், சுஜாதா பாபு. செய்தி வாசிப்பைத் தாண்டி நடிப்பு, மாடலிங் எனக் கெத்து காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார். இவையெல்லாம் தாண்டி சென்னையில் வீடு முழுக்க விதவிதமான மலர்கள், மூலிகைகள், தென்னை, மா என வீட்டைச் சுற்றிலும் தோட்டம் அமைத்துப் பசுமையைப் பரப்பி வருகிறார்.

மாங்காய்
மாங்காய்
`தக்காளி முதல் டிராகன் ஃப்ரூட் வரை!' - நடிகை சீதாவின் மாடித்தோட்ட அனுபவம் - நட்சத்திரத் தோட்டம் - 4

சுஜாதா பாபுவுக்கு ப்ளஸ் டூ முடித்ததும் திருமணம் ஆகியிருக்கிறது. கணவர்தான் இவரை எம்.ஏ வரை படிக்க வைத்திருக்கிறார். இவரது கணவர் கேரளா தூர்தர்ஷன் டி.வியில் கேமராமேனாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். தனது மகனைப் பள்ளியில் சேர்ப்பதற்காகக் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு குடும்பத்துடன் மாறுதலாகி வந்திருக்கிறார், சுஜாதா பாபு. அப்போது பேப்பரில் செய்தி வாசிப்பாளர் விளம்பரத்தைப் பார்த்த கணவர், `நீயும் அப்ளை பண்ணலாம்' எனச் சொல்ல, சுஜாதா பாபு விண்ணப்பித்திருக்கிறார். இவரும் நேர்காணலுக்குப் போக, உடனே வேலைக்குச் சேரச் சொல்லிவிட்டார்கள். திருமணத்துக்குப் பிறகு மீடியாவுக்கு வந்து, இத்தனை வருஷமாகத் தொடர்ந்து கேமராவை விட்டு விலகாமல் தொடர்ந்து செய்தி வாசித்துக் கொண்டிருக்கிறார். செய்தி வாசிப்பாளராக இவர் வேலை பார்க்கும்போதே நடிக்க வாய்ப்புகள் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறது. தனது மகனையும் கவனித்துக் கொண்டு, வீட்டைவிட்டு வெளியே போய் நியூஸ் வாசிப்பதே பெரிய விஷயம். இதில் நடிப்பெல்லாம் தேவையா என வாய்ப்புகளை மறுத்துவிட்டார். இப்போது மகனும் பெரியவனானதுக்குப் பிறகு, இப்போது படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னதான் வேலை வேலை என இருந்தாலும் செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் கொஞ்சம் அதிகமாகவே இருந்திருக்கிறது, இவருக்கு. சில வருடங்களுக்கு முன்னால் வீட்டுத்தோட்டம் அமைக்கலாம் என முடிவு செய்தவர் செம்பருத்தி, டேபிள் ரோஸ் என ஆரம்பித்திருக்கிறார். இப்போது வெற்றிலை, தூதுவளை, கற்பூரவள்ளி, துளசி, கற்றாழை என மூலிகைகள் பக்கம் திரும்பியிருக்கிறது. அதுபோக மூன்று தென்னை மரங்கள், ஒரு மாமரம் என வீட்டைச் சுற்றிலும் பசுமையைப் படர விட்டிருக்கிறார்.

செம்பருத்தி
செம்பருத்தி
`இயற்கையா விளைஞ்ச காலிஃப்ளவரின் ருசியே தனி!' - காயத்ரி ஜெயராமனின் மாடித்தோட்ட அனுபவம் - 3

தனது வீட்டுச் செடிகளுக்கு அடியுரமாக மாட்டு எரு, மண்புழு உரம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார். வேப்பெண்ணெயைப் பூச்சிவிரட்டியாக பயன்படுத்துகிறார். தோட்டத்தில் கிடைக்கும் பூக்கள், மூலிகைகளை வீட்டுத் தேவைக்குப்போக, அக்கம் பக்கத்தில் இருக்கும் நபர்களுக்கும், தனது நண்பர்களுக்கும் கொடுக்கிறார். இவரது வீட்டில் இருக்கும் மா மரம் சீசன் காலத்தில் காய் கொத்துக்கொத்தாகக் காய்த்துக் கொண்டிருக்கிறது. வெற்றிலைக் கொடியைச் செடியாக வைத்தபோது முதன்முதலாக வைத்தபோது கொஞ்சமாகத்தான் இருந்திருக்கிறது. அதன் பின்னர் கயிற்றைக் கட்டி காம்பவுண்டில் படர வைத்தபின்னர் இப்போது வெற்றிலைத் தோட்டம் போலப் படர்ந்திருக்கிறது. பின்னர் பூச்சி, பாம்புத் தொல்லைகள் அதிகமானதுக்குப் பின்னர் வெற்றிலைக் கொடியை வெட்டிச் சிறியதாகக் குறைத்திருக்கிறார்.

இவரது தோட்டத்தில் பூச்சிகளுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்து வைத்திருக்கிறார். பூச்சிகளில் நல்லது செய்யும் பூச்சிகள் இருக்கத்தானே செய்கிறது என்பது இவரது எண்ணம். வீட்டுத்தோட்டத்தை அமைக்கும்போது மண், அடியுரம் என அனைத்தையும் கவனமாகப் பார்த்து அமைத்திருக்கிறார். இவர் வேலை முடிந்து திரும்ப இரவு 8 மணிக்கு மேல் ஆகிவிடும். அதனால் காலையில் மட்டும் அரை மணிநேரம் வீட்டுத்தோட்ட பராமரிப்பு வேலைகளைக் கவனித்துக் கொள்கிறார். அதற்கும் மேல் வீட்டுத்தோட்ட வேலையில் இருக்க முடியாது. ஒரே நேரத்தில் வீட்டையும், வேலையையும் சமாளித்தாக வேண்டும். அதற்காக வீட்டுத்தோட்டத்தையும் சரியாக கவனிக்க முடியாது எனச் சொல்லிவிட முடியாது. எனவே ஓய்வு நேரம் கிடைக்கும்போது எல்லாம் வீட்டுத்தோட்ட வேலைகளைக் கவனித்துக் கொள்கிறார்.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்
`4 செடில ஆரம்பிச்சது; இப்ப 40 செடிகள்!' - மனோபாலாவின் மாடித்தோட்ட ரவுண்டப் - நட்சத்திரத் தோட்டம் - 1

இவரது வீட்டுத்தோட்டத்தில் மலர் வகைகளில் செம்பருத்தி, முல்லை, கனகாம்பரம், அந்திமந்தாரை, நித்திய மல்லி, அடுக்கு மல்லி, பாரிஜாதம் எனப் பல மலர் வகைகள் பூத்துக் குலுங்குகின்றன. 3 தென்னை மரங்களில் தேங்காய்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. பப்பாளி, கரும்பு, வாழை எனப் பயிர் வகைகளும் இருக்கின்றன. வீட்டில் ஏதும் தலைவலி, தொண்டை கரகரப்பு, எரிச்சல் என உடல் தொந்தரவுகளுக்குக் கற்பூரவள்ளி, துளசி, வெற்றிலை இலைகளைக் கஷாயம் காய்ச்சி பயன்படுத்திக் கொள்கிறார்.

பயிர்களில் நோய்வாய்ப்பட்ட இடம் அதிகமாக இருந்தால் கிள்ளி எறிந்துவிடுகிறார். குறைவாக இருந்தால் இஞ்சி - பூண்டு கரைசல் பயன்படுத்துகிறார். வேரில் ஏதும் நோய்த் தாக்குதல் இருந்தால், வேப்ப எண்ணெயில காதி சோப் கலந்து தெளிக்கிறார். வீட்டில் தோட்டம் அமைத்தது முதல் இதுவரை ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதே இல்லை. இரண்டு நாட்கள் செடிகளைப் பார்க்காமல் இவரால் இருக்க முடியாது.

`இயற்கை முறையில விளைஞ்ச 15 கிலோ காய்கறிகள்!' - அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மாடித்தோட்ட அனுபவம் - 6

ஒருமுறை விகடனுக்கு அளித்த பேட்டியில், ``இந்தப் பயிர்களைப் பயிர் செய்யவே இவ்ளோ கஷ்டமா இருக்கே. ஒரு விவசாயிய நினைச்சுப் பார்த்தா எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு தோணிச்சு. இதுல நான் கத்துக்கிட்ட பாடங்களும் இருக்கு. வீட்டுத்தோட்டத்தைக் கவனிச்சுக்க எனக்குப் போதிய நேரம் இல்லை. அதனால, நான் இல்லாதப்போ என் வீட்டுல வேலை செய்றவங்க தோட்டத்தைக் கவனிச்சுக்கிறாங்க. என்னோட வீட்டுத்தோட்டத்தைப் பார்த்து நண்பர்களும் வீட்டுத்தோட்டம் அமைச்சிருக்காங்க. நல்ல சத்தான சாப்பாடும், உடற்பயிற்சியும் இருந்தாலே போதும்... இளமையான தோற்றம் நம்மை விட்டுப் போகாதுனு நம்புற பெண் நான். பூ எடுக்கும்போது கிடைக்குற சந்தோஷம் மன அழுத்தத்தை விரட்டிடுச்சு.” என்றார்.

வீட்டுத்தோட்டம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு, மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுப்பதாக நம்புகிறார், சுஜாதா பாபு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு