Published:Updated:

தமிழகம், மத்தியப் பிரததேசம், உத்தரப் பிரதேசம்... வெங்காய மூட்டைகள் கொள்ளை!

வெங்காயம்
வெங்காயம் ( vikatan )

மயிலாடுதுறையில் சேகர் என்பரின் காய்கறி குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 60 கிலோ பெரிய வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்டது.

நகைக்கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதையும், ஏடிஎம் சென்டர்களில் கொள்ளையடிப்பதையும் செய்தியாக வாசித்துவந்த மக்களுக்கு, சமீபகாலமாக வெங்காயம் கொள்ளையடிக்கப்படும் செய்திகள் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. கடந்த சில மாதங்களாக வெங்காயம் விலை உச்சத்துக்கு ஏறியது. விலையைக் குறைப்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து கணிசமாக வெங்காயம் இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.

நாடு முழுக்க விலை உயர்வு இருப்பதால், விலை குறைவு உடனே நடக்க வாய்ப்பில்லை. இதன்காரணமாக, கடந்த சில மாதங்களாக காய்கறிக்கடைகளிலும், வெங்காய மண்டிகளிலும், விவசாயிகளிடமும் வெங்காயத்தைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள், நாடுமுழுக்கப் பரவலாக நடக்கின்றன.

வெங்காயம்
வெங்காயம்
vikatan

மும்பையில்...

நேற்று, மும்பையிலுள்ள டோங்ரி காய்கறிச்சந்தையிலுள்ள காய்கறிக்கடையில் ரூ.21,000 மதிப்புள்ள 168 கிலோ வெங்காய மூட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அக்பர் சேக், இர்ஃபான்சேக் ஆகிய இரண்டு வியாபாரிகளின் கடைகளில் வெங்காய மூட்டைகள் காணாமல்போயுள்ளன. இதுகுறித்து காவல்துறையில் அவர்கள் புகாரளிக்கவும், காய்கறிச்சந்தையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைச் சோதித்துப்பார்த்தனர்.

அதில், வெங்காய மூட்டைகளைச் சிலர் திருடிச்செல்வது பதிவாகியிருந்தது. தீவிரமாக விசாரித்ததில், கொள்ளையன் யார் என்பது அடையாளம் தெரிந்தது. போலீஸார் தீவிரமாக விசாரித்ததில் இந்தக் கொள்ளையில் அவனுக்கு, இம்ரான் சேக், சபீர் ஆகியோரும் உதவியாக இருந்தது தெரியவந்தது. இவர்கள் இன்னும் பல இடங்களிலும் வெங்காயத்தைக் கொள்ளையடித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில்...

தமிழகத்தில் பெரம்பலூர் அருகே கூத்தனூர் கிராமத்திலுள்ள விவசாயியிடம் 350 கிலோ வெங்காய மூட்டையைக் கொள்ளையடித்துள்ளனர். முத்துக்கிருஷ்ணன் என்ற விவசாயி, சின்ன வெங்காயம் பயிரிடுவதற்காக 15 மூட்டை வெங்காயத்தை தனது வயல்வெளியில் பாதுகாத்து வைத்திருந்தார். அதிலிருந்து 6 மூட்டை வெங்காயத்தை யாரோ கொள்ளையடித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.45,000.

வெங்காயம்
வெங்காயம்

தும்கூர் மாவட்டம் ஹிரியூரிலிருந்து வெங்காய வியாபாரி அனந்தகுமாருக்குச் சொந்தமான ஒரு லாரியில் 173 மூட்டை வெங்காயம் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. லாரியை டிரைவர் சந்தோஷ்குமார் ஓட்டிவந்துள்ளார். உடன் கிளீனர் சேத்தனும் வந்திருக்கிறார். இந்த லாரி பாதி வழியில் விபத்துக்குள்ளானதில், அருகிலிருந்த கிராமத்து மக்கள் அந்த லாரியிலுள்ள வெங்காய மூட்டைகள் அனைத்தையும் கொள்ளையடித்ததாகக் காவல்துறையில் டிரைவர் சந்தோஷ்குமார் வழக்கு பதிவுசெய்தார்.

டிரைவரையும், கிளீனரையும் காவல்துறை தீவிரமாக விசாரித்ததில், வெங்காய மூட்டைகளை இவர்கள் இருவர் மட்டுமே கொள்ளையடித்து நாடகமாடியிருப்பது தெரியவந்தது. கொள்ளையில் தொடர்புடைய 5 பேரைக் கைது செய்ததோடு, வெங்காயத்தையும் பறிமுதல் செய்தனர்.

மயிலாடுதுறையில் சேகர் என்பரின் காய்கறி குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 60 கிலோ பெரிய வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடோனின் பூட்டை உடைத்து வெங்காயத்தைக் கொள்ளையடித்ததோடு கல்லாவிலிருந்த 12,000 ரூபாயையும் எடுத்துச்சென்றுள்ளனர்.

வெங்காயம்
வெங்காயம்
vikatan

உத்தரப் பிரதேசத்தில்...

உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் 50 கிலோ வெங்காயம் திருடப்பட்டது. காய்கறிக் கடையிலிருந்து ஹோட்டலுக்கு சைக்கிள் ரிக்‌ஷாவில் 6 மூட்டைகளில் வெங்காயத்தைக் கொண்டுசென்றபோது ரிக்‌ஷாவை வழிமறித்து ஒரு மூட்டை வெங்காயத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

பீகாரில்...

பீகார் தலைநகர் பாட்னாவிலுள்ள வெங்காய குடோனிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்தைக் கொள்ளையடித்துள்ளனர். பாட்னாவிலிருந்து 30 கி.மீ தொலைவில், தீரஜ்குமார் என்பவருக்குச் சொந்தமான வெங்காய மண்டியில் இருப்பு வைத்திருந்திருக்கிறார். வெங்காய மண்டியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 328 வெங்காய மூட்டைகளைக் கடத்தியுள்ளனர். மேலும் அங்குள்ள கல்லாவிலிருந்த 1.83 லட்சம் ரூபாயையும் கொள்ளையடித்துள்ளனர்.

வெங்காயம்
வெங்காயம்
vikatan

குஜராத்தில்...

குஜராத்திலுள்ள காய்கறிக்கடை ஒன்றின் வெளியே அடுக்கிவைக்கப்பட்டிருந்த 5 மூட்டை வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ மூட்டைகளாக மொத்தம் 250 கிலோ வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் நாசிக்கிலிருந்து கோரக்பூருக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெங்காயம், வேன் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டபோது பாதி வழியிலேயே வெங்காயம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளைச்சம்பவம் நடந்து சில நாள்களுக்குப்பின் அந்த வேன், சிவ்புரி என்ற இடத்தில் காலியாக இருப்பது கண்டறியப்பட்டது.

மேற்கு வங்கத்தில்...

மேற்கு வங்கத்தில், கிழக்கு மிட்னாபூர் என்ற இடத்திலிருந்த காய்கறிக்கடையிலிருந்து 100 கிலோ மதிப்புள்ள வெங்காயத்தைக் கொள்ளையடித்துள்ளனர். அங்கிருந்த பூண்டு மூட்டையும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. மத்தியப் பிரதேசம் நாசிக்கிலுள்ள வெங்காய மண்டி ஒன்றை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், ரூ.62,000 மதிப்புள்ள வெங்காய மூட்டைகளைக் கொள்ளையடித்துள்ளனர். அதே பகுதியில் ஏற்கெனவே ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்டது. ராகுல் பஜிராவ் என்ற வெங்காய விவசாயி இருப்பு வைத்திருந்த வெங்காயத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வெங்காய உற்பத்தியில் நாசிக் முக்கியப் பங்கு வகிப்பதால் அங்கே கொள்ளையர்களின் அட்டகாசமும் அதிகமிருப்பதாகத் தெரிகிறது.

வெங்காயம்
வெங்காயம்
vikatan

மத்தியப்பிரதேசத்தில்...

இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, நிலத்தினுள் விளைந்துள்ள வெங்காயத்தைப் பிடுங்கியெடுத்துத் திருடிய சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியப்பிரதேசத்திலுள்ள ரிச்சா என்ற கிராமத்தில் ஜிதேந்திர குமார் என்ற விவசாயி, தனக்குச்சொந்தமான விவசாய நிலத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ளார். அது அறுவடைக்குத்தயாரான நிலையில் ரூ.30,000 மதிப்புள்ள வெங்காயத்தை நிலத்தைக் கிளறியெடுத்துத் திருடியுள்ளனர்.

என்றைக்குத் தீருமோ வெங்காய விலையேற்றமும் கொள்ளைகளும்!

`எகிப்து வெங்காயம் மக்களுக்குப் பிடிக்கல!' - காரணம் கூறும் வியாபாரிகள்
அடுத்த கட்டுரைக்கு