`15,000 அவரை விதைப் பந்துகள்!’ காய்கறி உற்பத்தியிலும் அசத்தும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

மலர் நாற்று உற்பத்தியில் சிறந்து விளங்கும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தற்போது வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பதற்காக 15,000 அவரை விதைப் பந்துகளை உருவாக்கியுள்ளது.
ஆண்டுக்கு 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, கொரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டிருக்கிறது. கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் மட்டுமே அங்கு நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், நீலகிரி மக்களிடம் வீட்டுத் தோட்ட பராமரிப்பு மற்றும் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும் வகையில், நீலகிரி தோட்டக் கலைத்துறை சார்பில் 15,000 அவரை விதைப் பந்துகள் உருவாக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஊட்டி அரசு தாவராவியல் பூங்கா உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன், ``நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுக்க வளரக்கூடிய காய்கறிகளில் ஒன்றான பெர்னில் எனப்படும் சாதாரண அவரை விதையைக் களிமண் மற்றும் இயற்கை உரம் கலந்து விதைப் பந்துகளாக உருவாக்கி உள்ளோம். இந்த முயற்சியைக் கடந்த ஆண்டு தொடங்கினோம். நல்ல வரவேற்புக் கிடைத்தது.

இந்த ஆண்டும் 15,000 அவரை விதைப் பந்துக்களை உற்பத்தி செய்துள்ளோம். ஒரு விதைப்பந்தை ரூ.2-க்கு விற்பனை செய்கிறோம். பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் மாவட்டத்தில் 4 இடங்களில் விற்பனைக்கு வைத்துள்ளோம். மக்களின் ஆதரவைப் பொறுத்து உற்பத்தியைப் பெருக்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
இதுகுறித்து தோட்டக்கலை பணியளர்கள் கூறுகையில், ``தற்போது வீட்டுத் தோட்டங்கள் அமைப்பதில் பலரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வீட்டு மாடிகளில் தோட்டம் அமைத்து வருகின்றனர்.

குறைந்த இடத்தில் பயிர் செய்யலாம். வீட்டுத் தோட்டம் அமைப்பவர்களுக்கு சிறந்ததாக உள்ளது. நல்ல பலன் கிடைக்கும் என்றனர்.