Published:Updated:

உப்பு நீரிலும் வளரும் கொய்யா... மகசூல் கூட்டும் இயற்கை நுட்பங்கள்!

கொய்யா
பிரீமியம் ஸ்டோரி
News
கொய்யா

தொழில்நுட்பம்

மிழகத்தில் மா, எலுமிச்சை, வாழை ஆகிய மூன்றும் முக்கியப் பழப் பயிர்களாக இருக்கின்றன. அவற்றுக்கு அடுத்தபடியாக இருப்பது கொய்யா. இது குறைந்த பராமரிப்பில், நிறைவான லாபம் தரக்கூடிய பயிர். இதற்கு அதிக கவனம் செலுத்தத் தேவையில்லை. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பயிர்களில் முக்கியமானது. கொய்யாச் சாகுபடியில் முறையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால் நல்ல மகசூல் எடுக்க முடியும். கொய்யாவில் பயன்படுத்த வேண்டிய நுட்பங்கள், பூச்சி, நோய் மேலாண்மை குறித்துப் பேசுகிறார் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன்.

மண் வளம்

அனைத்து வகையான மண்ணிலும் வளரும் பயிர். நல்ல வளமான வடிகால் வசதிகொண்ட மண்ணில் அதிக மகசூல் கிடைக்கும். சில மண் வகைகள், காய்கறி உட்பட மற்ற பயிர்களுக்கு ஒத்துவராது. அது போன்ற இடங்களில்கூட, கொய்யாவைச் சாகுபடி செய்யலாம். கடினத் தன்மையான மண்ணில்கூட வளரும். வழக்கமாக 6.5 முதல் 7.5 கார அமிலத் தன்மை உள்ள மண்ணில் பழச் சாகுபடி செய்யலாம். ஆனால் கொய்யாவை, 4.2 முதல் 8.5 வரை அமில காரத் தன்மை உள்ள இடங்களில்கூடச் சாகுபடி செய்யலாம். தண்ணீரிலுள்ள உப்புத் தன்மை 0.4 முதல் 1.0 டெசிமைன் அளவுள்ள தண்ணீர்தான் பாசனத்துக்கு ஏற்றது. அதிகபட்சமாக 2 அளவுக்கு உப்பு இருக்கும் மண்ணில்கூடக் கொய்யாச் சாகுபடி செய்யலாம். உப்பு அதிகமாக உள்ள இடங்களில் செடி நடவு செய்யும்போது ஒவ்வொரு செடிக்கும் மூன்று கிலோ ராக்பாஸ்பேட் கலந்து நடவுசெய்யலாம்.

உப்பு நீரிலும் வளரும் கொய்யா... மகசூல் கூட்டும் இயற்கை நுட்பங்கள்!

பருவமழைக் காலங்களில் 100 மில்லிமீட்டர் மழை கிடைக்கும் இடங்களில்கூடக் கொய்யாச் சாகுபடி செய்யலாம். இது வறட்சியைக்கூடத் தாங்கி வளர்ந்துவிடும். நீர் அதிகமாகத் தேங்கினால் வளராது. இது வெப்ப மண்டல, மித வெப்பமண்டலப் பயிர். கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரமுள்ள இடங்களில் சாகுபடி செய்யலாம். ஜூன் முதல் டிசம்பர் வரை நடவுப் பருவம். தென்மேற்குப் பருவமழை தொடங்கும் நேரம் மற்றும் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் நேரங்களில் குறைந்த அளவு மழை பெய்தால்கூடச் சிறப்பாக வளரக்கூடிய பயிர். அதிகப் பனி, குளிர் ஆகியவற்றை இந்தப் பயிர் தாங்காது. அதனால் மிகவும் குளிரான பகுதிகளில் கொய்யாச் சாகுபடி செய்யக் கூடாது. அதேபோல மழை அதிகமாகக் கூடிய பருவங்களிலும் இதைத் தவிர்க்கலாம். தமிழகத்தின் சூழ்நிலைக்கு ஏற்ற பயிர். `தண்ணீர் இல்லை’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் அனைவரும் இதைப் பயிர் செய்யலாம். ஜூன் முதல் செப்டம்பர் வரை செடி வளர்ச்சிப் பருவம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உப்பு நீரிலும் வளரும் கொய்யா... மகசூல் கூட்டும் இயற்கை நுட்பங்கள்!

ரகங்கள்

லக்னோ-46, லக்னோ-49 ரகப் பழங்கள் உருண்டையாக இருக்கும். மரங்கள் ஐந்து மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. ஒரு ஹெக்டேருக்கு 20 டன் மகசூல் கொடுக்கும். அலகாபாத் சஃபேடா... இந்த ரகப் பழங்கள் உருண்டையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். முதன்முதலில் அறிமுகமான ரகம். ஒரு ஹெக்டேருக்கு 25 டன் மகசூல் கொடுக்கும். அர்கா மிருதுளா... இந்த ரகத்தின் ஒரு பழம் 150 கிராம் எடை இருக்கும். அர்கா அமுல்யா, அர்கா ரேஸ்மி (சிவப்பு கொய்யா), பப்பட்லா, அர்கா கிரண், ரெட் பிளஸ் (சிவப்பு கொய்யா), பனாரசி, பெங்களூரா, நாக்பூர் போன்ற ரகங்கள் இருக்கின்றன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அலகாபாத் சஃபேடா, லக்னோ 49 ரகங்கள்தான் அதிகம் பயிரிடப்படுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இனப்பெருக்கம்

ஒட்டுக்கன்று, தண்டு ஒட்டு, மென்தண்டு ஒட்டு, மொட்டுப் பரவல் முறை, தரைவழிப் பதியன், வான்வழிப் பதியன் ஆகிய முறைகளில் கொய்யா நாற்றுகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் தரைவழிப் பதியன் முறையில் உருவாக்கப்படும் கன்றுகளின் வேர்ப்பிடிப்பு நன்றாக இருக்கிறது. விதை மூலம் முளைக்கும் என்றாலும், வணிகரீதியாகச் சாகுபடி செய்வதற்கு அது சாத்தியமில்லாதது. ஐந்து மீட்டருக்கு ஆறு மீட்டர் இடைவெளி இருக்கும் அல்லது ஆறு மீட்டருக்கு ஆறு மீட்டர், இதுதான் வழக்கமான இடைவெளி.

உப்பு நீரிலும் வளரும் கொய்யா... மகசூல் கூட்டும் இயற்கை நுட்பங்கள்!

ஆறுக்கு ஆறு இடைவெளியில் 275 கன்றுகளை நடவுசெய்யலாம். அடர் நடவுச் சாகுபடி தற்போது பிரபலமாகிவருகிறது. இதில் மூன்றுவிதமான இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்கள். செடிக்குச் செடி, வரிசைக்கு வரிசை மூன்று மீட்டர் இடைவெளி. செடிக்குச் செடி இரண்டு மீட்டர் வரிசைக்கு வரிசை ஆறு மீட்டர் இடைவெளி, செடிக்குச் செடி மூன்று மீட்டர், வரிசைக்கு வரிசை ஆறு மீட்டர் என மூன்றுவிதங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.

மூன்று மீட்டருக்கு மூன்று மீட்டர் இடைவெளியில் 650 செடிகள் வரை நடலாம். இது வெற்றிகரமாகப் பல விவசாயிகள் சாகுபடி செய்யக்கூடிய முறை. இதில் ஒரு மரத்திலிருந்து 150 கிலோ மகசூல் கிடைக்கும். வழக்கமான முறையான ஆறு மீட்டருக்கு ஆறு மீட்டர் இடைவெளியில் 120 கிலோதான் கிடைக்கும். அதிகமாகக் கிடைக்கிறது என்பதற்காக அடர் நடவு முறைக்கு அனைவரும் போக முடியாது. அதில் அடிக்கடி கவாத்துச் செய்ய வேண்டும். எனவே, மிகவும் கவனமாகப் பராமரிக்கக்கூடியவர்கள் மட்டுமே அடர் நடவுமுறைக்கு மாற வேண்டும்.

`தண்ணீர் இல்லை’ என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் இதைப் பயிர் செய்யலாம். பழங்களைச் சேகரிக்காமல் விட்டுவிட்டால் பழ ஈக்கள் பெருகிவிடும்.

நடவு

ஒன்றரை அடி நீள, அகல, ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். அதில் இரண்டு பங்கு செம்மண், இரண்டு பங்கு மணல், ஒரு பங்கு மட்கிய தொழு உரம் மூன்றும் கலந்து குழியை நிரப்ப வேண்டும். இதனுடன் 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 250 கிராம் மண்புழு உரம் கலந்து குழியை நிரப்ப வேண்டும். நான்கு நாள்கள் கழித்து, குழியை ஈரமாக்கி 100 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியை கலந்துவிடவேண்டும். அந்தக் குழியின் மையப் பகுதியில் கன்றுகளை நடவுசெய்ய வேண்டும். வடகிழக்குப் பருவமழை காலம்தான் ஏற்றது. மழையை நம்பி நடுபவர்கள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடலாம்.

உப்பு நீரிலும் வளரும் கொய்யா... மகசூல் கூட்டும் இயற்கை நுட்பங்கள்!

பாசனம்

இது அதிக ஈரம் தேவைப்படாத பயிர். நடவு செய்த செடிகளுக்கு வெயில் காலங்களில் வாரம் ஒரு முறையும் மற்ற காலங்களில் 15 நாள்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்தால் போதும். எட்டு முதல் பத்து நாள்கள் இடைவெளியில் பாசனம் செய்ய வேண்டும். வளர்ந்த செடிகளுக்கு வெயில் காலங்களில் 10 முதல் 15 நாள்கள் இடைவெளியில் ஒரு பாசனமும், குளிர்காலங்களில் 20 முதல் 25 நாள்கள் இடைவெளியில் ஒரு பாசனமும் கொடுத்தால் போதும். மே, ஜூன் மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் காய்க்கும். நடவு செய்ததிலிருந்து 18-ம் மாதம் காய்ப்புக்கு வரும். அதிலிருந்து மூன்று மாதங்கள் வரை நல்ல காய்ப்பு இருக்கும். இப்படிக் காய்க்கும் பருவத்தில் வாரம் ஒரு முறை தண்ணீர்ப் பாசனம் செய்ய வேண்டும். குளிர்காலத்தில் பெரும்பாலும் நல்ல மகசூல் இருக்காது. ஆனால், முறையாகத் திட்டமிட்டால் அந்த மாதங்களில் நல்ல மகசூல் எடுக்க முடியும். அந்தக் காலகட்டத்தில் நல்ல விலை கிடைக்கும். அந்தக் காலங்களில் வாரம் ஒருமுறை தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். சொட்டுநீர்ப் பாசனத்தில் 60 சதவிகிதம் தண்ணீர் மிச்சமாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உரம்

ஆண்டுக்கு நான்கு முறை உரம் வைக்க வேண்டும். கொய்யாப் பயிர் எட்டு முதல் 10 ஆண்டுகள்தான் பொருளாதார மகசூல் கொடுக்கும். 15 ஆண்டுகளுக்கு மேல் கொய்யா வைத்திருக்கத் தேவையில்லை. ஆண்டுக்கு ஒரு முறை உரம் வைத்துவிட்டு விட்டுவிடக் கூடாது. ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் உரம் வைக்க வேண்டும். பாசன வசதி உள்ளவர்கள் இந்த நான்கு மாதங்களிலும் நிச்சயம் உரம் வைக்க வேண்டும். பாசன வசதி இல்லாத விவசாயிகள், தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை மற்றும் கோடை மழைக் காலங்களில் கட்டாயம் உரம் வைக்க வேண்டும்.

செந்தூர்குமரன்
செந்தூர்குமரன்

ஒரு மரத்துக்கு கால் கிலோ மண்புழு உரம், அரைக் கிலோ ராக் பாஸ்பேட், 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு அல்லது 50 கிராம் கடலைப் பிண்ணாக்கு, மூன்று கிலோ தொழு உரம் ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு மரத்துக்கும் வைக்க வேண்டும். இது முதல் ஆண்டுக்கான உர அளவு. இரண்டாம் ஆண்டுக்கு இந்த அளவை இரட்டிப்பாக்க வேண்டும். மூன்றாம் ஆண்டு, அளவை மூன்று மடங்காக்க வேண்டும். அதன் பிறகு அதே அளவை ஆண்டுதோறும் வைக்க வேண்டும்.

‘‘வழக்கமாக 6.5 முதல் 7.5 கார அமிலத்தன்மை உள்ள மண்ணில் பழச் சாகுபடி செய்யலாம். ஆனால் கொய்யாவை 4.2 முதல் 8.5 வரை அமில காரத் தன்மை உள்ள இடங்களில்கூடச் சாகுபடி செய்யலாம்.’’

களை

களைக்கொல்லிகளைப் பயன்படுத்தக் கூடாது. `கை’க் களைதான் சிறந்தது. டிராக்டர், பவர்டில்லர் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். களையைக் கட்டுப்படுத்த நினைப்பவர்கள் ஊடுபயிராக உளுந்து, துவரை போன்ற பயிர்களைப் போட்டு மகசூல் எடுத்துக் கொள்ளலாம். உளுந்து, பாசிப்பயறு போன்ற தழைச்சத்தை நிலை நிறுத்தக்கூடிய தாவரங்கள் மழைக்காலத்தில் அதிகம் இருக்கும். அதனால் முதல் மழையிலேயே உழவு செய்து சணப்பை விதைத்துவிட வேண்டும். மழை முடிந்த பிறகு எப்படியும் உழவு செய்யத்தான் போகிறோம். அப்போது சணப்பையை மடக்கி, உழவு செய்துவிட வேண்டும். இது நல்ல உரமாகிவிடும்.

ஊடுபயிர்

உளுந்து, துவரை போன்ற பயிர்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம். மா மரம் மாதிரியே இதற்கும் கவாத்துச் செய்ய வேண்டும். தரையிலிருந்து இரண்டு அடி உயரம் வரை முதல் கிளையை விடக் கூடாது. கொய்யாவைப் பொறுத்தவரை தரையிலேயே கிளைக்கும். அதை விவசாயிகளும் அனுமதிக்கிறார்கள். அப்படிப்பட்ட மரங்களை அதிக ஆண்டுகள் வைத்திருக்க முடியாது. ஒன்றரை அடி உயரம் வரை முதல் கிளையை அனுமதிக்கக் கூடாது. அப்போதுதான் தண்டு பலமாகும். அதன் பிறகு முக்கோண வடிவில் மூன்று கிளைகளை அனுமதிக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு அடி வளர்ந்த பிறகு கவாத்துச் செய்ய வேண்டும். அதற்கு மேல் நான்கைந்து பக்கக் கிளைகளை அனுமதிக்கலாம். ஐந்து மீட்டர் உயரமாக வளரக்கூடிய பயிராக இருந்தாலும், கொய்யா மரத்தின் மேலே ஏறி பறிக்க முடியாது. அதனால் ஆறு அடி உயரத்துக்கு மேலே மரத்தை அனுமதிக்கக் கூடாது. இப்படிச் செய்தால் சூரிய ஒளி அனைத்துக் கிளைகளிலும் படும். அப்போதுதான் பூக்கள் நன்றாக வரும். அதிக மகசூல் கிடைக்கும். ஒவ்வோர் ஆண்டும் கவாத்து அவசியம். புதுக் கிளைகளில்தான் அதிக பூக்கள் எடுக்கும். வழக்கமான கிளைகளில் பூ எடுத்தாலும் புதிதாக வரும் கிளைகளில் அதிகமாக இருக்கும். தீவிரமான கவாத்து தேவையில்லை. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மரத்துக்கு வடிவம் கொடுப்பதற்காகக் காய்கள் குறுக்கு நெடுக்காக உள்ள கிளைகளை வெட்டிவிட வேண்டும். மரத்தின் மையப் பகுதி திறந்தவெளியாக இருக்க வேண்டும்

வளர்ச்சி ஊக்கிகள்

புதிய கிளைகளில் ஒரு மாதம் கழித்துப் பூக்கள் உருவாகும். அப்போது வளர்ச்சி ஊக்கிகள் கொடுக்க வேண்டும். நீர்ச்சத்துக் குறைபாடு இருந்தால் இலை சாம்பல் நிறத்துக்கு மாறிவிடும். துத்தநாகச்சத்துக் குறைபாடு காரணமாக இலைகள் பழுத்துவிடும். அதனால் ஒளிச்சேர்க்கை நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும். தண்ணீர் அதிகமாக உள்ள பகுதிகளில் இந்தச் சிக்கல் ஏற்படும். இலைகளின் நுனி சுருண்டு காணப்படும். விவசாயிகள் இதை, ‘எலிக்காது இலை நோய்’ என்கிறார்கள். இது நோய் அல்ல. சத்துக்குறைபாடு. இதைச் சரிசெய்ய, ‘இயற்கை துத்தநாகம்’ எனக் கடைகளில் கிடைக்கிறது. இது திரவ வடிவில் இருந்தால் 7.5 சதவிகிதம் தெளிக்க வேண்டும்.

10 லிட்டர் தண்ணீரில், 300 மி.லி பஞ்சகவ்யா, 50 மி.லி மீன் அமிலம், 250 மி.லி தேமோர்க் கரைசல், இயற்கை துத்தநாகம் 50 மி.லி கலந்து தெளித்தால் துத்தநாகச்சத்து செடிக்குக் கிடைத்துவிடும். இதை மாதம் ஒரு முறை செய்ய வேண்டும். அந்தப் பிரச்னை தீரும் வரை செடிக்கு அடிக்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் வழியாகவும் கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும்போது ஐந்து மடங்கு அதிகம் கொடுக்க வேண்டும். வழக்கமாக, சொட்டு நீர்ப்பாசனத்தில் அரை ஏக்கர் நிலத்துக்கு ஒரு நீர் திறவை (கேட் வால்வ்) வைத்திருப்பார்கள். ஒவ்வொரு நீர் திறவைக்கும் நீர் உரத்தொட்டிகளில் 1.5 லிட்டர் பஞ்சகவ்யா, 250 மி.லி மீன் அமிலம், 1.25 லிட்டர் தேமோர்க் கரைசல், 250 மி.லி இயற்கை துத்தநாகம் கலந்துவிட்டும் துத்தநாகக் குறைபாட்டைச் சரிசெய்யலாம்.

உப்பு நீரிலும் வளரும் கொய்யா... மகசூல் கூட்டும் இயற்கை நுட்பங்கள்!

பூச்சி, நோய் மேலாண்மை

கொய்யாவைத் தாக்கும் பூச்சிகளில் முக்கியமானது தேயிலைக் கொசு. இது, இலைகளில் சாறு உறிஞ்சும். அதனால் ஒளிச்சேர்க்கை தடைப்பட்டு, செடி அதிகம் காய்க்காது. இலைகள்மீது முட்டை போடும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் பத்து நாள்களிலேயே பூச்சிகளாக மாறிவிடும். 20 முதல் 25 நாள்கள்தான் இதன் வாழ்நாள். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். இளந்தளிர் வரக்கூடிய மாதங்களில் இதைக் கட்டுப்படுத்த கவாத்துதான் சிறந்த முறை. ஆண்டுக்கு இரண்டு முறை தேவையான அளவுக்கு கவாத்து செய்ய வேண்டும். செடிகளின் அடர்த்தியைக் குறைத்தால் இந்தப் பூச்சி வராது. ஏக்கருக்கு 12 விளக்குப்பொறி வைத்தும் இதைக் கட்டுப்படுத்தலாம். பவேரியா பேசியானாவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு கிராம் கலந்து அடித்தும் கட்டுப்படுத்தலாம் அல்லது வேப்பங்கொட்டைச் சாற்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐந்து மி.லி கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

‘‘விவசாயிகள் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்காமல், அதிகபட்சமாக 5 முதல் 8 டன் மட்டுமே மகசூல் எடுக்கிறார்கள். சரியான தொழில்நுட்பத்தைப் பின்பற்றினால் ஹெக்டேருக்கு 25 டன் வரை மகசூல் எடுக்கலாம்.’’

கொய்யாவைத் தாக்கும் அடுத்த வில்லன் மாவுப்பூச்சி. இது வந்தால் மொத்தத் தோப்பிலும் பரவிவிடும். எனவே, தோட்டத்தை தினமும் கண்காணிக்க வேண்டும். ஒரு இலை, இரண்டு இலைகளில் மாவுப்பூச்சி தெரிந்தால் உடனடியாக இலைகளைப் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். மாவுப்பூச்சி உள்ள இலைகளின் பின்புறம் எலுமிச்சைச் சாற்றை பிரஷ் மூலம் தொட்டுத் தடவிவிட்டால் உடனடியாக இறந்துபோகும். சில மரங்களில் பார்க்கும்போதே இந்த முறையைச் செயல்படுத்தினால் அதிக இழப்பைத் தவிர்க்கலாம்.

அதையும் தாண்டிவிட்டால் ‘கிரைசோபா’ என்ற எதிர் உயிர் இருக்கிறது. அதை வாங்கி, தோப்பில் ஆங்காங்கே விட வேண்டும். அது கிடைக்காதபட்சத்தில் வேப்பங்கொட்டைச் சாற்றைப் பயன்படுத்தலாம். எலுமிச்சைச்சாறு 50 மி.லி., காதி சோப்பு 50 கிராம் இரண்டையும் நன்றாகக் கலந்து 10 லிட்டர் தண்ணீரில் சேர்த்துத் தெளிக்க வேண்டும். தெளித்த நான்காவது நாளில் மீண்டும் வேப்பங்கொட்டைச் சாறு 50 மி.லி., அக்னி அஸ்திரம் 500 மி.லி., மைதா கஞ்சி கலந்து தெளிக்க வேண்டும். இவை இரண்டையும் தொடர்ந்து செய்தால்தான் மாவுப்பூச்சிக் கட்டுப்படும். அடுத்ததாக, செதில் பூச்சித் தாக்குதல் இருக்கும். அதை மூலிகைப் பூச்சிவிரட்டிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

பழ ஈ, கொய்யாவைத் தாக்கும் முக்கியமான பூச்சி. பழுத்த கொய்யாவைச் சாப்பிடும்போது உள்ளே சில நேரங்களில் புழு இருக்கும். காய் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடையும்போது, பழ ஈ அதில் அமரும். காய் பழுக்கும் முன்னரே முட்டையிட்டுப் போய்விடும். அதிலிருந்து பொரியும் முட்டைகள் உள்ளே போய்ப் புழுவாக மாறும். இதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 12 இடங்களில் ஆமணக்கு எண்ணெயைப் பானையில் ஊற்றி, கட்டித் தொங்கவிட வேண்டும். அதில் கொஞ்சம் நாட்டுச்சர்க்கரையை மேலாகப் போட வேண்டும். அங்கே வரும் பழ ஈக்களின் இறகு எண்ணெயில் பட்டால், பறக்க முடியாது. அது உள்ளே இழுத்துக்கொள்ளும். அது வெளியே வருவதற்கு முன்பே பழம் அறுவடைக்குத் தயாராகிவிடும். நாமும் பழ ஈ புழுக்கள் இல்லாத தரமான கொய்யாவைச் சந்தைப்படுத்த முடியும்.

பழ ஈ கட்டுப்பாட்டு நடவடிக்கை

தவறிப்போய் நாம் பறிக்காமல்விட்ட பழங்கள் விழுந்து கிடந்தால், அவற்றில் பழ ஈ புழுக்கள் இருக்கும். அந்தப் பழங்களைச் சேகரித்து நிலத்துக்கு வெளியே கொண்டுபோய்ப் போட வேண்டும். அதைச் செய்யாமல் விட்டு விட்டால் பழ ஈக்கள் பெருகிவிடும். கீழே விழுந்த பழங்களை விட்டுவிட்டால், அவற்றிலிருந்து வெளியேறும் புழுக்கள், கூட்டுப் புழுப் பருவத்தில் மண்ணில் இருக்கும். அவற்றை அழிக்க ஒரு மரத்துக்கு கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு வைக்க வேண்டும். கொய்யாவைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது சொறிநோய்.

காயிலும் பழத்திலும் கறுப்புப் புள்ளியாக இருக்கும். சத்துப் பற்றாக்குறை, நீர் தேங்குவது போன்ற காரணங்களால் இந்த நோய் ஏற்படும். துத்தநாகச் சத்துப் பற்றாக்குறை இருந்தாலும் இது ஏற்படும். இதைக் கட்டுப்படுத்த 15 முதல் 20 நாள்கள் இடைவெளியில் மீன் அமிலம் மட்டும் தெளித்தால் போதும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். மீன் அமிலம் அதிகமாகத் தெளிப்பதால் எதிர்விளைவுகள் கொடுக்காது. குப்பைமேனி இலை, காகிதப்பூ இலை ஆகியவற்றில் தலா ஒரு கிலோ எடுத்து, நன்றாக அரைத்து இரண்டு லிட்டர் மாட்டுச் சிறுநீர் கலந்துகொள்ள வேண்டும். சர்க்கரைப்பாகுபோல இருக்கும் அதில் 100 மி.லி எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

அத ன் பிறகு மீன் அமிலம் அடித்தால் நோய் சரியாகிவிடும். பழம் பளபளப்பாகும். கொய்யா வளரும் மண்ணின் கார அமிலத்தன்மை 8.5 வரை இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் வாடல் நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

லக்னோ 49 ரகத்தில் இந்தச் சிக்கல் வராது. வாடல் நோய் பாதித்த மரங்களுக்கு, ஒரு மாதத்திற்குச் சுண்ணாம்பு ஒரு கிலோ, தொழுஉரம் 20 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 10 கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோ கலந்து கொடுக்க வேண்டும். இந்த முறைகளை ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் என இரண்டு முறை கொடுக்க வேண்டும்.

கொய்யாவைப் பொறுத்தவரை ஹெக்டேருக்கு 25 டன் வரை மகசூல் எடுக்கலாம். விவசாயிகள் தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிக்காமல், அதிகபட்சமாக 5 முதல் 8 டன் மட்டுமே மகசூல் எடுக்கிறார்கள். இயற்கை விவசாயத்தில் வருமுன் காப்போம் முறையில் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்தால் 15 டன் மகசூல் நிச்சயம் எடுக்கலாம். ஒரு கிலோ கொய்யா 30 முதல் 50 ரூபாய்க்கு சந்தையில் விற்பனையாகிறது.