Election bannerElection banner
Published:Updated:

`பழத்தை மட்டுமே சாப்பிட்டு பசியைப் போக்குறோம்' -கலங்கும் வாழை விவசாயிகள்

மரத்திலேயே பழுத்துள்ள பழங்கள்
மரத்திலேயே பழுத்துள்ள பழங்கள்

ஊரடங்கு போக்குவரத்து பாதிப்பால் தூத்துக்குடியில் 20,000 ஏக்கர் பரப்பில் விளைந்து அறுவடை நிலையில் உள்ள வாழைக் குலைகளை ஏற்றுமதி செய்ய முடியாமல், மரத்திலேயே பழுத்தும், அழுகியும் காணப்படுவதால் வேதனை அடைந்துள்ளனர் வாழை விவசாயிகள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வடகால், தென்கால், மேலக்கால், கீழக்கால் பாசனம் மூலமாக சுமார் 40,000-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நெல், வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றனர். இதில் வடகால் பாசனத்துக்கு உட்பட்ட குலையன்கரிசல், முள்ளக்காடு, பொட்டல்காடு, விநாயகபுரம், கோரம்பள்ளம், சேர்வைக்காரன்மடம், தங்கம்மாள்புரம், சாயர்புரம் உள்ளிட்ட சற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நிலையை எட்டியுள்ளது.

வாழை தோட்டத்தில்  விவசாயி
வாழை தோட்டத்தில் விவசாயி

வாழையில் நல்ல விளைச்சல் இருந்தும், ஊரடங்கால் விலை இல்லை. ஏற்றுமதி செய்ய முடியவில்லை. உள்ளூர் சந்தையிலும் விற்பனை செய்ய முடியாவில்லை. இதனால் விவசாயிகள் திணறி வருகிறார்கள். குலைகள் வெட்டாமல் விட்டதால் மரத்திலேயே பழுத்தும், அழுகியும் காணப்படுகின்றன.

இதுகுறித்து குலையன்கரிசலைச் சேர்ந்த வாழை விவசாயிகளிடம் பேசினோம், ``தூத்துக்குடி வடகால் பாசனத்துக்குட்பட்ட குலையன்கரிசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயம் மட்டுமே நடைபெறுவதால் இந்தக் கிராமங்களை, `வாழைவிளை பூமி’ என்றுதான் சொல்வார்கள். மற்ற ரக வாழைகளைவிட இங்கு `கதலி’ எனப்படும் பூவன் ரக வாழைகளை மட்டும்தான் அதிகமாக சாகுபடி செய்கிறோம்.

அழுகி உதிர்ந்த வாழைப்பழம்
அழுகி உதிர்ந்த வாழைப்பழம்

திருமணம், வளைகாப்பு, பூப்பூனித விழா, கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் இந்த ரக பழங்களே அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால் மக்களிடையே தேவையும் அதிகமாக இருக்கும். தூத்துக்குடி, கன்னியாகுமரி மட்டுமன்றி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் இந்த ரகத்துக்கு அதிக வரவேற்பு உண்டு.

வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் பங்குனி முதல் புரட்டாசி வரையுள்ள மாதங்களை கோயில் திருவிழா சீசன் என்போம். தற்போது திருவிழா சீசன் என்றாலும், ஊரடங்கால் கோயில் திருவிழாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பூவன் வாழைக் குலைகளுக்குத் தேவை இல்லாமல் போய்விட்டது. அறுவடைக் காலங்களில் தினமும் 60 முதல் 70 லாரிகளில் வெளி மாவட்டங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் வாழைத்தார்கள் ஏற்றுமதி செய்வோம். தற்போது ஊரடங்கினால் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

கண்ணீரில் வாழை விவசாயி
கண்ணீரில் வாழை விவசாயி

தற்போதைய சூழலில் விவசாய விளைபொருள்களை ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டாலும், லாரி வாடகை, ஏற்றுக் கூலி, இறக்குக்கூலி ஆகியவை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை கொடுக்க வேண்டியுள்ளது. அத்துடன், வாழைக் குலைகளுக்கும் உரிய விலை இல்லாததால்தான் ஏற்றுமதி செய்ய விவசாயிகள் யாரும் முன்வரவில்லை. வாழைக்குலைகளை உள்ளூர் சந்தைகளில்கூட ஏலம் எடுப்பதற்கு வியாபாரிகள் முன்வரத் தயங்குகிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.

வாழை மரங்களில் பழுத்தும் அழுகியும் தொங்கும் பழங்களைப் பார்க்கும்போது மனசு தாங்கவில்லை. அப்படியிருந்தும் மீதமுள்ள வாழைகளைக் காப்பாற்ற கண்ணீரோட தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். குலை விற்றாத்தான் காசு பார்க்க முடியும். காலை, இரவு பழத்தை மட்டுமே சாப்பிட்டு பசியைப் போக்கி வருகிறோம். மதியம் ஒருநேரம் மட்டும்தான் அரிசிச்சோறு சாப்பிடுகிறோம்.

குலையில் பழுத்த பழங்கள்
குலையில் பழுத்த பழங்கள்

நெல், கரும்பு விவசாயிகளுக்கு அரசு அளிக்கும் சலுகைகளை வாழை விவசாயிகளுக்கு அளிப்பதில்லை. ஏற்கெனவே கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான வாழைப் பயிர் காப்பீட்டுக்கான தொகையை `தி நியூ இண்டியா’ காப்பீட்டு நிறுவனத்தில் செலுத்தியுள்ளோம். ஆனால், அந்த ஆண்டுக்கான பயிர்காப்பீட்டு நிவாரணத் தொகையை வாழைப் பயிருக்கு மட்டும் வழங்காமல் மற்ற பயிர்களுக்கு வழங்கி மோசடி செய்துள்ளது அந்நிறுவனம்.

இதுகுறித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பலமுறை எடுத்துரைத்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போதைய ஊரடங்கு காலத்தில் நாங்கள் செலுத்திய காப்பீட்டு பணத்தை எங்களது வங்கிக் கணக்கில் செலுத்தினால் இந்தச் சூழ்நிலையில் மிகவும் உதவியாக இருக்கும். அரசிடம் நிவாரண உதவித்தொகை கேட்கவில்லை. நாங்க செலுத்திய பணத்தைதான் கேட்கிறோம். ``வாழை ஒரு விவசாயியை வாழவும் வைக்கும், தாழவும் வைக்கும்” என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.

ஏலத்தில் விலை போகாத வாழைக்குலைகள்
ஏலத்தில் விலை போகாத வாழைக்குலைகள்

இந்தமுறை வாழை எங்களை வீழ வைத்துவிட்டது. ஆங்காங்கே நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து அரசே நெல்லை கொள்முதல் செய்வதைப் போல, வாழைக்கும் கொள்முதல் மையம் அமைத்து, எடைக்கு ஏற்ற விலை நிர்ணயம் செய்து, வாழைகளைக் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு