Published:Updated:

`வெங்காயம் விலை எகிறும்; பருப்பு விலையும் உயரும்!' - பதற வைக்கும் `கார்ப்பரேட் பதுக்கல்'

``அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் இருந்து வெங்காயம் உள்ளிட்ட இன்னும் பலவிதமான பொருள்களை மத்திய அரசு நீக்கியுள்ளதால், கார்ப்பரேட் நிறுவனங்களும் இதுபோன்ற பதுக்கலில் ஈடுபடுவதற்கான ஆபத்துகள் நெருங்கிவிட்டன."

வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. பெரிய வெங்காயம் கிலோ 120-க்கும் சின்ன வெங்காயம் 90 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெங்காய தட்டுப்பாட்டின் காரணமாகவே விலை உயர்ந்துள்ளதாகவும், விலையைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்குத் தேவையான அளவு வெங்காயம் கிடைக்கவும், வெளிநாடுகளிலிருந்து 25,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது. இந்நிலையில்தான் தற்போது ஏற்பட்டுள்ள வெங்காய தட்டுப்பாடு இயல்பானதல்ல. பெரிய வியாபாரிகள் குறுக்கு வழியில் கொள்ளை லாபம் பார்ப்பதற்காக வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகவும், இதன் காரணமாகவே வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாகவும் சமூக ஆர்வலர்களும் விவசாயிகளும் குற்றம் சாட்டுகிறார்கள். இவர்களது குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத கோழிப்பண்ணைகளில் பெரு வியாபாரிகள் சிலர் 2,000 டன் வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருப்பது வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளங்கீரன்
இளங்கீரன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், ``தற்போது பெரிய வியாபாரிகள் மட்டும்தான் வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற விளைபொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் வெங்காயத்தைப் பதுக்கி வைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அதிக விலைக்கு விற்கிறார்கள். இந்த நிலையிலேயே வெங்காயத்தின் விலை ரூ. 100-ஐ தாண்டிவிட்டது. அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் இருந்து வெங்காயம் உள்ளிட்ட இன்னும் பலவிதமான பொருள்களை மத்திய அரசு நீக்கியுள்ளதால், கார்ப்பரேட் நிறுவனங்களும் இதுபோன்ற பதுக்கலில் ஈடுபடுவதற்கான ஆபத்துகள் நெருங்கிவிட்டன. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். நாடு முழுவதும் பல கோடி டன் வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருள்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள். வெங்காயத்தின் விலை ரூ. 200-ஐ தாண்டினாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. உளுந்து, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருள்கள் பல நாள்களுக்குக் கெட்டுப்போகாது என்பதால் அவற்றையும் பதுக்கி வைத்து, அநியாய விலைக்கு விற்பனை செய்யக்கூடிய அபாயம் காத்திருக்கிறது.

இயற்கை வேளாண் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, ``மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் மழையால் வெங்காய உற்பத்தி சற்று குறைந்திருப்பது உண்மைதான். ஆனால், இதை பெரு வியாபாரிகள் குறுக்கு வழியில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெரிய அளவில் பற்றாக்குறை இருப்பதாக, போலியான தோற்றத்தை உருவாக்கி, வெங்காயத்தை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். ஒருவேளை உண்மையாகவே பற்றாக்குறை ஏற்பட்டாலும் கூட, ஏன் இந்தளவுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். அரசு, இதைக் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட விலைக்கு மேல் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு இதைச் செய்யாமல், வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான டன் வெங்காயம் இறக்குமதி செய்வதில்தான் ஆர்வம் காட்டுகிறது.

ரமேஷ் கருப்பையா
ரமேஷ் கருப்பையா

இதில் வெளியில் தெரியாத மிகப்பெரிய வியாபார வலைப்பின்னல் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து, மத்திய அரசு நேரடியாக விளைபொருள்களை இறக்குமதி செய்வதில்லை. அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் ஏஜென்டுகள்தாம் இறக்குமதி செய்வார்கள். இதைக் கொண்டு வருவதில் கப்பல், கன்டெய்னர் என இன்னும் பல விதமான வியாபாரம் அடங்கியிருக்கிறது. இறக்குமதியால் பலவிதமான பண முதலைகள் பயன் அடைவார்கள். இதெல்லாம் ஒருபுறமிருக்க, அரசின் முன் கணிப்பு திட்டமிடலிலும் மிகப் பெரிய குறைபாடுகள் உள்ளன. ஒருபக்கம் வெங்காயத்தின் விலை ஏறிக்கொண்டிருக்க, தக்காளியின் விலையோ கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி உற்பத்தி செய்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்கள் உற்பத்தி செய்த தக்காளியை, கிலோ ஒரு ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். ஏன் இந்த விலைச்சரிவு? இவற்றுக்கெல்லாம் அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு வருஷத்துக்கு எந்தெந்த விளைபொருள்கள் எவ்வளவு தேவை, எவ்வளவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, இயற்கைச் சீற்றங்களால் எவ்வளவு பற்றாக்குறை ஏற்படும், அதைத் தீர்க்க, கூடுதலாக எவ்வளவு விளைவிக்கலாம், அதை எப்படிப் பாதுகாத்து பரவலாக விநியோகிக்கலாம் என்பதையெல்லாம் மத்திய மாநில அரசுகள் முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். இதற்கேற்ப விவசாயிகளை முறைப்படுத்தி, அதற்கேற்ப ஊக்கப்படுத்த வேண்டும். வெங்காயம், காய்கறிகள் விலையேற்றத்தால், சாதாரண மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

Onion
Onion
AP Photo/Mahesh Kumar A

இவற்றைத் தங்களது வீட்டுத் தோட்டங்களில் குறைந்த பரப்பில் உற்பத்தி செய்யும் பழக்கம் வர வேண்டும். மாடித்தோட்டமும் அமைத்துக்கொள்ளலாம். விலையேற்றத்தால் பெரும் பணமுதலைகள் மட்டுமே பயனடைகிறார்கள். வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகள், அதை உடனடியாக விற்பனை செய்துவிடாமல், வெங்காயத்தைப் பட்டறை கட்டி பாதுகாத்து, கூடுதலான விலை கிடைக்கும்படிப்படியாக விற்பனை செய்யலாம்" என்றார்.

வெங்காய சூதாட்டத்துக்கு எப்போது நிரந்தர தீர்வு வரும்? அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் மீண்டும் அனைத்து விளைபொருள்களையும் சேர்த்து, பதுக்கல்களைத் தீவிரமாகக் கண்காணித்து, மத்திய மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால்தான் விவசாயிகளும் பொதுமக்களும் நிம்மதியாக வாழ முடியும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு