ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
Published:Updated:

களிமண் வீடு, கால்நடை வளர்ப்பு பலவிதமான பயிர்கள்... தற்சார்பில் அசத்தும் பட்டதாரி தம்பதி!

 சுதாகர் - நௌசத்யா தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
சுதாகர் - நௌசத்யா தம்பதி

வாழ்வியல்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகே பொதிகை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது அருணாசலபுரம் கிராமம். இங்குதான் உள்ளது சுதாகர் - நௌசத்யா தம்பதியின் இயற்கை வேளாண் பண்ணை. வானவில் தோட்டம் மற்றும் உணவுக்காடு என இப்பண்ணைக்குப் பெயர் சூட்டி யுள்ளார்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் சுதாகர். என்.ஐ.டி-யில் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இவர், பெங்களூரில் உள்ள பெருநிறுவனத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் ஊதியத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். இவருடைய மனைவி நௌசத்யாவும் அங்கு பணியாற்றி வந்த நிலையில்தான், இயற்கை விவசாயம் இவர்களுடைய வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறது. பெங்களுரில் இருந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்தக் கிராமத்துக்குக் குடிபெயர்ந்து, 11 ஏக்கர் பரப்பில் இயற்கை வேளாண் பண்ணை அமைத்து, இங்கேயே வசித்து வருகிறார்கள். நெல், உளுந்து, எள், தென்னை, பழ மரங்கள், மூலிகைச் செடிகள் எனப் பலவிதமான பயிர்கள் இங்கு சாகுபடி செய்யப்படுவதோடு... தென்பாண்டி நாட்டு மாடுகள், நாட்டுக் கோழிகள் ஆகியவையும் இங்கு வளர்க்கப்படுகின்றன.

பண்ணையில்
பண்ணையில்

ஒரு பகல்பொழுதில் இப்பண்ணைக்குச் சென்றோம். முகப்புப் பகுதியில் காலடி எடுத்து வைத்த மறுகணம் நாட்டு நாய்கள் குரைத்தபடியே ஓடி வந்தன. சத்தம் கேட்டு வெளியே எட்டிப்பார்த்த சுதாகர், நாய்களைக் கட்டுப்படுத்தியபடியே நம்மை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். ஏராளமான தென்னை மரங்களும் பனை மரங்களும் ஓங்கி வளர்ந்து நின்றன. மா, சப்போட்டா, கொய்யா, பலா என இன்னும் பலவிதமான மரங்கள் செழிப்பாகக் காட்சி அளித்தன. சிறிது தூரம் நடந்து சென்றதும் ஒரு கிணறு நம் கண்ணில் பட்டது. அதை எட்டிப் பார்த்த போது தண்ணீர் நிரம்பிக் கிடந்தது. இப்பகுதியில் தாமிரபரணி ஆறு பாய்வதால், நிலத்தடி நீர்மட்டம் நல்ல நிலையில் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

நாட்டு நாய்களுடன்...
நாட்டு நாய்களுடன்...

விவசாயத் தொழிலாளர்கள் ஆங்காங்கே பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். நாட்டு மாடுகளுக்குத் தீவனம் கொடுத்துக் கொண்டிருந்த பணியாளரின் அருகில் சென்ற சுதாகர், ‘‘கோழிகளுக்குத் தண்ணி வைங்க’’ எனச் சொல்லிவிட்டு, ‘‘வாங்க வீட்டுக்குப் போயி உட்கார்ந்து பேசுவோம்’’ என நம்மை அங்கு அழைத்துச் சென்றார். தரைதளத்தில் இருந்து சுமார் 10 அடி உயரத்தில் களிமண்ணால் கட்டப்பட்ட வீடு பழைமையைப் பறை சாற்றிக் கொண்டிருந்தது. இந்த வீடு உருவாக் கத்தில் தொழிலாளர்களுடன் சேர்ந்து சுதாகர் - நெளசத்யா தம்பதியும் களப்பணியாற்றியிருக்கிறார்கள். வெளியே வெயில் அதிகமாக இருந்தபோதிலும், வீட்டுக்குள் நுழைந்ததும் சிலுசிலுவெனக் குளிர்ச்சியாக இருந்தது.

களிமண் வீடு
களிமண் வீடு

நாட்டு மாட்டுப் பாலில் தயார் செய்யப் பட்ட மோர் கொடுத்து நம்மை உபசரித்த சுதாகர், தன்னுடைய இளமைக்காலம் மற்றும் தற்சார்பு வாழ்வியல் பயணம் குறித்த அனுபவத்தை உற்சாகமாகப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். “எங்க அப்பா வோட பூர்வீகம், தென்காசி மாவட்டத்துல கடையம். ஆனா, அப்பா அம்மா ரெண்டு பேருமே வங்கி அலுவலர்களா வேலை பார்த்துக்கிட்டு இருந்ததுனால பணி நிமித்தமா மும்பையிலதான் வசிச்சுக்கிட்டு இருந்தாங்க. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையிலதான். ஒடிசா மாநிலத் துல உள்ள என்.ஐ.டி-யில பொறியியல் படிச்சேன். அதுக்குப் பிறகு, பஞ்சாப்ல உள்ள ஒரு கல்லூரியில எம்.பி.ஏ முடிச்சிட்டு, மும்பையில உள்ள ஒரு நிறுவனத்துல வேலை பார்த்தேன். அதுக்குப் பிறகு, பெங்களூருல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். இதுக் கிடையில எனக்குத் திருமணம் ஆச்சு, மனைவியும் அதிக ஊதியத்துல வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. இந்தச் சூழ்நிலை யிலதான் சமூக ஊடகங்கள்ல வந்த இயற்கை விவசாயம் தொடர்பான, குறிப்பா தற்சார்பு வாழ்வியல் தொடர்பான வீடியோக்கள் என் மனசுல மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துனுச்சு.

பண்ணையில்
பண்ணையில்


ஏதாவது ஒரு குக்கிராமத்துல வாழ்ந்து விவசாயம் செய்யணும்ங்கற எண்ணம் எனக்குத் தீவிரமாச்சு. இது பத்தி என்னோட நண்பர்கள்கிட்ட சொன்னேன். ‘இதெல்லாம் உனக்குத் தேவையில்லாத வேலை. உன்னோட படிப்புக்கேத்த வேலையை விட்டுட்டு, விவசாயம் செய்யப்போறேனு சொல்றது கொஞ்சம்கூட சரியா வராது’னு புத்திமதி சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, நான் என்னோட முடிவுல உறுதியா இருந்தேன்.

என்னோட அப்பா அம்மா கிட்ட இதைப் பத்தி சொன்னப்ப, ‘உனக்கு எது சரின்னு படுதோ, அதைச் செய்’னு சொல்லி உற்சாகப் படுத்தினாங்க. என்னோட மனைவியும் இதுக்கு சம்மதம் தெரிவிச்சு, ரொம்பவே உறுதுணையா இருந்தாங்க.

மாடுகள்
மாடுகள்

ஆரோவில் பண்ணையில் பயிற்சி

விவசாயத்தைப் பத்தின அடிப்படையான விஷயங்களைக் கத்துக்குறதுக்காக முதல் கட்டமா, புதுச்சேரி அருகில இருக்கிற ஆரோவில் பகுதியில உள்ள இயற்கை விவசாயப் பண்ணைகள்ல நானும் என்னோட மனைவியும் நேரடி களப்பயிற்சி எடுத்துக் கிட்டோம். என் அப்பாவோட பூர்வீக ஊரான தென்காசி மாவட்டம் கடையத்துல நிலம் வாங்கி விவசாயம் செய்யணுங்கறது தான் என்னோட ஆசை. ஆனா, நான் எதிர் பார்த்த மாதிரி அங்க நிலம் ஏதும் அமையலை. ஆனா, அதே மாதிரியான இயற்கை சூழல் உள்ள இந்த ஊர்ல 11 ஏக்கர் நிலம் எனக்கு அமைஞ்சது. இங்க ஒரு கிணறு இருக்கு. இதுல மோட்டார் மூலம் தண்ணி எடுத்துப் பாசனம் செஞ்சிக்கலாம்னு முடிவெடுத்தோம். ஒரு குளமும் இருக்கு’’ என்று சொன்னவர், இப்பண்ணையின் தொடக்கம் மற்றும் அமைப்பு முறை குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

நாட்டு நாய்களுடன்...
நாட்டு நாய்களுடன்...

‘‘இந்தப் பண்ணை மூலமா அதிக லாபம் பார்க்கணுங்கறது எங்களோட நோக்கம் கிடையாது. எங்களோட உணவுத் தேவை நிறைவேறணும்... நஷ்டம் ஏற்படாத அளவுக்கு இந்தப் பண்ணையில இருந்து வருமானம் கிடைக்கணும்... இதுதான் எங்களோட எதிர்பார்ப்பு. ஆரம்பத்துல இருந்தே இதுல நாங்க உறுதியாவும், தெளிவான முடிவோடயும் இருக்குறோம். எங்களோட எதிர்பார்ப்பு நிறைவேறிக்கிட்டு இருக்கு.

இந்த 11 ஏக்கர் நிலத்தை வாங்கி, 2018-ம் வருஷம் விவசாயம் செய்ய ஆரம்பிச்சோம். இந்த நிலத்தை நாங்க வாங்கினப்ப 50 வேப்ப மரங்கள், 50 பனை மரங்கள், 40 தென்னை மரங்கள் இருந்துச்சு. முதல்கட்டமா 5 ஏக்கர்ல மட்டும் விவசாயம் செஞ்சிகிட்டு இருக்கேன். மூணு ஏக்கர்ல பழ மரங்கள், மர வேலைப் பாடுகளுக்கான மரங்கள், மூலிகைச் செடிகள் இருக்கு. ஒரு ஏக்கர்ல பாரம்பர்ய நெல் ரகங்கள், உளுந்து, எள், நிலக்கடலை சாகுபடி செய்றேன். ஒரு ஏக்கர்ல தென்னை மரங்கள் இருக்கு. இதைத் தவிர அரை ஏக்கர் பரப்புல, எங்களோட வீடு, மாட்டுக்கொட்டகை, கோழிக் கொடாப்பு, வைக்கோல், அடர் தீவனங்கள் வைக்குறதுக்கான அறை இருக்கு.

மாடுகள்
மாடுகள்

நாட்டு மாடுகள் வளர்ப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைப் பூர்வீகமாகக் கொண்ட தென்பாண்டி ரகத்தைச் சேர்ந்த 19 நாட்டு மாடுகள் இருக்கு. இதுல 2 காளை மாடுங்க, 5 தாய்ப்பசுக்கள், 2 கிடேரி, 10 கன்றுக்குட்டிகள் இருக்கு. இதுக்கு எந்தத் தீவனச் செலவுகளும் கிடையாது. நெல் சாகுபடி செய்றதுனால, தவிடு, வைக்கோல் கிடைச்சுடுது. கோடை பட்டத்துல எள், நிலக்கடலை, சாகுபடி செஞ்சு, எண்ணெய் ஆட்டுறதுனால, அதுல இருந்து கிடைக்குற புண்ணாக்கையும் எங்களோட மாடுகளுக்கு அடர்தீவனமா பயன்படுத்திக்குறேன். மேய்ச்சலுக்கு விடுறது மூலமா பசுந்தீவனமும் கிடைச்சுடுது. வருஷம் முழுக்க ஏதாவது ரெண்டு தாய்ப் பசுக்கள் மூலம் தினமும் 4 லிட்டர் பால் கிடைக்குது. எங்களோட வீட்டுத் தேவைக்குப் போக, மீதியுள்ள பாலை, தயிரா மதிப்புக்கூட்டி விற்பனை செய்றேன். இந்த மாடுகளோட கழிவுகள் எருவாவும், ஜீவாமிர்தம் தயாரிப்புக்கும் பயன்படுகின்றன.

மரப்பயிர்கள்
மரப்பயிர்கள்

பாரம்பர்ய நெல் சாகுபடி

வருஷத்துக்கு ஒரு தடவை பலதானிய விதைப்பு செய்றதோடு மட்டுமல்லாம, ஏக்கருக்கு 5 டன் வீதம் அடியுரமா எருவும் இலைதழைகளும் கலந்து போட்டு, சம்பா பட்டத்துல பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கோம். ஆத்தூர் கிச்சலிச் சம்பாவும், தூயமல்லியும் பயிர் செய்றது வழக்கம். ஆரம்பத்துல இந்த ஒரு ஏக்கர்ல 20 மூட்டை நெல் மகசூல் கிடைச்சது. ஆனா, அதுக்கு அடுத்தடுத்த வருஷங்கள்ல மயில்களோட வருகையால ஏற்பட்ட இழப்புனால, 10 மூட்டை நெல்தான் மகசூல் கிடைக்குது. இதை அரிசியாக்கி, எங்களோட வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தினது போக, மீதியுள்ள அரிசியை வெளியில விற்பனை செஞ்சிடுவோம். பாரம்பர்ய நெல் சாகுபடியைப் பொறுத்தவரைக்கும் 14 நாள் களுக்கு ஒரு தடவை, 200 லிட்டர் ஜீவாமிர்தம் கொடுக்குறோம். இதுக்கு வேற எந்த இடுபொருளும் கொடுக்குறதில்லை. பூச்சிகள் தென்பட்டா மூலிகைக் கரைசல் தெளிப்போம்.

 சுதாகர் - நௌசத்யா தம்பதி
சுதாகர் - நௌசத்யா தம்பதி
வாழை, மஞ்சள்
வாழை, மஞ்சள்

1 ஏக்கரில் உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், நெல் சாகுபடி செஞ்சு முடிச்ச பிறகு, கோடைப்பட்டத்துல அந்த ஒரு ஏக்கர் நிலத்துல... தலா 25 சென்ட் வீதம், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள் சாகுபடி செய்றதை வழக்கமா வச்சிருக் குறேன். நிலக்கடலையையும், எள்ளையும் எண்ணெயா மதிப்புக்கூட்டி விற்பனை செய்றேன். பச்சைபயறுல குளியல் பொடி தயார் செஞ்சு விற்பனை செய்றேன். உளுந்தை பொறுத்தவரைக்கும் எங்களோட வீட்டுத் தேவைக்குப் போக மீதியுள்ளதை வெளியில விற்பனை செய்றேன்.

ஒரு ஏக்கர் தென்னை

நாங்க இந்த நிலத்தை வாங்குறப்பவே 40 தென்னை மரங்கள் இருந்துச்சு. அவையெல்லாமே 40 வருஷத்து மரங்கள். ஆனாலும், முறையான பராமரிப்பு இல்லாத தால, ஒரு வெட்டுக்கு 40 மரங்கள் மூலமா மொத்தமே 100 காய்கள்தான் மகசூல் கிடைச்சது.

இதை நாங்க முறையா பராமரிக்க ஆரம் பிச்ச பிறகு, 3 மாசத்துக்கு ஒரு தடவை 1,000 காய்கள் மகசூல் கிடைக்குது. எங்களோட சமையலுக்குப் பயன்படுத்தினது போக மீதியுள்ள தேங்காய்களை, எண்ணெயாகவும், தேங்காய் பருப்புப் பொடியாவும் மதிப்புக் கூட்டி விற்பனை செய்றேன். இங்க ஏற்கெனவே இருந்த 40 தென்னை மரங்களோடு, நாங்க புதுசா வச்ச 30 தென்னக் கன்றுகளும் நல்லா செழிப்பா வளர்ந்துகிட்டு இருக்கு. இந்த ஒரு ஏக்கர் தென்னைக்கு 15 நாள்களுக்கு ஒரு தடவை பாசனநீர்ல 200 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து விடுறேன். 6 மாசத்துக்கு ஒரு தடவை ஒரு தென்னைக்கு 20 கிலோ வீதம் எரு கொடுக்குறேன்.

பண்ணையில்
பண்ணையில்
கோழிகள்
கோழிகள்

3 ஏக்கரில் மரப்பயிர்கள், மூலிகைச் செடிகள்

இந்த மூணு ஏக்கர்ல மா, பலா, வாழை, கொய்யா, நெல்லி, சீத்தா, அரை நெல்லி, எலுமிச்சை, சப்போட்டா, மாதுளை, ஈட்டி, பூவரசு, வேங்கை, தேக்கு, மலைவேம்பு, மகோகனி உட்பட மொத்தம் 400 மரங்கள் இருக்கு.

இதுல சீத்தா, கொய்யா, நெல்லி, நாவல் மரங்கள் காய்ப்புக்கு வந்துடுச்சு. வாழையும் பலன் கொடுத்துக்கிட்டு இருக்கு. பப்பாளி காய்ப்பில் உள்ளது. எங்களோட தேவைக்குப் போக மீதியுள்ள பழங்களை விற்பனை செஞ்சிடுவோம். இந்த மூணு ஏக்கர் மரத்தோட்டத்துல ஊடுபயிர்களா... ஆடாதொடை, திப்பிலி, தூதுவளை, மருதாணி, நொச்சி, எருக்கன் உட்பட இன்னும் பல வகையான மூலிகைச் செடிகள் இருக்கு’’ என்றவர் நிறைவாக,

கிணறு
கிணறு
சோலார் மின்சார உற்பத்தி
சோலார் மின்சார உற்பத்தி

‘‘இந்த விவசாய வாழ்க்கை ரொம்பவே மனநிறைவா இருக்கு. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. ஆரோக்கியான உணவு, சுத்தமான காற்று, இயற்கையோடு இயைந்த சூழல், யாருக்கும் கைகட்டி பதில் சொல்ல தேவையில்லை... இந்த நிம்மதியான வாழ்க்கை வேற எதுலயும் கிடைக்காது. அன்றாட ஜீவா தாரத்துக்கான எல்லாமே இங்க கிடைச்சது. எதிர்காலத் தேவைகளுக்கு வருங்கால வைப்புநிதியா வருமான கொடுக்க, தேக்கு, வேங்கை, மலைவேம்பு உட்பட இன்னும் சில மரங்கள் இங்க செழிப்பா வளர்ந்துகிட்டு இருக்கு’’ என மிகுந்த மகிழ்ச்சியோடு பேசி முடித்தார்.

பண்ணையில்
பண்ணையில்
கோழிகளுடன்
கோழிகளுடன்

தேன் உற்பத்தி

20 தேனீ பெட்டிகள் இருக்கு. இது மூலமா வருஷத்துக்கு 60 கிலோ தேன் உற்பத்தி செய்றேன். ஒரு கிலோவுக்கு 800 ரூபாய் வீதம் வருமானம் கிடைக்குது’’ என்கிறார் சுதாகர்.

தீபாவளி கோழிகள்!

‘‘40 நாட்டுக்கோழிகள் வளர்க்குறேன். மாசத்துக்குக் குறைந்தபட்சம் 100 முட்டைகள் விற்பனை செய்றேன். ஒரு முட்டைக்கு 15 ரூபாய் விலை கிடைக்குது. கோழிகளைத் தீபாவளி, ரம்ஜான் மாதிரியான பண்டிகை காலங்கள்ல விற்பனை செய்றேன்’’ என்கிறார் சுதாகர்.