Published:Updated:

`80 மணி நேரப் பயணம்; 30 டன் வரத்து' - ஊட்டிக்குப் போட்டியாகும் டெல்லி கேரட்!

ஊட்டி கேரட்
ஊட்டி கேரட்

கேரட் தட்டுப்பாட்டைக் குறைக்க முதல்முறையாக டெல்லியிலிருந்து கேரட் வரவழைக்கப்படுகிறது. இதன் அளவு, நிறம் எல்லாமே ஊட்டி கேரட்டை போன்றே இருந்தாலும், சுவை சற்று குறைவாக இருக்கும்.

ஆங்கிலேயர்களின் வருகையின்போதே நீலகிரியிலும் தேயிலை, காபி உள்ளிட்ட பணப்பயிர்களும் கேரட், பீட்ரூட், டர்னிப் உள்ளிட்ட இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மலைக் காய்கறிகளையும் அறிமுகம்செய்தனர். இவையே இன்றைக்கும் இந்த மாவட்டத்தின் முக்கியப் பொருளாதாரமாக உள்ளது.

ஊட்டி கேரட்
ஊட்டி கேரட்

மலைக் காய்கறி உற்பத்தியில் தென்னிந்திய அளவில் நீலகிரி மாவட்டம் சிறப்பைப் பெற்றிருந்தது. ஆனால், தற்போது அளவுக்கு அதிகமான ரசாயனங்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், இதன் மதிப்பு மெல்லக் குறைந்துவருகிறது.

கடந்த ஆண்டு, நீலகிரியில் இடைவிடாது கொட்டித் தீர்த்த பெருமழையில் பல நூறு ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் நீரில் மூழ்கின. இதனால் இந்த ஆண்டு மலைக் காய்கறி உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, கேரட் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சந்தைகளுக்கு வரத்து குறைவதால், இதைச் சமாளிக்க தற்போது முதல் முறையாக டெல்லியிலிருந்து கேரட் கொண்டுவரப்படுகிறது. கன்டெய்னர்கள் மூலம் சுமார் 80 மணி நேர பயணத்தில் நாள் ஒன்றுக்கு 30 டன் கேரட் வரை கொண்டுவரப்படுகிறது.

டெல்லி கேரட்
டெல்லி கேரட்

டெல்லி கேரட் குறித்து மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் கூறுகையில், ``கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு மேட்டுப்பாளையம் சந்தைக்கு ஊட்டி கேரட் வரத்து குறைந்தது. இதனால் நாளுக்கு நாள் கேரட் விலை உச்சத்தை எட்டியது. சாதாரண மக்கள் வாங்க தயக்கம் காட்டினர். கேரட் தட்டுப்பாட்டைக் குறைக்க, முதல்முறையாக டெல்லியிலிருந்து வரவழைக்கப்படுகிறது. இதன் அளவு, நிறம் எல்லாமே ஊட்டியை கேரட்டைப் போன்றே இருந்தாலும், சுவை சற்று குறைவாக இருக்கும். ஊட்டி கேரட் ரூ.60-க்கு விற்பனையாகிவரும் நிலையில் டெல்லி கேரட், கிலோவுக்கு ரூ.30 விலைபோகிறது. இதன்மூலம் கேரட் தட்டுப்பாடு குறைந்துள்ளது. டெல்லியிலிருந்து ஒரு டன் கேரட் கொண்டுவர ரூ.1,500 வரை செலவாகிறது" என்றார்.

Vikatan

டெல்லி கேரட் வருகைகுறித்து நீலகிரி விவசாயிகள், ``கேரட் தட்டுப்பாட்டைக் குறைக்க டெல்லியிலிருந்து கேரட் கொண்டுவரப்படுவதால், ஊட்டி கேரட்டின் விலை குறைந்து வருகிறது" என்கின்றனர்.

ஊட்டி கேரட்
ஊட்டி கேரட்

இதுகுறித்து கேத்தி பாலடாவைச்சேர்ந்த ஹரிஹரன், ``கேரட் உற்பத்தி குறைவு காரணமாகக் கடந்த சில மாதங்களாக கேரட் விலை ரூ.50-க்கும் அதிகமாகவே இருந்துவருகிறது. மண்டிகளிலும் கேரட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது, முதல் முறையாக டெல்லியிலிருந்து கேரட் கொண்டவரப்பட்டுள்ளது. இதன்மூலம் விலை ஓரளவிற்கு காட்டுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. நீலகிரியில் வரத்து அதிகரித்ததும், டெல்லி கேரட் கொள்முதல் நிறுத்தப்படலாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு