Published:Updated:

`மலர்களை வெட்டி குப்பையில் போடும் அவலம்; மீளமுடியாத் துயர்!’- கலங்கும் நீலகிரி விவசாயிகள்

floriculture  farming
floriculture farming

`லில்லியம் மலர் விதைகளை வரி செலுத்தி நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்தோம். தற்போது பூக்களை வெட்டி குப்பையில் கொட்டுகிறோம்.'

நீலகிரியில் தேயிலை, காபி, மலைக்காய்கறி பயிர்களுக்கு அடுத்தபடியாக கொய்மலர் உற்பத்தி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதில், சுமார் 300-க்கும் அதிகமான உற்பத்தியாளர்கள், 4,000-த்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.

floriculture farming
floriculture farming

லில்லியம், ஜெர்புரா, கார்னேஷன், கிரசாந்திமம் உள்ளிட்ட வண்ண மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொய்மலர் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களை வெட்டி குப்பையில் போடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மலர் உற்பத்தியாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

floriculture farming
floriculture farming

கொய்மலர் உற்பத்தியாளர்களின் துயரம் குறித்து நம்மிடம் பேசிய வாஹிப், ``நீலகிரி கொய்மலர் சாகுபடி சங்கத்தின் தலைவராக உள்ளேன். 300 விவசாயிகளால் சுமார் 5 லட்சம் சதுரஅடி பரப்பில் மலர் உற்பத்தி நடைபெற்று வந்தது.

ஒரு நாளுக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள மலர்கள் அனுப்பப்படுகிறது. லாக்டௌனுக்கு முன்னரே எங்கள் தொழில் பாதிக்க ஆரம்பித்தது. தற்போதுவரை 50 கோடி ரூபாய் இழப்பை நெருங்க உள்ளது. இந்தநிலை மாறுவதற்குள் 100 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் அபாயம் உள்ளது.

floriculture farming
floriculture farming

ஒரு ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி செய்ய குறைந்தபட்சம் 60 லட்சம் செலவாகிறது. ஒரு ஓரியண்டல் லில்லியம் மலர் ரூ.45 விலை கிடைக்கும். லில்லியம் மலர் விதைகளை வரி செலுத்தி நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்தோம்.

தற்போது பூக்களை வெட்டி குப்பையில் கொட்டுகிறோம். தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றுள்ளனர். மீளமுடியாத இந்தத் துயரில் இருந்து மீண்டெழ அரசு இழப்பீடு வழங்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்" என வேதனை தெரிவிக்கிறார்.

floriculture farming
floriculture farming

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``நீலகிரியில் விவசாயிகளிடம் மலைக் காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறோம். மலர்களைக் கொள்முதல் செய்வதற்கான சூழல் இல்லை. இந்த இழப்பு குறித்து ஆய்வு செய்துவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு