Published:Updated:

`மீண்டும் வழங்கப்படும் கணினி சிட்டா; கூடவே இதையும் செய்யுங்கள்!' - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

``கணினி சிட்டா கிடைத்தால்தான், விவசாயிகள் வங்கிகளில் பயிர்க்கடன் வாங்க முடியும். தங்களது பயிர்களை இன்ஷூரன்ஸ் செய்வதற்கும் கணினி சிட்டா மிகவும் அவசியம். இயற்கை இடர்பாடுகளால் பயிர்கள் பாதிக்கப்பட்டால், அரசிடமிருந்து நிவாரணம் பெறுவதற்கும் கணினி சிட்டா தேவைப்படுகிறது."

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கணினி சிட்டா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதால், லட்சக்கணக்கான குத்தகை விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியிருந்தார்கள். குறிப்பாக, தங்களது சம்பா நெற்பயிர்களை இன்ஷூரன்ஸ் செய்ய முடியாத நெருக்கடியான நிலை ஏற்பட்டது.

இந்நிலையில்தான் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர், இப்பிரச்னையைத் தமிழக முதல்வரின் கவனத்துக் கொண்டு சென்று, குத்தகை விவசாயிகளுக்கு கணினி சிட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து விகடன் இணையதளத்தில் விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம். இதைப் பரிசீலனை செய்த தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். இதனால் குத்தகை விவசாயிகள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
கணினி சிட்டா நிறுத்தி வைப்பு; கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நெருக்கடி!

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன், ``கணினி சிட்டா கிடைத்தால்தான், விவசாயிகள் வங்கிகளில் பயிர்க்கடன் வாங்க முடியும். தங்களது பயிர்களை இன்ஷுரன்ஸ் செய்வதற்கும் கணினி சிட்டா மிகவும் அவசியம். இயற்கை இடர்ப்பாடுகளால் பயிர்கள் பாதிக்கப் பட்டால், அரசிடமிருந்து நிவாரணம் பெறுவதற்கும் கணினி சிட்டா தேவைப்படுகிறது. விவசாயிகள் மானிய விலையில் வேளாண் உபகரணங்கள் வாங்குவதற்கும் கணினி சிட்டா தேவைப்படுகிறது.

இந்நிலையில்தான், கோயில் குத்தகை நிலங்களில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு கணினி சிட்டா வழங்குவதை, இந்து சமய அறநிலையத்துறை ஒரு மாதமாக நிறுத்தி வைத்திருந்தது. கோயில்களுக்குச் சொந்தமான 3.36 லட்சம் ஏக்கரில் சுமார் 2.5 லட்சம் விவசாயிகள் பல ஆண்டுகளாகக் குத்தகை சாகுபடி செய்து வருகிறார்கள். இதில் பல விவசாயிகள், நேர்மையாக முழுமையாக, சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு குத்தகை தொகையைச் செலுத்தி வருகிறார்கள். பல ஆண்டு களாகக் குத்தகை செலுத்தாதவர்களையும், ஏராளமான கோயில் நிலங்களை வளைத்துப்போடு, பிற விவசாயிகளிடம் உள் குத்தகைக்கு விடக்கூடியவர்களையும் கண்டுபிடிக்கத்தான், கணினி சிட்டா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிந்தோம். ஆனால், இதனால் நேர்மையான விவசாயிகளும் பாதிக்கக்கூடிய சூழல் உருவானது.

சுந்தர. விமல்நாதன்
சுந்தர. விமல்நாதன்

இதனால் குத்தகை விவசாயிகள் தவித்துப் போனார்கள். தற்போது விவசாயிகள் தங்களது சம்பா நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்யும் தருணம். சம்பா பட்டத்துக்கு வங்கிகளில் தற்போது பயிர்க்கடனும் பெற்றாக வேண்டும். இந்த நேரத்தில் கணினி சிட்டா வழங்குவதை நிறுத்தி வைத்ததால், குத்தகை விவசாயிகள் பெரும் மன உளைச்சல் அடைந்திருந்தார்கள். இந்தப் பிரச்னையை, தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தெரிவித்தோம். இந்துசமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை உயரதிகாரிகளிடம் இதுகுறித்து வலியுறுத்தினோம். ஒரு மாதமாகியும் கூட எந்தப் பலனும் இல்லை. இதனால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பயிர் இன்ஷூரன்ஸ் செய்வதற்கான காலக்கெடு நெருங்கிக்கொண்டே இருந்ததால், இப்பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண தமிழக முதலமைச்சருக்கு மெயில் அனுப்பினோம். விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்களது கோரிக்கையை தமிழக முதல்வர் உடனடியாக, மிகவும் கனிவுடன் பரீசிலனை செய்திருக்கிறார். தமிழக முதல்வரின் தனிச் செயலாளரான எம்.எஸ்.சண்முகமே என்னை போனில் தொடர்புகொண்டு, `கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கணினி சிட்டா கிடைப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற நோக்கம் தமிழக அரசுக்குக் கிடையாது. விவசாயிகளுக்கு எந்த ஒரு சிறு சிரமத்தையும் தமிழக அரசு ஏற்படுத்தாது. இதில் தமிழக முதல்வர் மிகவும் அக்கறையுடன் செயல்படுகிறார். இணைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னையின் காரணமாகவே, கணினி சிட்டா கிடைப்பதில் தடங்கல் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக இப்பிரச்னை சரி செய்யப்படும்' என்றார். அவர் சொன்னது போலவே, அடுத்த நாளே கணினி சிட்டா கிடைக்கத் தொடங்கிவிட்டது.

விவசாயிகள்தானே எனக் கொஞ்சமும் அலட்சியமாக நினைக்காமல், தமிழக முதல்வரின் செயலாளரே என்னை தொடர்புகொண்டு விளக்கமளித்ததோடு, இப்பிரச்னையை உடனடியாகச் சரி செய்தது மிகவும் பாராட்டுக்குரியது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு குத்தகை விவசாயிகளின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம், ஒரு மாதத்துக்கும் மேலாக கணினி சிட்டா கிடைக்காததால், கோயில் குத்தகை நிலங்களின் சாகுபடியாளர்கள் அனைவரும் இனிமேல்தான் பயிர் காப்பீட்டுக்கு பிரீமியம் செலுத்தியாக வேண்டும்.

அறநிலையத்துறை
அறநிலையத்துறை
குறைதீர்ப்பு கூட்டத்தில் பயிர் இழப்பீட்டுக்காக குரல்கொடுத்த எம்.எல்.ஏ, எம்.பி; விவசாயிகள் பாராட்டு!

இதற்கான காலக்கெடு நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைவதால், இதில் பல இடர்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. கனமழையும் தொடங்கிவிட்டது. இதனால் விவசாயிகளுக்குப் போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, சம்பா நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும். நவம்பர் 30-ம் தேதி வரை பயிர் இன்ஷூரன்ஸ் செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலகெடு நீடிக்கப்படவில்லையென்றால், கோயில் நிலங்களின் குத்தகை விவசாயிகள் பலர், தங்களது சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்படும்’’ எனத் தெரிவித்தார். தமிழக அரசு, இக்கோரிக்கையையும் உடனடியாக பரிசீலனை செய்து நிறைவேற்றும் என விவசாயிகள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு