Published:Updated:

நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்ட அதிகாரி; சாமர்த்தியமாக சிக்கவைத்த விவசாயிகள்!

நெல் கொள்முதல் நிலையம் (File Pic)
நெல் கொள்முதல் நிலையம் (File Pic)

``சோதனை செய்ததில் மற்ற விவசாயிகளிடமும் கையூட்டாகப் பெற்ற 10,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளோம். அவர்களை சஸ்பெண்ட் செய்வதற்கான ஆணையும் கையெழுத்தாகி வந்துள்ளது. நாளையிலிருந்து அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்."

விவசாயிகள் எளிய முறையில், சிறந்த பயன் பெறுவதற்காகக் கொண்டுவரப்பட்டவை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக, விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டும் இடங்களாக மாறும் அவலநிலை அண்மைக் காலமாக சில இடங்களில் அரங்கேறி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள பையூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 16-ம் தேதி, சேவூர் அடுத்த சாணார்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (45) உட்பட மூன்று விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவித்த நெல்லை விற்பனைக்காகக் கொண்டு சென்றுள்ளனர்.

அந்த நெல் கொள்முதல் நிலையத்தில் வேளாண் சங்க செயலாளர் ஜெகதீஸ்வரன், ``உங்கள் நெல் மூட்டைகளை இங்கு கொள்முதல் செய்ய வேண்டுமெனில், ஒவ்வொரு 40 கிலோ சிப்பத்துக்கும் 45 ரூபாய் லஞ்சம் தர வேண்டும்" என்று பகிரங்கமாகக் கேட்டுள்ளார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம்
நேரடி நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, நான்..!'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ

இதைக் கேட்டு அதிர்ந்த விவசாயிகள், திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததோடு, நேரிலும் சென்று புகார் அளித்துள்ளனர். இந்த மூன்று விவசாயிகளில் குறைந்த எண்ணிக்கையில், அதாவது 62 மூட்டைகள் (40 கிலோ சிப்பம்) மட்டுமே எடுத்துச் சென்றவர் ஆனந்தராஜ்.

இவரது நெல் மூட்டைகளுக்காக அங்கு கேட்கப்பட்ட லஞ்ச தொகை 2,790 ரூபாய். அந்தத் தொகையை மட்டும் மூன்று விவசாயிகளும் இணைந்து தயார் செய்த நிலையில், அதில் ரசாயனத்தைத் தடவி ஆனந்தராஜிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர். அதன்படி விவசாயி ஆனந்தராஜ், கொள்முதல் நிலையத்தில் செயலாளராக உள்ள ஜெகதீஸ்வரனிடம் அத்தொகையைக் கொடுக்க முற்பட்டுள்ளார். அப்போது, கிடங்கு பாதுகாவலராக இருக்கும் ராஜேந்திரனிடம் தொகையைக் கொடுத்திடும்படி அவர் கூறியுள்ளார். அவ்வாறு ராஜேந்திரனிடம் அந்தத் தொகை கொடுக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே ஜெகதீஸ்வரன் அதைப் பெற்றுக்கொண்டுள்ளார். இதை மறைமுகமாகத் தொடர்ந்து கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான குழுவினர், லஞ்சம் பெற்ற இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்த மூன்று விவசாயிகளில் ஒருவரான பிரேம்குமார் என்பவரிடம் பேசினோம். ``சுமார் 70 - 80 கிலோ எடையுள்ள நெல் மூட்டையில், நான் 100 நெல் மூட்டையும், ரஞ்சித் 71 நெல் மூட்டையும், ஆனந்தராஜ் 33 நெல் மூட்டையும் கடந்த 16-ம் தேதி நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்றோம்.

அந்த நெல்லைத் தூற்றி, ஒரு மூட்டையை இரண்டாகப் பிரித்து 40 கிலோ சிப்பமாகத்தான் அங்கு எடுப்பார்கள். அவ்வாறு எங்களுடைய நெல்லையும் எடை போட்டார்கள். ஆனால், ரசீது தரவில்லை. எங்கள் ஒவ்வொருவரிடமும், ஒரு சிப்பத்துக்கு 45 ரூபாய் லஞ்சம் கேட்டார் அதிகாரி ஜெகதீஸ்வரன். நாங்கள் எவ்வளவோ கெஞ்சி பேசிப் பார்த்தோம், அந்த ரூபாயைக் கேட்டபடியாகவே இருந்தார். அதைத் தொடர்ந்து 17-ம் தேதியன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தோம். எங்க மூவரில், குறைவாக நெல் மூட்டைகள் இருந்தது ஆனந்தராஜ் அவர்களுடையதுதான். அவற்றைத் தூற்றி 40 கிலோ சிப்பமாக மாற்றியபோது, மொத்தம் 62 சிப்பம் நெல் வந்தது. அதற்கான 2,790 ரூபாயில் மட்டும் ரசாயனம் தடவி, அந்த அதிகாரியிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பினர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.

கைது செய்யப்பட்ட இருவர்
கைது செய்யப்பட்ட இருவர்
80 நாட்களாக கொள்முதல் செய்யப்படாத 4,000 மூட்டை நெல்; வீணான 1000 மூட்டைகள்; கவலையில் விவசாயிகள்!

அதன்படி செயலாளர் ஜெகதீஸ்வரனிடம் அந்தக் காசை கொடுத்தபோது, உதவியாளர் ராஜேந்திரன் என்பவரிடம் அதைக் கொடுக்கச் சொன்னார். அதன்படி கொடுத்தோம். சில மணி நேரத்திலேயே அவரிடமிருந்து அந்தத் தொகையை வாங்கிக் கொண்டுள்ளார் அந்த அதிகாரி. இதைக் கவனித்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அவர்களை கையும் களவுமாகக் கைது செய்தனர்" என்றார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``விவசாயிகளின் புகாரைத் தொடர்ந்து விசாரணையைத் தொடங்கினோம். இந்த மூன்று விவசாயிகளிடமும் லஞ்சம் கேட்டுள்ளார் அந்த அதிகாரி. அதனால் குறைந்த எண்ணிக்கையில் நெல் மூட்டைகளை வைத்திருந்த ஆனந்தராஜ் என்பவருடைய 62 நெல்மூட்டைகளுக்கான 2,790 ரூபாய்க்கான தாள்களில் மட்டும் ரசாயனத்தைத் தடவி கொடுத்து அனுப்பினோம். பின்னர், ஒருவர்பின் ஒருவராக லஞ்சத்தைப் பெற்றுக்கொண்ட ராஜேந்திரன் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்து 15 நாள்கள் ரிமாண்டில் வைத்துள்ளோம். அவர்களின் இடத்தை மேலும் சோதனை செய்ததில் மற்ற விவசாயிகளிடமும் கையூட்டாகப் பெற்ற 10,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளோம். அவர்களை சஸ்பெண்ட் செய்வதற்கான ஆணையும் கையெழுத்தாகி வந்துள்ளது. நாளையிலிருந்து அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு