Published:Updated:

`195 கோடி கொடுத்துட்டு, 326 கோடி பிடிங்கிட்டாங்க!' - அதிகாரிகள் லஞ்சத்தால் குமுறும் விவசாயிகள்

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட மொத்த தொகை 326 கோடி என கொந்தளிக்கிறார் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் 2019-20-ம் ஆண்டு சம்பா, தாளடி, கோடை, குறுவை ஆகிய பருவங்களில் மொத்தம் 32.60 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைத்திருப்பதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார். இந்த கணக்குப்படி பார்த்தால், குறைந்தபட்ச ஆதார விலையாக விவசாயிகளுக்கு கிடைத்த மொத்த தொகை 195 கோடி ரூபாய். ஆனால் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட மொத்த தொகையோ 326 கோடி என கொந்தளிக்கிறார் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன்.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

நெல் கொள்முதலில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிறது. விவசாயிகள் தங்களது கடும் உழைப்பை செலுத்தி, பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே நெல்லை விளைவிக்கிறார்கள். ஆனால், இதனை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வது என்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. பல மணிநேர காத்திருப்போடு மட்டுமல்லாமல் பல ஆயிரம் ரூபாய் லஞ்சமும் கொடுக்க வேண்டிள்ளது. இந்த முறைகேட்டில் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது. உயரதிகாரிகளே மாஃபியாக்கள் போல் செயல்படுவதால், இதனைத் தடுக்க, தமிழக அரசின் லஞ்ச ஊழல் கண்காணிப்பு காவல்துறை அல்லது மத்திய அரசின் குற்றப் புலனாய்வு பிரிவான சி.பி.ஐ தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்துகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பெரும் கொந்தளிப்போடு பேசிய இச்சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், ``நெல் கொள்முதலின் போது விவசாயிகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்படும் பணம், தரைமட்ட ஊழியர்கள்ல இருந்து, உயரதிகாரிகள் வரைக்கும் பங்குப் போடப்படுது. இதைத் தடுக்க நாங்களும் கடந்த பல ஆண்டுகளா போராடிக்கிட்டே இருக்கோம். ஆனாலும் தடுக்க முடியலை. இன்னும் சொல்லப்போனா, ஒவ்வொரு ஆண்டும் லஞ்சத் தொகையோட அளவு அதிகரிச்சிக்கிட்டே இருக்கு. இப்ப ஒரு சிப்பத்துக்கு (40 கிலோ மூட்டை) 40 ரூபாய் லஞ்சம் வாங்குறாங்க. இதை உயர் நீதிமன்ற நீதிபதிகளே உறுதிப்படுத்தி கண்டிச்சிருக்காங்க.

சுவாமிமலை சுந்தர விமலநாதன்
சுவாமிமலை சுந்தர விமலநாதன்

தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி பார்த்தா, காவிரி டெல்டா மாவட்டங்கள்ல 2019-20-ம் ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவு 32.60 லட்சம் டன். மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையாக, ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கு 70 ரூபாயும், மோட்டா ரக நெல்லுக்கு 50 ரூபாயும் விலை கொடுத்தது. சராசரியா ஒரு குவிண்டாலுக்கு 60 ரூபாய்னு கணக்குப்பார்த்தா, டெல்டா மாவட்டங்கள்ல கொள்முதல் செய்யப்பட்ட 32.60 லட்சம் டன் நெல்லுக்கு மொத்தம் 195 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கு. ஆனா, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்ல வாங்குற லஞ்சம், ஒரு குவிண்டாலுக்கு 100 ரூபாய். இங்க கொள்முதல் செய்யப்பட்ட 32.60 லட்சம் டன் நெல் மூலமா விவசாயிகளோட பணம் 326 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுருக்கு.

ஒரு சிப்பத்துக்கு 2 கிலோ வீதம், ஒரு குவிண்டாலுக்கு 5 கிலோ கூடுதலா எடை வச்சி நெல் எடுக்குறாங்க. அதோட விலை மதிப்பு 95 ரூபாய். இந்த வகையில 32.60 லட்சம் டன்னுக்கு கணக்குப்பார்த்தால், விவசாயிகிட்ட இருந்து 300 கோடி ரூபாய் விலை மதிப்புள்ள நெல் சுரண்டப்பட்டிருக்கு. இது மிகப்பெரும் அநியாயம். இது, கொள்முதல் நிலைய ஊழியர்கள் மட்டுமே தனியா செய்யக்கூடிய ஊழல் இல்ல. இதுல அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கும் தொடர்பு இருக்குனு நாங்க கடந்த பல ஆண்டுகளாகவே சொல்லிக்கிட்டு இருந்தோம்.

நெல்
நெல்

எங்களோட குற்றச்சாட்டு, வெளிப்படையாகவே ஆதாரபூர்வமா, வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நெல் கொள்முதலுக்கு, விவசாயிகள்ட்ட பணம் வாங்கச் சொல்லி, தங்களோட உயரதிகாரிகள், தங்களைக் கட்டாயப்படுத்துறதாகவும், இது தடுக்கப்படணும்னு தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகத் தொழிலாளர்கள் சங்கத்தினர் சில மாதங்களுக்கு முன்னாடி நோட்டீஸ் அடிச்சி, கண்டனக் கூட்டமே நடத்தியிருக்காங்க. கடந்த ஜனவரி மாதம் தஞ்சாவூர்ல முத்தரப்பு கூட்டம் நடந்துச்சு. அதுல உணவுத்துறை முதன்மைச் செயலாளர், அமைச்சர், மூன்று மாவட்ட ஆட்சியர்கள், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர், முதுநிலை மண்டல மேலாளர்கள் கலந்துக்கிட்டாங்க. எங்களோட ஆதங்கத்தை அழுத்தமா பதிவு செஞ்சோம்.

ஆனாலும் பலன் இல்லை. தமிழக அரசோட லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்திரப்பதிவு அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள்ல எல்லாம் அடிக்கடி திடீர் சோதனை நடத்துறாங்க. ஆனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு ஏன் வர்றதில்லை. அவங்களோட கைகள் கட்டப்பட்டுருக்கோனு எங்களுக்கு சந்தேகமா இருக்கு. கொள்முதல் நிலையங்கள்ல ஏன் லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்பு எண்களை போடாமல் இருக்காங்க. மத்திய அரசின் இந்திய உணவு கழகத்துக்காகதான், தமிழக அரசு இங்கவுள்ள விவசாயிகள்ட்ட நெல் கொள்முதல் செய்யுது. இதுக்கு மத்திய அரசு நிறைய பணம் செலவு செய்யுது. இதுல நடக்கக்கூடிய லஞ்ச ஊழலை தடுக்க சி.பி.ஐ-யும் ஏன் நடவடிக்கையில இறங்கலை. அவங்களோட கைகளும் கட்டப்பட்டிருக்கோனு எங்களுக்கு சந்தேகமா இருக்கு” எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு