Published:Updated:

`வெள்ளம் பெருக்கெடுத்தும் பாசனத்துக்கு தண்ணீர் இல்லை!'' - இது கடைமடை விவசாயிகளின் பரிதாபம்

மு.இராகவன்
PrasannaVenkatesh AB

காலம் கடந்து பயிரிட்டால் சாகுபடி முறையாக நடைபெறுமா என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

கொள்ளிடம்
கொள்ளிடம் ( prasanna venkatesh )

சீர்காழி அருகே கொள்ளிடம் கடைமடை பகுதிகளுக்குத் தண்ணீர் இதுவரை வந்து சேராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கொள்ளிடம்
கொள்ளிடம்
prasanna venkatesh

நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் வருடந்தோறும் குறுவை மற்றும் சம்பா நெற்பயிர் சுமார் 15,000 எக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்தாண்டு குறுவை நெற்பயிர் சாகுபடியை விவசாயிகள் மிகவும் சிரமத்துடன் மோட்டார் மற்றும் டீசல் இன்ஜினைப் பயன்படுத்தி நிலத்தடி நீர் மூலம் சாகுபடி செய்தனர். அதைத் தொடர்ந்து சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், கொள்ளிடம் பகுதிக்கு இது வரை தண்ணீர் வந்து சேரவில்லை.

கடை மடை டெல்டா பாசனத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருவது அணைக்கரையாகும். மேட்டூரிலிருந்து பாசனத்கு திறந்து விடப்பட்ட நீர் அணைக்கரைக்கு வந்து, அங்கிருந்து வடவாறு மூலம் வீராணம் ஏரியில் சேர்ந்து, ஏரியிலிருந்து குடிநீர்த் தேவைக்காக சென்னை சென்று சேர்ந்துவிட்டது. ஆனால், கடை மடை பகுதி பாசனத்துக்காக அணைக்கரையிலிருந்து பிரிந்து செல்லும் தெற்குராஜன் மற்றும் வடக்குராஜன் வாய்க்கால்களில் இதுவரை தண்ணீர் திறந்துவிடவில்லை. மராமத்து பணிகள் நடைபெற்று வருவதால் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மராமத்துப் பணிகளைக் கோடைக்காலத்தில் நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், தண்ணீர் தேவைப்படும் நேரத்தில் நடைபெறும் மராமத்துப் பணிகள் விவசாயிகளைப் பெரிதும் பாதிக்க வைத்துள்ளது. காலம் கடந்து பயிரிட்டால் சாகுபடி முறையாக நடைபெறுமா என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது

கொள்ளிடம்
கொள்ளிடம்
prasanna venkaetsh

காவிரியிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வீணாகக் கடலில் போய்ச் சேரும் நிலையில் பாசனத்துக்கு இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை. இது குறித்து கொள்ளிடம் வட்டார விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவப்பிரகாசம் கூறுகையில், "பாசனத்துக்கு ஒரு சில தினங்களில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் அணைக்கரையை நோக்கி நூற்றுக்கணக்கான விவசாயிகளைத் திரட்டிச் சென்று போராட்டம் நடத்த உள்ளோம்" என்றார்.