Published:Updated:

ஆண்டுக்கு, ஒரு லட்சம்... பல்லாண்டுகள் லாபம் தரும் பலா!

நீங்கள் கேட்டவை
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை

நீங்கள் கேட்டவை

‘‘பலா மரப்பயிரைச் சாகுபடி செய்ய விரும்புகிறோம். எந்த ரகம் ஏற்றது, இதன் வருமானம் பற்றி விவரமாகச் சொல்லுங்கள்?’’

எம்.சுகந்தி, மாமண்டூர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த வேளாண் துறையில் ஓய்வுபெற்ற உதவி இயக்குநர் பி.ஹரிதாஸ் பதில் சொல்கிறார்.

ஆண்டுக்கு, ஒரு லட்சம்... பல்லாண்டுகள் லாபம் தரும் பலா!

‘‘பலாவின் அருமை பெருமைகளைப் பரப்பி வருவதை வாழ்நாள் கடமையாக கொண்டுள்ளேன். பலா மரத்தை நம் விவசாயிகள் சாகுபடி செய்யத் தொடங்கிவிட்டால், ஒவ்வொருவரும் லட்சக்கணக்கில் வருமானம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது. வறட்சியிலும் வளமாக வாழ்ந்து, வருமானம் தரும் இந்த அற்புதப் பயிரைச் சாகுபடி செய்ய முன்வந்தமைக்குப் பாராட்டுகள். இந்தியாவில் பலாவைத் தனிப்பயிராக முதன் முதலில் பண்ருட்டியில் மட்டுமே சாகுபடி செய்தோம். இதைப் பார்த்துதான் கர்நாடகா, கேரள மாநில விவசாயிகள் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆண்டுக்கு, ஒரு லட்சம்... பல்லாண்டுகள் லாபம் தரும் பலா!

தமிழ்நாட்டில் பாலூர்-1, பாலூர்-2, பேச்சிப்பாறை-1, கல்லார்-1, சிங்கப்பூர் பலா, ஒட்டு பலா ஆகிய ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பலா மரங்கள் எங்கு நன்றாக வளர்ந்துள்ளனவோ, அந்த இடத்தில் மண்வளம் சிறப்பாக உள்ளது என்று அர்த்தம். எனவே, வடிகால் வசதியுள்ள நிலங்களில் பலா நன்றாக வளரும். 25 அடி இடைவெளியில் ஏக்கருக்கு 75 மரங்கள் சாகுபடி செய்யலாம். கொஞ்சம் நெருக்கி நடவு செய்தால், 100 மரங்களைக்கூடச் சாகுபடி செய்ய முடியும்.

ஆண்டுக்கு, ஒரு லட்சம்... பல்லாண்டுகள் லாபம் தரும் பலா!

தனிப்பயிர் செய்ய இட வசதியில்லை என்றாலும் வருத்தப்பட வேண்டாம். மா, கொய்யா, தென்னை... போன்ற பயிர்களுடன் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். வரப்பு பயிராகவும்கூடச் சாகுபடி செய்ய முடியும். உதாரணத்துக்கு ஐந்து ஏக்கர் கொண்ட நிலத்தின் வரப்பில் சுமார் 50 மரங்கள் வரை சாகுபடி செய்ய முடியும். வேளாண்மைத் துறையில் பணியாற்றியபோது, பல பண்ணைகளுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் மூலம் பல வகையான பலா மரங்களை என் நிலத்தில் சாகுபடி செய்து மாதிரிப் பண்ணையை உருவாக்கியுள்ளேன். இந்தப் பண்ணையில் உள்ள ஒரு மரத்தைத் தாய் மரமாகக் கொண்டுதான் பாலூர்-2 என்ற சிறந்த பலா ரகத்தைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். நல்ல சுவையும் சிறந்த மணமும் கொண்டது இந்த ரகம். ஆனால், ஆண்டுக்கு ஒருமுறைதான் காய்க்கும். மற்ற ரகங்கள் ஆண்டுக்கு 2 முறை காய்க்கும். முதல் பருவம் டிசம்பர்-ஜூன் வரையிலும் இரண்டாம் பருவம் ஜூலை-நவம்பர் வரையிலும் காய்க்கும்.

ஹரிதாஸ்
ஹரிதாஸ்

இந்த அற்புதமான மரத்தைப் பூச்சி, நோய் தாக்குவதில்லை. மானாவாரி நிலத்திலும்கூட இனிப்பான வருமானத்தைக் கொடுக்கும். தண்ணீர் குறைவாக உள்ள பகுதிகளில்தான், சுவையான பழம் கிடைக்கும் என்பது, இதன் கூடுதல் சிறப்பு. இதன் இலைகளை, மரத்தைச் சுற்றிலும் மூடாக்கு போட்டுவிட்டால், அதுவே சிறந்த இயற்கை உரம். எனவே, பெரிய பராமரிப்பும் தேவைப்படாது. காய் முதல் பழம் வரை பலாவை உணவாகச் சமைத்து உண்ணலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பலாவின் அருமையை உணர்ந்துகொண்ட, கேரளா, கர்நாடக விவசாயிகள் பண்ருட்டி பகுதிக்கு வந்து, சாகுபடி பாடங்களை கேட்டுச் செல்கிறார்கள். பலாவைப் பழமாக மட்டுமல்ல, விதவிதமாக மதிப்புக்கூட்டிய உணவு பொருள்களாகவும் மாற்ற முடியும். பலா சிப்ஸ், பலா அல்வா, பலா ஐஸ்கிரீம், காப்பிக்குப் பதிலாகப் பலாகொட்டையை அரைத்துப் பயன்படுத்தலாம். கோகோவுக்கு மாற்றாகவும்கூடப் பலாக்கொட்டையைப் பயன்படுத்த முடியும். பலாப்பழக் கொட்டையிலிருந்து 325 பொருள்களைக் கேரளாவில் செய்து அசத்துகிறார்கள். இதனால்தான், இதைக் கற்பக விருட்சம் என்கிறோம். ஒரு ஏக்கரில் பலாச் சாகுபடி செய்திருந்தால், பத்து ஆண்டுகள் கொண்ட மரங்களிலிருந்து குத்தகை மூலம் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும். குறைந்தபட்சம் ஒரு மரத்திலிருந்து 1,000 ரூபாய் மதிப்புள்ள பலா கிடைக்கும். இதையே நேரடியாக நாம் விற்பனை செய்தால், குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். 50 ஆண்டுகள் வயதுகொண்ட ஒரு பலா மரத்தை மரப்பொருள்கள் செய்ய குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்ள ஆள்கள் உள்ளனர். பல்லாண்டுகள் பலன் தரும் பலா மரங்கள் பல தலைமுறைக்கு வருமானம் கொடுத்து வாழ வைக்கும். பலா மரங்களைச் சாகுபடி செய்த விவசாயிகள் செல்வச் செழிப்பில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள். நடவு செய்பவர்கள் மட்டுமல்ல, அவரது பரம்பரைக்கே அது பெரிய பொக்கிஷமாக இருக்கும். இது என் அனுபவ பாடம்.’’

தொடர்புக்கு, செல்போன்: 86108 81046, 94430 74620.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

ஆண்டுக்கு, ஒரு லட்சம்... பல்லாண்டுகள் லாபம் தரும் பலா!

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.