Published:Updated:

மாதம் 28,000 ரூபாய்... மொட்டை மாடியில் கோழி வளர்ப்பு!

கோழிகளுடன் நித்தியானந்தம்-விஜயபிரியா
பிரீமியம் ஸ்டோரி
கோழிகளுடன் நித்தியானந்தம்-விஜயபிரியா

கால்நடை

மாதம் 28,000 ரூபாய்... மொட்டை மாடியில் கோழி வளர்ப்பு!

கால்நடை

Published:Updated:
கோழிகளுடன் நித்தியானந்தம்-விஜயபிரியா
பிரீமியம் ஸ்டோரி
கோழிகளுடன் நித்தியானந்தம்-விஜயபிரியா

புறக்கடைக் கோழி வளர்ப்பு கிராமப்புறப் பெண்களுக்குப் பெரும் உதவியாக இருக்கிறது. அதே நேரத்தில் இதற்கு நகரப் பகுதிகளில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் நகரப் பகுதிகளிலுள்ள வீடுகளில் கோழி வளர்ப்பதில் பெரும்பான்மையானோர் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்த நிலையில்தான் கோயம்புத்தூர் மாநகரில் மொட்டைமாடியில் இதைச் செய்து காட்டிஅசத்திக்கொண்டிருக்கிறார் விஜயபிரியா. கோயம்புத்தூர் உப்பிலிபாளையம் பகுதியிலிருக்கிறது விஜயபிரியாவின் வீடு. காலை நேரத்தில் அவரைச் சந்திக்கச் சென்றோம். மாடிப்படிகளில் கூட்டமாக இறங்கி வந்துகொண்டிருந்த கோழிகளைத் தரையிறக்கி, வீட்டின் எதிரிலுள்ள காலி இடத்தில் மேய்ச்சலுக்கு விரட்டிக்கொண்டிருந்தவர், கோழிகள் நுழைந்ததை உறுதிசெய்துவிட்டு பேசத் தொடங்கினார்.

கூண்டுகளில் கோழி வளர்ப்பு
கூண்டுகளில் கோழி வளர்ப்பு

‘‘என் கணவர் நித்தியானந்தம். கட்டட ஒப்பந்தக்காரரா இருக்கார். எங்க ரெண்டு பேருக்கும் இதுதான் சொந்த ஊர். எங்களுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்களுக்கு ஊட்டமான உணவு கொடுக்கணும்கிறதுல உறுதியா இருக்கோம். அதுக்காக நாட்டுமாட்டுப் பால், நாட்டுக்கோழி முட்டை ரெண்டையும் பசங்களுக்குக் கொடுப்போம். நாட்டு மாட்டுப் பாலை பக்கத்து ஊர்ல இருக்கிற விவசாயி ஒருத்தர் தினமும் கொண்டு வந்து கொடுத்துடுவார். ஆனா, தரமான நாட்டுக்கோழி முட்டை கிடைக்குறதுல சிரமம் இருந்தது. பல இடங்கள்ல அலைஞ்சு திரிஞ்சுதான் தரமான நாட்டுக்கோழி முட்டைகளை வாங்க வேண்டிய சூழ்நிலை. `இதுக்கு நாமே சொந்தமா நாட்டுக்கோழிகளை வளர்க்கலாமே’னு தோணிச்சு. பலரும் மாடியில தோட்டம் போட்டு காய்கறிகளை விளையவெக்கிறாங்க. அதுபோல மொட்டைமாடியில கோழிகளை வளர்க்கலாம்னு முடிவு செஞ்சோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாடியிலிருந்து இறங்கும் கோழிகள்
மாடியிலிருந்து இறங்கும் கோழிகள்

எங்க மொட்டைமாடி 300 சதுர அடி பரப்பளவுகொண்டது. பக்கத்து கிராமத்துல போய் ரெண்டு கோழிகளையும், அதுக்கு இணையா ஒரு சேவலையும் வாங்கிட்டு வந்தோம். சின்னக் கூண்டு ஒண்ணு அமைச்சு, அதுல கோழிகளை அடைச்சு வளர்க்க ஆரம்பிச்சோம். அந்த நேரத்துல ஒரு விவசாயக் கண்காட்சிக்குப் போயிருந்தோம். நாங்க போன அன்னிக்கு, சரவணம்பட்டி கால்நடை மருத்துவக் கல்லூரி பயிற்சி மையத்தின் தலைவர் டாக்டர் சிவக்குமார் ஆலோசனை கொடுத்துட்டு இருந்தார். ‘நாட்டுக்கோழி வளர்க்கிறவங்க, கோழிகளை முழு நேரமும் கூண்டுல அடைச்சு வளர்க்கக் கூடாது. காலாற மேய்ந்து, மண்ணிலிருக்கும் புழு பூச்சிகளைச் சாப்பிடுவதுதான் அதன் இயல்பு. அதை மாற்றக் கூடாது. மாற்றினால் அதன் உண்மைத் தன்மை மாறிவிடும்’னு சொன்னார். அது எங்களுக்குப் புதுத் தகவலா இருந்துச்சு. அவர் கடைசியா ‘கோழி வளர்ப்புல பயிற்சி தேவைப்படுறவங்க, எங்க மையத்துல வந்து பயிற்சி எடுத்துக்கலாம்’னு சொன்னார். அவங்க குறிப்பிட்ட நேரத்துல என் கணவர் மட்டும் பயிற்சிக்குப் போயிட்டு வந்தாரு’’ என்று விஜயபிரியா பேச்சை நிறுத்த, பயிற்சியில் கற்றுக்கொண்டவற்றைப் பற்றிப் பேசினார் நித்தியானந்தம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ஒரு மாசம் பயிற்சி நடந்துச்சு. கோழி வளர்ப்பில் இருக்கிற அத்தனை தொழில்நுட்பங்களையும் நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தாங்க. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட கிராமபிரியா ரகக் கோழியைப் பற்றியும் சொன்னாங்க. ஒரு கோழிக்குஞ்சு 21 ரூபாய்னு 17 கோழிகள், மூணு சேவல்களை மானிய விலையில் கொடுத்தாங்க. அதை வாங்கிட்டு வந்தேன்’’ என்றவர் கிராமபிரியா ரகத்தைப் பற்றி விளக்கினார்.

ஆண்டுக்கு 220 முட்டைகள்

``குஞ்சுகள் வளர்ந்து 21 வாரத்தில் முட்டை வைக்கும். மூணு வருஷம் தொடர்ந்து பலன் கொடுக்கும். முதல் வருஷம் 220 முட்டைகள், ரெண்டாவது வருஷம் 150 முட்டைகள், மூணாவது வருஷம் 100 முட்டைகள் ஒரு கோழி மூலமாகக் கிடைக்கும். மூணு வருஷம் முடிஞ்ச கோழிகளைக் கறிக்காக விற்பனை செஞ்சுடுவேன். அதுக்குப் பிறகு, புது கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்ப்போம். கறித் தேவை இருக்கும் மாசங்கள்ல வீட்டுத் தேவைக்கான முட்டைக்கு மட்டும் சில கோழிகளை வெச்சுகிட்டு, மத்த கோழிகளை இறைச்சியா விற்பனை செஞ்சிடுவேன்.

மேய்ச்சலில் கோழிகள்
மேய்ச்சலில் கோழிகள்

தீவன மேலாண்மை

‘‘நாட்டுரகக் கோழியில் எந்த ரகமாக இருந்தாலும் காலாற மேய்ச்சலுக்கு விடணும். அதுக்காக எங்க வீட்டுக்கு எதிர்ல இருக்குற அஞ்சு சென்ட் புல் பூண்டு முளைச்சு கிடக்கும் காலி இடத்தைப் பயன்படுத்திக்கிறோம். அங்கேதான் மேய்ச்சலுக்கு அனுப்புறோம்.

ஒரு கோழிக்குஞ்சு 21 ரூபாய்னு 17 கோழிகள், மூணு சேவல்களை மானிய விலையில் கொடுத்தாங்க. மாடித்தோட்டம்போல மாடியில் கோழி வளர்க்க முடியும். அதை நாங்க நிரூபிச்சிருக்கோம்.

காலையில கூண்டுகளைத் திறந்துவிட்டா, மாடிப்படிகள்ல வேகமாக இறங்கி நேரா அங்கே மேய்ச்சலுக்குப் போயிடும். பகல் முழுவதும் மேய்ஞ்சுட்டு, சாயங்காலம் திரும்ப மாடிப்படிகள்ல ஏறிப்போய் தண்ணி குடிச்சுட்டு கூண்டுல அடைஞ்சுக்கும். இருந்தாலும் மேய்ச்சல் தீவனம் போதாது. அதனால சிறுதானியங்கள் கலந்த தீவனங்களையும் கொடுப்போம். காலையில 6 மணிக்கு மேயப்போகும் முட்டைக்கோழிகள், சரியா 9 மணிக்குள்ள மொட்டைமாடியில ஏறி முட்டையை வெச்சுட்டு, திரும்பவும் படிகள்ல இறங்கி மேய்ச்சல் கோழிகளோடு சேர்ந்துக்கும். 120 நாள்களுக்கு மேற்பட்ட சில கோழிகளை இறைச்சியாக விற்பனை செய்யறதுனால அதை ஈடுசெய்யறதுக்காக, மாசம் 60 கிராமபிரியா குஞ்சுகளை கால்நடை ஆராய்ச்சி மையத்திலிருந்து வாங்கிக்குவோம். மொட்டைமாடியில 12 கூண்டுகள் வெச்சிருக்கோம்.

வயசுவாரியா கோழிகளைப் பிரிச்சு, தனித்தனிக் கூண்டுகள்ல அடைச்சிடுவோம். வெளிச்சத்துக்காக ராத்திரி நேரத்துல ரெண்டு பல்புகளை எரிய விடுறோம்’’ என்றவர் செலவு, வரவுக் கணக்கை வாசிக்கத் தொடங்கினார்.

‘‘ரெண்டு வயசு, கிராமபிரியா கோழி ஒண்ணு ரெண்டே முக்கால் கிலோ எடை வரும். அதை இறைச்சியாக்கும்போது ரெண்டு கிலோ கிடைக்கும். கிலோ 600 ரூபாய் விலையில ரெண்டு கிலோ இறைச்சியை 1,200 ரூபாய்க்கு விற்பனை செஞ்சிடுவேன். இப்படி வாரம் ஆறு கிலோ இறைச்சி விற்பனை செய்யறோம். தினமும் 30 முட்டைகளை விற்பனை செய்றோம். ஒரு முட்டையை 15 ரூபாய்க்கு கொடுக்குறோம். அது மூலமா தினமும் 450 ரூபாய் வருமானம் கிடைக்குது. வயசான சேவல்கள் நாலு கிலோ வரை எடை வரும். அதை கிலோ 450 ரூபாய் விலையில உயிர் எடைக்கு விற்பனை செஞ்சிடுவோம்.

கோழிகளுடன் நித்தியானந்தம்-விஜயபிரியா
கோழிகளுடன் நித்தியானந்தம்-விஜயபிரியா

ஒரு மாசத்துக்குத் தீவனச்செலவு 4,000 ரூபாயும், 60 புதிய குஞ்சுகளுக்குத் தலா 21 ரூபாய் விலையில் 1,260 ரூபாயும், வாகனச் செலவு 300 ரூபாயும், மருத்துவச் செலவு 500 ரூபாயும்னு மொத்தம் 6,000 ரூபாய் செலவு பிடிக்குது. இறைச்சி, முட்டை, குஞ்சுகள் விற்பனை மூலமா மாசத்துக்கு 36,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல மாதச் செலவு 8,000 ரூபாய் போக 28,000 ரூபாய் லாபமாக நிக்கும். இந்த லாபம் சில மாசங்கள்ல ஏறவும் குறையவும் வாய்ப்பிருக்கு’’ என்று நித்தியானந்தம் முடிக்க,

நிறைவாகப் பேசிய விஜயபிரியா, ‘‘புறக்கடைக் கோழி வளர்ப்புபோல, மொட்டைமாடிக்கோழி வளர்ப்பை ஆரம்பிச்சோம். பரபரப்பான நகரங்கள்லகூட முயன்று பார்க்கலாம். மாடித்தோட்டம்போல மாடியில் கோழி வளர்க்க முடியும். அதை நாங்க நிரூபிச்சிருக்கோம்.

‘‘குறைந்த இடத்தில் அதிக கோழிகளை வளர்க்க ஏற்றதுதான் கூண்டு முறைக் கோழி வளர்ப்பு. தரம் உயர்த்தப்பட்ட கிராமபிரியா கோழிகள், புறக்கடைக் கோழி வளர்ப்புக்கு மிகவும் ஏற்ற ரகம்.’’

முட்டைகள் வைக்குற கிராமபிரியா கோழிகளுக்கு அடைகாத்து, குஞ்சு பொரிக்கும் தன்மை கிடையாது. அதனால மற்ற ரகத் தாய்க்கோழிகள் இல்லைன்னா இன்குபேட்டர் மூலமாகத்தான் குஞ்சுகளைப் பொரிக்க வைக்க முடியும். இப்போ இந்தக் கோழிகளோட சேர்த்து கடக்நாத், பெருவிடை, சிறுவிடை, வான்கோழிகள் சிலதையும் வளர்க்க ஆரம்பிச்சிருக்கோம். இனி வர்ற காலத்துல அதுங்க மூலமாகவும் வருமானம் பார்க்க முடியும்னு நம்பிக்கை இருக்குது’’ என்று மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார்.

நம்பிக்கை நிறைவேறட்டும்!

தொடர்புக்கு, விஜயபிரியா, செல்போன்: 93440 66233.

தாவரங்களை விரும்பிச் சாப்பிடும் கிராமபிரியா

கிராமபிரியா கோழிகள் குறித்த சில தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் திருப்பூரில் இயங்கிவரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் மதிவாணன். ‘‘குறைந்த இடத்தில் அதிக கோழிகளை வளர்க்க ஏற்றதுதான் கூண்டு முறைக் கோழி வளர்ப்பு. தரம் உயர்த்தப்பட்ட கிராமபிரியா கோழிகள், புறக்கடைக் கோழி வளர்ப்புக்கு மிகவும் ஏற்ற ரகம். நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம்கொண்டவை.

மதிவாணன்
மதிவாணன்

தாவரங்களை விரும்பிச் சாப்பிடும் கிராமபிரியா கோழிகளை எப்போதும் கூண்டுகளில் அடைத்து வளர்க்கக் கூடாது. அப்படி வளர்த்தால் கோழிகளின் இயல்புத் தன்மை பாதிக்கப்படும். கோழிகளுக்குப் பசுந்தீவனம், அடர் தீவனம் கலந்து கொடுக்க வேண்டும்.

சணப்பு, வேலிமசால், தீவனப்புல் ஆகிய பசுந்தீவனங்கள் மூலம் நுண்ணூட்டச் சத்துகள் கிடைக்கும். அதனால் நகரப் பகுதிகளில் கோழி வளர்ப்பவர்கள் அருகிலிருக்கும் கிராமங்களுக்குச் சென்று அங்கிருக்கும் விவசாயிகளிடம் பசுந்தீவனங்களை வாங்கிப் பயன்படுத்தலாம். மொட்டைமாடியில் போதிய இடமிருந்தால் குதிரைமசால், கீரைச்செடிகள் போன்றவற்றை உற்பத்தி செய்து கொடுக்கலாம். ராகி, கம்பு, மக்காச்சோளம் போன்ற தானியங்களையும் அடர் தீவனமாகக் கொடுக்கலாம்.

கிராமபிரியா வகை நாட்டுக்கோழிகள் அதிக முட்டையிடும் தன்மைகொண்டவை. சராசரியாக ஒரு கோழி, ஆண்டுக்கு 180 முட்டைகள் வரை இடும். வணிகரீதியான கோழி வளர்ப்புக்கு ஏற்ற ரகம்.

இதன் முட்டை சுவையானதாக இருக்கும். உரிய நேரத்தில் தடுப்பூசிகள் போடுவதால் கோழிகளை அதிகம் தாக்கும் `ராணிகட்’ எனப்படும் வெள்ளைக் கழிச்சல் நோய் வருமுன் தடுக்க முடியும்.’’

தொடர்புக்கு, மதிவாணன், தொலைபேசி: 0421 2248524.

வெள்ளைக் கழிச்சலுக்கு பாரம்பர்ய வைத்தியம்

பாரம்பர்ய வைத்திய முறையில் வெள்ளைக் கழிச்சல் நோய் வராமல் தடுக்கும் முறைகள் குறித்து விளக்குகிறார் இயற்கை ஆர்வலர் அன்பு சுந்தரானந்தர்.

 சுந்தரானந்தர்
சுந்தரானந்தர்

10 கோழிகளுக்கான அளவு:

தேவையான பொருள்கள்

சீரகம் - 10 கிராம்

மிளகு - 5 கிராம்

மஞ்சள்தூள் - 50 கிராம்

கீழாநெல்லி இலை - 50 கிராம்

சின்ன வெங்காயம் - 10 பல்

பூண்டு - 5 பல்.

செய்முறை:

சீரகம், மிளகு இரண்டையும் இடித்துப் பொடியாக்கி, அதை மற்ற பொருள்களுடன் கலந்து சந்தனம்போல் அரைத்துக்கொள்ள வேண்டும். கிடைக்கும் கலவையை அரிசிக்குருணை அல்லது தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும். வெள்ளைக் கழிச்சல் நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வாயினுள் தள்ளிச் செலுத்த வேண்டும். இதுதான் பாரம்பர்ய வைத்திய முறையில் வெள்ளைக் கழிச்சல் நோயிலிருந்து கோழிகளைக் காப்பாற்றும் முறை.

கோழி அம்மைநோய், மிகவும் ஆபத்தானது. அதைத் தடுக்கும் வைத்திய முறை:

10 கோழிகளுக்கான அளவு

தேவையான பொருள்கள்:

பூண்டு - 10 பல்

துளசி இலை - 50 கிராம்

வேப்பிலை - 50 கிராம்

மஞ்சள்தூள் - 10 கிராம்

சூடம் - 50 கிராம்

இடித்த சீரகம் - 20 கிராம்

செய்முறை:

மேற்கண்ட பொருள்களை நன்கு அரைத்து, அந்தக் கலவையுடன் விளக்கெண்ணெய் 100 மி.லி., வேப்பெண்ணெய் 100 மி.லி ஆகிய இரண்டையும் சம அளவில் கலந்து சிறிது சூடுபடுத்த வேண்டும். அதைக் கோழிகளின் உடல்மீது அம்மையுள்ள இடங்களில் பூச வேண்டும். இப்படி நான்கு நாள்கள் செய்தால் அம்மை விலகிவிடும்.

தொடர்புக்கு, செல்போன்: 99446 91181.