Published:Updated:

7 சென்ட் நிலம்... மாடுகள், நாட்டுக்கோழிகள் மூலம் மாதம் ₹30,000 வருமானம்... அசத்தும் பெண் பட்டதாரி!

மாடுகளுடன் நிர்மலா தேவி
மாடுகளுடன் நிர்மலா தேவி

``விவசாயம் சார்ந்த ஒரு தொழில் தொடங்குறதுக்கு ஏக்கர் கணக்குல நிலம் எல்லாம் சொந்தமா இருக்கணும்ங்குற தேவையில்லை. என்கிட்ட வெறும் 7 சென்ட் நிலம்தான் இருக்கு. அதுலதான் இவை அத்தனையும் சாத்தியமாகியிருக்கு."

``நான் 3 டிகிரி முடிச்சிருக்கேன். பொதுவா படிச்ச பெண்கள் மாடுகளைப் பராமரிக்கிறது மாதிரியான வேலைக்கு வர யோசிப்பாங்க. ஆனா, நான் அப்படி இல்ல. எனக்கு இந்த வேலை புடிச்சிருக்கு. இதுல இருந்து மாசத்துக்கு 30,000 ரூபாய் வரைக்கும் லாபம் பார்த்துக்கிட்டிருக்கேன். இந்த வேலை பார்க்கிறதால என் வீட்டையும் நல்லா கவனிக்க முடியுது. நல்ல வருமானமும் கிடைக்குது" என்று மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறார், காஞ்சிபுரம் மாவட்டம், கூரம் கேட் கிராமத்தைச் சேர்ந்த நிர்மலா தேவி. பண்ணையில் வேலை நிமித்தமாக இருந்தவரிடம் பேசினோம்.

தீவனம் தயார் செய்யும் பணியில்
தீவனம் தயார் செய்யும் பணியில்

``என்னோட திருமணத்துக்கு முன்னாடி நிதி நிறுவனத்தில கிளை மேலாளரா இருந்தேன். திருமணத்துக்குப் பின்னாடி வேலையை விட வேண்டிய சூழல் உருவாகிடுச்சு. எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எட் முடிச்சிருக்கேன். வீட்லேயும் சும்மா இருக்கப் பிடிக்கலை. சின்ன வயசுல இருந்தே எங்க வீட்ல மாடுகள் வச்சிருந்தாங்க. அதனால நாட்டு மாடுகள் வளர்க்கலாம்னு ஒரு எண்ணம் வந்தது. இதைக் கணவர்கிட்ட கேட்டப்போ ஓகே சொல்லிட்டாரு. என் சொந்த ஊரான கோயம்புத்தூர்ல இருந்து மாடுகளைக் கொண்டுவந்து வளர்த்துக்கிட்டிருக்கேன். மாடு கொடுத்த தெம்பால கூடவே கோழிகளையும் வளர்க்குறேன். இதுபோக மதிப்புக் கூட்டல் மூலம் எள் மிட்டாய், கடலை மிட்டாய் உள்ளிட்ட பொருள்களையும் தயார் பண்ணி விற்பனை செய்துகிட்டிருக்கேன்.

7 சென்ட் நிலத்துல மாட்டுப் பண்ணை வச்சிருக்கேன். என்கிட்ட மொத்தமா 9 மாடுகள் இருக்கு. மாடுகளின் தீவனத்துக்காக ஒரு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துருக்கேன். இதுல இருந்து கிடைக்குற தீவனங்களைத்தான் மாடுகளுக்குக் கொடுத்துகிட்டு வர்றேன். மாட்டுப் பண்ணையைச் சுற்றிலும் கம்பி வலை அமைச்சிருக்கேன். மாடுகளை வெயில் நேரத்துல மட்டும்தான் கொட்டகைக்கு உள்ள கட்டி வைப்பேன். மீத நேரமெல்லாம் வெளிய இருக்குற இடத்துலதான் கட்டி வைப்பேன். நான் வச்சிருக்குறது எல்லாமே கலப்பின மாடுகள்தாம். ஒரு மாடு தினமும் அதிகபட்சமா 8 லிட்டர் கொடுக்குது. இந்த வகையான மாடுகள் அதிகமா வெயில் தாங்காது. அதனால கூரையில் கொட்டகை அமைச்சிருக்கேன். இந்த மாடுகளைப் பக்குவமாத்தான் பார்த்துக்கணும். தீவனத்தைப் பொறுத்தவரைக்கும் மக்காச்சோளம், பருத்திக் கொட்டை 2 நாள் ஊறவைத்து மாடுகளுக்குக் கொடுக்கிறேன். மக்காச்சோளமும் பருத்திக் கொட்டையும் மாடுகளுக்குத் தேவையான சத்துகளைக் கொடுக்குது. தினமும் தீவனமா, கோ.எப்.எஸ் 29 ரகப் புல், சூப்பர் நேப்பியர்னு பயிர் செய்திருக்கேன். அதைத் தீவனமா கொடுக்கிறேன். என்கிட்ட இருக்கும் 9 மாடுகள்ல 4 மாடு சினையா இருக்கு. இப்போ 5 மாடுகள் கறவை இருக்கு. அது மூலமா 30 லிட்டர் வரை பால் கிடைக்குது.

கோழிகளுக்குத் தீவனம்
கோழிகளுக்குத் தீவனம்

என் பசங்களும் பண்ணையில் உதவியா இருக்காங்க. பண்ணையைச் சுத்தமா வச்சுகிட்டாலே மாடுகளுக்கு வர்ற நோய்கள்ல பாதியைக் குறைக்கலாம்.

மாடுகளுக்கு அதிகமான உண்ணித் தொல்லை இருந்தது. அதுக்காக ஆயிரக் கணக்குல செலவு செஞ்சேன். அதுல எனக்குத் தீர்வு கிடைக்கலை. இங்க வந்து பார்த்த ஒரு டாக்டர், கோழி வளர்த்தா உண்ணித் தொல்லை குறையும்னு சொன்னார். அதுக்காகத்தான் முதல்ல 10 நாட்டுக்கோழிகளை வாங்கி வளர்த்தேன்.

இந்தக் கோழிகளும் சேர்த்து வளர்த்தா என்னனு யோசனை வந்தது. இப்போ என்கிட்ட கடக்நாத் உள்ளிட்ட 60 நாட்டுக்கோழிகள் இருக்கு. காலையில என் கோழிகளைத் திறந்துவிட்ட உடனே மாட்டுக் கொட்டகையை நோக்கித்தான் ஓடி வரும். அங்க இருக்குற உண்ணிகளைச் சாப்பிட்டுத்தான் மறுவேலை பார்க்கும். மாடுகளுக்குக் கொடுக்கிற மக்காச் சோளமும் கம்பும்தான் இதுகளுக்குத் தீவனமா கொடுக்கிறேன். இதுக்காகத் தனியா எதுவும் செலவு செய்றது கிடையாது. காலையில் திறந்துவிட்டா, மாலை நேரம்தான் கூண்டுக்கு வரும். முட்டைகளையும் வீட்ல வந்து வாங்கிட்டு போறாங்க. கோழிகளுக்காகத் தனியா கொட்டகை அமைக்கல. வீட்ல இருக்குற ஒரு ஷெட்ல விட்ருக்கேன். கோழிகளுக்கு பெரிசா கவனிப்பு ஏதும் இல்ல.

இதுபோக எள் உருண்டை, கடலை உருண்டை தயார் செய்து விற்பனை செய்துகிட்டிருக்கேன். இதை முதல்ல என் பசங்களுக்குச் செய்து கொடுத்தேன். அப்படியே அக்கம்பக்கம் கேட்டாங்க. அப்படி ஆரம்பிச்சு இப்போ வெளிமாநிலங்கள் வரைக்கும் ஆர்டர் வருது. கம்பும் கடலையும் விவசாயிகள்கிட்ட நேரடியா போய் வாங்கிட்டிருக்கேன். நான் செய்ற எள் உருண்டை, கடலை உருண்டை வகைகள்ல பனங்கருப்பட்டி போட்டுதான் செய்துகிட்டிருக்கேன். அதுதான் பொருள்களுக்குக் கூடுதல் சுவையைக் கொடுக்குது. அப்படியே எனக்குக் கூடுதல் வருமானமும் கிடைக்குது. விவசாயம் சார்ந்த ஒரு தொழில் தொடங்குறதுக்கு ஏக்கர் கணக்குல நிலம் எல்லாம் சொந்தமா இருக்கணும்ங்குற தேவையில்லை. என்கிட்ட வெறும் 7 சென்ட் நிலம்தான் இருக்கு. அதுலதான் இவை அத்தனையும் சாத்தியமாகியிருக்கு.

மதிப்புக் கூட்டல் பொருள்கள்
மதிப்புக் கூட்டல் பொருள்கள்

தனியார் பால் சொசைட்டிகாரங்க வந்து பால் எடுத்துகிட்டுப் போயிடுவாங்க. ஒரு லிட்டர் 30 ரூபாய்க்கு விற்பனையாகுது. இதுமூலமா தினமும் 900 ரூபாய்ங்குற வீதத்துல மாசம் 27,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல செலவா 10,000 ரூபாய் போக 17,000 ரூபாய் லாபமா நிற்கும். ஆனா, மீதம் இருக்குற நாலு மாடுகளும் பால் கறக்க ஆரம்பிச்சிட்டா, லாபம் இன்னும் அதிகமாகும். இதுபோகச் சேவல் ஒரு கிலோ 800 ரூபாய், ஒரு நாட்டுக்கோழி முட்டை 25 ரூபாய்னு விற்பனை செய்துகிட்டிருக்கேன். மதிப்புக் கூட்டல் பொருள்களையும் கடந்த 4 மாசமா விற்பனை செய்துகிட்டிருக்கேன். இதுமூலமாவும் மாசத்துக்கு 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரைக்கும் லாபமா கிடைக்கிது. இது எல்லாத்துல இருந்தும் மாசத்துக்கு 30,000 ரூபாய்ல இருந்து 40,000 ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்குது. இதுவே ஒரு கம்பெனியில வேலை பார்த்த சம்பளம் மாதிரி எனக்கு இருக்கு. இதுல எந்தவிதமான மனஅழுத்தமும் எனக்கு வர்றது இல்லை. குடும்பத்தையும் நல்லா கவனிக்க முடியுது. என் கணவர் அனுமதி கொடுக்கலைன்னா இது சாத்தியம் இல்லை. குடும்பத் தேவையைச் சமாளிக்கிற அளவுக்கு மாடு வளர்ப்பு நம்பிக்கை கொடுத்திருக்கு" என்று முடித்தார் மகிழ்ச்சியான குரலில்.

Pasumai Youtube Channel
Pasumai Youtube Channel

இதுபோன்ற விவசாயம் தொடர்பான செய்திகள் மற்றும் பயனுள்ள வீடியோக்களைக் காண பசுமை விகடன் யூ-டியூப் சேனலுக்கு வாங்க. பசுமை விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய: bit.ly/pasumaiYoutube

அடுத்த கட்டுரைக்கு