Published:Updated:

மீண்டும் மிரள வைக்கும் வெங்காயம் விலை!- ஜனவரியில் குறைய வாய்ப்பு

வெங்காயம் விலையைக் கேட்டால் உரிக்காமலேயே கண்ணீர் வந்து விடுகிறது. கடந்த மாதம் குறைந்த விலை, மீண்டும் உயர்ந்திருக்கிறது.

Onion
Onion

கடந்த செப்டம்பர் மாதம் நாட்டையே நடுங்க வைத்தது வெங்காய விலை. பெரிய வெங்காயம் தமிழகத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படுவதில்லை. இதனால் வட மாநிலங்களிலிருந்து வரும் பெரிய வெங்காயம்தான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் வெங்காய விளைச்சல் குறைந்ததால் கிலோ 80 ரூபாய் வரை வெங்காயம் விலை உயர்ந்தது.

Onion
Onion

இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். விலை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டன. ஏற்றுமதிக்குத் தடை, பதுக்கல் தடுப்பு நடவடிக்கை, மத்திய சேமிப்புக் கிடங்கிலிருந்த வெங்காயத்தைச் சந்தைக்குக் கொண்டு வருதல் போன்ற நடவடிக்கைகளால் விலை மட்டுப்பட்டது. கடந்த மாதம் கிலோ 40 ரூபாய் என விற்பனையானது. இந்த நிலையில், மீண்டும் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.

கடந்த முறையாவது பெரிய வெங்காய விலைதான் அதிகரித்தது. தமிழகத்தில் வீடுகளில் பெரிய வெங்காயத்தின் பயன்பாடு அதிகம் இல்லை. அதனால் விலை உயர்வைக் கஷ்டப்பட்டாவது மக்கள் சமாளித்தார்கள். ஆனால், தற்போது சின்ன வெங்காயம் விலையும் அதிகரித்துள்ளது. தீபாவளி முடிந்தவுடன் விலை குறையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், எகிறியுள்ள இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெங்காயச் சந்தையின் விலையை முடிவு செய்யும் மகாராஷ்டிராவில் வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளிமாநில வரத்து தற்போது குறைந்துள்ளது.

Onion
Onion

அதே நேரத்தில் சின்ன வெங்காயத்தின் உள்ளூர் வரத்தும் குறைந்திருக்கிறது. இதனால் விலை உயர்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். சென்னையில் கிலோ 70 ரூபாய்க்கும், மற்ற பகுதிகளில் கிலோ 80 முதல் 100 ரூபாய் வரையும் தற்போது பெரிய வெங்காயம் விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் விலை அதைவிட அதிகரித்திருக்கிறது. கிலோ 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. தமிழகத்தில் சின்ன வெங்காயம் அறுவடை ஜனவரி மாதம்தான் தொடங்கும். அதற்குப் பிறகுதான் விலை குறைய வாய்ப்பிருக்கிறது.